சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 25 நவம்பர், 2010

டாக்கா: பிசாசு நகரம்

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப்போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன.

தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.

டாக்காவின் உணவில் டாக்கா கபாப்பும், பக்கர் காளியும், பிரியாணியும் முக்கியமானவை. பக்கர்காளி காலை உணவு. ரசகுல்லா, குலோப்ஜமுன் உட்பட ஏகப்பட்ட இனிப்பு வகைகள். “மச்சே பாடே பெங்காலி “ என்கிறார்கள். வங்கதேசத்தவனை அரிசியும், மீனும்., மட்டனும் வளர்த்திருக்கின்றன.பாலுக்குத் தட்டுப்பாடு. ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கு விற்கிறார்கள். எல்லாவற்றிலும் இனிப்பு சேர்க்கிறார்கள். “ நக்சி பித்தாஸ் “ என்ற அரிசியில் செய்த இனிப்பு கலந்த புட்டொன்றை ஒரு வயதானவள் தெருவில் விற்றுக் கொண்டிருந்ததை

வாங்கிச் சாப்பிட்டோம். “ இது கல்யாணத்தின் போது மணமகளுக்கு விசேசமாக செய்து தருவது. இதைச் சாப்பிடுவது பாக்கியம். “ வயதானவள் இதைச் சொல்லும் போது புதுமண்பெண் போல முகம் சிவந்து விட்டது. புஸ்டியான இளம் பெண்கள் மத்தியில் நன்கு திடமாகவே அவள் இருந்தாள். “ நல்லா சாப்புடுவாங்க எங்க ஆளுக. பஞ்சோ பண்சோனர் தேஸ் – 5 விதமான உணவைச் சாப்பிடுபவர்கள் தேசம். “

” செரி ஏழைக்கு...”

“ பாண்டா இருக்கவே இருக்கு “

“ பாட்டிலா ”

” இல்லே. தண்ணீ ஊத்தி வைத்த இரவுச் சாப்பாடு. “

“ பழைய சோறா “

“ உப்பும் மிளகாயும் சேர்த்தால் அமிர்தம். அரிசியில் செய்ய்யும் மூன், கூரம், சீரா இவையெல்லாம் கூட அமிர்தம்தா .. “

கடினமான எலும்பாக இருக்கிறதேயென்று இரவு உணவு விடுதியில் விசாரித்தேன். ” நாட்டுக்கோழி கூட சாதாரணமாக கிடைக்குமா “

“ இது நாட்டுக் கோழியில்லே. வாத்துக்கறி . நாளைக்கு ராத்திரி டின்னர்லே ஒட்டகக் கறி போட்டர்லாமா.”

பாஸ்போர்ட்டைக்காட்டி கூட வந்த நண்பர்களில் சிலர் மது பானங்களை வாங்கினர். என்னுடன் வந்தவர்களில் தொழிற்சங்கத்தலைவர்கள், தன்னார்வக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் என 12 பேர் கொண்ட குழு டாக்காவில் பின்னலாடையின் அபரிமித ஏற்றுமதி பற்றி தெரிந்துகொள்ளச் சென்றிருந்தோம். “ என்ன பிராண்டிக்கு இவ்வளவு பஞ்சம். ..விஸ்கியா சாப்புட வேண்டியிருக்குது. “ என்றார் கூட இருந்த ஒரு நண்பர். குரானில் “ மது சாப்பிடுவது பகைமை தரும் . பலனை விட துன்பம் அதிகம் தருவது என்று கூறப்பட்டிருக்கிறது. எனவே தடை” என்கிறார்கள். மதுவுக்கு இருக்கும் தடை கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. திருட்டுச் சாராயம் ரகசியமாக ஊடுருவி விட்ட்து. கிராமப்புறங்களில் மோலோ அல்லது பங்களா என நாட்டுச் சரக்குக் கிடைக்கிறது. கிறிஸ்துவ நிகழ்ச்சிகள், திருமணங்களில் வைன் பயன்படுத்தத் தடை இல்லை. டாக்கா நகரம் முழுக்க ஆள் மிதிக்கும் லட்சக்கணக்கான ரிக்சாக்களால் நிரம்பி வழிகிறது. ரிக்சாக்களையும், வெளிநாட்டுக்கார்களின் நெரிசலையும் மீறி 10 கி மீ கடக்க 2 மணி நேரமாகிவிடுகிறது. ஒரு ரிக்சாக்காரன் சொன்னது: “ காரோ என்ற எங்க ஆதிவாசிகள் பயன்படுத்தும் மது இங்கே எனக்குக் கிடைத்துவிடுகிறது. “

மதுவை தடை செய்திருக்கும் நாட்டில் விபச்சாரம் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அங்கீகாரம் பெற்ற 20 சிவப்பு விளக்குப் பகுதிகள் டாக்காவில் உள்ளன. குழந்தைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதும் உள்ளது. 12 வயதில் பின்னலாடைத்தொழிலுக்காக பர்குனா மாவட்ட்த்திலிருந்து டாக்கா வந்த ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு ஓட்டல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பின் விபச்சார விடுதியில் தள்ளப்பட்டதை ஒரு விவரணப்பட்த்தில் பார்த்தேன். அவள் சரீபா: சரீபாவைப்போல 30, 000 குழந்தைகள் இத்தொழிலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வங்க தேச அரசியல் சட்டம் சூதாட்டமும் , மது அருந்துவதும் பெரும் குற்றங்கள் என்கிறது. இங்கு சாலையோரங்களில் விலைமகளிர் நின்று கொண்டிருப்பது தினமும் தென்படுவது. ஏழைப்பெண்களும், நகர சேரிப்பெண்களும் இதில் அதிகம். கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம் ப்ற்றி ஒருவன் சொன்னதாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் சொன்னது;

“ முட்டைகளோடு இருக்கிற மீனுக்கு ருசி அதிகம். அது மாதிரி கர்ப்பமான பெண்களுடன் உறவு கொள்வது சுவாரஸ்யமானது”. இலீஸ் மற்றும் சீத்தல் ஆற்று மீன் வகைகள் இங்கு கிடைக்கின்றன. ஈலிஸா, ஈலிகா, ஹில்ஸா என்றும் பெயருண்டு, இப்பெயர்களில் பெண்களும் இருக்கிறார்கள்.

ஸேக்முஜிபுர் ரகுமானின் மகள் சேக்ஹசீனா இப்போது பிரதமர்.

( முஜிபுரைப் பிரதமராக்கி வங்கதேசத்திற்கு விடுதலை வாங்கித்தந்த இந்திராகாந்திக்கு சிலை இல்லை) வங்கதேச அவாமிலீக் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். அவாமிலீக் கட்சி இட்துசாரிகளையும், மதச்சார்பற்றவர்களையும் கூட்டணியில் வைத்திருக்கிறது. தேசியக்கட்சி பிரதானக் கட்சி. இது இஸ்லாமிய கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. தொழிற்சங்க வாதிகளுக்கு அடக்குமுறையும் சிறையும் சுலபமாக சேக்ஹசினா ஆட்சியில் கிடைத்துவிடுகின்றன. 30 லட்சம் பனியன் தொழிலாளர்கள் உள்ள ஊரில் தினசரி சம்பளம் 52 ரூதான். டாக்கா. இது வெகுக்குறைவு. இரண்டு மாதங்கள் முன் 15000 பனியன் தொழிலாளர்கள் நட்த்தியப் போராட்ட்த்தில் காவல் துறையுனருடன் நடந்தப் போராட்டத்தில் காவல்துறையினருடன் நடந்த மோதலில் பலத்த சேதம் தொழிலாளர்களுக்கு. 12 வயது முதல் குழந்தைத்தொழிலாளியாக இருந்து பின் படித்து முன்னேறிய 30 வயது கல்பனா என்ற தொழிற்சங்கத்தலைவரை சந்தித்தோம். ” 5000 டாக்கா கேட்டோம். 3000 கொடுக்கலாம். இப்போது 1663 டாக்காதான். 5000 கொடுத்தால் எல்லா பனியன் கம்பனிகளையும் மூடவேண்டியதுதான் என்கிறார்கள். முதலாளிகள் லாபத்தைக் குறைத்துக் கொள்வதை விரும்புவதில்லை “ என்கிறார்,

காவல்துறையினருக்கு மரியாதை இல்லை. மாமா என்று கேலிச் சிரிப்புதான். நிறைய லஞ்சம் வாங்குவதால் அப்படி கேலி மரியாதை. ஊழல் மலிந்த நாடு. டாக்கா விமான நிலையத்தை விட்டு இந்தியா வரும்போது ஒரு தொழிற்சங்கத்தலைவர் டாக்கா பண நோட்டுகள் வைத்திருந்ததைப் பிடுங்கிக் கொண்டாகள். 1000 டாக்கா லஞ்சம் கொடுத்தபின் டாக்கா விமான நிலைய அதிகாரிகள் அவரை விடுவித்தனர். டாக்காபணத்தை இந்திய ரூபாயாக மாற்ற 50 சதம் கழிவு போட்டு மீதியைத்தான் தந்தார்கள்.

“ கல்கத்தா ஏர்போர்ட்லே போயி எறங்குனா இது செல்லாத நோட்டு. கிழிச்சுதா போடணும். எங்க்கிட்டே குடுத்தா 50 ரூபாயாச்சும் மிஞ்சும்” வேறு வழியில்லாமல் நாங்கள் எல்லோரும் கையில் இருந்த டாக்கா பணத்தைக் கொடுத்துவிட்டு பாதிப்பணமே வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.

டாக்கா திரைப்பட உலகின் பெயர் ‘ டாலிவுட் ‘ . நம்ம ஊர் கோலிவுட், பாலிவுட் போல வருடத்திற்கு 100 படங்கள் வெளிவந்த காலம் உண்டு. இப்போது சுருங்கி விட்ட்து. இந்தித் திரைப்படங்கள் திரையிட அங்கு தடை.. திருட்டு டிவிடி இந்திப்படங்கள் , பாடல்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. பலர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.” தயவு செய்து பங்களாதேஸ் படங்களுக்குப் போய் விடாதீர்கள். “ கபர்சிங்குகளின் ஆதிக்கம் அதிகம். “ கபர்தார்”.

எழுத்தாளர்கள் டாக்காவை பிசாசு நகரம் என்கிறார்கள். தஸ்லிமா நஸ்ரின் பாபர்மசூதி இடிக்கப்பட்டதையும் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டதையும் பற்றி “ லஜ்ஜா” நாவலில் எழுதிய காரணத்தால் பத்வா தண்டனை விதிக்கப்பட்டது. ஜெர்மனி, ஸ்வீடன், இந்தியா என்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் இதை சாத்தான் நகரம் என்கிறார். தினமும் 8 மணி நேரம் மின்சாரவிநியோகம் இல்லாதத் தலைநகரம். இருளில் டாக்கா பெரிய பூதமாக பயமுறுத்துகிறது. டாக்காவிலேயே 8 மணி நேர மின்வெட்டு என்றால் பிற நகரங்களிலும், கிராமங்களிலும் கேட்கவே வேண்டாம். இருட்டு சாத்தான் நிரந்தப்பிடியில் வைத்திருப்பான். அந்நிய செலவாணி அதிகம் தரும் பனியன் தொழிலே இதன் பிரகாசம்.


---- சுப்ரபாரதி மணியன் ------

subrabharathi@gmail.com

ஞாயிறு, 14 நவம்பர், 2010

” ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்

11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது.
2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து ஒரு திரைப்பட கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி” , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார் இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும் பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப் பயிற்சிஒன்றுக்கு சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன். பிப்ரவரி 14 என் மனைவி கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின் இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.
பத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள் தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால் அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில் கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் சாகித்திய அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .
பின்னர் தொடர்பு கொண்ட பலமுறை சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம் எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.
“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப் பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “ இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
”கனவு” 63 ம் இதழ் அக்டோபர் 2009 இதழில் பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:
“ எனது சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார். 15 நாளில் முழுத் திரைக்கதையை ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ. திரைப்படத்துறையைச்சார்ந்த ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “
சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”

“ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும் கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.

நான் எழுதிய ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில் சில சம்பவங்கள்.:
திருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில் பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு பதிலாக கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு வேலை போய்விடுகிறது.
இதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின் அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில் மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்லி அருள் பாவிக்க தலைமை ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள்,
பனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள் . ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர்
; ஓம் ஒபாமா ; நாமம் எழுதுகிறார்கள். கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன் கிடைத்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

நானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு அடுத்த அங்கலாய்ப்பிற்குப் போகவேண்டும்.

==சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com

செவ்வாய், 9 நவம்பர், 2010

இது எனது தேசம் இல்லை :வங்காள தேசப்பயணம்

திருப்பூர் ரூ 15,000 கோடி அந்நிய செலவாணியை பின்னலாடை உற்பத்தி மூலம் தருகிறது. திருப்பூருக்குப் போட்டியாக கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசம் முன்னணியில் நிற்கிறது. முதலிடம் சீனாவிற்கு.. வங்காள தேசத்தின் பின்னலாடை உற்பத்தி குறித்த ஆய்வுக்காக 12 பேர் கொண்ட குழு டாக்கா சென்றது அதில் நானும் இடம்பெற்றிருந்தேன். தொழிற்சங்கப்பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வத்தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அது.

வங்காள தேசம் பரப்பளவில் குறுகியது. அரசாங்கம் தரும் அபரிமிதமான சலுகைகள், தொழிலாளர்களின் கடுமையான உழைப்பு, ஏற்றுமதியாகும் பஞ்சு. நூல், துணி போன்ற மூலப்பொருட்களின் தாராளமும் , குறைந்த உழைப்புக்கூலியும் பின்னலாடை ஏற்றுமதிக்கு துணையாக இருக்கின்றன. நிதி உதவி, வரிச்சலுகையும் கூட, டாக்காவின் 5000 பின்னலாடை தொழிற்சாலைகளில் 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் 80 சதத்தினர் இளம் பெண்களாவர். தொழிலாளர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் சுமார் 60 அமைப்புகள் உள்ளன. தொழிற்சங்கங்கங்கள் பலவீனமாக இருக்கின்றன. நிர்ணயக்கப்பட்ட தற்போதிய சம்பளம் 1663 டாக்கா மட்டுமே ( 1 ரூ =1.1 டாக்கா) அது நவம்பர் முதல் 3000 டாக்காவாக உயரயிருப்பதாகக் கூறுகிறார்கள். விலைவாசி கடுமையாக உள்ளது. அரிசி 40 டாக்கா. பருப்பு 110 டாக்கா, பால் 60, வெங்காயம் 35 டாக்கா. இந்நிலையில் விலைவாசியை சமாளிக்க தொழிலாளி அதிக நேரம் உழைக்க வேண்டி உள்ளது. மலின உழைப்பு.. மலின உழைப்பு... இதுவே பின்னலாடை வெற்றியின் ரகசியம்.

தொழிற்சங்க ஈடுபாடு குறைவாக இருக்கிறது. தொழிற்சங்கபிரதிநிதிகள் கொடுமைப்படுத்தப்படுவதும் , சிறையிலடைக்கப்படுவது சாதாரணம், சான்றிதழ் தரம்., கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு, நியாய வணிகம் அதிகம் பேசப்படும் காலத்தில் மலின உழைப்பு சாதாரணமாகத் தென்படுகிறது. நவீன கொத்தடிமைத்தனத்துள் தொழிலாளி வர்க்கம் மாட்டிக்கொண்டுள்ளது. திருப்பூர் 80 ஆண்டுகளில் பெற்றிருக்கும் வளர்ச்சியை வங்காள தேசம், டாக்கா 5 ஆண்டுகளில் பெற்றிருக்கிறது .தரச்சான்றிதழ் பெற்ற ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகள் 3 மட்டுமே உள்ளன. அவையும் வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ள தொழிற்சாலைகளே.

டாக்காவில் தொழிற்சங்கப்பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள், தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனங்கள், அவற்றின் ஆடிட்டர்கள், தொழில் அதிபர்கள், பின்னலாடைத்தொழிலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தோம்.டாக்காவை ஒட்டிய 11ம் நூற்றாண்டு பழமை வாயந்த டாக்கீஸ்வரி கோவில், பூனம் நகரம், டாக்கா பல்கலைக்கழகம், பார்லிமெண்ட் கட்டிடம், , மொழிப்போராட்ட நினைவுச்சின்ன வளாகம்,, பூரி கங்கா பகுதி , மிர்பூர் போன்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றிப்பார்த்தோம். நாவலாசிரியர் தஸ்லீமா நஸ்ரின் லஜ்ஜா நாவலில் விவரிக்கும் இந்து மக்கள் வசிக்கும் பகுதியைச் சுற்றினோம்.

அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான நாளில் சற்று திகிலுடன் தான் டாக்காவில் திரிந்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் டாகாவில் பல கோவில்கள் இடிக்கப்பட்ட்தையும், இந்துக்கள் துன்புறுத்தப்பட்ட்தையும் லஜ்ஜா நாவல் விவரிப்பதாலேயே நஸ்லிமா நஸ் ரினுக்கு பத்வா தண்டனை வழங்கப்பட்டது. 1992 டிசம்பர் 7 ஒரு அவமான நாள் என்கிறார் நஸ்லிமா;தாதிபசார் டாக்காவில் இந்துக்கள்

அதிகம் வசிக்கும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக்குடியுருப்புகளும் நாசமாயின. நஸ்லிமா நஸ் ரீனின் ஒரு கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.:


இது எனது நகரம் இல்லை.

என்னுடையது என ஒரு போதும்

நான் சொல்லிக் கொண்ட மாதிரியிலான நகரம் இல்லை இது.

குள்ளத்தனமான அரசியல்வாதிகளுடையது

இந்த நகரம்

பழிவாங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,

சதை வியாபாரிகளின் .,

கூட்டிக்கொடுப்பவர்களின் ., பொறுக்கிகளின்,

வன்புணர்வானவர்களின் நகரமேயல்லாது இது

அது எனது நகரமாக இருக்க முடியாது.

சந்தர்ப்பவாதிகளின் நகரம் இது.

இதனை இனி ஒரு போது

எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்.

இனி ஒரு போதும்.


subrabharathi@gmail.com

சுப்ரபாரதிமணியன்



நன்றி

Thinnai.com