சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 8 ஏப்ரல், 2010

சந்திரனின் கீழ் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள்

கேரளத் திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான ‘ஸ்வர்ண சக்கோரம்’ பரிசு ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சிறந்த இயக்குனருக்கான ‘ராஜத சக்கோரம்’ விருதும், ரசிகர்களின் சிறப்பு விருதும் என்று இரட்டை சிறப்பம்ச விருதுகளைப் பெற்றபடம் ‘ட்ரூ நூன்’ என்ற தகிஸ்தான் படமாகும்.
மத்திய ஆசியாவில் ஆப்கான் எல்லை, உஸ்பெக்கிஸ்தான், சீனா போன்ற நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருப்பது தகிஸ்தான். ஆப்கானின் கலாச்சாரக் கூறுகளை இந்த மண் பெற்றிருக்கிறது. பெர்சிய மொழி பேசும் இம்மக்கள் சோவியத் குடியரசோடு இருந்தவர்கள். 1992 முதல் 1997 வரை நடைபெற்ற உள்நாட்டுப் போர் அந்த நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. ஏழ்மையான நாடாக்கி விட்டது. தொலைக்காட்சித் தொடர்களும், வீடியோ படங்களும் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டாலும் கடந்த 18 ஆண்டுகளில் தகிஸ்தானிலிருந்து எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை. அதற்கான வசதிகளும் அந்த நாட்டில் இல்லை. திரைப்பட ஸ்டுயோக்கள், தொழில்நுட்ப அலுவலகங்கள் இல்லை. இந்தச் சூழலில் கடந்த 18 ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் முதல் படம் இதுவாகும். இதை இயக்கியவரின் முதல் படம் என்ற அளவிலும் இது சிறப்பிடம் பெறுகிறது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சி இந்த நாட்டை வெகுவாகப் பலவீனப்படுத்திவிட்டது. மதச்சார்பற்ற நாடு என்றாலும் 98 சதம் முஸ்லிம்கள் வாழும் நாடு. அதில் 95 சதம் ஷியாக்களும், 3 சதம் சன்னிகளும் இருக்கிறார்கள். தஸ்கிஸ்தான் மொழியும் அவர்களின் பயன்பாட்டில் உள்ளது. மத்திய வயது வரையிலான கல்வி அமலில் இருந்தாலும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையே பார்க்க முடிகிறது. இடிந்த பள்ளிக் கூடங்கள். இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி, குழந்தைகளின் கல்வி நிலையைத் தெரிவிப்பதாக இருக்கிறது. முள் கம்பி வேலியின் இருபுறமும் குழந்தைகள் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒருபுறம் ஆசிரியர் ஒரு கரும்பலகையைப் பிடித்தபடி பாடம் நடத்துகிறார். ராணுவ வண்டிச் சத்தம் வருவதைக் கேட்டு எல்லோரும் கலைந்து போகிறார்கள்.
அந்தக் கிராமத்தில் கிரில் என்ற ரஷ்ய முதியவர் தட்பவெப்பநிலை கண்காணிப்பு பரிசோதகராக இருக்கிறார். நிலபர் என்ற பெண் அவருக்கு உதவுபவளாக இருக்கிறாள். தன் குடும்பம் இருக்கும் ரஷ்யாவிற்கு அவர் எழுதும் கடிதங்களுக்குப் பதில் இல்லை என்பது அவரின் சோர்வுக்குக் காரணமாக இருக்கிறது. அந்த மலைப்பிரதேசத்தின் இன்னொரு மேல் பகுதி கிராமத்து இளைஞன் ஒருவனுக்கு நிலபர் மணமுடிக்க நிச்சயிக்கப்பட்டிருக்கிறாள். திடுமென ஒரு நாள் அமெரிக்க-கனடா எல்லைகளைப் பிரிக்கிற சர்வதேச எல்லைக்கோட்டினர் நிலபரும், அவள் காதலனும் இருக்கும் வெவ்வேறு கிராம எல்லைகளை முள்கம்பி வேலி போட்டுப் பிரிக்கிறார்கள். இனி எந்தப் பகுதிககுச் செல்வதென்றாலும் விசா வேண்டும். நிலபரின் அம்மாவிற்குப் பிரசவ வலி. அந்த மேல் பகுதி கிராமத்திற்குத்தான் செல்லவேண்டும். நிலபருடன் சேர்ந்து 3 பெண் குழந்தைகள். இந்தப் பிரசவம் ஓர் ஆண் குழந்தையைத் தரும் என்று நிலபரின் தந்தை நம்புகிறார். திருமணத் தேதியும் நெருங்குகிறது. முள்வேலியைக் கடந்து போய் தங்கள் உறவினர்களைப் பார்ப்பது, பள்ளிக்கூடம் போவது, சந்தைக்கு, மருத்துவமனைக்குப் போவது அவர்களால் கற்பனை செய்துகொள்ள முடியாத விஷயமாகிறது. இதை அப்பகுதி மக்கள் எதிர்த்தாலும் ராணுவம் கெடுபிடியாக இருக்கிறது. வேலி எல்லையில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை வெடித்துக் காண்பித்துப் பயமுறுத்துகிறது. கிரில் முள்வேலியை ஒரு இடத்தில் சிதைத்து பிரசவத்திற்குப் போனவளைப் பார்க்க நிலபர் அப்பாவை அனுப்புகிறார். நிலபரின் திருமண நாளை எப்படிக் கொண்டாடுவது என்று தெரியவில்லை. கண்ணிவெடிகளைக் கண்டறிய ஒரு கருவியை உருவாக்குகிறார் கிரில். நிலபரும் கிரிலும் இரவில் அக்கருவியைக் கொண்டு அவர்கள் கடக்கவிருக்கும் பகுதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதை சிறு சிவப்புக் கொடியை வைத்து அடையாளமாக்குகிறார்கள். நிலபரின் அம்மாவிற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. நிலபரின் திருமண நாளில் விருந்து நடக்கிறது. மேல்பகுதிக்கு நிலபருடன் சிலரே செல்லலாம். ராணுவத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும். முள்வேலி தற்காலிகமாக துண்டிக்கப்பட்ட சிறு இடைவெளியில் கண்ணிவெடிகளைச் சரியாக அடையாளம் கண்டு மணமகள் இருக்கும் பகுதிக்குச் சிலரே செல்லலாம் என கிரில் சொல்கிறார். குடும்ப உறுப்பினர்கள் தேர்வாகி கிரில்லின் உதவியுடன் கடக்கிறார்கள். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஜாக்கிரதையாகக் கால்வைத்து அவர்கள் நகர்ந்து மேல்பகுதிக்குப் போகிறார்கள். கிரில் காலில் ஒரு கண்ணிவெடி தட்டுப்படுகிறது. நகர்ந்தால் குண்டு வெடிக்கும். ஒவ்வொருவராக மேல்பகுதிக்கு அனுப்பிவிட்டு அவர் அந்த இடத்திலேயே நிற்கிறார். மற்றவர்கள் மேலேவர வற்புறுத்துகிறார்கள். தன் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்ட ஹாம் ரேடியோ துண்டிக்கப்படவில்லை என்று காரணம் சொல்கிறார். உண்மையாகவே பல கடிதங்களுக்குப் பதில் இல்லாத அவரின் குடும்பத்தினர் அப்போது ஹாம் ரேடியோவில் கிரில்லைத் தொடர்பு கொள்கிறார்கள். தன் நிலைமை கிரில்லுக்குத் தெரிகிறது. திருமண கோஷ்டியை ஜாக்கிரதையாக மேல்பகுதிக்கு அனுப்பிவிட்டு அவர் ஒரு கண்ணிவெடி வெடித்து மரணமுறுகிறார்.
இப்படத்தின் மையத்தை பக்மன் ஹோபாடியின் படங்களிலும் காணலாம். கேரள சர்வதேசத் திரைப்பட விழாவில் தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த குர்திஸ் திரைப்பட இயக்குனர் பக்மன் ஹோபாடியின் ‘டர்ட்டில்ஸ் கேன் பிளை’ கண்ணிவெடிகளுக்குள் தங்களின் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர்களைப் பற்றிய முக்கியமான படமாகும். 1988ல் சதாம் ஹுசைன் வட ஈராக்கிலுள்ள பல குர்திய கிராமங்களைத் தரைமட்டமாக்கினார். அகதி முகாமில் வாழும் சிறுவர்களுக்குக் கண்ணிவெடிகளை அகற்றுவதும் அதைக் கொண்டுபோய் விற்பதும் அமெரிக்காவின் போர் செய்திகளை அறிந்து கொள்வதும் சாதாரண வேலையாகிறது. கண்ணிவெடியில் காலை இழந்த சிறுவன் ஒருவன் வெடிக்காத கண்ணிவெடிகளைத் தேடி எடுப்பதை ஒரு சிறுவர் பட்டாளத்துடன் செய்கிறான். கண்ணிவெடிகளைக் கூடையில் போட்டு முதுகில் சுமந்து அச்சிறுவர்கள் நடமாடுகிறார்கள். குர்திஸ்தான் ஒரு கண்ணிவெடி விதைப்பு பிராந்தியமாக இருக்கிறது. இப்படத்தில் ஒரு சிறுமி நள்ளிரவில் அகதி முகாமினை விட்டு வெளியேறி குளத்தில் இறங்கி, மண்ணெண்ணையை உடலில் ஊற்றி பற்ற வைத்துக் கொள்கிறாள். குளத்தில் கரையில் அம்மா என்றழைத்தபடி குழந்தை நிற்கிறது. தீயை நனைத்துவிட்டு குளக்கரைக்கு மேல்வந்து குழந்தையை எடுத்துக் கொள்கிறாள். ஊன்றுகோலுடன் நடக்கும் சாட்டலைட் என்ற புனைபெயர் கொண்ட சிறுவன் துணையாக இருக்கிறான். பக்மன் ஹோபாடியின் உலகம் இன்னொரு பிரதேசத்தில் இப்படத்தில் விரிவடைந்துள்ளது. கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட உலகத்தில் சிறு குழந்தைகள் சர்வசாதாரணமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. சந்திரன் ஆகாயத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும் வெடித்துச் சிதறும் சூரியனாய்க் கண்ணிவெடிகள் புதைந்திருப்பதை ‘ட்ரூ நூன்’ படம் சொல்லுகிறது. செயலிழந்த வெடிக்காத கண்ணிவெடிகள் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களாகின்றன.