சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 டிசம்பர், 2014

கோவை இலக்கியச் சந்திப்பு 48: அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

Print PDFஅ.முத்துலிங்கம் 30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவையில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த  இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
சுப்ரபாரதிமணியன் :  “  எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத  வித்தை தமிழுக்கு பெரிய கொடை.  இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது.  இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது.  இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும்  பக்குவம் தெரிகிறது.  அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில்  நல்ல பதிவாகி விடுகிறது. 
வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது.  ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின்  கண்களில் மின்னுகிறது.  மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால்  சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள்  சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள்  கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும்  மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான  நிறைய விசயங்கள். இவற்றில்  நீங்கள்  ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால்  அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும்  வாக்குமூலத்தைப்  புறம் தள்ளி விட்டு  அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக   தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது.  மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது.  இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ,  நைரோபிப் பெண்ணோ  அனுதாபத்துடனும்  எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார்.  பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்களை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு  இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில்  குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ,  இந்த  நாட்களைக் கடத்துவது என்பது இல்லாமல்  ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும்.  .கலை  இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க  இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும்  என்று  தோன்றுகிறது “  என்றார்.

1. அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்தொகுப்பு: சுப்ரபாரதிமணியன்  | அ.முத்துலிங்கம் பற்றிய  கட்டுரைகள் தொகுப்பு
( எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் ஆகியோரின் கட்டுரைகள் ) (ரூ 90,( நற்றிணை பதிப்பகம், சென்னை  28482818, 9486177208 )

2. தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை  ஜெயமோகன், மதுமிதா, கடற்கரய், காலம், கிருஷ்ணா டாவின்சி,ராம்பிரஷன், மதுரபாரதி ஆகியோர் முத்துலிங்கத்திடம் எடுத்த நேர்காணல்கள்
(அ.முத்துலிங்கம் பேட்டிகள் , கவின்கலை பதிப்பகம் சென்னை ரூ120)

நெசவாளன் எப்போதும் அம்மணத்தோடா.. 

சுப்ரபாரதிமணியன்

கல்யாணப்புடவையில் இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுவது திவாகா பட்டு என்ற 44 லட்ச ரூபாய் சேலைதான். பணக்காரர்கள் முகூர்த்தத்தில் அந்த பட்டுச்சேலையை அதிகம் விரும்புகிறார்கள். அதை விற்கும் கடையின் லேபிள் இருக்கும். அதை நெய்தவன், உருவாக்கியவன் பெயர் எங்குமிருக்காது. நெசவாளன் கூலியாளாக எங்கோ நின்று விடுகிறான். அவ்வளவு அற்புதமாக நெய்பவன் கலைஞனாக தன் இருப்பைக் காட்டிக் கொள்ள முடிவதில்லை. அதை வடிவமைக்கும், டிசைன் செய்பவனுக்கு கூட பெரும் மரியாதை இருக்கும். ஆனால் நெய்பவனுக்கு கூலிக்காரன் அந்தஸ்துதான். நெசவாளனுக்கு எந்த அடையாளமும் இல்லை.முன்பெல்லாம் கல்யாணம் என்று வருகிற போது ஒரு பட்டுச் சேலை எடுப்பார்கள். இப்போது 20 தேவைப்படுகிறது. அதிலெல்லாம் விறகப்படும் கடையின் முகவரிதான் இருக்கும். நெய்தவன் முகவரியற்றே இருக்கிறான்.கைத்தறி என்று பெயர் போட்டு விசைத்தறியில் நெய்த சேலைகள் அமர்க்களமாய் விற்கப்படுகின்றன.தமிழகத்தில் 2 லட்சம் குடும்பங்கள் 4 லட்சம் நெசவாளர்கள் உள்ளனர். தனியாரை நம்பி இருப்பதால் பெரிதாய் சமூக பாதுகாப்பு இல்லை. அன்னாடம் காய்ச்சி போல தினக்கூலி போலாகிவிட்டான். ஒரு சேலைக்கு நெசவாளி பெறும் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் லாபம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இடைத்தரகர்கள், விற்பவர்கள் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் விற்ற்கலாம். கிலோ கணக்கில் விற்கிற இன்றைய யுகத்தில் கிலோ 6,000 ரூபாய் முதல் 1,60,000 ரூபாய் வரைக்கும் சேலை விற்கிறது.விசைத்தறியில் 300 ரூபாய்க்கு விற்கும் சேலை கைத்தறியில் 1000 ரூபாயாகிறது.விசைத்தறியில் கூலி வேலை செய்கிறவனுக்கு 1 லட்சம் ரூபாய் கூட அட்வான்ஸ் கொடுக்கப்படுகிறது. கைத்தறி டிசைன்கள் விசைத்தறியில் போடப்பட்டு அம்ர்க்களமாக உற்பத்தி நடக்கிறது. கைத்தறி சேலைகளை தோளில் போட்டு விற்ற அண்ணா, க்லைஞர்கள் இன்று இல்லை. விலைவாசி உயரும் வேகத்தில் நெசவாளிக்கு கூலி உயர்வு இல்லை. அவன் போராடுவதில்லை. 30 வருடம் முன் 150 ரூபாய்க்கு விற்ற பட்டு இப்போது 4500 ரூபாய். அப்போது 250 ரூபாய்க்கு விற்ற சேலையில் 50 ரூபாய் லாபம் என்று நியாயம் இருந்தது. . இப்போது 4500 பட்டுக்கு, 1500 கூலிக்கு என்று 6000 ரூ அடக்கவிலையாகிறது. விற்பது எத்தனை ரூபாய்க்கு என்பதை வியாபாரி மட்டும் அறிவான்.. ஒவ்வொரு ஊருக்கும் கூலி வித்தியாசமுண்டு. தஞ்சையில் 700ரூ வாங்கும் நெசவாளி சிறுமுகையில், கோவையில் நெய்தால் ரூ 1000 வாங்குவான். முதலாளிகளின் கருணையை பொறுத்து கூலி நிர்ணயிக்கப்படுகிற தொழில் நெசவு மட்டுமே.பட்டு விலை ஏறுகிறது. ஜரிகை விலை ஏறுகிறது. கூலி மட்டும் நெசவாளிக்கு ஏறுவதில்லை.போராட அவன் ஒன்று சேர்வதில்லை. ஜாதி ரீதியாக சங்கம் வைக்கிற நெசவாளி தொழிற்சங்க ரீதியாக ஒன்றுபடுவதில்லை. அவர்களை தொழிற்சங்க ரீதியாக ஒருங்கிணைப்பதில் பொதுவுடமை வாதிகளுக்கும் தோல்விதான். இது பற்றிய அறியாமையில் நெசவாளி உழல்கிறான்.கூலியில் முதலாளி ஏமாற்றுகிறான். விசைத்தறியில் கைத்தறி ரகங்கள் போட்டு ஏமாற்றுகிறார்கள். 10,000 விசைத்தறிகளில் கைத்தறி ரகம் ஓடினால் 1 தறியை அரசாங்க அதிகாரி பிடிப்பான். எல்லாம் கண் துடைப்பு. கைத்தறியை வசதி படைத்தவர்களே அணிகிறார்கள் அனுதாபத்தோடு. ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளிகளின் கூட்ட்த்தில் நெசவாளியும் கலந்தே நிற்கிறான். பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் முடைவோர், பட்டு, கோரா, பம்பர் நெய்பவர்கள் எல்லோரும் நெசவாளர்களே. ஆனால் பெட்ஷீட், ஜமுக்காளம், பாய் நெய்பவர்கள் வறுமையின் கோட்டின் கீழ்தான் இருக்கிறார்கள். பட்டு, பம்பர்கோரா கைத்தறியில் நெய்பவர்கள் நிலையான வருமானம் கொண்டவர்களாக இருப்பது ஆறுதல் தருகிறது. 1 கோடி பேர் படித்தஇளைஞ்ர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் கைத்தொழிலை சொந்தத் தொழிலாக கொண்ட குடுமப்ங்களில் இந்த அவலம் இல்லை. அது நெசவோ, மர வேலையோ…. எம்பிஏ படித்தவன் 5,000 ரூக்கு அலைய வேண்டி உள்ளது. நெசவாளர் வீட்டுப்பையன் சுலபமாய் அதை விட 4 மடங்கு சம்பாதித்து விடுவான். ஆனால் நெசவாளி அவனது மகனை நெசவாளி ஆக்க விரும்புவதில்லை. நெசவுத்தொழில் சரியான ஆட்கள் இல்லாமல், புதிய தலைமுறையினரின் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கிக் கிடக்கிறது. நெசவாளி சம்பாதித்து குழந்தைகளை மருத்துவர், பொறியாளர் அக்குகிறார்ன். ஆனால் நெசவாளன் குடும்பத்துக்கு பெண் தர விருப்பமிருக்காது பலருக்கு. படித்தவன் கணிசமான வருமானம் இருந்தாலும் நெய்வதில்லை. வீட்டில் எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் தொழில் நடக்கும். தனியாள் வேலையாக அது இல்லை.. 5 விசைத்தறிகளுடன் ஆரமபிக்கும் ஒருவன் பத்து வருடத்தில் 50 தறிகளைக் கொண்டிருப்பான். 5 தறிக்கு நூல் கொடுப்பவன் 10 வருடத்தில் 100 தறிக்கு நூல் கொடுத்து முதலாளி ஆகி விடுவான்.ஒற்றைத்தறியுடன் நெய்பவன் அப்படியேத்தான் இருப்பான். தரகர்கள் கொழுக்க தறியில் உட்கார்ந்திருப்பவன் தனியாளகவே இருந்து வருகிறான். நெசவாளி கலைஞன்தான். ஆனால் அந்த அடையாளத்தை சமூகம் அவனுக்குத் தருவதில்லை. இப்போது மெமரி கார்டு போட்டு ஜமுக்காளத்தில் பல டிசைன்களில் நெய்கிறான் நெசவாளி.அவனின் வாழ்க்கை தறிக்குழிக்குள்ளான ” மெமரி” தான் எப்போதும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவன் தொழில் செய்யலாம். ஆனால் தனியார் முதலாளிகளின் ஆக்கிரமிப்பு அவர்களை கூட்டுறவுச் சங்கங்களிடம் அணுக விடுவதில்லை. தனியார் தரும் கூலிதான் நிரந்தரமாக்கப்பட்டதாகும். தனியாரை நம்பியே, அவனிடம் கூலி வேலை செய்தே நெசவாளி யுகங்களைக் கடத்தி விட்டான். திருப்பூரின் ஒவ்வொரு பகுதிக்கும் முதலாளிகள் அடிக்கடி வந்து நெசவுச் சாமான்கள் கொடுத்துப் போகிறார்கள். திருப்பூரில் பெரிய முதாலாளிகள் உருவாகவில்லை. உருவானவர்கள் இல்லாமல் போய் விட்டார்கள். கோவைப்பகுதியிலிருந்து ஜவுளிக்கடைகள் ஆண்டுதோறும் 400 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்கிறார்கள். நெசவாளன் என்ற கலைஞனுக்கு விளம்பரத்தில் கோமனாண்டி, அம்மணக்காரன் என்ற பெயர்கள்தான் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன., 

 சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 / 9486101003 / subrabharathi@gmail.com

சனி, 15 நவம்பர், 2014


சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை

தேனம்மை லெக்ஷ்மணன்




சுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் தொழிலும் தொழிலாளிகளும் அவர்களின் வாழ்வியல் அவலமும் சுட்டப்படும்.



இந்த நூலிலும் அப்படித்தான். ஊர் விட்டு ஓடிவந்து சினிமாவுக்கு நடிக்கப் போகும் பெண்கள் பற்றிப் படித்திருக்கிறோம். இதில் வேலைக்காக ஊரைவிட்டு வந்த பஞ்சவர்ணம் தன் முன்னிற்கும் மூன்று விதமுடிவுகளில் எதற்கு இரையாகப் போகிறாள் என்ற பதட்டத்தை உண்டாக்குகிறது வேட்டை.



மலையாளிகள் பற்றி எனக்கும் சில கருத்துண்டு. கம்யூனிஸ்டுகள் நிரம்பிய தேசம் என்றாலும் அங்கே நகைக்கடைகள்தான் அதிகம். தங்கம்தான் நிர்ணயிக்கிறது திருமணத்தை. பெண்களின் சபரிமலா என்று ஆற்றுக்கால் பகவதியைக் குறிப்பிட்டார் , திருவனந்தபுரத்தில் எங்களைக் கோயில்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்த கணவரின் நண்பர். திருமணமாகாமல் வாழும் முதிர்கன்னிகளைச் சுமந்திருந்தது திருவனந்தபுரம்.  அழகிகள் எல்லாம் நடிக்கப் போய்விட்டார்கள் அல்லது அரபு தேசத்துக்கு நர்சாகப் பணியாற்றப் போய்விட்டார்கள். இந்த அருந்ததி ராய் வீட்டுக்குப் போயிருந்த கதையில் சுப்ரபாரதி ஜெய் சபாஸ்டியன் திருமணத்தில் ஒரு நடிகையைத் தெரிந்த அளவுக்கு சொந்த தேசத்தில் ஒரு எழுத்தாளர் அறியப்படவில்லை என்பதையும் அவர்களின் நகைகள் ( மோகம் ) பற்றிய சிறுகுறிப்பும் நச்சென்று அளித்திருந்தார்.



முரகாமியின் யானை காணாமலாகிறது என்ற கதை போல இங்கே ஒரு நாய் சாயப்பட்டறையின் அழுக்குகளையும் கழிவுகளையும் யானையாகும் கதை. வளர்ப்புப்ராணிபோல அவர்கள் தங்கள் கழிவுகளைப் பெருக்கிக் கொண்டே போவதும் அதைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமலிருப்பதையும் சொன்ன கதை.



திடீரென்று விதிர் விதிர்க்கச் செய்த கதை மொட்டை. பெண்களுக்குள்ளும் ஆணாதிக்கம் உண்டோ என்று திகைக்க வைத்த கதை. உயிர்சுழி இன்றைய கருத்தரிப்பு மையங்களின் பணி சார்ந்தது. முடிவு கொஞ்சம் கொடுமைதான். உபயோகம் கொஞ்சம் விவேக் பாணி ஜோக் கதை. இப்படியும் உண்டுமா என்று நினைக்க வைத்தது.



பல கதைகள் தனியறைகளிலும் லாட்ஜ்களிலுமே நடப்பதைப் போன்று இருக்கிறது. கூட இருப்பது மனைவியா, துணைவியா, இல்லை கூட்டிக்கொண்டு வந்த பெண்ணா என்ற குழப்பம் நிகழ்கிறது. கசங்கல், வள்ளுவரின் வாட்ச்..,வாடகை ஆகியன.



கல் –மனைவியும் ஒரு விதத்தில் கல்நாயோ என்ற உணர்வு எழச் செய்த கதை. கும்பல் சாதாரண மனிதனையும் போலீசாரின் சில முன் அனுமானங்களில் போராட்டக்காரனாய் மாறியதாய் எண்ண வைக்கும் கதை.



கூட்டம் கூட்டுவது என்பது எளிதல்ல என்பதை கூட்டம் கதை விளக்கியது. எல்லா அவஸ்தையையும் நேரில் அனுபவித்தது போல் சிரிப்பைக் கொண்டுவந்த கதை. நடுவீதி உலா ரிட்டயர் ஆன மனிதரின் பார்வையில் உலகமும் அவர் மனைவியின் பார்வையில் அவரும் தென்படும் கதை.



பூச்சு இரு வேறு பெண்களின் மனநிலையையும் அவர்களின் வெளிப்பூச்சையும் புரிய வைத்த கதை. பெண்களைப் பெண்கள் புரிந்து கொள்கின்றார்கள் வேறு பேர் சூட்டுவதில்லை என்று ஆசுவாசம் தந்த கதை. புகை நிகழ்வுகளின் நிமித்தம் தனித்து வெளியிடங்களில் தங்க நேரும் ஒரு பெண்ணின் மனநிலையைப் ப்ரதிபலித்த கதை.



மொத்தத்தில் ஆதிக்க உலகில் வேட்டையாடப் படும் சாதாரணப் பெண்களின் பல்வேறு வாழ்வியல் நிலை பற்றியும் துயரம் பற்றியும் அதிகம் சொல்லிச் சென்றாலும் சாயப் பட்டறை ஊரினாலும் மேலும் ஆண்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களினாலும் வேட்டையாடப்படுவதையும் சொல்லிச் செல்கின்றன என்பது இதன் தனித்துவம்.



நூல்:- வேட்டை



ஆசிரியர் :- சுப்ரபாரதி மணியன்



பதிப்பகம் :- உயிர்மை.



விலை ரூ 90.

வெள்ளி, 14 நவம்பர், 2014

அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு!

 சுப்ரபாரதிமணியன்

அ.முத்துலிங்கம் சுப்ரபாரதிமணியன்இலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில்   அ.முத்துலிங்கத்தின்   எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது  இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன்.  பாக்கிஸ்தானில் முத்துலிங்கம்  இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு   வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள்  என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.
இரண்டாண்டுகளுக்கு முன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட்து. எழுத்தாளர் ஒருவரின் மகள் கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பச் சிக்கல்களில் தவித்து வந்த போது எழுத்தாள நண்பர் அவரின் மகள் பற்றி ஓயாமல் அழுது கொண்டிருந்தார். அப்பெண்ணுக்கு அது இரண்டாவது திருமணம்.இதுவும் இப்படியாகி விட்ட்தே என்ற அழுகை. தொடர்பு கொள்ள யாருமில்லை என்றார். முத்துலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அப்பெண் அணுகுவார் என்று தெரிவித்தபோது, தாராளமாய் அணுகலாம் என்று ஆறுதல் படுத்தினார் என்னிடம்.  ஆனால் அப்பெண் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்தியாவிற்கு உடனே திரும்பி விட்டார்.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. சென்றாண்டு அ.முத்துலிங்கத்தின்  “ அமெரிக்கா உளவாளி “ நூல் பரிசு பெற்ற போது அவ்ருக்கு அச்செய்தியை மின்னஞ்சலில் பதிவு செய்திருந்தேன். பரிசை பெற்றுக் கொள்ளச் சொன்னார் . பெற்றபின் பரிசுத்தொகையை அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அப்பரிசுத்தொகையைக் கொண்டு “ கனவு”    அ,.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய ஒரு போட்டியை நட்த்தியது.  அதில் தேர்வு பெற்ற கட்டுரைகளுடன் சிலதைச் சேர்த்து ஒரு புத்தக வடிவமாக்க முயன்றபோது அனுமதியும் தந்தார். நண்பர்களின் சிபாரிசால் சில நல்ல கட்டுரைகள் கூடக் கிடைத்தன.அது இப்போது இந்த வடிவம் பெற்றுள்ளது.
’அமெரிக்க உளவாளி’ நூலைப் பற்றி அப்போட்டியின் போது நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மாலன் இப்படிச் சொல்கிறார்:
’நாள் காட்டியில் தேதி கிழிப்பது போன்ற உப்புச்சப்பற்ற ஒரு விஷயத்தைக் கூட (இந்த டிஜிட்டல் நாள்களில் நாள் காட்டிகள் ஏது?) இதழ்க் கடையில் புன்னகை நிரந்தரமாய் ஒதுங்கியிருக்க சுவாரஸ்யமாகச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் பாணி. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு மொழியின் மீது ஆளுமை, நுட்பமான பார்வை, வரலாற்று அறிவு, உலக அனுபவம், நகைச்சுவை உணர்வு என்ற பல ஆற்றல்கள் தேவை. முத்துலிங்கத்திடம் அவை ஏராளம். ஆங்கிலத்தில் ஓட்ஹவுஸ், மார்க்ட்வைன், ஆஸ்கார் ஒயில்ட், ஆர்ட் புக்வால்ட் என டஜன் கணக்கில் புன்னகைக்க வைக்கும் மன்னன்கள் இருக்கிறார்கள். தமிழில் முத்துலிங்கம் ஒருவர்தான்.
அவரது அமெரிக்க உளவாளி அதற்கோர் உதாரணம். என்னை நம்ப வேண்டாம், அந்தத் தலைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புன்னகைக்கச் செய்வது மட்டுமல்ல, மழை பெய்யத் துவங்கும் முன் கிளம்பும் மண் வாசனை கண்ணுக்குத் தெரியாமல் மனதை நிறைத்துவிடுவது போல, முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். கைலாசபதி பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். எப்பேர்பட்ட வாழ்க்கை! எப்பேர்பட்ட சாவு! அதை நினைவூட்டிக் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து!
ஒரு நல்ல புத்தகத்தைக் கெளரவிக்க திருப்பூர் தமிழ்ச் சங்கம் வாய்ப்புக் கொடுத்தது. நடுவர் நாற்காலியில் அமர நேர்ந்த எல்லா நேரங்களிலும் இப்படிப் பொருத்தமான புத்தகம் அகப்படுவதில்லை. இந்த முறை வாய்த்தது. அதற்கு நான்தான் சந்தோஷப்பட வேண்டும்.’ 
அப்போட்டியின் இன்னொரு நடுவர் ப.க.பொன்னுசாமி அவர்கள் சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராய் இருந்தவர்.தமிழில் அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருப்பவர்.நாவரசு அறக்கட்டளைச் சார்பாக நிறையப் பணிகள் செய்து வருபவர். அவர் பரிசளிப்பு கருத்தரங்கில் முத்துலிங்கம் படைப்புகள்  பற்றி நிறைய சிலாகிப்புகளை முன் வைத்தார்.
அவ்வகை சிலாகிப்புகள்தான் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. முத்துலிங்கம் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு சில நினைவூட்டலை, வியப்பை, நமுட்டுச் சிரிப்பை இத்தொகுப்பு  தரும். மனதுள்  ஆறுதல் அளிக்கும் நண்பர்களாய் அவரின் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் எழுத்தின் பேராற்றலை ஞாபகமூட்டும்.. வாழ்க்கையின் சில நல்ல தருணங்களை  இத்தொகுப்பு  உருவாக்கும்.
கனவில் வெளிவந்த பல்வேறு படைப்புகளை தொகுக்கும் முயற்சியின் போதான மகிழ்ச்சியான  மன நிலையை இத்தொகுப்பும் தந்தது. அவ்வகை தொகுப்புகளாக உலக சினிமா கட்டுரைகள்,  நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் தொகுப்பு , கனவு   முதல் 20ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். கனவில் வெளிவந்த  அசோகமித்திரனின் சிறப்பிதழின் கட்டுரைகளோடு இன்னுன் சிலவற்றைச் சேர்த்து “ அசோகமித்திரன் 77 “ என்ற தொகுப்பை இரண்டாண்டுகளுக்குமுன் கொண்டு வந்தது எனக்கு    நிறைவு தந்த்து, அது போல் நிறைவு தந்த தொகுப்பு இது.
இத்தொகுப்பின் இக்கட்டுரைகளை பயன்படுத்த அனுமதி தந்த எழுத்தாள நணபர்கள்,இக்கட்டுரைகளை தேடி சிபாரிசு செய்தவர்கள், அச்சாக்கத்தில் உதவிய தளவாய் சுந்தரம்,பதிப்பித்திருக்கும் நற்றிணைபதிப்பகம்   ஆகியோர்களுக்கும் நன்றி.   (ரூ 90, நற்றிணை பதிப்பகம், சென்னை  28482818, 9486177208 )
எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு 

திருப்பூரில் விருது 

சுப்ரபாரதிமணியன்


எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை  )  திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது   இன்று தரப்பட்டது.  காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது… இப்பள்ளி முன்பு நம்மாழ்வார், ஜெயமோகனுக்கும் விருது வழங்கியுள்ளது.

புதன் மாலை திருப்பூர் கோதபாளையம் காது  கேளாதோர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகசாமி பரிசு வழங்கினார், பள்ளி அறக்கட்டளைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

காது கேளாத ஒருவைன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட்து ” நிமித்தம்”  நாவல்.

விருதைப் பெற்றுக்கொண்டு எஸ். ராமகிருஷ்ணன் பேசினார்: “ யாரைப் பற்றி நான் எழுதினேனோ அவர்களே என்னை அங்கீகரித்து விருது தருவது பெரிய கவுரவமாகும். சின்ன கிராமத்து அரசு பள்ளியில் படித்து எழுத்தாளன் ஆனதற்கு நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள் வழிகாட்டிகளாக இருந்தனர்..  ” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” என்பது உலகளவிலான மானுடத்தத்துவம். அந்தப் பெயரில் விருது வழங்கப்படுவது சிறப்பானது தங்கள் உடல் குறையை மீறி இப்பள்ளி மாணவர்கள்  சாதனை புரிந்து வருவது முன்னுதாரணமாக்த் திகழ்கிறது .என் எழுத்துலகப் பயணத்தில் துணை நிற்கும் மனைவி, மகன்கள், தோழர் எஸ்.ஏ. பெருமாள் ஆகியோருக்கு நன்றி..புகைப்படத்துறையில் இங்குள்ள மாணவர்களுக்கான படிப்புப்பிரிவு அவர்களுக்குப் பெரிய கொடை.   ‘ என்றார்

.       எஸ். இராமகிருஷ்ணனின் படைப்புகள் பற்றி சுப்ரபாரதிமணியன் பேசினார். ”  நாவல் பரப்பில் விரிந்த களன்களைக் கொண்டவை அவரின் நாவல்கள்.யதார்த்தமும், புனைவின் உச்சமும்  கொண்டு வெவ்வேறு பரிமாணங்களில் தமிழுக்கு பெரும் கொடையாக அவரின் படைப்புகள்  விளங்குகின்றன. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை குறித்தப் படைப்புகளில் அக்கறை கொண்டவர் என்பதை காது கேளாதவர் உலகம் பற்றி “ நிமித்தம் ” நாவலில் அவர்  எழுதியிருப்பது நிரூபிக்கிறது “ என்றார்.

தரணிதரன் இயக்கிய சிலப்பதிகாரம் காவிய நாடகம் , வேற்று கிரகவாசி, வகுப்பு ஆகிய நாடகங்களை காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவியர் நடத்தினர்.

( நிர்வாகி காது கேளாதோர் பள்ளி 9488871537 , 9965631066 )

"மொய்"

 சுப்ரபாரதிமணியன் ” 

என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ 

இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் கண்ணாடி பிரேமை மூக்கிலிருந்து தற்காத்துக் கொண்டார் மணியன். .தனலட்சுமி பூச்சி பூச்சியாய் நெளியும் கணினி எழுத்துக்களைப் பார்த்து நகர்ந்து விட்டாள்..அவளுக்கும் மூக்குக்கண்ணாடிதான் தெளிவு தரும். “ அதிகாரம் இருந்துச்சு திருடின்னீங்க.. இதிலே முடியுமா.. “ “ 
என்ன பெரிய அதிகாரம் போ… இப்போ இங்க இதிலெ சகஜம்ன்னு சொல்றாங்க. இங்க அதுக்கெல்லா புது டெக்னாலஜியெல்லா தேவை.” . கணினியின் மானிட்டர் எழுத்துக்களால் நிறைந்திருந்தது. மின்னஞ்சல்கள் வரிவரியாய் நின்றிருந்தன.. * * 

 தபால்காரர் என்ற அதிகாரத்திலேயே கொஞ்சம் தபால்களை பிரித்துப் பார்த்திருக்கிறார் மணியன். படித்துமிருக்கிறார். சுவாரஸ்யமாய் தென்பட்டக் கடிதங்களை .பின்தொடர்ந்துமிருக்கிறார். செகடந்தாளி கிராமத்திற்கு அதிகபட்சமாய் நாற்பது தபால் வரும். எளச்சிபாளையம் தபால்காரர் விடூமுறை என்றால் இன்னும் இருபது கூடுதலாகும்.தொடக்கப் பள்ளி, பஞ்சாயத்துத் தலைவர் என்று முக்கியமானவை ஒற்றை இலக்கத்துள் இருக்கும். அதெல்லாம் கவர்மெண்ட் சமாச்சாரங்கள். சுவாரஸ்மிருக்காது.அகவிலைப்படி உயர்வு, அரசு சாலை போட ஒதுக்கும் தொகை, கழிப்பறை கட்டாமல் இருக்கக் காரணங்கள் கேட்டு கடிதம், புது தெரு விளக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை என்றிருக்கும். உமா பெயரில் வந்த கடிதங்களில் சுவாரஸ்யம் இருந்ததைக் கண்டு கொண்டார். எதேச்சையாய் கடிதக் கவர் ஒன்று ஒட்டப்படாமல் இருந்ததை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். அவசரத்தில் ஒட்டாமல் விட்டிருப்பார்கள் போல. சகஜமான நலம் விசாரிப்புதான். எதிர் தரப்பில் வேலை அமைந்து விட்ட சந்தோசத்தை அக்கடிதம் சொன்னது. உமா பட்டப்படிப்பு, ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு வீட்டிலிருக்கிறவள். அவள் அப்பாவிற்கு நிலம், விவசாயம் , தென்னந்தோப்பு கொஞ்சம் என்று உண்டு. படித்து விட்டுக் கடிதத்தை ஒட்டி பத்திரமாக உமாவிடம் சேர்த்திருந்தார். “ என்னமா லெட்டர் “ ‘” டீச்சர் டிரையிங் பேட்ச் மேட். “ “ பொண்ணூதானே.” “ ஆமாப்பா. மேரி ஏஞ்சல்.. “ “ கிறிஸ்துவங்கதா நெறைய படிப்பாங்க. டீச்சர்கள்ல அவங்கதா அதிகம் “ ஆனால் அக்கடிதம் எழுதியது ஏஞ்சல் இல்லை. தேவதை இல்லை. தேவன்தான். பெயரும் கூட தேவன். தேவதைக்கு தேவைப்பட்ட தேவன். அப்பாவின் கேள்விக்கு மேரி ஏஞ்சல் என்று பொய்யாய் பெயர் சொன்னது காதில் விழுந்தது மணியனுக்கு., அதுவே அதன் பின் உமா பெயருக்கு வந்த கடிதங்களை சற்றே உற்று நோக்க வைத்தது. பிரித்தும் பார்க்கவும், படிக்கவும் வைத்தது. கொஞ்சம் எச்சிலைத் தொட்டு இழுத்தால் பிரிந்து விட்டன தேவனின் கடிதங்கள். அல்லது கொஞ்சம் நீராவியில் பிடித்தால் கழண்டு கொண்டன. மறுபடியும் அரிசி சோற்றுப் பருக்கையையோ , பசையையோ வைத்து சுலபமாக ஒட்டி நல்ல போஸ்ட் மேனாக கடிதங்களை கொண்டு சேர்த்தார். பின்னால் வந்த தேவன் கடிதங்களில் சுவாரஸ்யங்கள் கூடிக்கொண்டே இருந்தன. தேவனும் உமாவும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள். தேவனுக்கு வேலை கிடைத்து விட்டது. அவளும் ஏதாவது வேலை கிடைத்தால் போய் விடுவாள். பட்டிக்காடு ரொம்பவும் போர் அடிக்கிறது.நூலகத்திற்கு கூட 5 கி.மீ தாண்டி கருமத்தாம்பட்டிதான் போகவேண்டும். அண்ணன் வெள்ளிகிழமை சோமனூர் மீனாம்பிகா திரையரங்கில் படம் மாற்றுகிற நாளில் சோமனூர் போகிற போது தினத்தந்தி வாங்கி வருவான். மற்றபடி அவன் வாரப்பத்திரிக்கைக்கு மாறுவானா என்று உமா காத்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சி, கைபேசி அதிகம் வராத காலம். பஞ்சாயத்துத் தலைவர் வீட்டில்தான் தரை வழி தொலை பேசி கூட இருந்தது.. கடிதங்களில் உமா பெரும்பாலும் தன் தனிமையைப் பகிர்ந்து கொண்டிருந்தாள்.தேவன் நகர வாழக்கையின் சுவாரஸ்யங்கள் பற்றிச் சொல்லிக் கொண்டே இருந்தான். ” கல்யாணராமன் “ படத்தில் கமலஹாசனின் பல்லு ரோல் சிறப்பாக இருந்ததையும் சொல்லியிருந்தான் ஒரு கடிதத்தில். “ பதினாறு வயதினிலே” இன்னொரு தரம் பார்ப்பதற்க்கும் கூட சோமனூர் தான் உமா போக வேண்டியிருந்தது,அதுவும் அது வரும் சமயம்தான். மெல்ல மெல்ல காதல் வார்ததைகள் கூடிக் கொண்டு வந்த போதுதான் அந்த அதிர்ச்சித் தகவலை உமா கடிதத்தில் சொன்னாள்: 

செம்மாண்டாம் பாளையத்தில் தென்னந்தோப்பு வைத்திருப்பவன் தன்ராஜ். பட்டப்படிப்பு படித்தவன். குடிகாரன் என்ற பட்டமும் அவனுக்கு இருக்கிறது, தென்னந்தோப்பும், தென்னங்கள்ளும், தன்ராஜிம் பிடிக்கவில்லை அவளுக்கு, பட்டம், ஆசிரியைப் பயிற்சி எல்லாம் வீணானானாலும் பரவாயில்லை இப்போதே குடிகாரன் என்ற பட்டப் பெயர் உள்ளவனோடு திருமணம் செய்து கொண்டு காலம் தள்ள முடியாது. அவனைத் திருத்துவதும் கஷ்டம். காரணம் அவர்களின் தலைமுறையே குடியில் சம்பந்தப்பட்டது, திருத்த முடியாது என்று புலம்பிக் கொண்டிருந்தாள். “ நான் என்ன பண்ணட்டும் “ ஒரு கடிதத்தில் தேவன் கேட்டு விட்டான். “ அடப்பாவி மனுஷா .மனசே பறிகுடுத்துட்டனே ..புரியலையா .. செரின்னா கூட குடிகாரனுக்கு வாழ்க்கைபடறதிலே விருப்பமில்லே. அவங்க அப்பனே குடிச்சு குடல் கருகி அவங்கம்மாவை விதவையாக்கியவன்தான் “ கடிதங்கள் தினந்தோறும் என்றானபோது உமாவே பெரும்பாலும் வந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டாள். மணியன் சோமனூரிலிருந்து வரும் கடிதங்களைப் பிரித்து உமாவின் கடிதங்களை தனியே வைத்து விடுவான். தனலட்சுமி இல்லாத நேரம் பார்த்து மாலையில் அவற்றைப் படிப்பான்.” திருட்டு தபால் படிக்கறவனும், திருட்டு சகவாசம் வெச்சிட்டிருக்கறவனும் ஒண்ணுதா “ என்று மறைமுகமாய் ஒருதரம் தனலட்சுமி சொன்னபின் உசாராகி விட்டான்.ஆனாலும் தனலட்சுமிக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. தேவன் கடைசியில் நாள் குறித்து விட்டான். “ உன்னாலே முடியாதுன்னு சொன்னப்புறம் நான் கண்ணெ மூடிட்டு இருக்கறது நாம பழகனதுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கு. வெள்ளிக்கிழமை உஙக ஊருக்கு சாயங்காலம் வர்ற எஸெமெஸ் பஸ்சிலே வந்திருவேன். அது எளச்சிபாளையும் போயிட்டு திரும்பி வர்றப்போ நீயும் ஏறிக்க. வெள்ளிக்கிழமை மாரியம்மன் கோவிலுக்கு வர்றதா சொல்லிட்டு வந்திரு. சந்தேகப்படற மாதிரி இல்லாமெ வெறும் கையோட வா. பாத்துக்கலாம் “. அந்தக் கடிதம் வெள்ளிக்கிழமை 
காலையில்தான் வந்திருந்தது, தனலட்சுமி ஊரில் இல்லாத தைரியத்தில் உடனே பிரித்துப் படித்தவன் அவசரம் கருதி பசையால் நன்கு ஒட்டி உமாவிடம் உடனே சேர்த்து விட்டான். “ இன்னிக்கு தபால் காரர் சீக்கிரம் வந்துட்டாரா அம்மினி “ என்று கேட்டபடி உமா தகப்பன் ஒரு மரத்துத் தென்னங்கள்ளுக்காகக் கிளம்பினார். அவருக்கு எளப்பு சீக்கு உண்டு. ஒரு மரத்து கள்ளை ஒரு மண்டலம் குடித்தால் சரியாகிவிடும் என்று யாரோ சொல்லியிருந்தார்கள். உமா ரொம்பவும் பதற்றமாகத்தான் இருந்தாள். சாயங்காலம் எஸெமெஸ் பேருந்து வந்ததும் கவனித்தார் மணியன்.. தேவன் அழகாகத்தான் இருந்தான். உமாவுக்கு நல்ல ஜோடி. இருவரும் நல்ல உயரம்..தேவனைப் பார்த்து மணியன் சிரித்தார், தேவன் பயந்து போயிருப்பது தெரிந்தது. எஸெமெஸ் பேருந்து எளச்சிபாளையம் போய் விட்டுத் திரும்பியபோது உமா வந்து விட்டாள். அம்மன் கோவில் விபூதி குங்குமம் அவள் நெற்றியில் மினுங்கியது. சுற்றிலும் பார்த்துக் கொண்டே பேருந்தில் ஏறி நான்காவது வரிசையில் உமா உட்கார்ந்து கொண்டாள். தேவன் சற்றே பயம் நீங்கியவன் போல் கடைசி வரிசையில் ஒடுங்கி உட்கார்ந்தான். மணியனைப் பார்த்ததும் தேவனின் முகம் இருளடைந்தது.இந்த ஆள் அடிக்கடி தென்படுகிறானே என்ற விசனம். உமாவின் பக்கம் சென்ற மணியன் அவள் கையில் அய்நூறு ரூபாய் நோட்டொன்றை வைத்து அழுத்தினார். ” மகராசியா இரு அம்மா “ மெல்லிய குரலில் சொன்னார். அவள் பயத்தை உள்ளடக்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்க எத்தனித்தவள் பின் தயங்கி மவுனமானாள். தேவன் மணியனின் முகத்தை இருளுடன் பார்த்தான் * * * “ 

திருட்டுத் தபால் இல்லை நிஜ தபால் ஒண்ணு வந்திருக்கு தனம் “ மின்னஞ்சலைப் பார்த்தபடி சொன்னார் மணியன். “ நம்ம பையனெ திருட்டுப் பையன்ம்பீங்க . அவனா எழுதியிருக்கான்.” “ நம்ம பையன் மணி மணீயானவன் உமாவோட பையன் எழுதியிருக்கான். அமெரிகாவில கம்யூட்டர் என்சினீயராமா… செகடந்தாளியை வுட்டு பதினஞ்சு ஊர் வேலைக்குன்னு மாறி வந்து வயசான காலத்திலே இங்கிருக்கோம். நம்மள உமா பையன் கண்டுபுடிச்சு இ மெயில் அனுப்பி இருக்கான்” “ யாரு உமா “ ‘ திருட்டுக்கடிதாசில்லே அது மாதிரி சுவாரஸ்யமா இருந்ததில்லேன்னு சொல்வனே . அந்த உமாவோட பையந்தா.” “ என்ன திருட்டு கடுதாசி படிச்ச தபால்காரனுக்கு அவன் வந்து ஒதை குடுக்கப்போறானா “ “ எங்கமாவுக்கு மொய் குடுத்து ஆசீர்வாதம் பண்ணுன ஒரே ஆள் நீங்கதா. இங்க அமெரிகாவிலெ ஏதாச்சும் விசேசம்னா வர்ற நம்ம கொங்கு நாட்டுக்காரங்க கொழந்தைக கிட்ட ஏதாச்சும் குடுக்கறப்பொ இந்தா மொய்ம்பாங்க., எங்க அம்மாவை வாழ்த்தி மொய் குடுத்த ஒரே ஆள் நீஙகதா. உங்களெ அடுத்த தரம் கோயமுத்தூர் வர்றப்போ பாக்க வருவேன். போன வாரம் எம்பொண்ணுக்கு பொறந்த நாளன்னிக்குத்தா உஙக மொய் பத்தி அம்மா சொன்னாங்கன்னு எழுதியிருக்கான். உங்க ஆசிர்வாதம் தா அவங்கள அந்த பட்டிக்காடெ வுட்டுத் துரத்தியிருக்கு. 
இல்லீன்னா எங்கம்மா என்ன ஆகியிருப்பாங்கன்னு எழுதியிருக்கான் அந்த அமெரிக்கப்பையன் ..போன் நெம்பர் கேட்டிருக்கான். அவங்கம்மா போன் பண்றன்னு சொன்னாங்களாமா “ “ உங்க மொய் ஆசிர்வாதம் நல்லாத்தா இருக்கு.” எப்போதோ கேட்டக் குரலை மீண்டும் கேட்க ஆவலாக இருந்தாள் தனலட்சுமியும். 

 சுப்ரபாரதிமணியன் 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602

சனி, 25 அக்டோபர், 2014



தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் ஸ்டாலின் குணசேகரன். ஈரோடு புத்தகக் கண்காட்சியின் முக்கியத் தூண். பொதுவுடமைகட்சி சார்ந்து இயங்குகிற முக்கிய நிர்வாகி. இவரின் பேச்சுக்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்க்கும். அவை பெரும்பாலும் காற்றில் கரைந்த பேரோசையாக கரைந்து விடும். ஆனால் அவற்றில் சிலவற்றை புத்தகமாக்கும் பதிவில் இந்நூல் வெளிவந்திருக்கிறது..கோவை வானொலி , சென்னை வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட 55 உரைகள் ( 5 நிமிட உரைகள் ) சிறுகட்டுரைகளாக்கப்பட்டிருக்கின்றன. அவை வலியுறுத்தும் விசயங்களாக சமூக அறம் சார்ந்தவற்றை முன்னிலைப்படுத்தலாம். தனிமனித ஒழுக்கம், பொதுக்கட்டுப்பாடு, புத்தக வாசிப்பு, விடுதலைக்குப் போராடியவர்க்ள், செய்தித் தாள்களில் படித்தவற்றில் பாதித்தவை என்று வகை பிரிக்கலாம். ( வானொலி உரைகளை இப்படி புத்தகமாக்கும் முயற்சிகள்படைப்புப் பதிவுகளாக இடம் பிடிப்பதற்கும் உதவும். கோவை வானொலி இயக்குனர் ஸ்டாலின் அவர்களின் வானொலி நேர்காணல் 3 தொகுப்புகள் இவ்வாண்டு வெளிவந்திருப்பது ஞாபகம் வருகிறது)
மேடையில் ஸ்டாலின் குணசேகரன் அவர் பேசும் உரத்த தொனி இதிலில்லை. நிதானமாக செய்திகளைச் சொல்லும் தன்மை உள்ளது. புத்தகங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இன்னும் மெல்லிய, நுணுக்கமானக் குரலில் பேசுகிறார். வாசிப்பு பழக்கம் பற்றி நிறைய சொல்கிறார். தனிமனித ஒழுக்கம் சமூக வாழ்க்கைக்கு மிக முக்கியமானது என்பது பற்றிய வலியுறுத்தல் உள்ளது. மனிதாபிமானம் படைப்புகளிலோ, தினசரி நடவடிக்கைகளிலோ இருக்க வேண்டியது பற்றிய அறிவுறுத்தல் உள்ளது. காலம் உருவாக்கிய புத்தகங்களாய் மனிதர்கள், எழுத்துக் காவியங்களைச் சுட்டிக் காட்டுகிறார். விடுதலைப் போரில் உயரைக் கொடுத்தவர்களைப் பற்றி தொடர்ந்து பேசி சும்மா வந்த்தில்லை சுதந்திரம் என்பதை சுட்டிக்காட்டுகிறார்.வகை வகையான அறுசுவை, சமச்சீர், சரிவிகித உணவு போல் பல்வேறு தலைப்புகள்.சுவாரஸ்யமான தகவல்கள். நவீன வாழக்கையில் புதிய தலைமுறை சிதைந்து போயிருப்பதைக் காட்டும் பலசம்பவங்கள்( -ம். தன்னிடம் ஒரு கை பேசி இருக்கும்போது இன்னொரு நவீன கைபேசி கேட்டு பெற்றோர் வாங்கித் தராததால் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் ) இடம்பெற்றுள்ளன.விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் புகைப்படம் தேடி அவரிடம் தர முயலுகையில், அவருக்குத் தேவையான குருதிக் கொடையை ஏற்பாடு செய்து கொண்டு அவரை அணுகுகையில் அவ்ர் இறந்து போய் விட்டது தெரிகிறது.
இது போன்ற சம்பவங்களை விவரிக்கையில் ஒரு தேர்ந்த படிப்பாளியின் இயல்புடன் பேசுகிறார். எழுதுகிறார். படைப்புத் தன்மை தலை காட்டுகிறது. மேடையின் உரத்தக் குரலோடு பேசுவதைப் போலவே, இன்னொரு புறம் மெல்லியகுரலில், படைப்புத்தன்மையோடு அவர் மிளிர்வதுதான் எழுத்தாளர்களுக்கு ஆறுதலானது. வாசக உலகத்திற்கும்.
( ரூ 125 – மெய் வருத்தக் கூலி தரும். ஸ்டாலின் குணசேகரன், என்சிபிஎச் வெளியீடு , சென்னை