சுப்ரபாரதிமணியன்
---------------------------
தாண்டவக்கோனின் குறும்பட படைப்புலகத்தில் குழந்தைகள் நிரம்பியிருக்கிறார்கள். பள்ளி போகும் மூன்று குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவர்களின் உலகம், அவர்களின் பிரச்சளை அவர் நன்கு அறிந்திருக்கிறார். அவர்களூடே பயணம் செய்து அவர்களின் உலகில் நடமாடவும், அவர்களின் பிரச்சனைகளில் பங்கு பெறவும், சிக்கல்கள் அவர்களுக்குள் பூதாகரமாகும்போது கைகொடுக்கவும் அவருக்கு இயல்பாகிறது. குழந்தை மனத்துடன் அவர்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலையை உருவாக்குவது சாமான்யமல்ல; அந்த இயல்பான மனநிலையையும் பக்குவத்தையும் கொண்டவராய் அவர் இருப்பது படைப்பு நிலைக்கு வெகு சாதகமாகிறது. இந்த சாத்தியத்தை அவரின் முதல் குறும்படமான 'பூங்கா' முதல் விளிம்பு நிலையினரான ஊனமான குழந்தைகளின் பிரச்சனைகளை முன் வைக்கிற 'கை', குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் பற்றிய கல்வி பற்றிய "பாலிபேக்" ஆகியவற்றிலும் காணமுடியும்.
"பூங்கா"வில் அன்பிற்காக ஏங்கும் பெண்குழந்தை பக்கத்து வீட்டு ஏழை பையனுடன் கொள்ளும் நட்பு அன்பிற்கு அடைக்கலமாகிறது. "இப்படிக்கு பேராண்டி" படத்தில் இந்தச் சிறுவர்கள் குடும்பங்களில் மூத்தோரான தாத்தா பாட்டிகள் இல்லாத வெறுமையை உணர்ந்து அவர்களை தேடிக் கண்டடைகிறார்கள். இந்த ஏக்கத்தை நம்முள்ளும் ஆழமாக விதைத்து விடுகிறார். இது அவரின் கலைத்திறனின் வெற்றியாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் பள்ளிக் காவலாளி ஒரு சிறுசெடி தன் பராமரிப்பில் இருந்து தவறிப் போவதை கவனிக்கிறபோது துணுக்குகிறார். அதை முதுமையான கைவிரல்களால் நிலத்தைக் கீறி பதியமிட்டு நீர் ஊற்றவும் செய்கிறார். இந்தப் பரிவை தடுக்கி விழுந்து சாப்பாட்டு கேரியரை சிதறடித்து விடும் சிறுவனிடமும் காட்டுகிறார். பெரியோரின் நேசம் இப்படித்தான் படத்தில் இப்படித்தான் படத்தில் அறிமுகமாகிறது. அது காவலாளி என்ற நிலையிலிருந்து தாத்தா பாட்டி பற்றின ஏக்கமாக விரிகிறது. அவர்கள் இல்லாத உலகத்தை நினைத்து பூதாகரமாக்கிக் கொள்கிறார்கள். தாத்தா பாட்டி உலகில் தங்களுக்கான இடமில்லாதது பற்றி அழுகை இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க இயலாதபடி சூழல் இருக்கிறது (ஆனால் தனிப்பயிற்சி எடுக்கும் ஆசிரியையின் மகள் தன் எதிர்ப்பை சுலபமாகக் காண்பிக்கிறாள். கட்டாய நடனத்தை எதிர்த்து காமிக்ஸ் வாசிப்பில் என்ன தவறு என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறாள். அவளுக்குள்ளும் தாத்தாபாட்டி இல்லாத ஏக்கத்தை காமிக்ஸ்க்குள் அடக்க வேண்டியிருக்கிறது.)
குழந்தைகள் இருவரின் ஏக்கம் பெற்றோர்களைத் தொற்றிவிடுகிறது. கனவுகளுக்குள் நிரம்பி அதிர்ச்சியடைகிறார்கள். குழந்தைகள் தாத்தா பாட்டி புகைப்பட தேடுதலில் ரத்தம் சிந்த வேண்டியிருக்கிறது. இதன் முடிவாய் தாத்தா பாட்டிகளை கண்டடைகிறார்கள்.
தாத்தா பாட்டி பற்றின ஏக்கங்களே குழந்தைகளின் பார்வையிலிருந்து விரிகிற வேளையில், தாத்தா பாட்டியின் பார்வையோ, நோக்கிலிருந்தோ குழந்தைகள் மீதான பாசம் முறித்து இன்னும் சில நெகிழ்வுகளை அது சமச்žரான பாச வெளியின் விஸ்தாரத்தை குடும்பமெங்கும் விதைத்து விளைந்திருப்பதைக் காட்டியிருக்கும்.
இப்படத்தின் குளோசப் காட்சிகள் பலமாக அமைந்திருக்கின்றன. ஆனால் அழுகை காட்சிகளில் எல்லோரும் " நாடக நடிகர்களாகி" விடுகிறார்கள். பகல், இரவு, கனவு காட்சிகளிலும் ஒரே விதமான முகப்பூச்சு, உடை தரம், ஒளியமைப்பு உறுத்துகிறது. குழந்தைகளின் நுண்ணிய உணர்வுகளின் மத்தியில் தனிபயிற்சி எடுக்கும் ஆசிரியை கணவனுடன் தனிப்பயிற்சி மாணவர்களை உட்காரவைத்தபடி தேநீர் அருந்தும் குரோதமும் தென்படுகிறது. திரைப்படத்தனம் என்பது ஏற்படுத்தும் அழுத்தமான சுவடுகளை விரல்களை எண்ணுவதிலிருந்து எதிர்ப்புக் குரலுக்காக போராட்ட ஊர்வலம் என்ற தொலைக்காட்சி பிம்பம் 'தாத்தா பாட்டி வேணும்" என்று கோஷமிட்டபடி ஊர்வலம் செல்லும் வரைக்கும் நீள்கிறது. இந்தவகை சாதரண நிகழ்வுகளை யதார்த்த தளத்தின் சாதாரண இயல்பை மீறி திரைப்பட வடிவத்தில் அழுத்தமான காட்சிகளாக்குவதில் தாண்டவக்கோன் அவரின் பெரும்பான்மையான படைப்புகளில் வெளிப்படுத்துகிறார் (சமீபத்திய அவரின் சிறுகதை யொன்றிலும் இதை நுணுக்கமாக கவனிக்க முடிகிறது ). வெறும் யதார்த்த தளம் மீறி சுவாரஸ்யப்படுத்தும் தன்மைக்கு இந்த வகை வெளிப்பாடு அவசியம். அந்தவகையில்தான் குழந்தைகளின் குறும்புகள் கூட இடம் பிடிக்கின்றன. அழுகை என்பது குழந்தைகள் காதை மூடும் விபரீதமாகிறது. சித்தப்பா என்ற பணம் மற்றும் பொருள் குறித்த அக்கறை கொண்ட கதாப்பாத்திரம் கனவிலும் அதே போன்ற செய்கையைத்தான் வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளுக்கு ஏற்பட்ட சிறு விபத்து பற்றி அறிகிற தாத்தா மனநிலையும் பதட்டமும் ஊசியால் நூல் கோர்க்க முடியாத சிக்கலால் நுணுக்கமாக காட்டப்படுகிறது. அதிலிருக்கும் பதட்டம் அன்பு குறித்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத எல்லோருக்கும் ஏற்படும் அதிர்ச்சிப் படிமமே இப்படத்தின் சாட்சியாகும். பள்ளிக் காவலாளி முதல் மருத்துவர் வரை பலரும் பகிர்ந்து கொள்ளும் அறிவுரைகள், கருத்துக்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அவை குழந்தைகளுக்கான உலகில் அழுத்தம் பெறும் விடயங்களாகி விடும் என்பதையும் கவனிகக நேர்கிறது. தொழில் முறையற்ற நடிகர்களின் நடிப்புப் பயிற்சி பலவீனம் துருத்திக் தெரிகிறது. பலவீனத்தை உதற அவர்களும் முயற்சி செய்கிறார்கள். படத்தில் இழையோடும் சோகத்தை குழந்தைகளின் சேஷ்டைகளும் கதாபாத்திர உருவாக்க சுவாரஸ்யமும் தவிர்க்கச் செய்கின்றன. சோக இழையை தவிர்த்துக் காட்டும் முயற்சியாக படத்தின் எழுத்துக் காட்சியில் கதாபாத்திரங்கள் இயல்பாய் சிரித்து வெளிப்படுவது குடும்ப உறவுகளில் தென்படாத அன்பையும், நேசிப்பையும் நோக்கி எள்ளி நகையாடியே இருப்பதற்கான சாட்சிகளாகக் கூட கொள்ளலாம். குழந்தைகளின் உலகில் அவர்களுடன் நேசக்கரம் நீட்டும் முயற்சிகளின் தொடர்ந்து தாண்டவக்கோன் இயங்குவது படைப்புலகிற்கு வரப்பிரசாதம்தான்.
அன்பையும், பாசத்தையும் நெகிழ்வையும் பகிர்ந்து கொள்வது அவரின் படைப்பின் ஆதாரமாக இருக்கிறது. இந்த ஆதாரத்தை தன் படைப்புகளின் அடிநாதமாக அவர் கொண்டிருக்கிறார் என்பதை அவரின் தொடர்ந்த செயல்பாடுகளில் அறிந்து கொள்ள முடிகிறது. அவர் இயங்குகிற காட்சி சார்ந்த செயல்பாடுகள், கலை இலக்கிய முரற்சிகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகள் பற்றிய அக்கறையிலிருந்து தொடங்கப்பட வேண்டிய செயல்களின் ஆதாரங்களை சுட்டிக் காட்டியபடி இயங்குகிறார் அவர்.
- சுப்ரபாரதிமணியன் ( subrabharathi@gmail.com )
( இப்படிக்கு பேராண்டி.. தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்.
எழுத்து, இயக்கம், தயாரிப்பு: தாண்டவக்கோன்.55 நிமிட குறும்படம்
KA ARTS, TIRUPPUR >Ph., 09360254206 )
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -