சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

சிறுகதை: முடிவு : சுப்ரபாரதிமணியன் “ மதிய உணவுக்கு வாருங்கள் “ சந்திரசேகரன் மறுமொழி அனுப்பினான் சந்திரமதியின் குறுஞ்செய்திக்கு...வழக்கமாய் தொலைபேசி செய்து வரட்டுமா , வீட்டிலதா இருக்க்கீங்களா என்று கேட்டுவிட்டு வருவாள் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்தபின்... இந்த முறை குறுஞ்செய்தி என்பது ஆச்சர்யமாக இருந்தது . அதுவும் தமிழில் அனுப்பியிருந்தாள். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் புது சிம்மும், புது எண்ணும் பெற்று தொடர்பில் இருப்பாள். அதனால் இம்முறை வந்த புது எண்ணில் இருந்த சந்திரமதி என்ற பெயர்தான் உறுதிப்படுத்தியிருந்தது அவள் ஊருக்கு வந்திருப்பதை. குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து அழைத்தான். “ நல்லா இருக்கீங்களா. இப்பிடி கேட்க சில சங்கடங்கள் வந்திருச்சு .. வாங்க வீட்டுக்கு.. பேசலாம் ’‘ சந்திரமதியின் முகத்தில் தெரிந்த பதற்றம் உடம்பு முழுக்கப் பரவியது போல சந்திரமதியின் முகம் வியர்த்து சோர்ந்திருந்த தோற்றம் சொல்லியது. சேலையை இடுப்பிலும் மார்பிலும் ஒரு சேர சரிசெய்து கொண்டாள். முகத்தில் வழிந்த வேர்வையை துடைக்க்க் கைக்குட்டையை தேட நேரமற்றது போல் உள்ளங்கையால் துடைத்துக் கொண்டாள். சந்திரசேகரன் எதிரிலிருந்த நாற்காலியைக்காட்டினான்.அதன் இயல்பான நிறத்தை இழந்து வெளிறியிருந்தது நாற்காலி. “ மொதல்லே உக்காருங்க “ “ துபாய் பிளைட்டுக்கு இன்னும் இருபது நாள் இருக்குது. அதெக் கான்சல் பண்ணிட்டு உடனே போறதுக்குன்னு வேற புக் பண்ண நெறைய செலவாகும். அதுவரைக்கும் எங்க தங்கறதுன்னு தெரியலே “ சந்திரமதிக்கு சந்திரசேகரின் வீட்டு நிலமை நன்கு தெரியும். மூன்று அறைகளில் பத்துக்குப்பத்து சமையலறை. மீதி உள்ள இரண்டு அறைகளில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் அறையில் அவன் அம்மா மூலையில் உட்கார்ந்திருப்பார். காலில் சின்னதாய் அடிபட்ட பின் மூலையில் இருந்த அவரின் கட்டில் வெளியில் சென்று கிடக்க அவர் தரையில்தான் உட்கார்ந்திருக்கிறார். இன்னொரு அறை படுக்கையறை என்று. இரண்டும் பதினாறுக்குப் பத்து என்று அளவு. தொலைக்காட்சி உள்ள அறையில் மகன் சிவனும்,மகள் பிரியாவும் படுத்துக் கொள்வர்.. முன்பெல்லாம் “ பாட்டி தடவற எண்ணெய் வாசம் சகிக்க முடியலே. அவங்க இருமல் வேற பெரிய தொல்லை ” என்று அவர்கள் இருவரும் உள் அறைக்கே சென்று விட்டார்கள். சந்திரசேகரும் கிருஷ்ணகுமாரியும் தொலைக்காட்சி அறைக்கு வர வேண்டியதாகி விட்டது. தூக்கம் வரும் வரை தொலைக்காட்சி பார்ப்பான் சந்திரசேகர். அதனால் தாமதமாகவே எழுவான் .சந்திரமதிக்கு தூரத்து உறவினன். “ அதுவரைக்கும் எங்க வீட்லே இருக்கமுடியுமுன்னு தோணலே “ அவள் கையில் வைத்திருந்த சூட்கேசைத் திறந்து எதையோ பார்ப்பதும் மூடுவதும் என் பரபரவென்று அவளின் கைகள் இயங்கின. எதையோ தேடுவது போல் இருந்தது அவள் கைகள். பரபரவென்று கண்களும் சூட்கேசை விட்டு வெளியே தாவி ஓடிக்கொண்டிருக்கும் மின்விசிறிக்கும் அவள் உட்கார்ந்திருக்கும் நாற்காலிக்குமிடையில் அலைக்கழிந்தது..இந்தத் தேடலை அறைமுழுவதற்குமாக நீட்டிக்க வேண்டும் என்ற ஆசையில் அவள் பரபரத்துக் கொண்டிருப்பது போலிருந்தது. “ டென்சன் ஆகாதீங்க . கொஞ்சம் நிதானமா உட்காருங்க “ “ என்னமோ பரபரப்பா இருக்கு. அந்நியமான எடத்திலே இருக்கற மாதிரி பரபரப்பு ” “ இதை புது எடமா நெனைக்காதீங்க . அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ரிலேக்ஸ் “ “ இதத்தா எல்லாரும் சொல்றாங்க . எப்பிடி அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியும். இன்னொரு பொண்ணெ என் இடத்திலே வெச்சுப் பாக்கறதிலே ஒவ்வொரு நொடியும் இம்சைதா. தற்கொலைதா பண்ணிக்கணும் “ “ விபரீதாமெல்லா நெனக்காதீங்க “ “ எல்லாம் விபரீதமாத்தா நடந்திட்டிருக்கு.” “ எப்படி வேண்ணா சொல்லிக்கலாம் “ “ இதெல்லா ஏன்னு உங்களாலே ஒரு வார்த்தை அவர் கிட்ட நீங்க கேக்க முடியுமா .. இல்லே.. இல்லே அவன் கிட்ட ,..” “ எப்பிடி கேக்க .. என்ன அதிகாரம் எனக்கிருக்கு...சாதாரண கடன் பிரசினையிலெ என்னன்னு பக்கத்திலெ இருக்கறவன் கிட்ட கூட கேக்க முடியாத நெலமை. இதிலெ இதுவெல்லா பெரிசுதா ..” “ தலெ விதின்னு சொல்றாங்களே இதுதானா..” சட்டெனத் தூறலாய் இருந்த மழை வலுக்க ஆரம்பித்தது. எதனாலோ தாக்கப்பட்டது போல் விருட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தாள் . மழைச்சப்தம் அறைக்குள்ளும் ஊடுருவியிருந்தது. “ மழை பலமா பெய்யுதா. வெளியே போக முடியுமா ... ஏதோ மாட்டிகிட்டன்னு தெரியுது” சட்டென பாளம்பாளமாக அருவியைப் போல தண்ணீர் விழுகிற சப்தம் அவளின் காதில் கேட்க ஆரம்பித்தது. உடம்பிலிருந்து கழுத்து தனியே தெறித்துப் போய் விழுகிற மாதியான பரபரப்புப் பார்வையுடன் பார்த்தாள். விர்ரென்று அந்த அறையினுள் நுழைந்த ராகேஷ் சாக்லெட் தட்டை நீட்டினான். இரண்டை அள்ளிக் கொண்டான் சந்திரசேகர். “ உனக்கு ஏதாச்சும் கிப்ட் குடுக்கணுமே “பாக்கெட்டிலிருந்து அய்ம்பது ரூபாயை உருவினான் சந்திரசேகர்.. “ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. எனக்கு இன்னிக்கு பெர்த் டே “. சந்திரமதி அவனின் செதில்செதிலான மேல்உடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் கவர்ச்சியும் பளபளப்பும் அவளின் கண்களைக் கூச்சச் செய்தன. “ எத்தனாவதுடா ‘ “ ஆறு... சிக்ஸ் “ “ போன வருஷமும் இதைத்தா சொல்லியிருப்பியா “ “ நான் என்ன நடிகையா. ஒரே வயசெச் சொல்றதுக்கு ..” “ அடடா.. அதெல்லா தெரிஞ்சிருக்கா உனக்கு “ “ எடுத்துக்குங்க ஆண்ட்டி.. பெர்த் டே சாக்லேட் “. சந்திரமதி காபி கலர் தாளிலிருந்த ஒற்றை சாக்லெட்டை எடுத்தாள். “ இதெல்லா சாப்புடற, ரசிக்கிற மன நிலை இல்லாமெப் போச்சு பாருங்க இப்போ. நான் அங்கிருந்து வாங்கிட்டு வந்த சாக்லெட் பிரிக்காமெ கெடக்குது அங்கெ “ “ சமாதானமா என்ன சொல்றதுன்னு தெரியலே “ “ எனக்கு பிளைட்டுக்குப் போறது வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியலே .. அங்க தங்கியிருக்கக் விருப்பமில்லை.தங்கியிருக்க முடியும்ன்னு தோணலே. மனசு பதறது ” “ வேறே என்ன பண்ணலாம் . யோசிக்கலாம்..” “ என் சொந்தக்காரங்க ரொம்பவும் அந்நியமாகி ரொம்ப வருஷமாச்சு. யார் கிட்டையும் உறவில்லை. அவங்களுக்கு நான் துபாய் போனதிலெ ஆரமபத்திலிருந்து இஷ்டமில்லெ.. இப்போ இந்த நிலமையிலெ அவங்ககிட்டையெல்லா திரும்பிப் போக இஷ்டமில்லே” “ அவங்களுக்கு எப்பிடி இஷ்டமில்லாமெப் போச்சு “ “ வளர்ந்திட்டிருக்கற கொழந்தைக. பக்கத்திலிருந்து பாக்க வேண்டிய பருவம். இப்போ எதுக்கு வுட்டுட்டுப் போகணும் வெளிநாட்டு வேலைக்குன்னு கேட்டாங்க. உள்ளூர்லே ஏதாச்சும் வேலைக்குப் போ. அதுலே கஷ்டமோ நஷ்டமோ சமாளிச்சுக்கன்னாங்க. அவன்தா கேட்கலே. துபாய் வேலைக்கு ஆள் புடுச்சு காசு குடுத்து எல்லாம் தயார் பண்ணிட்டான். போ.போ.ன்னு தொரத்துனான். அவனோட சின்ன வேலையிலெ அந்த வருமானத்திலெ குடும்பத்தெ ஓட்ட முடியாதுன்னு போனன். இப்போ சொந்தக்காரங்க அவங்க சொன்னதே சொல்லிக்காமிச்சு ஏசுவாங்க. எல்லாம் தலை கீழாகிப்போச்சு “ அவளின் பரபரப்பு பேச்சு தடைபட்டும் கோர்வையற்றும் இருப்பதில் தெரிந்தது.கைகள் சற்றே நடுங்குவது போல் பட்டது. “ எங்க தங்கி இருபது நாளைக்கடத்துவேங்க . ஒரு சின்ன விசயம் ஞாபகம் வருது. பக்கத்து வீதி டிராவல் ஏசன்சியில் அறுபடை வீடு அப்புறம் கொஞ்சம் வடநாடுன்னு ஒரு டூர் புரகிராம் இருக்கறதெ நோட்டீஸ் விளம்பரத்திலெ பாத்தன். ரெண்டு வாரத்துக்கு மேலெ ஆகும். அதிலெ போனா பொழுதும் போகும் .செரியாவும். மனசு அலைபாயாமெ, இவங்களையெல்லா பாத்துப் பாத்து மனம் புழுங்காமெ கொஞ்சம் நாளும் கழியும்..மனசுக்கும் கோவில்களுக்குப் போறதிலெ ஆறுதல் கெடைக்கும்.. ஊர் திரும்பறதெ அதெப்பாத்துட்டு முடிவு பண்னீக்கலாம் “ அவளே தீர்மானித்துக் கொண்டு சொன்னாள்.ஒருவகையில் பதற்றம் தணிந்து விட்ட்து போலிருந்தது. முதல் முறையாக குவைத்திற்குச் சென்ற மூன்று மாதத்தில் வளைகுடாப் போர் வந்து உயிர் பிழைக்கவென்று பலர் திரும்பி வந்தனர். அப்படி அவளும் திரும்பி இருக்கிறாள். ” அங்க போன செலவெல்லா இன்னம் கட்ட முடியாமெ . அதெல்லாம் மனசிலெ வெச்சு மறுபடியும் போய்த்தானே ஆகணும் “ . இரண்டாம் முறை அங்கு போக நிர்பந்தங்கள் இப்படித்தான் ஆரம்பித்தன. அது பற்றி ஒரு இந்தித் திரைப்படம் வந்திருப்பதாய் உறவினர் மோகன் கூடச் சொன்னான். சவரம் செய்யப்படாத மனிதர்களால் நிரம்பிய படம் போல் அவளுக்குத் தோன்றியது. அவ்வளவு இருட்டு அவர்களின் முகங்களில் இருட்டு அப்பிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. கழுத்தில் ஏறிவிட்ட பாம்பை உதறித்தள்ளுவது போல் ஒவ்வொருவரும் பிரயத்தனம்படுவது போலிருந்தது.அந்த நிலைமை இப்போது தனக்கு வந்து விட்ட்தைப் போலவே அவள் உணர்ந்தாள். “ ஊருக்கு அவங்கெல்லா திரும்பி வர்றதலே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காங்க. அந்த ஆம்பளெ பொம்பளியிலெ உன்னைத் தேடிப்பாத்தன் அக்கா ” “ அது சினிமாடா . அதுலெ நான் எப்பிடிடா வருவன்.” “ என்னமோ அதிலே நீ இருக்கறதா நெனச்சு பாத்துட்டே இருந்தேன். “” ” அதுதாண்டா சினிமா ..அந்த சிடி கெடச்சா குடு. மறுபடியும் பாக்கணும் “ மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்க அவளுக்கு வாய்க்கவில்லை.அதை வீட்டில் போட்டுக்காட்டினால் தான் திரும்பியதில் இருந்த சிரமங்களை வீட்டில் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைத்தாள்.அந்த ஏர்லிப்ட் என்ற படக்குறுந்தகடு தேடியும் கிடைக்கவில்லை. “ நாங்க உன்னெ அனுப்பறதுக்கு என்ன க‌ஷ்டப்படறோம்ன்னு இன்னொரு சினிமா எடுக்கலாம்” : என்றார் கணவர். பணம் எல்லாக்கஷ்டங்களையும் சொல்லி விட்டுப் போனபோது அந்த துபாய் பயணம் அமைந்தது. அங்கு வேலை கொடுப்பவரின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, கொஞ்சம் சமையல் வேலையில் உதவுவது என்பது அவளுக்கான வேலையாகச் சொன்னார்கள். சாப்பட்டிற்குப் பிரச்சினை இல்லை. துணி, தங்குமிடம் இலவசம். ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் விட்டு வர செலவுக்குத் தருவார்கள். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் பையன் அவளுக்கு. மாமியார் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னபின்பு கிளம்பிப் போனாள். மூன்றாம் தடவையாக இப்போது ஊருக்கு வந்திருக்கிறாள். முதல் தரம் வந்தபோது குடும்பம் சந்தோஷத்தில் மிதப்பதும் அவள் அனுப்பும் பணம் குழந்தைகளின் படிப்பிற்கும் குடும்பப் பராமரிப்பிற்கும் சுலபமாக ஒத்துவருவது தெரிந்தது. போதும் இனி போக வேண்டாம் என்று ஒருபுறம் மனதில் ஆசை துளிர்த்தது. யாருக்காகவோ உழைப்பது. எல்லோரும் வேலைக்குப் போன பின்பு எப்போதும் ஏசி இருக்கும் அறையில் உடம்பு எலும்பு போல் கட்டையாகிற மாதிரி உட்கார்ந்திருப்பது .அரக்கப்பறக்க வேலை செய்வது இதெல்லாம் பிடிக்கவில்லை அவளுக்கு.ஓய்வு என்று அமையாமல் காலம் விரைந்து கொண்டிருந்த்து. ஈரக்கையை சேலைத்தலைப்பிலேயே துடைத்தபடியே வந்த ரூபா “ ரொம்பவும் பதட்டமா இருக்காதீங்க மதி.. எல்லாம் நடக்கறதெ நல்லதுக்குத்தா . நல்லதே நடக்குமுன்னு நெனையுங்க ‘ என்றாள்.அப்போதுதான் முகத்தை நன்கு கழுவிப் பளிச்சென்று ஆக்கியது போல் ரூபா இருந்தாள். மழையின் சப்தத்தை மீறி உள்ளே பைப்பிலிருந்து ஏதோ தண்ணீர் விழும் சப்தம் கேட்டதும் மீண்டும் ரூபா சமையலறைக்குச் சென்றாள். .” இனிதா படிப்புக்குன்னு நெறைய செலவெல்லா இருக்கு. மூணு பேர்த்தெ கரையேத்தணும் . ரெண்டு பொண்ணுக. எங்கம்மா இவங்களுக்கும் அம்மாவா இருந்துப் பாத்துப்பாங்க மதி ” . அங்கு அனுப்புகையில் கணவன் தீர்மானமாகவே முன்பு சொல்லியிருந்தான். குழந்தைகள் வளர்வதைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஆனால் அவள் அனுப்பும் பணத்தைச் சுட்டிக் காட்டி எல்லாம் நீ போட்ட சாதம்மமா என்று குழந்தைகள் சொல்லி சொல்லி அவளைக் குளிப்பாட்டினார்கள். மாமியாருக்கு முடியாத போது வந்து விட வேண்டியதுதான் என்ற தீர்மானத்தில் ஒரு சமயத்தில் இருந்தாள். குடும்பத்தில் வறுமை அகன்று விட்டதாகத் தோன்றியது அவளுக்குப் பெருமை தந்தது. குழந்தைகளைப் பிரிந்து வாழ்கிற வேதனை அவர்கள் நன்கு வளர்ந்து நிற்பதில் கரைந்தது.. மூன்று குழந்தைகள் பெற்றவளுக்கு உடம்பு எந்த விருப்பங்களையும் வைக்காதபடி காலத்தைத் தள்ளினாள். இந்த முறை வந்தபோது வீட்டில், அவளின் இடத்தில் வேறொரு பெண் இருப்பது தெரிந்தது. அதிர்ந்து போனாள். “ஆம்பளெ தனியா இருக்க முடியுமான்னு சமாதானமெல்லா சொல்ல மாட்டேன் , எல்லாம் கை மீறிப் போச்சு. வளர்ற பொண் குழந்தைகளுக்கு மத்தியில ஒருத்தியெக் கொண்டாந்து வெச்சிட்டு எனக்கு அவ வேணுங்கறான். இதுகளையெல்லா வுட்டுட்டு வீம்புக்கு நான் எங்க போயி நிக்கறது. நீ வந்தா இதுகளெ கையில் புடுச்சுகுடுத்துட்டு வெலகிக்கலாம்ன்னு உள்ளுக்குள்ளியே அழுதுட்டிருந்தேன் சந்திரா. என்னை மனச்சிடம்மா .. “ என்று அழுதாள் மாமியார். “ அப்பிடி நீ தனியா போறதுன்னா சொல்லு இவங்களியும் கூட்டிட்டு வர்றன். தனியா போயிர்லாம். அவன் புதுசா வந்தவளோட என்னமோ பண்னுட்டும். “ “ ரெண்டு பொண்ணுகளுக்குன்னு கொஞ்சம் நகைக கொண்டாந்தேன். கொஞ்சம் காசு இருக்கு. அதெல்லா எத்தனெ நாளைக்கு வரும்ன்னு தெரியாது. மூணும் படிக்கதுங்க. இப்பத்திக்கு அந்த யோசனையெல்லா தனியா போறதெல்லா எடுபடாது. தனியான்னும் போக முடியாது. .பாக்கலாம். திரும்பப் போயிதா யோசிக்கணும். காசு மிச்சம்பண்ணிக்கனும். இந்த ஆம்பளெ பண்ணுன மாதிரி நானும் நெனச்சிருந்தா, அங்க நடந்துட்டிருந்தா என்னாகும்” “ எனக்கும் புரியுதம்மா . நான் கெழட்டுப் பொம்பளை. நான் என்ன பண்ண முடியும் . எல்லாம் கை மீறிப் போச்சு. .கொஞ்சம் வார்த்தைக மீறுனா கூட இந்த மூணுகளோட நான் வீதியில் நிக்கணும். நான் நின்னு சவமாயிருவன். வயசு அப்பிடி. இந்த மூணும் என்ன பண்ணும்“ “ அந்த தைரியந்தா அந்த ஆம்பளைக்கு. போலீசுக்குப் போனா அவன் நிலைமை என்னாகும்ன்னு தெரியுமா “ “ எதுவா இருந்தாலும் வீதிக்கு வர்றவங்க நாங்க நாலு பேருந்தா. இப்போ புதுசா வந்திருக்கற அவ வேறே.. ‘ சின்னப்பெண் சந்திரமதியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு பெரிதாய் பிரச்சினை புரியவில்லை போலிருந்தது. “ நீ இருக்கற ஊர்லெல்லா ராக்கெட் இருக்கும்மா ..ராகெட்லே உட்காந்து பாக்கணும். அதுக்குன்ன்னு படிக்கணும் “ “ படிக்க வைக்கறண்டி.. பாத்துக்கலாம் “ அவள் வேலைசெய்யும் இடத்தில் பக்கத்து வீட்டு வேலைக்காரி இந்தோனிசியாப் பெண் நிர்ஷா ஞாபகம் வந்தாள். அவள் வரும் போது ஒரு ஆறு வயதுப் பையனை ஊரில் விட்டு விட்டு வந்திருக்கிறாள். வேறொருவருடன் சினேகிதமாகி அவனுடன் மறைமுகமாய் குடும்பம் நட்த்துகிறாள். அவ்வப்போது ஊருக்கும் போய் விட்டு வருகிறாள். ஏதாவது கேட்டாள் நமுட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போய் விடுவாள். வங்கதேசத்திலிருந்து வந்த சில வீட்டு வேலைசெய்யும் பெண்களும் அவளுக்குத் தெரிந்திருந்தார்கள். எல்லோருக்கும் அவள் ” மா “ தான். யார் ” மா “என்று சொல்லிக்கூப்பிட்டாலும் தன் இரண்டு பெண்கள் கூப்பிடுவது போல் நினைத்துக் கொண்டு கண் கலங்கிவிடுவாள் சந்திரமதி. சந்திரமதிக்கு வீட்டில் இருக்க வேண்டாம் என்று தோன்றி விட்டது..கணவன் பற்றி யாரிடமாவது போய் புகார் செய்யலாம் என்று தோன்றியது.காவல்துறைக்கு வேண்டாம். வடக்குத் தெருவில் பார்த்த பிளக்சில் கோமதியின் பெரியதலை தென்பட்டது. வருங்கால முதல்வரே வருக என்று போட்டிருந்தார்கள். சந்திரமதியோடு உயர்நிலைப்பள்ளியில் படித்தவள் அரசியலுக்குப் போனாள். சிரமங்கள் இருந்தன.வட்டச்செயலாளர், மாவட்டச்செயலாளர் என்று உயர்ந்து கொண்டே போனாள்.ஆனால் முதலமைச்சர் என்ற அடைமொழியுடன் பிளக்ஸ்தட்டியைப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. முன்பெல்லாம் ஓரிருவர் முதலமைச்சரின் வாரிசு என்று சொல்லிக்கொள்வார்கள். நிரந்தரமுதல்வர் காலமானபின்பு பத்துப் பேர் அந்தமாதிரி சொல்லிக் கொள்வது தெரிந்தது. இரண்டு மாதங்களுக்குள் அந்தப்பட்டியல் நூறு பேரைத்தொட்டு விடும் போல் இருந்தது.இப்போது போய் அவள் முன் நின்றால் ஒன்றும் நடக்காது. அவளுக்குப் பரபரப்பு அரசியல் முக்கியம் ஆனால் வீட்டில் உட்கார்ந்திருந்தால் மனம் தாறுமாறாய் அலையும். கொலைவெறி வந்து விடும் என்று ஒருதரம் வாய் முணுமுணுத்துக் கொண்டபோது வீட்டில் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தாள். சித்தப்பா பாலாமணி ஞாபகம் வந்தார்.தன்மகள் திருமணமாகாமல் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்து மனதைக் கல்லாக்கிக் கொண்டு பதிவுத்திருமணம் செய்து வைத்தார். நாலு பேரைக்கூட்டி அந்தப்பெண்ணுக்கு வளைகாப்பும் செய்தார். வீட்டில் அவள் இருக்கும் போது பலரின் பேச்சு அவரைத்தடுமாறவைத்தது. ” பொழங்கற சாதி கூட இல்லெ பாரு “ என்று பலரும் குத்திக் காட்டினார்கள்.ஒருநாள் நிறைமாத கர்ப்பிணியான அவள் மேல் மண்ணெண்யை ஊற்றிப் பற்ற வைத்து விட்டார்.. சிறைக்குப் போன போது தலையில் அடித்துக் கொண்டு தான் நடந்து கொண்டதைப்பற்றி ப்ற்றி சொல்லி அழ ஆரம்பித்தார். புத்தி கெட்டுப் போச்சு என்று சொல்லி அழுதார். அதுபோல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு மனதில் போட்டுப் புளங்கிக் கொண்டிருந்தால் ஏதாவது விபரீதத்திற்கு மனக்குரங்கு வழி காட்டி விடும். அதில் பலியாகப்போவது கணவனா, புதிதாய் வந்த பெண்ணா என்று பிரித்துக் பார்க்க இயலாமல் போய் விடும்.மெல்ல மெல்ல ஏதோ பூதம் அவளை எங்கோ கொண்டு போய் தள்ளிவிடும் என்று தோன்றியது. வெளியில் வந்து விடுமுறை தினங்களைக் கழித்து விட்டு குவைத்துக்குப் போவதுதான் நல்லது என்று தோன்றியது. அறைக்குள் நுழையும் போது தலையிலிருந்த முக்காட்டுச் சேலை நழுவி சந்திரமதியின் கழுத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது. சந்திரசேகர் அதிகபட்ச அதிர்ச்சியுடன் சந்திரமதியின் மொட்டைத்தலையைப் பார்த்தான். கொஞ்சம் சந்தனக் கீற்றுகள் எண்ணெய் பிசுக்குடன் இருந்தன. “ என்னங்க.. இப்பிடி “ “ அறுபடை வீடு போனா முருகனுக்கு மொட்டை அடிக்க வேண்டாமா “ “ மொட்டை அடிக்கறன்னு சொல்லவேயில்லே..” “ யாருக்குத்தெரியும். பழனியிலே திடீர்ன்னு ஒரு எண்ணம் வந்துது. வேண்டுதல்ன்னு ஒண்ணும் இல்லே.. நீங்க அதிந்து போன மாதிரி எங்க வீட்லே எல்லொருக்கும் சின்னதா அதிர்ச்சி தரணும்ன்னுதா.. ஒரு சின்ன அதிர்ச்சி. பெரிய அதிர்ச்சியெல்லா தர்ர அளவு கொடுமைக்காரியில்லே நான் ..அந்த மனுஷன் மாதிரி .. “ அவளுக்கே அவளின் முகத்தை மொட்டைக் கோலத்தில் பார்க்க அதிர்ச்சியாகத்தான் இருந்தது.மொட்டை அடிக்கும் இடத்தில் வரிசையாய் உட்கார்ந்திருந்த பெண்களின் முகங்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிவது போலிருந்தது. குடும்பத்துச் சிரமங்களியெல்லாம் நினைத்து அழுகிறார்களா என்ன. அல்லது மொட்டை அடிக்க லகுவாகட்டும் என்று தலையை நனைக்க போடப்பட்ட நீரா இப்படி வழிந்தோடுகிறது என்றிருந்தது..அந்த இடத்தில் இருந்த சப்தங்களின் உச்சமும், மயிர்கள் குவியலாய் அங்கங்கே தாறுமாறாய் இறைந்து கிடந்ததும் அவளுக்கு அருவருப்பையேத் தந்தன. செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் ஏதோ பசையில் கால்கள் ஒட்டிக் கொள்வது போலிருந்தது. ஒவ்வொருவரின் கைகளிலும் கண்ணாடிகள். சிறிதும் பெரிதுமாய். ஹாலின் சுவர்களில் இருந்த பெரிய கண்ணாடிகள் மொட்டைகளைக் காட்டி பயமுறுத்தின . சடைசடையாய் மயிர்கற்றைகள் தலையிலிருந்து கழனறு விழும்போது அவளின் கண்களிருந்தும் கண்ணீர் வழிந்தது. இந்தக்கண்ணீருக்கான காரணகர்த்தாக்களின் மேல் ஏதாவது சாபமிடலாமா...தன் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகட்டும் என்று விருப்பபடலாம். தன் கஷ்டமெல்லாம் இப்போதுதான் ஆரம்பமாகியிருப்பது போலவும் பட்டது. இதுபோல் பிரச்சினை வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை அவள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருப்பது போல் பட்டது . பழனி மலை முருகன் அந்தக் கஷ்டங்களையெல்லாம் தீர்ப்பான் என்ற நம்பிக்கை மனதில் வந்தது. இப்படியெல்லாம் கஷ்டம் வந்து விட்டதே என்றிருந்தது.. எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்ளலாம். புருஷனைப் பங்கு போட்டுக் கொள்வதை மட்டும் சகித்துக் கொள்ள முடியாது என்பது தெரிந்தது. “ எப்பிடியோ இருபது நாளு கழிஞ்சது. பிளைட்டுக்கு செரியா இருக்கும். எல்லார்த்துகிட்ட சொல்லணுமில்லியா வர்ற வழியிலெ வீட்டுக்குப் போனன். நான் இன்னிக்கு ஊருக்குப் போறது தெரிஞ்சு அந்த ஆளு அந்தப் பொண்ணோட வெளியூர் போயிட்டான். குழந்தைக கொஞ்சம் அழுதாங்க. வந்துரும்மான்னாங்க. இன்னம் ஒண்னும் முடிவு பண்ண முடியலேன்னு சொன்னன். மொட்டை அடிக்க முடிவு பண்னுன மாதிரி ஏதாச்சும் முடிவு எப்பவாச்சும் எடுப்பன். எப்போன்னு தெரியலே. என்னன்னு தெரியலே..” ‘’ ஆமா . அந்த நாட்லே மொட்டை அடிச்சுட்டு இருக்க அனுமதி இருக்குமா. வேற மத அடையாளம்ன்னு எதுவும் அனுமதிக்க சிரமம் இருக்குமா..” “ ஆமா .. நீங்க சொன்னப்புறந்தா ஞாபகம் வருது. சிக்கலா மாறுமா.. தெரியலெ. அங்க ஏர்போர்ட்லிருந்து வெளியே போக வுடுவாங்களா.. இல்லே ஏதாச்சும் காரணம் காட்டி திருப்பி அனுப்புச்சுவாங்களா .. எதுவா இருந்தாலும்.... “ “ பாசிட்டிவா இருங்க “ “ செரி. எதுவா இருந்தாலும் ஏத்துக்கத்தா வேணும். எந்த முடிவெ எடுக்கவும் எந்த சமயம்ன்னு ஒண்னு இருக்கில்லியா ..” பக்கத்தில் வந்து நின்ற சந்திரசேகரவனின் மனைவி ரூபா சந்திரமதி நீட்டிய பஞ்சாமிர்த டப்பாவை வாங்கிக் கொண்டாள்.விபூதி அது மூடப்பட்டிருந்த பிளாஸ்டி உறையைத் தாண்டி ககமமத்தது. “ சின்ன வயசிலே எனக்கு பழனி பஞ்சாமிர்தம்ன்னா ரொம்பப் பிடிக்கும். இந்த தரம் என்னமோ புடிக்காத மாதிரி டேஸ்டே பண்ணலே “ என்றாள் சந்திரமதி மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே... மினுங்கலாய் நரை மயிர்கள் தெரிந்தன. Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602 094861 01003/ subrabharathi@gmail.com. Ananda viketan weekly feb 2025