சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 19 பிப்ரவரி, 2025

எழுத்தில் 48 ஆண்டுகள்: சுப்ரபாரதிமணியன் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி (கணிதம்) படித்துக் கொண்டிருந்த போது எனது முதல் சிறுகதை "சுதந்திர வீதிகள்" திருப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த "விழிப்பு" என்ற இடதுசாரி இலக்கிய இதழில் வெளியானது. எமர்ஜென்சி காலத்தில் போலீசாரின் அடக்குமுறைக்கு ஆளான ஒரு விளையாட்டு வீரனைப் பற்றின கதை அது. "பயிர்களை மேயும் வேலிகள்" என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்தேன். அவர்கள் தலைப்பை மாற்றியிருந்தார்கள். 1977ல் வெளிவந்தது. ஓர் உண்மை சம்பவம் என்பதும், எமர்ஜென்சி கால கட்டத்தைப் பிரதிபலிப்பதாக இருந்ததும் அக்கதை வெளிவந்த போது முதல் படைப்பின் பெருமையாக இருந்தது. கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் "புது வெள்ளம்" என்ற மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைப் படிப்பது, தேர்வு செய்வது செந்தமிழ் அச்சகத்திற்கு அலைவது என்று முதுகலை கணிதம் படிப்பின் "டென்சனுக்கிடையில் சுகமான அனுபவமாகவே இருந்தது. சொந்த ஊரான திருப்பூரில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து 'குறிஞ்சி' என்ற கையெழுத்திதழை நடத்தி வந்ததில் பல படைப்புகளை (கவிதைகள், கதைகள்) எழுதி இருந்தாலும் "சுதந்திர வீதிகள்" தான் எனது முதல் அச்சில் வரும் படைப்பாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் நடத்தி வந்த தீபம் வாசகர் வட்டக் கூட்டங்களில் படைப்புகள் வாசிப்பதும் இலக்கியம் சார்ந்த விபரங்களும் படித்து முடித்தபின் வேலையில்லாதப் பருவத்தில் ஆறுதலாக இருந்தது. அதே சமயம் கணிதம் மனசிலிருந்து கை நழுவிக் கொண்டிருந்தது. இலக்கியம் வெகு நெருக்கமாகியிருந்தது. தீபம், தாமரை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள் வெளிவரத் துவங்கியிருந்தன. நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு சற்றே ஆறுதல் என்றிருந்தது. தொலைபேசித் தொடர்பு உத்யோகம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றேன். புது மொழி, சற்றே வித்யாசமான புது கலாச்சார சூழல். அந்நியமாகவே உணர்ந்தேன். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வரும் இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்களுடன் பரிச்சயம் இருந்தது. சிறுகதைகள் நிறைய எழுதினேன். எனது முதல் நாவல் "மற்றும் சிலர்" -ஹைதராபாத்தில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைப் பற்றின நாவலாக அமைந்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டிருந்தது. அதற்கு முன் "அப்பா" என்ற 15 சிறுகதைகள் அடங்கிய எனது தொகுப்பை நர்மதாவே வெளியிட்டிருந்தது. அப்பா தொகுப்பில் சுஜாதா எழுதியிருந்த நீண்ட முன்னுரை கவனத்திற்குரியதானது. "மற்றும் சிலர்" நாவலில் 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது வேலை வாய்ப்பை இழந்த ஒரு இந்தி ஆசிரியன் ஹைதராபாத்திற்கு துணி விற்கும் வேலைக்குப் போய் தெலுங்குப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்நியனாகவே உணரும் 15 வருட வாழ்க்கை பற்றினது. ஹைதராபாத்தில் தொடர்ந்து தமிழகப் பதிப்பாளர்கள் பங்கு பெற்ற புத்தகக் கண்காட்சியை நடத்தினோம். சபா நாடகங்கள், சமய சொற்பொழிவுகளுக்குள் இருந்த ஹைதராபாத் செகந்திராபாத் இரட்டை நகரத் தமிழர்கள் நவீன இலக்கியத்தின் பக்கம் அறிமுகமாக 'கனவு' இலக்கிய வட்டத்தின் சிறு அளவிலானக் கூட்டங்களும், புத்தகக் கண்காட்சிகளும் பயன்பட்டன. வேறு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கென்று அங்கங்கே தமிழ் இதழ்கள் இருந்தன. பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் "ஏடு", கேரளத் தமிழ்ச் சங்கத்தின் "கேரளத் தமிழ்", பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் "ஊற்று" என. இரட்டை நகர தமிழர்களின் இலக்கிய வெளிப்பாட்டிற்காக "கனவு" என்ற இலக்கிய இதழை ஆரம்பித்து இரட்டை நகர இளைஞர்கள் அதில் பங்கு பெற வைத்தேன். க.நா.சு., நடுவனின் பல படைப்புகள், சுந்தர ராமசாமி கவிதைகள், வானம்பாடிக் கவிஞர்களின் படைப்புகள், எஸ். ராமகிருஷ்ணன், விட்டல் ராவ், ஜெயமோகன், பாவண்ணன், கோபி கிருஷ்ணன் என்று விரிவான தளத்தில் பலர் பங்கு பெற்றனர். எட்டாண்டு கால ஹைதராபாத் வாழ்க்கை "மற்றும் சிலர்", "சுடுமணல்" நகரம் 90 போன்ற நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும் வெளிக் கொணர வைத்தது. தமிழகத்திற்கு மாற்றலாகி வந்தேன். எனது கடைசி ஆண்டு ஆந்திர மாநில அனுபவங்களும், மதக் கலவரங்களும் "நகரம்-90" என்ற குறு நாவலை எழுத வைத்து, குமுதம்-ஏர் இந்தியா நடத்தியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு 45 நாட்கள் சுற்றுப்பயணம் சென்று வரும் வாய்ப்பைத் தந்தது (அந்த பயண அனுபவங்கள் "மண் புதிது" என்றத் தலைப்பில் காவ்யா பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது) சொந்த ஊரான திருப்பூருக்கு வந்த போது நகரின் முகமே மாறியிருந்தது. சிறு நகரம் ஆசியாவின் பெரிய வியாபார நகரமாகியிருந்தது. 15,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டும் நகரமாக அது மாறியிருந்தாலும், ( இப்போது 50,000 கோடி ) நொய்யல் என்ற நதி காணாமல் போனதும் 40,000 குழந்தைத் தொழிலாளர் அவலம் என்ற விபரீதங்கள் என்னை "சாயத்திரை" நாவலை எழுத வைத்தது. தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. ('சாயத்திரை' 'காவ்யா' வெளியீடு; ஆங்கிலத்தில் இந்தியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னட, வங்காள மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. சாயத்திரையை ஆங்கிலத்ஹ்டில் மொழிபெயர்த்து என்னைப் பெருமைபடுத்தியவர் பாண்டிச்சேரி ராஜ்ஜா அவர்கள் ). படிப்பு என்பதை புறந்தள்ளிவிட்டு குழந்தைகள் தொழிலாளர்களாய் மாறும் அவலத்திற்கு பனியன் உற்பத்தி வேலை வாய்ப்புகளை அமைத்திருந்ததை மையமாகக் கொண்டு "பிணங்களின் முகங்கள்" நாவலை எழுதினேன். குழந்தைப்பருவம், உலகக் குழந்தைகள் பற்றினக் கதைகள் என்று அந்த நாவல் ஊடாடி நின்றது. அது கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த நாவல் ரூ 15,000 பரிசு பெற்றது. (இது ஆங்கிலத்தில் ஆர். பாலகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. The facer of Dead) உலகமயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயங்கள் பெண்களையும் பெருமளவில் பாதித்து வருகிறது. பெண்மயமாகும் தொழிற்சாலைகளின் நிலையில் பெண்களின் அவலம் குறித்த எனது நாவல் "சமையலறைக் கலயங்கள்" ('காவ்யா பதிப்பகம்' சென்னை வெளியிட்டுள்ளது). 50,000 கோடி ரூபாய் அந்நிய செலவாணி தரும் திருப்பூர் பின்னலாடை நகரம் தமிழக தெற்கு மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இடம் பெறச் செய்திருக்கிறது. உலகமயமாக்கலின் காரணமாக விவசாயம், புராதனத் தொழில்களை இழந்து வேலைவாய்ப்புகளைத் தேடி வரும் நகரமாகி விட்டது திருப்பூர். இவ்வாறு இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் கேம்ப் கூலிகளாகவும், சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாகவும் ஆகிக் கொண்டிருக்கிற அவலம் என்னை வெகுவாக பாதித்தது. இதன் விளைவாக "தேநீர் இடைவேளை" என்ற நாவல் (காவ்யா) எழுதினேன். (இது ஆங்கிலத்தில் பிரேமா நந்தகுமார் அவர்களால் The unwritten letters என்ற பெயரில் வெளிவந்துள்ளது). தொழிற்சங்க இயக்கங்களுக்கு பெயர் போன கோவை மாவட்டம் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் காரணமாகவும், சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாகவும் திணறிக் கொண்டிருப்பதை என்னுடைய படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். இவ்வகை அனுபவங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் மொழிபெயர்ப்பு "The lost symphony" என்ற பெயரில் (மொழிபெயர்ப்பு: ஆர். பாலகிருஷ்ணன்) வெளிவந்துள்ளது. 350 பக்க அளவிலான "ஓடும் நதி" நாவல் (அமிருதா பதிப்பகம் சென்னை) ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. பல்வேறு கலாச்சார சூழல்களும், மாறிவரும் நெருக்கடிகளும் ஒரு பெண்ணைத் தொடர்ந்து இடம் பெயர்வு சூழ்நிலைப் பார்வையாளனாக இருந்து பார்க்க வைக்கிற அனுபவங்களை அந்த நீண்ட நாவலில் பதிவு செய்திருக்கிறேன். "கனவு" இதழ் தொடர்ந்து வெளிவருகிறது. (இப்போது ரொம்பவும்தான் இளைத்து விட்டது). 38 ஆண்டுகளாய் 'கனவு' வெளிவருகிறது. தமிழில் பல படைப்பாளிகளுக்குத் தளமாக இன்றும் அமைந்துள்ளது. கனவு இதழ்களில் லண்டன் யமுனா ராஜேந்திரனின் தயாரிப்பிலான "உலக சினிமா நூற்றாண்டு"ஓட்டிய ஐந்து இதழ்களும், நோபல் பரிசு பெற்றவர்களின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இதழும், ஜெயமோகனின் தயாரிப்பிலான "தற்கால மலையாளக் கவிதைகள்" சிறப்பிதழ், பாவண்ணனின் தயாரிப்பிலான "கன்னடக் கவிதைகள் சிறப்பிதழ்", "தந்தர ராமசாமி சிறப்பு மலர்", "அசோகமித்திரன் சிறப்பு மலர்", எனது வெளிநாட்டு பயணங்களுக்கு பின்னதான "இலங்கை சிறப்பிதழ்", "சிங்கப்பூர் சிறப்பிதழ்", இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்களின் படைப்புகளைத் தாங்கிய இதழ்களை (இதுவரை 56 இதழ்கள் வந்துள்ளன) குறிப்பிட்டதாகச் சொல்லலாம். திருப்பூருக்கு வந்தபின்பு பல்வேறு சமூக இயக்கங்களுடான பணிகள் திருப்தி தந்துள்ளன. அவற்றுள் சுற்றுச்சூழல் இயக்கங்கள், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கங்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்தவை மற்றும் தொழில் நிறுவனங்களின் கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (Corporate Social Repounililily) இயக்கங்களைச் சொல்லலாம். இன்றைய தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டு கார்பரேட் சமூக பொறுப்புணர்வை விரிவாக்கும் தளத்தில் நெதர்லாந்து Partners in change அமைப்பின் ஆராய்ச்சி நூலை "பின்னலினால்..." என்றத் தலைப்பில் நான் மொழிபெயர்த்து (200 பக்கங்கள்) வெளிவந்திருக்கிறது. இது என் மொழிபெயர்ப்புப் பணியின் ஆரம்பம். பதினோரு நூல்கள் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு செய்து விட்டேன்.. கனவு திரைப்பட இயக்கம், 21 ஆண்டுகளாக சிறந்த குறும்படங்களுக்கான அரிமா விருது, சிறந்த பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது, திரைப்பட விருது ஆகியவற்றை தந்து வருகிறது. கனவு பல் குறும்பட பட்டறைகளை நடத்தியது. மாதந்தோறும் குறும்படங்கள், உலகத் திரைப்படங்கள் திரையிடல், இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறது. (திருவிழா, சோத்துப் பொட்டலம் என்ற உருவப்படங்கள் எனது படைப்பில் வெளிவந்துள்ளன. நாவே இயக்கிய குறும்படம் நாணல். ஆனந்த விகடனில் வந்த பாதுகாப்பு என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது.) திரைப்பட நூல்கள் 6, திரைக்கதை நூல்கள் 9, திரைநாவல்கள் என்று திரை முயற்சிகள் தொடர்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக கதை சொல்லும் மரபின் தொடர்ச்சியாகவும், புதுப்பிக்கவுமென எழுத்தாளர்களைக் கொண்டு "கதை சொல்லி..." நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்துகிறது. சிறுவர்களுக்கான கதை சொல்லி..." விருதுகளையும் வழங்கி வருகிறது. இதைத் தவிர கனவின் சக்தி விருது, திருப்பூர் இலக்கிய விருது, குறும்பட விருது என் 210 ஆண்டுகளாய் தொடர்கிறது. 27 நாவல்கள் வந்து விட்டன. 25ம் நாவல் சிலுவை 1000 பக்கம் ரூ 1200. இது தொடரும். ( இதில் இரு சிறுவர் நாவல்கள் உள்ளன ) சிலுவை 1000 பக்க நாவல் .300 ஆண்டுகளுக்கு மேலான கொங்கு பகுதியின் சரித்திர, கலாச்சார வாழ்வை காட்டும் நாவல் இது. திப்பு சுல்தான் வருகை , கிறிஸ்தவர்களின் குடியேற்றம் தொடங்கி ஒரு கிறிஸ்துவ குடும்பத்தின் நீண்ட வாழ்க்கை இதில் இடம் பெற்றிருக்கிறது. சோமனூர் வாழ் நெசவாளர் வாழ்வியல், மில் தொழிற்சங்க இயக்க செயல்பாடுகள் என்று தொடங்கி நவீனப் பின்னலாடை தொழில்சார்ந்த வாழ்க்கை முறை என்று சமீப காலம் வரை நீள்கிறது. அந்தக் கிறிஸ்தவ குடும்பத்தின் முழு உலகமும் தனித்து ஒரு தீவாய் தள்ளப்பட்டாலும் சமூக மனிதர்களின் தொடர்புடன் அடிவானத்தை நோக்கிப் பயணப்படுகிற கப்பலை போல் ஆழ்கடல் நடுவில் கரை எதுவும் காணாதபடி இருத்தலியல் சிக்கல்களுடன் சென்று கொங்கு பகுதி மக்களின் வாழ்க்கையின் உண்மை தன்மையையும் மதிப்பீடுகளையும் சொல்கிறது இந்த நாவல்.. “ சிலுவை “ நாவல் சுப்ரபாரதி மணியனின் இருபத்தைந்தாவது நாவலாகவும், நூறாவது புத்தகமாகவும் இது அமைகிறது : 0 திருப்பூர் போன்ற வணிக நகரத்தில் கலை இலக்கிய கலாச்சார நடவடிக்கைகள் மூலம் வணிக நகரம் தரும் பாதிப்புகளை வெளிப்படுத்தும் முயற்சிகளாக நண்பர்களுடன் தொடர்ந்து இயங்கி வருவது ஆறுதல் தருகிறது. வெறும் வியாபார வளர்ச்சி உடம்பின் ஏதோ ஒரு பாகத்தின் வீக்கம்தான். பூரண வளர்ச்சி என்பது பொருளாத நிலையோடு கலாச்சார வளர்ச்சியோடும் இணைந்தது என்பதை தொழில் மய சமூகத்தில் வெளிப்படுத்த வேண்டியிருப்பதன் அக்கறையை மனதில் கொண்டு Fair Trade- நியாய வணிக தார்மீகத்தில் இந்தச் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறேன். சமூக, பொருளாதார நெருக்கடிகள் தரும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்வது எனது அக்கறையாக இருக்கிறது. இதன் மூலம் என்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் உறவாடவும், அவர்களை நெருங்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. சக மனிதனோடு உறவாட எழுத்தைத் தவிர வேறு ஊடகம் எனக்குத் தெரியவில்லை. அலுவலகப் பணி தரும் நெருக்கடிகள், மற்றும் குடும்ப வாழ்க்கையின் சிரமங்கள், என்னைச் சுற்றியுள்ள சமூகம் கட்டமைக்கும் விடயங்களை எழுத்தில் பதிவு செய்வதுதான் மன இறுக்கத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள ஏதுவாகிறது. எழுத்தைத் தவிர, வாசிப்பதைத் தவிர, அதன் மூலம் சக மனிதர்களுடன் உறவாடும் வாய்ப்பைத் தவிர வேறு என்ன ஆசுவாசம் இருக்கிறது இந்த வாழ்க்கையில்?