சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
திருப்பூர் புத்தகக் கண்காட்சி -2
சுப்ரபாரதிமணியன்
திருப்பூர் தமிழ்ச் சங்க இலக்கிய விருதுகள் நிகழ்வு இவ்வாண்டு திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் நடைபெறுகிறது. சென்றாண்டு ஒரு லட்சம் விருதுத் தொகையைப் பகிர்ந்து கொண்ட ஆறேழு எழுத்தாளர்கள் செலவு தவிர 2 லட்சம் வாடகைத் திருமண மண்டபத்தில் இரவு விருந்துடனும்.. படைப்பிலக்கியவாதி மா அரங்கநாதனின் மகன் நீதிபதி அர. மகாதேவனின் சிறப்புரையும் சிறப்பம்சங்களாக அமைந்தன.
திருப்பூர் தமிழ் சங்க இலக்கிய விருதுகளுக்கான புத்தகங்கள் குறிப்பிடத்தக்கதாக சமீப ஆண்டுகளில் இல்லை என்று நான் சில மாதங்களுக்கு முன்னால் புலனத்தில் ( வாட்ஸ் அப் ) குறிப்பிட்ட ஒரு குறிப்புக்கு அவர்கள் பக்கம் இருந்து வந்த எதிர்வினை கசப்பாக இருந்தது.
திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விழாக்களில் எழுத்தாளர்களின் கலந்துரையாடல்களில் நான் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறேன்.. பெரும்பான்மையாக திருப்பூர் எழுத்தாளர்கள் புறக்கணிக்கும் நிகழ்வாக அது இருந்திருக்கிறது.. ஆனால் நான் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் அவர்களின் கசப்பான எதிர்வினை காரணமாக இந்த ஆண்டு திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது விழாவில் இருந்து என்னை நான் தவிர்க்கும் விதமாக விலகி இருக்க விருப்பப்படுகிறேன்..
திருப்பூர் தமிழ் சங்கம் உலக அளவில் சிறந்த தமிழ் சேவைகள் செய்யும் சங்கம் என்று சென்றாண்டு 5 லட்சம் ரூபாய் தொகை உடன் தமிழக அரசு விருது கொடுத்தது. அப்போது என் இலக்கியப் பணிக்காக இரண்டு லட்சம் ரூபாய் தொகையுடன் விருது கொடுத்தார்கள்.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் தன் விருதின் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் இந்த விருதை கடந்த ஆண்டுகளில் பெற்றிருக்கிற டெல்லி தமிழ்ச்சங்கம், பம்பாய் தமிழ் சங்கம் திருவனந்தபுரம் தமிழ் சங்கம், கரந்தை தமிழ் சங்கம் போன்ற அமைப்பின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு திருப்பூர் தமிழ் சங்கம் தன்னுடைய இலக்கிய முயற்சிகளை மேல் எடுத்துச் செல்ல வேண்டும்.அது தமிழக அரசின் விருதை பெருமைப்படுத்தும்.
திருப்பூர் புத்தக கண்காட்சியில் இந்த வாரம் ஞாயிறு பொதுமக்கள் நிறைய வந்து போயினர். புத்தகங்கள் வாங்கினர் பொதுவான புத்தகங்கள், குழந்தைகள் புத்தகங்கள் அதிகம் விற்றன. இந்த வாரத்தில் இரண்டு மூன்று தினங்கள் இப்படி கூட்டம் வந்து போனால் போதும் பதிப்பாளர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
திருப்பூர் பொதுமக்களே இப்படித் திரளாக வந்து கலந்து கொண்டு புத்தங்கள் வாங்கி பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆதரவு தாருங்கள். திருப்பூர் புத்தக கண்காட்சியில் தள்ளுமுள்ளு என்ற வகையில் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் பரபரப்பாக பேசியதால் இந்த கூட்டம் வந்தது என்று சில பேர் சொன்னார்கள் அப்படி தள்ளுமுள்ளு என்று பத்திரிகைகள் மறுபடியும் பேசி , எழுதி மறுபடியும் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது திருப்பூர் பொதுமக்கள் தங்களுடைய நடவடிக்கைகளை புத்தக கண்காட்சியில் சார்ந்தும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் நிதி உதவியுடன் நடத்தப்படுகிற நொய்யல் விழா, பொங்கல் சமயத்தில் நடத்தப்படுகிறது. புத்தக கண்காட்சியும் அரசின் உதவி பெற்று நடத்தப்படுகிறது. ஆனால் இவற்றில் எல்லாம் படைப்பிலக்கியவாதிகளுக்கு என்ன பங்கு இருக்கிறது என்ற பெரிய கேள்வி இருக்கிறது. படிப்பு என்பது இவர்கள் பேசும் பேச்சில் இருக்கிறது .படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் சார்ந்த அக்கறை செயல்களில் இல்லை என்று தான் தோன்றுமளவு இதன் முக்கியஸ்தர்களுக்கு மனத்தடை இருப்பதை அவர்கள் விலக்கிக் கொள்வது. ஆரோக்யமானதாக இருக்கும். இப்படி மக்களின் வரிப்பணம், அரசின் நிதி உதவியில் நடத்தப்படும் விழாக்களில் படைப்பிலக்கிய வாதிகளுக்கும் பங்கு இருப்பதை பிற ஊர் விழாக்கள் சொல்கின்றன.
.
திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டில் ஒருமுறை இலக்கிய விருதுகளோடு நிறுத்திக் கொள்கிறது. முன்பெல்லாம் புதிய வணிகத் திரைப்படத்திற்கு டிக்கெட் கொடுத்து உறுப்பினர்களை சந்திக்கும் வேலையைக் கைவிட்டது ஆறுதலான விஷயம்.. திருப்பூர் தமிழ்ச்சங்கம் எப்பவாவது பவா செல்லத்துரை போன்ற பிரபல பேச்சாளர்களுக்கு மேடை அமைத்து தருவதோடு தன்னுடைய இலக்கியப் பணி முடிந்து விட்டதாக நினைக்கிறது
திருப்பூர் நூலகங்களில் நடத்தப்படும் விழாக்களில் இவ்வகை படைப்பிலக்கியவாதிகளுக்கு புறக்கணிப்பு இருக்கிறது அங்கே பொன்மொழிகள் தொகுத்து கவிதைள் என்று போடுபவர்களுக்கும் கொஞ்சம் பணம் தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தேநீர் செலவு ஏற்றுக் கொள்பவர்களுக்கும் இலக்கியவாதி என்ற பட்டம் தரப்படுகிறது. அந்த நூலக வாசகர் வட்டத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தகுதிகளாக ஆசிரியராக இருக்க வேண்டும், பணக்காரராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இன்னும் முன்னணியில்..
திருப்பூரில் திருக்குறள் மற்றும் பழைய இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருகிறது இவற்றில் தேநீர் செலவு செய்யும் பணக்காரர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்கு இலக்கியவாதிகள் என்ற கீரிடம் தொடர்ந்து தரப்படுகிறது.
இதனால் நூலக இயக்கங்களும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளும ஆறுதல் பெற்றுக் கொள்கிறார்கள். இதே போதும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
பல வசதியானப் புரவலர்கள் நிதி உதவியால் நடத்தும் இலக்கிய கூட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக சன்மானம் வாங்காத பெரியவர்கள் இலக்கியம் பேசி நிறைய சன்மானம் பெறுகிறார்கள். இவர்கள் இலக்கிய இதழ்களுக்கு சந்தா கட்ட கூட மனம் இல்லாதவர்கள். பெரிய இலக்கியம் கூட்டம் வெளிச்சம் இவை ஊரோடு ஒத்துப் போகும் விஷயங்கள் என்று இந்த வள்ளல்கள் நினைக்கிறார்கள். சிந்து வெளி சார்ந்த அரங்குகள் இந்த ஆண்டு புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கின்றன. மகிழ்ச்சி .
அதே சமயம் சிறுபத்திரிக்கை சார்ந்த கலாச்சாரத்திற்கும் சமாதிகள் கட்டப்படுகின்றன. திருப்பூரில் சிறு பத்திரிகை விற்கிற இலக்கியப் பத்திரிக்கைகள் விற்கிற கடை என்பதே இல்லை. மகேஸ்வரி புத்தக நிலையம் இலக்கிய இதழுக்காக ஒரு சின்ன இடத்தை முன்பெல்லாம் தந்திருந்தது. இப்போது இலக்கிய இதழ்கள் பெரிய அளவில் விற்பனையாவது இல்லை என்று காரணத்தைக் காட்டி தயவு தாட்சணியம் இல்லாமல் அந்த இடத்தையும் பிரபல பேச்சாளர்களின் நூல்களுக்காக ஒதுக்கி விட்டது.. மகேஸ்வரி புத்தக நிலையம் ஒரு காலத்தில் மூன்று கடைகள் இருந்தன இப்போது ஒரு கடையாகச் சுருங்கி விட்டது நேஷனல் புக்ஸ் என்ற பெயரில் ஜவுளி கடைக்காரர்கள் நடத்தி வந்த புத்தகக் கடை மூடப்பட்டுவிட்டது. இலக்கிய பத்திரிக்கைகள் விற்று வந்த பெட்டிக்கடைகள் இப்போது கஞ்சா சாக்லேட் விக்கிற கடைகளாக மாறிவிட்டன இந்த சமயத்தில் தீவிர இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள் புறக்கணிப்பிற்கும், இலக்கிய சாதி, அரசியல் சாதி சார்ந்த தீண்டாமைக்கும் உள்ளார்கள்.
கட்சி சார்ந்த இலக்கிய வட்டங்களில் இருக்கும், தென்படும் எல்லை கோடுகளில் நெருப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது தூரம் இருந்துதான் அந்த நெருப்பை பார்க்க முடியும். டாப் லைட் நூலகம், வாசகர் சிந்தனை பேரவை போன்றவை நடத்தும் கூட்டங்களில் கலந்து கொள்வதில் என்னை போன்றவர்கள் ஆறுதல் அடைகிறார்கள். டாப்லைட் நூலகம் 250 பேரை அழைத்துக்கொண்டு இந்தாண்டு கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், சென்றாண்டு கீழடிக்கும் நிறைய செலவு செய்து பலரை சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கும் வெகுஜன எழுத்தாளர்கள் நடவடிக்கைகளுக்குத்தான் முன்னுரிமை.
திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் குறும்பட விருது, திருப்பூர் சக்தி விருது போன்றவற்றில் என்னைப் போன்றவர்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கிறது.
இந்த வாரம் ஆரம்பித்திருக்கும் தாய் தமிழ் இலக்கிய பேரவை, பாரதி தமிழ் சங்கங்கள் போன்றவை ஆறுதல் தருகின்றன தமிழாசிரியர்கள் நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் தமிழ் மொழி சார்ந்தோ, இலக்கிய அக்கறை சார்ந்தோ அவர்கள் செயல்படுவதில்லை என்ற வசவு, சாபம் அவர்கள் மேல் இருந்து கொண்டே இருக்கிறது. அதை இப்போது ஆரம்பிக்கும் பாரதி தமிழ்ச்சங்கம் போன்ற தமிழாசிரியர்கள் உள்ள அமைப்புகள் இந்த வசவைத் தீர்க்க வேண்டும்.
. இந்த தமிழாசிரியர்களின் இலக்கிய பணி என்பது பட்டிமன்றம் சார்ந்த வேலைகளில் முடங்கி போய் விடுகிறது. “ கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு இலக்கிய நடவடிக்கை என்றால் பட்டிமன்றம் தான்” என்று ஜெயகாந்தன் அவர்கள் ஒருமுறை சொன்னதை அவர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் ஆசிரியர்களும் தொடர்ந்து சரியாகக் கடைபிடிக்கிறார்கள்.
தீவிர இலக்கியம் சார்ந்த இளைஞர்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகள் பெரிய அளவில் நடக்கின்றன அவர்களை அடையாளம் காட்ட மறுக்கிறார்கள் தங்களின் சிம்மாசனங்களை காப்பாற்றிக் கொள்ள பல எத்தனைகளைச் செய்கிறார்கள். தலை யூட்யூப்பர்களும், மாப்பிள்ளையாக இருந்தாலும் பிணமாக இருந்தாலும் தாங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிற சிவன்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகள் சேகரிப்பின் ஒரு கட்டம் இது. அதில் அவர்கள் வெற்றி பெறட்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இலக்கிய அண்ணன்களுக்கு லட்சக்கணக்கான ரூபாயை நிதியாகவும் உதவியாகவும் வழங்கிய கதைகள் உள்ளூரில் நடந்தன சமீப ஆண்டுகளாய்… மக்கள் பணம் அவை. தீவிர இலக்கியம் சார்ந்த படைப்பிலக்கிய எழுத்தாளர்கள் நடவடிக்கைகளுக்கு அந்த வகை நிதி உதவி எல்லாம் தடை செய்யப்பட்டது போல நடந்து கொள்கிறார்கள் .
ஐம்பதாயிரம் கோடி ரூபாய் செலவாணி தரும் நகரம் தன்னுடைய இலக்கிய நடவடிக்கைகளால் இன்னும் பெருமைப்பட வேண்டும். .மேடைகளும் பெரு வெளிச்சமும் தேவைதான் அதைத் தாண்டி தீவிரமாக இலக்கிய நடவடிக்கைகள் நகரத்தின் சரியான அடையாளமாக கொள்ளப்பட சரியான இலக்கிய செயல்பாடுகள் தொடர வேண்டும். இதெல்லாம் எங்களுக்கு தொடர்பில்லாத சமாச்சாரங்கள் என்று ஒரு பக்கம் பலவகை வள்ளல்கள் நடந்து கொண்டுதான் இருப்பார்கள் ஆனாலும் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. இந்த பதிவு சார்ந்த எதிர்வினைகள் மோசமாகத்தான் இருக்கும் அவை ஒரு வகையில் மிரட்டல்கள் கூட இருக்கலாம் அவற்றையும் தொடர்ந்து நண்பர்கள் பதிவு செய்யலாம். நானும் பதிவு செய்வேன்.
திருப்பூர் புத்தக கண்காட்சி இந்த முறை நம்பிக்கை அளிக்கும் என்ற ஒளிச்சேர்க்கை ஞாயிற்றுக்கிழமை கண்காட்சிக்கு வந்த பொதுமக்களின் கூட்டத்தால் தெரிகிறது இந்த வெளிச்சம் தீவிர படைப்பிலக்கியவாதிகள் சார்ந்த நடைமுறைக்கு கூட பலரால் கண்காணிக்கப் பட்டால் அது பெரிய ஆறுதல் தான்.
0
திருப்பூர் புத்தகக் கண்காட்சி நாள் 1;; RPS
0
அமைச்சர்கள் அரசாங்க அலுவலர்கள் புடைசூழ சிறப்பாக ஆரம்பித்தது. கூட்டம் குறைவாக இருந்தது விற்பனையும் குறைவு
முதல் அரங்கம் பின்னல் டிரஸ்ட் அரங்கம் திருப்பூர் புத்தக கண்காட்சியின் முக்கிய பங்குதாரர். அதில் அதன் நிர்வாகி சௌந்தரபாண்டியன் அவர்கள் காணப்படவில்லை அவர் உடல் நல குறைவு பற்றிய செய்திகள் கிடைத்தன. அவர் மீண்டு வர வேண்டும். சென்றாண்டைப் போலவே பின்னல் டிரஸ்ட் அரங்கத்தை இந்த ஆண்டும் தோழர் ஈரோடு இளங்கோ நிர்வகிக்கிறார். விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அவருக்கு நெருக்கமானது..
திருப்பூர் படைப்பாளிகள் நூல்கள் கவி உழவன் அரங்கில் இருப்பது ஆறுதல் தந்தது டாப்லெட் நூலக இந்துமதி உட்பட திருப்பூர் படைப்பாளிகள் அங்குகுவிந்திருந்தனர். மகா ஆறுதல். திருப்பூர் படைப்பாளிகளின் நூல்களை வைக்க ஓர் அரங்கம் என்பது ஆறுதல்
உயிர்மை அரங்கில் புத்தகங்கள் குறைவாக இருந்தன புத்தகங்கள் பண்டல்கள் வேறு இடத்திற்கு திசை மாறிப் போய்விட்டன வந்துவிடும் என்றார்கள்
எழுத்தாளர் பாரதிநாதன் நூல்கள் பொன்னுலகம் பதிப்பகம் அரங்கில் கிடைக்கும். இந்த முறை திருப்பூர் குணா அரங்கம் அமைக்கவில்லை. பாரதிநாதன் இந்த முறை காதல் மற்றும் சேர்ந்து வாழ்தல் சார்ந்த அனுபவங்களை இரண்டு நாவல்களாக கொண்டு வந்திருக்கிறார். நல்ல முயற்சி. புரட்சி பாரதி பதிப்பகம் அந்த நூல்களை வெளியிட்டு இருக்கிறது.இரண்டும் வாங்கினேன் ரூ 300
இன்னொரு போராளி நடிகர் நாவலாசிரியர் சந்திரகுமாரின் ” முடக்க காலகதைகள் “ நாவல் நீண்ட கால தவணையிலிருந்து விடுபட்டு முன்னேற்ற பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது அதற்கு நான் முன்னுரை எழுதி இருக்கிறேன் 550 ரூபாய்
நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் என்னுடைய நாவல் ” முகப்பறவையே எங்கே சென்றாய் “ .வந்திருந்த பிறகு பிரதிகள் உடனே தீர்ந்து விட்டன பிரதிகள் கேட்டிருக்கிறேன் வெப்பம் என்ற என் சிறிய சிறுவர் நாவல் குறைந்த விலையில் இருப்பதால் கணிசமான பிரதிகள் நேற்று விற்றன.
கமலஹாசனின் தக்லைப் படத்தின் கலை இயக்குனர் குழு ஓவியர் ராம மூர்த்தி அவர்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட என் சிலுவை நாவலின் அட்டையை பார்த்து ரெம்பரெண்ட் ஓவியம் என்றார். எனக்குத் தெரியவில்லை புத்தகத்தில் உள்ளேயும் அது பற்றிய குறிப்பு இல்லை. மீண்டும் ராமமூர்த்தி கூகுளில் தேடி அந்த படம் ரெம்பரெண்ட் ஓவியம் தான் என்பதை உறுதி செய்தார்.
என்சிபிஎச் பதிப்பகம் சிலுவை நாவலின் மூன்றாவது பதிப்பை போடுகிற போது அந்த ஓவியம் ரெம்பரெண்ட் என்பதை குறிப்பிட வேண்டும்
.அவருடைய சகோதரி மைதிலி ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டு இருக்கிறார் அவர் அப்பா நிதர்சன கோவிந்தராஜன் ஒரு கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது
விஷ்ணுபுரம் விருது பெற்ற திருப்பூர் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் வான்கோ புத்தக நிலையத்தில் இருக்கிறார். வான்கோ புத்தக நிலையத்தை ஆரம்பித்து இருப்பதாகவும் புத்த வெளியீடுகளில் அக்கறை கொண்டிருப்பதாகவும் சொன்னார் சமீபத்தில் அவர் திருமணம் முடித்து இருந்தார். அவருக்கு திருமண வாழ்த்துக்கள்
வழக்கம்போல் என்சி பிஎச் மேலாளர்கள் ரங்கராஜ், குணசேகரன் ஆகியோர் ஆர்வத்துடன் காணப்பட்டார்கள் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கிராமத்து நதி கவிதைத் தொகுப்பு என் சி பி எச் பதிப்பகம் ஒரு பதிப்பை கொண்டு வந்திருக்கிறது அழகாக. முன்பே பல பதிப்புகளை கவிதா பதிப்பகமும் பொள்ளாச்சி கோலம் பதிப்பகம் கொண்டு வந்திருக்கின்றன. இப்போது புதிய கோலத்தில் என்சிபிச் பதிப்பகம் சிற்பி அவர்களின் கவிதைகளை கொண்டு வந்திருக்கிறது. முதல் பார்வையில் மாத்தளை சோமு அவர்களின் சிறுகதைகள் முதல் பாகம் பெரிய அளவில் கண்ணில் தென்பட்டது அழகான பதிப்பாக அமைந்திருந்தது..
திராவிடக் கழகத்தின் தனி அரங்கை அமைச்சர் பெருமக்கள் அக்கறையுடன் கவனித்து புத்தகங்களை பெற்றுக் கொண்டார்கள் பாரதி புத்தகாலயம் நாகராஜன் சென்னையிலிருந்து வந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சர்வதேச புத்தகக் கண்காட்சியில் பார்த்திருந்தேன். சென்ற ஆண்டு 27 புத்தகங்கள் மொழிபெயர்ப்புக்காக கையெழுத்தானது . எதுவும் வெளிவரவில்லை என்றார். இவ்வாண்டு அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
திருப்பூர் மகேஷ்வரி புத்தக நிலையம் மகாதேவன் சென்னை புத்தகக் கண்காட்சி விற்பனை பற்றி எப்போதும் உற்சாகமாக செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்.இம்முறை சரியில்லை என்றார். பலரும் அப்படித்தான் சொன்னார்கள்.
காலச்சுவடு அய்யாசாமி சென்ற ஆண்டைப்போலவே நல்ல விற்பனை என்றார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தை ஒட்டி பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் புத்தக கண்காட்சிக்கு நண்பர்கள் எல்லாம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீழடி சார்ந்து ஒரு அரங்கை கலைஇலக்கியப் பெருமன்றம் செயலாளர் ஆனந்த் அவர்கள் நிர்மாணம் செய்து கொண்டிருந்தார் இன்னும் வேலை முடியவில்லை அது இந்த ஆண்டின் புத்தகக்கண்காட்சியின் சிறப்பம்சமாக இருக்கும். அதை மோகன் கார்த்திக் அவர்களின் கிட்ஸ் கிளலப் பள்ளி அமைக்கிறது என்பது முக்கியமான செய்தி. அவர் தான் திருப்பூர் தமிழ்ச்சங்க செயலாளர் கூட . பருமனானவர். பெரிதாய் ஏதாவது செய்வார் என்ற எதிர்பார்ப்பு திருப்பூர் எழுத்தாளர்களிடம் உள்ளது.
சிக்ஸ் சென்ஸ் பதிப்பகம் என் அசாம் பயணக் கதை நூல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. தீயும் மலரும் அதன் பிரதிகளை அங்கு போய் கேட்டபோது அப்படி ஒரு நூல் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பிறகு தேடி கொடுத்தார்கள் அந்த நூலின் தலைப்பு சட்டென எனக்கு மறந்துவிட்டது வயது சார்ந்த இந்த மறதி எல்லாவற்றிலும் தொற்றிக் கொள்கிறது.தீயும் மலரும் ரூ 220
கண்காட்சி ஒன்பதரை மணி வரைக்கும் நடக்கும் நேற்று கண்காட்சிக்கு வந்திருந்த ஒரு சமூகப் பணியாளர் தன்னிடம் இருந்த 3500 ரூபாயை இன்று ஒரு நாளில் குடித்து தீர்த்து விட்டதாகவும் மிச்சம் இருப்பது 160 ரூ என்று தெரிந்து கொண்டு அதில் நூற்று ஐம்பது ரூபாய்க்கு என்னுடைய ஒரு கை உணவில் நாவல் மற்றும் வெப்பம் சிறார் நாவல் ஆகியவற்றை வாங்கி சென்றார்.
அவருக்கு ஒயின் ரொம்ப பிடிக்குமாம் நேற்றும் அதைத்தான் விரும்பி எடுத்துக் கொண்டதாக சொன்னார்.
மதுவின் வாசம் கூட அந்த நேரத்தில் ரொம்ப பிடித்திருந்தது
எழுத்தாளன், முதலாளி இருவரும் ஒரே நேரத்தில் வந்து விடுகிறார்கள். வரவேற்பாளர்கள் எழுத்தாளனுக்கு ஒரு கை ஆட்டி அசைத்து ஒரு வகை வணக்கம். முதலாளிக்கு இரு கை கூப்பி வணக்கம்.
நிதர்சன உலகம். இப்படி ஏக மரியாதைதான் எழுத்தாளனுக்கு.
தொடரட்டும் கைகூப்பல்கள். ஜெயந்தனின் ஒரு கதையில் பணி நிறைவு பெற்று செல்லும் அதிகாரி, புதுப்பணியில் சேர வரும் அதிகாரி ஒரே நேரத்தில் .. யாருக்கு மரியாதை தருவது என்பதில் குழப்பம்.
சுவாரஸ்யமான கதை ஞாபகம் வந்தது.
எழுத்தாளன், முதலாளி இருவரும் ஒரே நேரத்தில் வந்து விட்டால் மரியாதை முதலாளிக்குத்தான். ஸ்பான்சர்கள் வேறு குறைவாகவே வந்திருப்பதாக பி எஸ் என் எல் சுப்ரமணியன் சொன்னார்.
முதலாளிகள் சரியாக கவுரவம் செய்யப்பட வேண்டியவர்களே..