மீத்தேன் எமன்
சுப்ரபாரதிமணியன்
“மாடுகட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
யானை கட்டிப் போரடித்த
அழகாய தென் மதுரை” என்று பாடப்பெற்ற தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகைப் பகுதிகளில் மீத்தேன் எடுக்கப்பட்டால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அப்பகுதி எப்படியிருக்கும்?

திருவாரூரில் அமைக்கப்பட்டிருக்கும் மத்திய பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது 2013ன் இறுதியில் திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை எடுத்துவிட்டு மீத்தேன் உறிஞ்ச போடப்பட்டக் குழாய்களைக் கண்டேன். மத்திய தர உணவு விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது புதிதாய் இருந்த என்னையும் வேறொரு நண்பரையும் மீத்தேன் வாயு சம்பந்தமான கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்ரேசன் நிறுவனம் சார்ந்தவரா என்று கேட்டார்கள். புதியவர்கள் யார் தட்டுப்பட்டாலும் அப்படித்தான் கேட்பார்களாம். அது மத்திய தர விடுதி என்றாலும், குளிரூட்டப்பட்டது என்றாலும் அந்த விடுதி உணவுக்கட்டணம் அதிகமில்லாமல் இருந்தது. அந்த விவசாய பகுதியின் பொருளாதார நிலையும், மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை பாடத் திட்டங்களில் மாணவர்கள் பணம் கட்டமுடியாமல் திணறுவதையும், செம்மொழித் திட்டத்தின் உதவி மாணவர்களைக் காப்பாற்றுவதாயும் பேரா.ஜவஹர் சொன்னார் பெரும்பான்மை மாணவர்கள் விவசாயக் கூலிகளின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அதை வைத்து அந்த உணவு விடுதிக் கட்டணத்தை நான் யூகித்துக் கொண்டேன்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக் அரசு அறிவித்தது. மீத்தேன் வாயு நச்சுத் தன்மை வாய்ந்ததால் வாயு கசிவு ஏற்படுவது அணுசக்தி மின் நிலையங்களில் ஏற்படும் கழிவுக்கு இணையானது என்பதால் மக்களும் பயப்படுகிறார்கள். 690 சதுர கி.மீ பரப்பளவும் பாலையாகும்.
இந்த 690 சதுர கி.மீ பரப்பின் தன்மையை அமெரிக்காவின் வயோமிங், மோண்டானா மாநில நிலக்கரி படுகையை ஒப்பிடுகிறார்கள். மீத்தேனிலிருந்து பிரித்தெடுக்கப்படும் தண்ணீரில் இருக்கும் சோடியம் மண் வளத்தை வெகுவாக பாதிக்கும். கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறையும் என்கிறார்கள். வெளியேற்றப்படும் தண்ணீரில் பல ரசாயன்ப் பொருட்கள் நச்சுத் தன்மை உடையனவாக இருக்கின்றன. தண்ணீரில் கரையக் கூடிய கதிரியக்கம் கொண்டதாகவும் அவை உள்ளன என்பது பேராபத்தாகி்றது.
மீத்தேன் எடுக்கும் அமெரிக்க நிலப்பகுதிகளில் பல முறை நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது மன்னார்குடிப் பகுதியை மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் பாதித்து நீர்த்தாரைகள் சேதப்படுத்தப்பட்டு சென்னை முதல் ராமேஷ்வரம் வரை குடிநீருக்கும் சிக்கல்கள் ஏற்படும். வளைகுடா நாடுகளில் மண்வளம் இல்லை. மழை இல்லை. எனவே அங்கு நிலத்தைத் தோண்டி எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் வெற்றி பெறலாம். மழையும், இயற்கைச் செழிப்பும் உள்ள தஞ்சை பகுதி மண் சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.

இதை எதிர்த்து பல வகைப் போராட்டங்கள் தொட்ர்ந்து நடந்து வருகின்றன. போராளி நம்மாழ்வார் மரணமும் மீத்தேன் வாயு படுகையில் தான் போராட்டத்தின் குறியீட்டால் நடந்துவிட்டது. வளர்ச்சி என்ற பெயரில் முன்வெளியிடப்படும் இது போன்ற திட்டங்கள் மக்களை விரட்டியடிக்கும் திட்டங்களாக இருக்கிறது. உலகமய பொருளாதாரக் கொள்கை எவ்வளவு சீக்கிரம் பணம் சேர்க்க முடியுமோ அந்த வழிமுறைகளைப் பின்பற்றும் ’ குரோனி சேப்ட்டலிசத்’ தில் மீத்தேன் துரப்பணம் ’ தூரப்பணமாக’ பலருக்கு பிரகாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.சாதாரண மக்களின் வாழ்நிலைக்கு இருட்டையும் கூட.