சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 22 மார்ச், 2011

அண்டை வீடு: பயண அனுபவம்

கவி நஸ்ருல் இஸ்லாம்
-----------------------


டாக்கா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதிக்கருகில் கவி நஜ்ரூல் இஸ்லாமின் கல்லறை தென்பட்டது. அவரின் விருப்பமாக அந்த மசூதிக்கருகில் புதைக்கப்பட்டிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் மிகவும் நேசித்த கவி நஜ்ரூல் இஸ்லாம்.

‘வசந்தம்’ என்ற இசை நாடக நூலை தாகூர் நஜ்ரூலுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். 1923ல் அலிபூர் சிறையில் அவர் இருந்தபோது தாகூர் அந்நூலின் பிரதியைக் கொடுத்தனுப்பி யிருக்கிறார். அதன் பின் அவரைப்பற்றி அறிந்து சிறையே கொண்டாட்டமாக, தாகுரின் பிரதி வந்ததை ஒரு மாபெரும் கவி தங்களுடன் இருப்பதை நிகழ்த்தியிருக்கிறது. 1922ல் நஜ்ரூல் " தூமேது" என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதில் தாகூர் எழுதிய ஆங்கிலேயர் எதிர்ப்புக் கவிதையை எழுதியதற்காகவே ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

சிறையில் நஜ்ரூ லின் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறார். அதை எதிர்த்து நஸ்ரூல் உண்ணாவிரதமிருந்தார். உடல்நலமும் மோசமானது. நாற்பதுநாள் உண்ணாவிரதத்தை ஷில்லாங்கில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் தந்த தந்திக்குப் பின்னால் நிறுத்திக் கொண்டார்.


சிறையிலிருந்து வெளிவந்த பின் ஓர் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். விஷக் குழல், அழிவுகீதம் என்ற இரு கவிதைநூல்களை அரசாங்கம் பறிமுதல் செய்தது. ‘கலப்பை’ என்ற பெயரில் விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒரு பத்திரிககையை நடத்தினர். அவரின் இலக்கியப் பணி இருபது ஆண்டுகளில் முடங்கிவிட்டது. இருபது கவிதைத் தொகுதிகள், பதினைந்து இசை நூல்கள், மூன்று வீதம் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள், ஜந்து கட்டுரைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

1942ல் ஜூ லையில் கல்கத்தா வானொலி நிலையத்தில் கவிதை வாசிப்பில் ஈடுபட்டிருந்தபோது பேச்சுத் திறன் நின்றுபோனது. அது 34 ஆண்டுகள் பின்னரும் நீடித்தது. இளம் வயதிலேயே (8ம்) தந்தையை இழந்து வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடியவர். அவரின் இரண்டு குழந்தைகள் அகால மரணமடைந்தபின. பள்ளி, மசூதி, புரோகிதம், ரொட்டிக்கடை என பணிபுரிந்திருக்கிறார். மனைவிக்கு முடக்கு நோய்.. தனிப்பட்ட வாழ்க்கையின் சோகத்தை மீறி வாய்திறந்து உரக்கச் சிரிக்கிற தன்மைகொண்டவராயிருந்தவர் பேசும் திறனில்லாத உணர்ச்சியற்ற ஜடமாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்தது. முஸ்லிமாக இருந்தாலும் இராமாயண, மகாபாரத இதிகாசங்களில் அக்கறை கொண்டு படித்து அந்த இதிகாசப் பாத்திரங்களை தனது படைப்புகளில் கொண்டு வந்தவர்.

விடுதலைப் போராட்டக் கட்டங்களில் அவரின் பாடங்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் தந்திருக்கின்றன. அவரின் எழுபதாம் ஆண்டு நிறைவை வங்கதேசமும், மேற்கு வங்க அரசும் கொண்டாடின. இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் ஒரு சேர பென்சன் அளித்தது இவருக்கே. வங்கதேசம் விடுதலை பெற்றபின் 1972 மே மாதம் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வங்கதேச அரசு டாக்கா அழைத்தது. மாடிவீடும், காரும், உடல்நிலையைக் கவனிக்க மருத்துவ


வசதியும் தரப்பட்டன. 1973ம் ஆண்டு கவுரவ டாக்கா பட்டம் வழங்கப்பட்டது. அந்நாட்டின் மிக உயர்ந்த விருதான "21ம் நாள் பதக்கம்" 1975ம் ஆண்டில் அவருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டுதான் உயிருடன் இருந்தார்.

அவரது பாடல் "சல் சல் சல்.." வங்கதேச ராணுவ அணிவகுப்புப் பாடலாக இன்னும் உள்ளது. 3000க்கும் மேற்பட்ட அவரின் பாடல்களில் ஒன்று அது.நஸ்ரூலை தாகூர் போற்றிக் கொண்டாடினார். நஸ்ரூல் கவிதைகளின் போராட்ட உணர்வும், உணர்ச்சி வேகமும் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. விடுதலைப் போராட்டம் கவிதைகளின் அடிநாதமாக இருந்திருக்கிறது. ஆனால் தாகூர் அவரை வெகுவாகப் புகழ்ந்து மெச்சியதும் சர்ச்சைக்குள்ளானபோது போரும், வீரமுழக்கமும் கவிதைக்கு அவசியம் சுதந்திர எழுச்சிக்கு அவசியம், என்றார்.

டாக்கா நகரின் பல இடங்களில் தாகூர் பெயர் காணப்படுகிறது. அவரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம் பற்றிய பேனர்களை நகரில் பார்த்தேன். 12 வயது முதல் எழுதத் தொடங்கிய தாகூர் இங்கிலாந்து சென்றபோது ‘கீதாஞ்சலி’ என்ற தலைப்பில் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துச் சென்றது அவருக்கு பலத்த வரவேற்பைத் தந்தது. நோபல் பரிசும் பெற்றார். 1905ம் ஆண்டு வங்கதேசப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து ‘சர்’ பட்டத்தை துறந்தார். அரசாங்கம் தயாரித்த புரட்சியாளர்கள் பட்டியலில் அவர் பெயரும், அவரின் அரசியல் போராட்ட ஆதரவு விஷயங்களில் இடம் பெற்றது. சாந்தி நிகேதனில் பள்ளி ஆரம்பித்தபின் பணக்கஷ்டம் இருந்தது.

நஸ்ரூலை வித்ரோஹி " புரட்சிக்காரன்" என்றே தாகூ ர் பல இடங்களில் குறிப்பிட்டு அழைத் திருக்கிறார். டாக்காவாசிகளுக்கு நஸ்ரூல் தாகூர் அளவு விருப்பமானவராக இருந்திருப் பதை அவரின் பாடல்கள் டாக்கா கடைகளில் ஆடியோ கேசட்டுகளாகக் கிடைப்பதன் மூலம் அறிந்தேன்.

புதன், 16 மார்ச், 2011

அண்டைவீடு: பயண அனுபவம்: இனிப்பும், கசப்பும்

டாக்காவின் உணவில் டாக்கா கப்பாப்பும், பக்கர்கானியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்கானி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜாமூன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். "மச்சே பாடே பெங்காலி" என்கிறார்கள்: வங்காளதேசத்தவனை அரிசியும், மட்டனும், மீனும் வளார்த்திருக்கின்றன. பாலுக்குத் தட்டுப்பாடு. 1லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறது. எல்லாவற்றிலும் இனிப்பு கேட்கிறார்கள். "நக்சி பித்தாஸ்"என்று அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை வாங்கி சாப்பிட்டோம். "இது கல்யாணத்தின்போது மணமகளுக்கு விசேஷமாக செய்து தருவது. இதை சாப்பிடுவது பாக்கியம்." வயதானவள் இதைச் சொல்லும்போது புதுமணப்பெண் போல முகம் சிவந்து விட்டது.



புஷ்டியான இளம் முஸ்லிம் பெண்களின் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். "நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பஞ்சோனச் தேஷ். அஞ்சு விதமான உணவை சாப்பிடுகறவர்கள் தேசம்."

" செரி... ஏழைக்கு.."

" பான்டா இருக்கவே இருக்கு.."

" பாட்டிலா!"

" இல்லை. தண்ணீர் ஊற்றி வைத்த இரவு சாப்பாடு."

" பழைய சோறா..."

"உப்பும், மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்யும்முன், கூரம், சீரா இதையெல்லாம் கூட அமிர்தம்தா..."

ஓர் உணவு விடுதியில் வாத்துக் கறி சாப்பிட்டோம். நாட்டுக்கோழி போல எலும்புகள் கனமாக இருந்தன. "ஜல புஷ்பம்" என்று வங்காளிகள் மீனைக் கொண்டாடி சாப்பிடுபவர்கள், மீன் சாப்பிடுவதற்கு என்று திருவிழாக்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

தினமும் இரவு விருந்துக்கு ஒவ்வொரு உணவு விடுதியைத் தேடிச் செல்வது என்ற தீர்மானத்தில் கூட்ட அமைப்பாளர்கள் இருந்தார்கள். இந்திய விடுதிகளைத் தேடிச் சென்றோம். இயற்கை உணவு விடுதிக்குச் செல்லலாம் என்ற என் விருப்பம் நிறைவேறவில்லை.

இயற்கை உணவு சார்ந்த மிதவை விவசாயம் என்பது வங்க தேசத்தில் சமீபத்தில் பிரபல்யமாகியுள்ளது. அங்கு அடிக்கடி ஏற்படும் பெரும் மழை, புயல் வெள்ளம் காரணமாக அவற்றின் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக மிதவை விவசாயம் பயன்படுகிறது. மிதவை விவசாயத்திற்காக தண்ணீரில் மிதக்கும் மிதவைப் படுக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. மூங்கில்களைக் கொண்டு மிதவைப் படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. வைக்கோல், ஆகாயத்தாமரை ஆகியவற்றின் கழிவுகள் பரப்பப்படுகின்றன. அதன் மேல் விதைகளைத் தூவவும், நாற்றங்கால் நடவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தக்காளி, வெண்டை, கத்தரி, புடலை வகைக் காய்கறிகள், முள்ளங்கி, பூசணிக்காய், கொத்துமல்லி போன்றவையும் எளிதாக இதில் சாகுபடி செய்யலாம் என்கிறார்கள். இதைத்தவிர நிலத்துள் விளையும் உருளைக்கிழங்கு, இஞ்சி, , மஞ்சளும் பயிரிடப்படுகிறது. ஆகாயத்தாமரை கொண்டு செய்யப்படும் மிதவைப் படுக்கைகள் கடல் தண்ணீர் வெள்ளத்துடன் கலக்கும்போது சமநிலை குலைந்து விடுகிறது. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் வங்க தேசம் பெரும் அளவு வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டபோது மிதவை விவசாயப் படுக்கைகள் மேல் கூடாரம் அமைத்து விவசாயிகள் தங்கி இருந்திருக்கின்றனர்.



நல்ல நெல் ரகங்களின் வைக்கோல் மூலமாக அமைக்கப்படும் மிதவைப் படுக்கைகள் நல்ல ஸ்திரத்தன்மையுடன் இருக்கின்றன என்கிறார்கள்.. மிதவை விவசாயத்தை இந்திய விவசாயிகள் கடைபிடிக்க தற்போது வலியுறுத்தப்படுகிறது.

டாக்கா செல்லும்போது கல்கத்தா விமான நிலையத்திற்கு எதிர் வீதியில் ஏதாவது உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடலாம் என்று டாக்ஸியில் கிளம்பினோம்.

பியூர்புட் என்ற நட்சத்திர விடுதி தென்பட்டது. ஹால்டிராமில் மதிய உணவைச் சாப்பிடும்போது சேவ் அலோசியஸ் ஹால்டிராம் நிறுவனம் பற்றி விரிவாய் சொன்னார்.

இனிப்புப் பதார்த்தங்களுக்கு மேற்கு வங்காளத்திலும் கல்கத்தாவிலும், வடநாட்டிலும் பெயர் பெற்றது அந்த நிறுவனம். ஜான்பால், ரசகுல்லா, பட்டீஸக், சந்தேஷ் ராஜ்போக், நர்கீஸி போன்றவை அந்த நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற இனிப்பு வகைகள்.

2005ல் அதன் உரிமையாளர் ராஜ்கோச்சரி பல மாடிக்கட்டிட கடைஒன்றை பெங்களூரில் நிறுவியபோது அந்தக் கட்டிட முகப்பில் இருந்த அகர்வால் என்பவர் 170 சதுர அடி இடத்தில் அவர் வைத்திருந்த தேனீர் கடையை ராஜ்கோச்சரி விலைக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அகர்வால் மறுத்துவிட்டார். 60 ஆண்டுகால தன் வெற்றிப்பாதையில் அகர்வால் 15 அடி இடத்தை விட்டுக் கொடுக்காதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 4 லட்சம் ரூபாய் தருவதாகவும் கேட்டிருக்கிறார். அகர்வால் தர மறுத்துவிட்டார். அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. அகர்வால் என்று நினைத்து அப்போது தேனீர் கடையில் இருந்த அவரின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். ராஜ்கோச்சரி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள். இந்த வழக்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஐ.என்.டியூசி தலைவர் தண்டபாணி ஜாங்கிரியையும், ரசகுல்லாவையும் பெட்டியளவு வாங்கிக் கொண்டவருக்கு ராஜ்கோச்சரியின் ஆயுள் தண்டனை விதிப்பு பற்றி தெரிந்திருக்காதோ என்னமோ.

ஹால்டிராமின் அக்கடை அமைந்திருந்த வீதியின் பெயர் வங்கத்து புரட்சிக் கவி காஜி நஸ்ருல் இஸ்லாம் அவர்களின் நினைவாக அமைந்திருந்தது.

" காஜி நஸ்ருல் இஸ்லாம் அவென்யூ".

புதன், 9 மார்ச், 2011

சாயத்திரைகள்


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

திருப்பூர் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சாயப்பட்டறை பிரச்சினையை எப்படி வங்கதேசத்தினர் கையாள்கிறார்கள் என்று அறிவதில் ஆர்வமிகுந்தது. ஆனால் காசி போயும் பாவம் போகாத பாவனையில் அங்கும் சாயக்கழிவு பிரச்சினை தீவிரமாகவே இருந்தது.
திருப்பூர் நொய்யல் கரைகள் சாயப்பட்டறைகளின் கழிவுகளை வெளித்தள்ளும் இடமாக இருந்தது போல அங்கிருக்கும் நதிகளும் அப்படியே. நதிகளின் நாடு என்று அழைக்கப்பெறும் விதமாய் நிறைய நதிகள் உள்ள நாடு. வஙகத்தேசம். பூரிகங்கா, சித்திலக்கியா, தரக்பாலு ஆகிய மூன்று நதிகள் டாக்காவைச் சுற்றி ஓடுபவை. அவற்றின் கரையோர சாயப்பட்டறைகள் சாயக் கழிவுகளை வெளித்தள்ளுபவையாக இருப்பவை. நகரின் வீட்டுக் கழிவுகள், 275 தோல் தொழிற்சாலைக்கழிவுகள், சணல் தயாரிப்புக் கழிவுகள் இவை சேர்ந்து டாக்கா நகரை அழுக்கு நகரமாக்கியிருக்கிறது.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

கோல்டன் பைபர்” என்று அழைக்கப்படும் சணல் தொழில் இங்குள்ள முக்கியத் தொழிலாகும். இவை தரும் புற்றுநோய், பார்க்சைன் நோய்கள் மனிதர்களை முடக்கி விடுகின்றன. சுகாதாரக் கேடுகளால் ஆர்செனிக் கழிவு நீரை சுத்தமில்லாத தாக்கிவிட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் நியாய சாவை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். 25,000 குழந்தைகள் வருடந்தோறும் இவ்வகையான வியாதிகளால் இறக்கிறார்கள். 10 லட்சம் கிணறுகள் ஆர்செனிக் கழிவால் விஷமாகியிருக்கிறது. பதினோரு பேருக்கு ஒரு குழந்தை 5 வயது அடையும்முன்பே இறந்து விடுகிறது.


கோல்டன் பைபர்” சணல் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இந்தியா, சீனா, மியான்மர் நாடுகளில் வங்கதேசமும் முக்யமானது. வெள்ள அரிப்புக் காலங்களில் சணல் பைகள் பெரிதும் உதுவுகின்றன. பைகள், அலங்காரப் பொருட்கள், துணிகள் தயாரிப்பிற்கும் பெரிதும் உதவுகின்றன. ஆனால் இவற்றின் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பெருமளவில் தோல்வியடைந்துள்ளன.


யுனிவர்சல் நூல் டையிங் தொழிற்சாலை வங்கதேசத்தின் மிகவும் முக்யமானதாகும். இது டான்கெயில் என்ற நதிகள் கரையில் அமைந்து 75 மைல்களுக்கு சாயக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஏதுவாகி விட்டன. மீன்பிடித் தொழிலையும் பாதித்திருக்கிறது.


ஆர்வோ முறையிலான கழிவுநீரைச் சுத்திகரித்து வெளியேற்றும் முறையை சில சாயத் தொழிற்சாலைகளே கைக்கொள்கின்றன. சாயத்தால் மீன்கள் உற்பத்தி அழிகிற நிலையில், மனிதன் பிறந்து அல்லலுற்று சாக விதிக்கப்பட்டது போல் மனிதர்கள் அற்பஜீவியாக வாழ்கிறார்கள்.

பாலுக்குப் பதிலாய் ஆர்செனிக் கழிவுப்பாலைக் குழந்தைகள் சப்பிக் குடித்தபடி உயிர்துறக்கும் நதிகளின் நாட்டில் தரக்கட்டுப்பாடு பற்றின முறையான சட்டங்கள் வங்கதேச உயிர்களைக் காப்பாற்றும்.

ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா இப்போது பிரதமர். பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமி லீக் இடதுசாரிகளையும், மதச் சார்பற்றவர்களையும் கூட்டணி கொண்டது.

பங்களாதேஷ் தேசியக் கட்சி பிரதான கட்சி. இது இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும், சிறையும் சுலபமாக ஷேக் ஹசினா ஆட்சியில் கிடைத்து வருகிறது. சாயம் பற்றி சாதாரண சட்டங்கள் அமலாகி உள்ளன.


30லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் ரூ52தான்(டாக்கா). வெகு குறைவு. இரண்டு மாதம் முன் 15,000 பனியன் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாருடன் நடந்த சண்டையில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத் தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத் தலைவரைச் சந்தித்தோம். “5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பெனிகளையும் மூட வேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை” என்றார்.


திருப்பூரில் இப்போதைய மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும், அரசின் கூட்டுக் கழிவு சுத்திகரிக்கும் நிலையங்களும் கட்டாயத் திட்டங்களும் பல சாயப்பட்டறைகளை மூட வைத்திருக்கிறது. பலவற்றை ஈரோடு மாவட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு போய்விட்டது. சாயப்பட்டறைகளை நடத்த முடியாத சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆர்வோ முறைத் திட்டங்களும், சுத்திகரிப்பு நிலையங்களும் இல்லாத தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையை வங்கதேசத்தின் ஏற்றுமதியாளர்களிடம் திருப்பூர் தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை மணியாக ஒலித்தனர். இந்த எச்சரிக்கை மணி 25 ஆண்டுகளாக திருப்பூரில் ஒலித்துக் கொண்டிருந்தது கவனத்திற்குரியது.


உலகவங்கி தந்திருக்கும் ஒரு அறிக்கைபடி வங்கதேசத்தில் 1.5 மில்லியன் கியுபிக் மீட்டர் அளவு கழிவு நீர் 7000 தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. 0.5 மில்லியன் கியூபிக் மீட்டர் பிற வகைகளில் சேரும் கழிவு நீராகும். டாக்காவின் ஓரப்பகுதியிலான பூரிகங்கா நதி பல ஆண்டுகளாக கழிவுகளின் ஓடையாகிவிட்டது. சுற்றிலும் உள்ள மக்களும், நதி ஓடும் கிராம மக்களுக்கும் நச்சுக் கழிவைப் பரப்பிக் கொண்டேயிருக்கிறது.

யுனஸ்கோ 2010ம் ஆண்டை சர்வதேச ப்யோடைவர்சிட்டி ஆண்டாக அறிவித்திருக்கிறது. இரண்டு மாதங்கள் முன்பு வங்கதேச அரசு சுற்றுச்சூழல் நீதி சட்டத்தை நிறைவேற்றியுள்ளது நல்ல விடயம்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் மீது 5 ஆண்டுகள் சிறையும் அல்லது 5லட்சம் டாக்கா அபராத்த் தொகை என்று விதிக்கப்பட்டிருக்கிறது அந்தச் சட்டத்தில். இதன்படி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதில் வழக்கைத் தொடரலாம். மிகமோசமான சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் வங்கதேசத்தில் இச்சட்டம் ஒரு பயமுறுத்தலாகவே அமைந்துள்ளது. மொபைல் நீதிமன்றங்களை மாவட்டங்களிலும், தலைமையிடமாக டாக்காவிலும் நியமித்திருக்கிறது. பங்களாதேஷ் ரப்பர் பாலிசி 2010 என்பது நிறைவேற்றப்பட்டுள்ளது. ரப்பர் பயிரிடுதல் என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அதன் தவறான நடவடிக்கைகளும் கட்டுப்படுத்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மாசுபடுத்துபவர்களுக்கு 5 லட்சம் டாக்கா தொகை பெரிதல்ல என்பதும் தெரிகிறது. பிரதமர் இரண்டு விடயங்களை நிராகரித்திருக்கிறார் என்பது ஆறுதலானது:

மதாரிப்பூர் மாவட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதை அழிப்பது, எல்லையோர மாவட்டங்களில் இந்திய யானைகள் வந்து பயிர்களை நாசமாக்குவதைத் தடுக்க அவற்றைக் கொல்வது.


எதிர்காலத்தில் காட்டுப்பயிர் பாதுகாக்கப் படவேண்டிய அவசியம் பற்றி இந்த நிராகரிப்பு யோசிக்க வைக்கிறது. திருப்பூர் சாயப்பட்டறைகள் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி அவ்வப்போது மூடப்படும் செய்திகளை சுற்றுச்சூழல் பிரச்சாரமாக தொழிற்சங்கத் தலைவர்கள் டாக்காவில் சில தரச்சான்று தணிக்கையாளர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

செவ்வாய், 1 மார்ச், 2011

அண்டை வீடு; பயண அனுபவம்

வங்கதேச அரசாங்கமே ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் என்று ’சேவ்’ அலோசியஸ் குறிப்பிட்டார். பல்வேறு வகையான வரிகள் விதிக்கப்பட்டாலும் வரி வசூலில் இருக்கும் சிரமங்களால் சரியாகப் பொதுவரி மூலமான வருமானம் கிடைப்பதில்லை. அரசுக்கும் சரியாக நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் வங்கதேச அரசாங்கம் வெளிநாட்டு நிதி உதவியைப் பெரும்பாலும் எதிர்பார்த்து, வாங்கி அரசாங்கம் நடக்கிறது என்றார்.
40,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வங்கதேசத்தில் இயங்குகின்றன. வறுமையும், ஏழ்மையும் மிகுந்த நாடு என்பதால் பல்வேறு நலத்திட்டங்களுக்கு உலகநாடுகள் நிதியை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இருந்தாலும், வங்கதேசத்திற்கு வருகிற நிதி ஆதாரங்களைப் போல இல்லை. ரஷ்யாவில் 3 லட்சம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமீபமாய் இயங்குவதாய் சொல்லப்படுவதுண்டு.

குழந்தைத் தொழில் உழைப்பு, சுகாதாரத் திட்டங்கள், மரம் வளர்த்தல், பெண்களின் திருமணப் பாதுகாப்பு, மதுப்பழக்கத்திற்கு எதிரான செயல்பாடுகள், வரதட்சனைக் கொடுமைகள், தொழிலாளர் நலன்கள், முதியோர் பணிகள், பெண்களை ஒருங்கிணைக்கும் சுயநிதிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்காக நிதி ஆதாரங்களை வெளிநாடுகள் வழங்குகின்றன. இந்நாட்டின் மனிதர்களை "ஹ்யுமன் போன்சாய்" என்ற அடைமொழிகளுடன் அழைக்கிறார்கள்.

இஸ்லாம் அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக முன்னர் இருந்தனர். பெண்களுக்கான கல்வி, பெண்களின் முன்னேற்றம்,பெண்களை ஒருங்கிணைத்துக் கல்வி, பெண்களின் முன்னேற்றம், பெண்களை ஒருங்கிணைத்துப் போராட்டத்திற்கு முன் வைத்தல் போன்றவை இஸ்லாமிய விதிமுறைகளுக்கு முரணானவை என்பதால் எதிர்ப்பு அதிகமாக இருந்திருக்கிறது. கிறிஸ்துவ ஆதரவும் அவர்களை எரிச்சலூட்டியிருக்கிறது.

தற்சமயம் தன்னார்வக் குழுக்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டவை இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களுக்கான ஆதரவாகவும், நிதி பெறுவதிலும், நிதி திரட்டுவதிலும் முன் நிற்கின்றன. இது அபாயகரமான போக்காகவும் கணிக்கப்படுகிறது. ரம்லான் போன்ற முஸ்லிம் பண்டிகைக் காலங்களில் ஊர்வலங்களை ஒருங்கிணைத்தல், பண்டிகைக் கொண்டாட்டங்கள் ஆகியவற்றுக்கும் தன்னார்வக் குழுக்களின் நிதி உதவி பயன்படுகிறது.

இந்தியாவில் தன்னார்வக் குழுக்களின் நிதி ஆதாரங்கள் கல்விப் பணிக்காகப் பெரும்பாலும் செலவிடப்படும்போது, வங்கதேச தன்னார்வக் குழு நிதி ஆதாரம் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது. ஏழைகள் மலிந்த, ஜனப்பெருக்கம் அதிகம் கொண்ட நாட்டில் இயற்கை சீற்றம் மக்களை வெகுவாக அலைக்கழிக்கிறது. கடல்சார்ந்த நில அமைப்பும், வெள்ளப் பாதிப்பு விரைவில் ஏற்படும் வகையில் அது இருப்பதும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ள வைக்கிறது. மூன்றில் ஒரு பங்கு நிலம் வெள்ளத்தில் சுலபமாக முழ்கி விடுகிறது.

1998ல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அரசு தத்தளித்தபோது தன்னார்வக் குழுக்கள் அந்த நிலையை சரியாகப் பயன்படுத்திப் பணிபுரிந்தன. 10 லட்சம் பேர் அப்போது வீடிழந்தனர். 3லட்சம் பேர் இடம்பெயர வேண்டியதானது. 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ரெட் கிராஸ், கிறிஸ்டியன் எய்ட், வாங்குவிஷன் போன்ற உலக தன்னார்வ அமைப்பினர் அந்த சமயத்தில் பெரும் உதவி புரிந்தனர். தெற்கு ஆசியாவில் ஒரு டாலரை ஒரு தின வருமானமாகப் பெறுபவர் குறைவு. அதிலும் வங்கதேசத்தில் அரை டாலரை ஒரு நாள் வருமானமாகப் பெறுவோர் பாதி மக்கள் தொகை உள்ளனர்.இவர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அரசும் நிர்க்கதியாகி விடுகிறது. வெள்ள அபாயக் காலங்களில் தன்னார்வக் குழுக்களின் பணி மெச்சத்தக்கதாக இருக்கிறது.
டாக்கா நகரின் வீதிகளில் தென்படும் BRAC பார்க் தன்னார்வக் குழுக்களின் அடுக்குமாடிக் கட்டிடங்களும் வணிக நிறுவனங்களும், அவர்கள் நடத்தும் வங்கிகளும் ஆச்சர்யமூட்டுகின்றன. ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் டாக்காவின் BRAC தன்னார்வக் குழு அமைப்பில் பணிபுரிகிறார்கள். அவர்களில் பெரும்பாலும் பெண்கள். 80% நிதி பெண்களின் சுயநிதிக் கொள்கைக்காகப் பயன்படுகிறது. பால், கோழி, துணி வகை தொழில்களுக்கு முதலீடாகியுள்ளது. 40,000 ஆரம்பப் பள்ளிகளை இவர்கள் நடத்துகிறார்கள்.

70,000 ஆரம்ப சுகாதார நிலையங்களை நிர்வகித்து சுகாதாரப் பணி செய்கிறார்கள். 5 வருடங்களுக்கு இலவசக் கல்வி தரும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். ஒரு வகுப்பிற்கு 33 மாணவர்கள், 1 ஆசிரியர் என்ற அடிப்படையில் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கிராமப்புற நூலகங்களும், பள்ளி நூலகங்களும் இவர்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

வங்கதேச விடுதலைக்குப்பின் 1972ல் பாஸிப் ஹுசேன் ஆபிட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான், உகாண்டா போன்ற நாடுகளில் பெருமளவில் கிளைகளை வைத்து இயங்குகிறது.

வங்கதேசத்தின் வெற்றியடைந்த இன்னொரு தன்னார்வக்குழு " கிராமின் " என்பதாகும். முகமது யூனஸ் என்ற இந்த அமைப்பை நிறுவியவர் 2006ம் ஆண்டிற்கான் நோபல் பரிசு பெற்றபோது சிறு உதவிகளும், நுண்ணிய பொருளாதார உதவிகளும் செய்து சாதாரண மனிதர்களை மேம்படுத்துவதை உலகம் அறிய முடிந்தது. கிராமின் அமைப்பில் 80 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 40 இலட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வட்டிக் கடைக்காரர்கள், முதலீட்டாளர்களிடம் இருந்த சிறு கடன் உதவித் திட்டத்தை மாற்றுக் கோணத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவர் யூனஸ். கிராமப்புற மக்களும் , பிச்சைக்காரர்களும் கூட இதில் பயன்பெறுமாறு திட்டங்களை வகுத்து வெற்றிகண்டிருக்கிறார்.

மனித உரிமை விஷயங்களில் கிராமின் அக்கறை கொண்டது என்பதால் துணி உற்பத்தியில் அது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மலின உழைப்பு, சாயக் கழிவுக் கேடு உட்பட குறைகளின் போக்கிலிருந்து மாறுபட்டு புதிய திசையை வங்கதேசத்தில் காட்டியிருக்கிறது. 2009 நவம்பரில் ஜெர்மனின் நிறுவனத்தோடு இணைந்து இந்த மாற்றுத்திட்டத்தை தொடங்கி உள்ளார்கள்.

ஓட்டோ ஜரோப்பிய, வட அமெரிக்கா, ஆசியா நாடுகளில் 123 சில்லறை விற்பனை மற்றும் பொருளாதார சேவை நிலையங்களை நடத்தி வருகிறது. கிராமின் அமைப்புகளுடன் இணைந்து ஓட்டோ அமைப்பு ஜவுளித்துறையும், சமூக நடவடிக்கை நலன்களுமாக இயங்க ஆரம்பித்திருக்கிறது. முன்னோடி தொழிற்சாலையாக டாக்காவில் அது அமைய, நிறுவனப் பணியில் இயங்குகிறது. கிராமின் ஓட்டோ அறக்கட்டளைகளுக்கு இதன் லாபம் செல்லும்.

முதலீட்டாளர்கள், பங்குதாரர்களுக்கு லாபம் செல்லாது. லாபம் தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்தப் பயன்படும். லாபம் மீண்டும் தொழிற்சாலை உருவாக்கத்திற்கும், சுகாதார மற்றும் நலத்திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். முறையான எரிபொருள் சக்தி, சுத்தமான குடிநீரை ஏழைகளுக்கு வழங்க வகை செய்யும்.

முகமது யூனஸ் ஏழை மக்கள் தர்மத்தை எதிர்பார்ப்பதில்லை. ஏழ்மைக்குத் தீர்வை எதிர்பார்க்கிறார்கள். இவ்வகையான தொழில் திட்டங்கள் அவர்களை ஆசுவாசப்படுத்தும் என்கிறார். கிராமின் ஓட்டோ ஜவுளித்துறை அனுபவங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் உயர்ந்த தொழிலாளர் நலன்களுடன் உற்பத்தி செய்கிறது. ஆரம்பத்தில் 1000 பேர் கொண்ட தொழிற்சாலையை டாக்காவில் ஆரம்பித்திருக்கிறது.

சரியான பொருளாதார தீர்வுக்கான சமூக நலன்களுடன் அது வங்கதேசத்தில் உற்பத்தியை துவக்கிச் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுக்க இது போல் மாதிரி தொழிற்சாலைகளை நடத்த எண்ணி வருகிறது.

மாசுபட்ட தொழிற்சாலை கருத்தமைவுக்கு எதிரான மாற்றுத் தொழில் நடவடிக்கைகளை இது தொடங்கியிருப்பது, பின்னலாடைத் துறையில் மோசமான முன்னுதாரணமாக விளங்கும் பல தொழிற்சாலைகளுக்கு முன் மாதிரியாக விளங்க ஆரம்பித்திருக்கிறது.

subrabharathi@gmail.com