சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 10 மே, 2012

காலநதியின் சகபயணிகள்

2012-05-08
அ. முத்துலிங்கத்தின் “ உண்மை கலந்த நாட்குறிப்புகள்” நாவல் குறித்து..
= சுப்ரபாரதிமணியன்



சிறுகதைகள் என்பது நாவலின் சில பகுதிகள். தொடர்ச்சியோ, தொடர்ச்சியின்மையோ அதை நாவல் என்ற கட்டமைப்ப்பில் கொண்டு வந்து விடும்.எட்டு நாவல்கள் எழுதி விட்டேன். மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை, பிணங்களின் முகங்கள், சமையலறைக்கலயங்கள், தேனீர் இடைவேளை, ஓடும் நதி, நீர்த்துளி என்று . நாவல் எடுத்துக் கொள்ளும் கால அளவும்,அதன் பிரசுர இடைவெளியும் சங்கடப்படுத்தும். சிறுகதையென்றால் சீக்கிரம் பிரசுர வசதி இருக்கிறது. அதை விட கவிதை எழுதுவதும், பிரசுரமும் சற்றே சீக்கிரம் நிகழ்பவை. நாவலின் சில பகுதிகளாவது பிரசுரமாக வாய்ப்புகள் குறைவு.பிரசுரத்தில் பெயரைப் பார்க்கிற ஆசை நாவல் எழுதும் விசயத்தில் சீக்கிரம் நிறைவேறாது. ஆனால் அ. முத்துலிங்கம் அவர்களின் பல சிறுகதைகள் நாவலின் பகுதிகளாக சுலபமாக அமைந்து விடுவது எதேச்சையானதா, இல்லையா என்பது குழப்பம். பிரசுரவாய்ப்பிற்கும், நல்ல வசதி என்பது போல் அவருக்கு அமைந்து விடும். இந்த நாவலில் கூட அதுதான் வாய்த்திருக்கிறது. இதில் உள்ள பல பகுதிகளை சிறுகதைகள் என்ற வகைமையில் முன்பு படித்தவை.ஆனால் அவற்றுக்கு உள்ள தொடர்பு பற்றியும் யோசிக்க வைத்து விடுபவை.இதில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்கான முத்தாய்ப்பு அம்சங்கள் கொண்டது.கடந்த காலத்தின் கூறுகளாக அமைந்திருக்கின்றன.இதை ஒரு நாவல் வடிவம் என்றும் கொள்ளலாம்.நவீன நாவலின் வடிவத்தை எப்படி வேண்டுமானாலும் வடிவமைத்துக்கொள்ளலாம்.
நினைவலைகளிலிருந்து எதையாவது எழுதினாலும், பழைய விசயமாக இருந்தாலும் அதில் சமகால ஊடுருவலாக ஏதாவது விசயம் அமைந்து விடுவது குறிப்பிடத்தக்க விசயமாக இதில் எடுத்துக் கொள்ளலாம்.சமகாலத்தைத் துடைத்தெறிந்து விட்டு பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விடமுடியாததுதான்.
வயது அல்லது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலிருந்தும் என்றபடிதான் இந்தக்கிரமம் அமைந்திருக்கிறது. இளமை. படிப்பு, வேலை, திருமணம், வெவ்வேறு வேலைகள், முதுமை என்ற கட்டமைப்பில்தான் இந்த வெவ்வேறு பகுதிகளும் அமைந்திருக்கின்றன.இந்தப் பகுதிகளின் இணைப்பிற்கான கண்ணிகளையும் இதில் அடையாளம் கண்டு கொள்ளமுடியும்.கிணற்றுத்தவளையாக இருக்கும் மனிதனின் ஒரே மாதிரி அனுபவங்களையும், பல நாடுகளில் வேலை பார்த்த, சுற்றிய அனுபவங்களையும் வேறு படுத்திப்பார்க்க இதில் பல அடையாளங்கள் இருக்கின்றன.காலம் முன்னோக்கித்தான் ஓடும்.அதை பின்னோக்கி தள்ள முடியாது. நாங்கள் காலம் என்ற நதியில் பயணித்துக்
2
கொண்டிருக்கிறோம் என்கிற முத்துலிங்கம் நம்மையும் சக பயணியாக இதில் அழைத்துச் செல்கிறார்.பலரை அறிமுகப்படுத்துகிறார். பல கலாச்சார அம்சங்களை சொல்லித்தருகிறார்.
எல்லோரையும் போல சின்ன வயதின் கிராம அனுபவங்களிருந்துதான் ஆரம்பிக்கிறார். அம்மாக்களும் தொலைந்து போகமுடியும் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரியர்களின் உடைகள் பற்றி வியப்பு என்றைக்கும் குறையாது. நம்முடைய பொருளாதார நிலைக்கு, அவர்களின் உடைகள் ஆடம்பரமானவை. வியந்து கொள்ளச் செய்பவை என்பது தெரிகிறது. அந்த வயதில் வரும் சங்கீத ஆசை, பேச்சுப் போட்டி, பாடல் ஆர்வம், என்ர்று தொடர்கிறது.இசைப்பருவம் கொடுக்கும் மிதப்பிற்கு அளவு இல்லை.காதல் என்பது விட்டு விடுமா என்ன.. பல்கலைக் கழக நுழைவுத்தேர்வு முதல், படிப்பு சம்பந்தமான பல விசயங்கள் தென்படுகின்றன. அப்புறம் வேலை என்று வந்து விட்டபின் ஊர் ஊராக , நாடு நாடாகச் சுற்றுகிறார். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வகையான அனுபவங்களைக் கொண்டு வருகிறது. கொழும்பில் அதிக நாள் வேலை நிமித்தமாய் இருக்க முடிவதில்லை. ஆப்பிரிக்க நியமனத்தின் போதான சாவுகள் சங்கடப்படுத்துகின்றன. அதிகமாய் ஆப்பிரிக்க அனுபவங்கள் ஆக்கிரமிக்கின்றன. பாக்கிஸ்தான் அனுபங்களும் அதிகம். பாக்கிஸ்தானில் முத்துலிங்கம் இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். இந்த அனுபவங்களிம் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள் என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் சுருங்கிப்போய் விட்டன. சியராலியோன், சூடான், அமெரிக்கா சோமாலியா, என்று கனடாவில் போய் ஒரு துண்டு நிலம் வாங்குவரை நாடு சுற்றல் அவருக்கு இருந்து கொண்டே இருக்கிறது.இந்த வகையில் நாடுகளைச் சுற்றும் போது கூர்ந்து கவனிப்பதும், அவதானிப்பதும், அக்கறையும் அவரின் அனுபவங்களைச் சுவராஸ்யமிக்க படைப்புகளாக மாற்றும் ரசவாதம் அற்புதமாகக் கைகூடி வந்து விடுகிறது அவருக்கு. நாடுகளைச் சுற்றுவதாலேயே அவை மனதில் பதிந்து விடாது. எங்கள் திருப்பூர் 15,000 கோடி ரூபாய் அன்னியச் செலவாணி பின்னாலாடையால் சம்பாதிக்கிறது. எங்களூர் முதலாளிகள் வெளிநாடுகளுக்கு போவதும், வருவதும் சகஜம். ஆனால் அங்கு பார்த்ததை கோர்வையாகச் சரியாகச் சொல்லவோ, ஒரு பக்கம் எழுதி விடவோ அவர்களால் முடிவதில்லை.பேசும் போது என்ன பார்த்தீர்கள் என்று கேட்டால் கேளிக்கைச் சமாச்சாரங்கள், பாலியல் விசயங்கள் சிலவற்றைச் சொல்வார்கள். அவ்வளவுதான். போய் வந்ததாக பொய் சொல்கிறாரோ என்ற சந்தேகம் கூட வந்து விடும்.

3
எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத வித்தை தமிழுக்கு பெரிய கொடை.
இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது. இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும் பக்குவம் தெரிகிறது. அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில் நல்ல பதிவாகி விடுகிறது. வேலை சூழலில் பல துரோகங்கள், சாப்பாடு தூக்கி மனிதர்களுடனான உறவும் சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்க நியமனம் போது ஒரு சாவோடு அதை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.. நிலத்தில் கிடைக்கும் வைரம் பெண்களின் கண்களில் மின்னுகிறது. மேசன் சங்கத்து அனுபவங்கள் போல நண்பர்களின் கட்டாயத்தால் சில இடங்களில் உறுப்பினராக இருக்க வேண்டியிருக்கிறது. சூடான் விருந்தில் வாயின் உட்சபட்ச பயன்பாடு சொல்லப்படுகிறது. பெசவரின் பூங்கொத்துப் பெண்கள் சுவராஸ்யமானவர்கள். பாக்கிஸ்தானின் ஜகஜாலக்கில்லாடி கள்ளன்கள் கலை உச்சத்தில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இப்போது அமுலில் இருக்கும் மின்வெட்டைக் கவனிக்கிற போது எங்கோ மின் திருட்டு நடந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. சோமாலியா அனுபவங்கள் பற்றி சொல்லும் போது இந்த மின் திருட்டு பற்றி எழுதுகிறார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், குதிரைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், விமான நிலையத்தில் செருப்பு கழற்றும் சடங்குகள், முடித்திருத்தும் அனுபவங்கள், ஞாபக மறதி என்று சுவாரஸ்யமான நிறைய விசயங்கள். இவற்றில் நீங்கள் ஏதாவது உண்மையைக் கண்டு பிடித்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். அது தற்செயலானது என்று முத்துலிங்கம் தரும் வாக்குமூலத்தைப் புறம் தள்ளி விட்டு அவரை முன்னிலைப் படுத்திதான் இந்த நாவலைத் தொடர முடிவதற்குக் காரணமாக தன்னிலையாகச் சொல்லப்படுவதை முக்கிய காரணமாகக் கொள்ளலாம். படைப்பாளன் ரொம்பவும் தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது. மறைத்துக் கொண்டாலும் அவன் வெளிப்படும் தருணங்களைச் சுலபமாகக் கண்டு கொள்ளலாம். இதிலும் முத்துலிங்கம் அவர்களைச் சுலபமாகக் கண்டு கொள்ள முடிகிறது. இதில் வருகிற இந்தியப் பெண்களோ, ஆப்பிரிக்கப் பெண்களோ, நைரோபிப் பெண்ணோ அனுதாபத்துடனும் எந்த வகையிலும் கிண்டலுக்கு ஆளாகாமலும் சரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான எள்ளல் தொனி ஒரு பிசகு அதிகமாகிப்போனாலும் கொச்சையாகிவிடும். அது எங்கும் நிகழவில்லை.” பெண் படைக்கப்படுவது ஆயுள் முழுவதும் உறிஞ்சப்படுவதற்கு. அவளுக்கு ஓய்வு நாள் என்பது இன்னும் குறிப்பிடப்படவில்லை” என்று ஒரு இடத்தில் எழுதுகிறார். பல இடங்களில் இது போன்ற சித்தரிப்புகள், வார்த்தைகள் பெண்ணகளை மேன்மைப்படுத்துகின்றன.இப்போது அவரின் உற்சாகமான எழுத்திற்கு இடைஞ்சலாக ஞாபக மறதி வந்திருக்கலாம். முதுமையில் ஒவ்வொவொரு நாளும் உயிர் தப்புவதுதான் நாட்களைக் கடத்துவது என்றாகி விடுவதை இறுதியில் குறிப்பிடுகிறார்.எழுத்தாளர்களுக்கோ, இந்த நாட்களைக் கடத்துவது என்பது
4 இல்லாமல் ஆயுள் போதாமைதான் கணக்கில் வரும். .கலை இலக்கிய விசயங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடலின் உபாதை மீறி இயங்க இயங்க படைப்பூக்கம் ஒரு உந்து சக்தியாக கூடவே இருந்து கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. படைப்பாளியின் ஆயுளை முன் வைத்து படைப்பின் அமரத்தன்மை பற்றியும் இந்த சமயத்தில் நிறைய யோசிக்கலாம் என்று படுகிறது.கவிதைகள் சாயலில் தாளில் அடிக்கோடிடும் பல நூறு வரிகள் இந்த நாவலில் உள்ளன. கவிதையை உணர்ந்து புரிந்து கொண்டபின் உற்சாகத்தின் துள்ளலோ, துக்கத்தின் சாயலோ அகப்படுவதிப் போல இந்த வரிகள் மனதில் நின்று விடுகின்றன. இந்த வகைச் சாயல் அனுபவங்கள் ஆழ் மனதைச் சீண்டும் இணக்கமானதாக நமக்கும் வெவ்வேறு களங்களில் நேர்ந்திருக்கிறது. வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் பல நிகழ்வுகள். இருப்பிற்கும் இல்லாமைக்கும் இடையில் அவை. இந்த இடவெளியிலான உறவுகள், அன்பு, சடங்குகள், குடும்பம், சாவு என்ற வலி முடுச்சுகள் இருக்கின்றன. இந்த முடுச்சுகளின் அர்த்தத்தை இந்த நாவலின் அனுபவங்கள் விளக்குகின்றன. நிலையற்ற பிம்பங்களாய் அலைந்து திரியும் அனுபவங்கள் இதில் நிரந்தரப்பதிவாகின்றன.
{உண்மை கலந்த நாட் குறிப்புகள்/ அ.முத்துலிங்கம் நாவல்/ உயிர்மை பதிப்பகம் வெளியீடு, 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18. விலை ரூ 175}
subrabharathi@gmail.com
நன்றி - உயிர்மை