சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாழத் துடிக்கும் உயிர்கள்: சுப்ரபாரதிமணியனின் 'நீர்த்துளி' நாவல் ஒரு மதிப்பீடு)

   நூல் அறிமுகம்  சி. ஆர். ரவீந்திரன்
----------------------------------------------------------------

வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான 'நீர்த்துளியை' வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன்.
நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம்.

சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம்.

வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார்.

அதை அவருடைய 'நீர்த்துளி' நாவலிலும் வெளிப்படையாகக் காண முடிகிறது. இந்த நாவல் நிகழ்காலத்தின் மாற்றத்தில் தவிர்க்க முடியாத தேவையின் விளைவாக மரபை மீறும் நியாயத்தை அடையாளப் படுத்துவதாக உள்ளது.

காலம் காலமாக வரையறைக்கு உட்படுத்தப்பட்டுக் காப்பாற்றப்பட்டு வரும் குடும்பம் என்ற அமைப்புக் குலைந்து சிதைந்து உருமாறும் தவிர்க்க முடியாத இழுத்தல் நிகழ்வை அடையாளப்படுத்தும் நோக்கம் நாவலில் அடக்கமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது ஒரு தனிப்பண்பு. 'சேர்ந்து வாழ்தல்' என்ற புதிய வாழ்க்கை மறையின் சிக்கலை மிகுந்த துல்லியமான மனத் தர்க்கங்களுடனும், அசைவுகளுடனும் கலை நேர்த்தியுடன் வெளிப்படுத்தியிருப்பது அவருடைய எழுத்தின் மாறுபட்ட ஒர தன்மையைப் புலப்படுத்துகிறது. அதற்கான தேவையும், சாத்தியப்பாடும் அவரைச் சுற்றி அமைந்திருப்பதை இனம் காணலாம்.

'உலகமயமாதல்' மற்றும் 'தாராளமயமாதல்' போன்ற நவீனப் பொருளாதாரக் கொள்கைகளின் தீவிர நடைமுறை காரணமாக வளரும் நாடுகளில் ஏற்படும் நவீன பொருளாதார வாழ்க்கைச் சூழலில் நிகழும் மாற்றங்களை மிகுந்த அக்கரையுடன் அவர் கவனிப்பது அவருக்குத் தவிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. விரைவாகத் தொழில் மயமாகி வரும் திருப்பூர் மாவட்டச் சூழல்களில் நிகழும் எதிர்மறையான நிலைமைகளை அவர் தன்னுடைய எழுத்துக்களின் வாயிலாக வடிவப்படுத்துகிறார். வாழ்க்கைச் சிதைவுகள், சுற்றுப்புறச்சூழல் சீர் கேடுகள், விளைநிலங்களின் சிதைவுகள் அமைதியைக் குலைக்கும் இரைச்சல்கள் போன்ற புதிய நெருக்கடிகளுக்கிடையில் வாழும் மக்களின் மனப் புழுக்கங்கள் தவிப்புக்கள், தகர்வுகள் அவருடைய படைப்புக்களின் தொனிப்பொருள்களாக இருப்பது இயல்பு. அதை இந்த நாவலிலும் இயல்பாகக் காணமுடிகிறது.

மணமாகாத இளைஞனும், மணமுறிவுக்கு உள்ளாகிப் புதிய சூழலில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படும் அவலப்பட்டுப்போன பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் உள்ள சிக்கல்களைத் துல்லியமாக வெளிப்படுத்துகிறது இந்த நாவல் புலம் பெயர்ந்து வந்த அவர்கள் ஒரு புதிய வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்து வாழ முயலும் இருவரின் வாழ்க்கைச் சிக்கல்களே இந்த நாவலின் அடிப்படையான பிரச்சனை. மணமுறிவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து மன அளவிலும், உடல் அளவிலும் துன்புறுத்தும் கணவன். சாராம்கத்தில் இந்த மூன்று புள்ளிகளுக்கும் இடையில் ஒரு கோபம் அமைத்திருக்கிறார் நாவலாசிரியர். முறைப்படுத்த முடியாத அந்தக் கோலம் முழுமையடைய முடியாத வாழ்க்கையை ஒரு நாவலாக முழுமைப்படுத்தியிருக்கிறது. அவர்களைச் சுற்றி இயங்கும் வாழ்க்கையில் இணைந்தும், பிரிந்தும், முரண்பட்டும், விலகியும், போகிற மனிதர்களின் உறவுகளையும் பிணைத்து ஒரு வாழ்க்கைச் சூழலின் பின்புலத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

புதிய ஒரு சூழலைப் பின்புலமாக்கி, இடம் பெயர்ந்துவரும் மனிதர்களின் வாழ்க்கையை அதன் இயங்கு தன்மைகளுடன் தெளிவாக நாவலுக்குள் அடக்கியிருக்கிறார். புதிய தளம், புதிய உள்ளீடு, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை, புதிய பிரச்சனை போன்ற புதிய தன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது இந்த நாவல்.

* 'நீர்த்துளி' (நாவல்) : சுப்ரபாரதிமணியன்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம்.சென்னை. விலை: ரூ. 160/-
விமர்சனம்: சி.ஆர். ரவீந்திரன் 3/86 கோவைப்புதூர் ரோடு
பேரூர் செட்டிபாளையம், கோவை-641010

subrabharathi@gmail.com