சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 16 மே, 2008

புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை

Thursday April 12, 2007
சுப்ரபாரதிமணியன்
===================
உலகமயமாக்கல் மரபு ரீதியானத் தொழில்களை முடக்கி விட்டது. விவசாயம், கைத்தொழில்கள் போன்றவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு விட்டு தொழில் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாகிவிட்டது. தொழிற்சாலைகளை மையங்களாகக் கொண்ட நகரங்களில்
புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
நகரங்களில் பெரும் முதலீட்டாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகை சிறு கிராமமாக்கி வெவ்வேறு வகையான தொழில்களில் பெரும்பாலும் லாபத்தையே முதன்மை நோக்கமாகக் கொண்டு முதலீடுகளைச் செய்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் தங்களைத் தொழிலாளர்கள் என்று உணர்வதற்கான் சந்தர்ப்பங்கள் வெகு குறைவாகவே நேர்கின்றன. விவசாயம் மற்றும் மரபு ரீதியான தொழில்களில் தங்களை கிராமங்களிலும் பிற நகரமல்லாத பகுதிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பெரும்பாலும் தங்களை தொழிலாளர்களாக எண்ணிக் கொள்வதில்லை
தங்களின் சிறு நில உடமை மற்றும் சிறு முதலீட்டின் மூலமாக தொழிலைச் செய்கிறவர்களாகவும் அதன் மூலமான உற்பத்திப் பொருளை விநியோகிக்கிறவர்களாகவும்
விற்பனை செய்கிறவர்களாகவும் அதிலிருந்து வரும் லாபத்தை தங்கள் தினப்படி வாழ்க்கைக்கு
பயன்படுத்திக் கொண்டு வாழ்கிறவர்களாகயும் இருந்திருக்கிறார்கள். தங்களை தொழிலாளர்கள் என்று வகைப்படுத்திப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டதில்லை.
அவர்கள் தங்களின் சொந்தப்பகுதியிலிருந்து நகரங்களின் தொழிற்சாலைகளுக்கு வேலை தேடி வந்து குடிபெயர்ந்த பின் தொழிற்சாலையின் பகாசூரப்பசிக்கு சுலபமாக இலக்காகிப் போகிறார்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் அமிழ்ந்து போகிறார்கள்.
புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என்பதாலேயே அவர்கள் சேரும் தொழிற்சாலைகளில் முன்பு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் கூலி, சம்பளம் போன்றவை நிராகரிக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். கூலி பாதியாக நிர்ணயிக்கப்படலாம். அதுவே அவர்களின் தேவைக்குப் போதுமானதாகக் கருதப்படும் சூழ்நிலைக்கு ஒத்துப் போகிறார்கள்.தங்களின் கிராமப்பகுதி வேலைகளுக்குக் கிடைத்த சம்பளம். கூலியிலிருந்து 50% அது அதிகமாக இருப்பதே காரணம். ( ஆனால் தொழிற்சாலயின் குறைந்த பட்ச சம்பளத்தில் அது 50% தான் என்பதை அவர்கள் அறிவதில்லை) நிரந்தரத் தொழிலாளி, தொழிற்சட்டங்கள் தரும் உரிமைகள் , இ.எஸ்.அய்,
பிராவிடண்ட் பண்ட் மருத்துவ வசதி போன்ற அடிப்படையான வசதிகளை உரிமையாகப் பெறும் தொழிலாளி மத்தியில் தன்னைப் பொருத்திப் பார்ப்பதில்லை. தனக்குக் கிடைக்கிற வருமானம் சொந்த ஊரில் கிடைத்ததை விட அதிகமானது என்ற ஆறுதலே அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. இதன் பிறகு வேலை நேரம் என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. அது எட்டு மணி நேரத்திலிருந்து பத்து, பனிரெண்டு பணி என்று நீட்சி பெறும்போதோ, நிர்பந்திக்கப்படுகிற போதோ அதிக கவனம் பெறுவதில்லை. அல்லது வேலை நேரம் குறிப்பிடத்தக்கதாக இல்லாமல் குறிப்பிட்ட வேலையை பூர்த்தி செய்வது வரைக்குமானது என்ற வகையில் வடிவமைக்கப்ப்ட்டு தொழிற்சாலைகளுக்குள் இருக்க வைக்கப்படுகின்றனர்.
அதிகப்படியான் வேலைக்கு ஓவ்ர் டைம் அலவன்ஸ் போண்றவற்றைக் கோருதல் என்பது சற்று மிகையாகப் பட்டு விடுகிறது."யாசகமாய்" அப்படி ஓவர் டைம் அலவன்ஸ் வழங்கப்படுகிற போதும் சாதாரண சம்பளத்தை விட அது இரட்டை மடங்காக இருக்கவேண்டும் என்பது தவிர்க்கப்பட்டு சாதாரண சம்பளமே அதிகப்படியான நேரத்திற்குமென்றாகிவிடுகிறது,
தங்களின் சொந்த ஊரின் பாதிப்பிலிருந்து அவர்கள் மீள்வதற்கு அவசியம் இல்லாதபடியாகிறது. சொந்த ஊரில் வருடத்தில் பாதி நாட்கள் வேலை இருந்தாலே அதிகம். இங்கு வார ஞாயிறு விடுமுறையும் மறுக்கப்பட்டு வேலை நாட்கள் அதிகமாய் இருப்பது அவர்களின் உழைப்பிற்கு பூரண அங்கீகாரம் தருவதாய் எண்ணி விடுகிறார்கள்.
தங்களின் சொந்த ஊரில் விசாலமான வீடுகளில் வாழ்ந்து வந்ததையும் நல்ல காற்றோட்டமான சூழலும் மாசுபாடற்ற தண்ணீர் கிடைத்து வந்ததையும் மறந்து இரவு நேரத்தில் தூங்குவதற்கு மட்டும் ஒரு இடமாகி விடுகிறது புது இடம். மற்றும் வாடகை வீடு. குடி தண்ணீரோ, வீட்டு உபயோகிப்பிற்கான தண்ணீரோ காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. உடல்நலப்பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை கேள்விக்குறிகளாகிவிடுகின்றன.
இந்நிலையில் அவர்களின் வாழ்க்கை வெகு இயந்திர நிலையிலாகி விடுகிறது. ஓய்வு நேரத்திற்கான அவசாசங்களையும் உருவாக்கிக் கொள்வதில்லை. வார விடுமுறைகளையும் தெய்வ நம்பிக்கை , ஜாதிய ஈடுபாடு மற்றும் முறையற்ற பொழுதுபோக்கால் கழிக்கிறார்கள்.
இவர்கள் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கான சட்டரீதியான உரிமைகளைப் பெற்றவர்கள் என்று உணர்வதற்கான சந்தர்ப்பங்களிஅ அவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. தொழிற்சங்க இயக்கங்களின் தேக்கநிலை என்பது பல ஆண்டுகளாக உள்ளது. புலம் பெயர்ந்துவந்தத் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தினர் சந்திப்பது என்பது அபூர்வமானதாக அமைகிறது, தொழிற்சாலைசூழல்கள் அதற்குத் தடையாக இருக்கின்றன. அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று தொழிலாளர்களை ஓய்வு நேரத்தில் சந்திப்பது அபூர்வமாகிவடுகிறது. இயலாததாகவும் உள்ளது. அப்படி அவர்களை சந்தித்து உரையாட முற்பட்டாலும் சாதகமான விளைவுகள் இருப்பதில்லை.
தங்களைத் தொழிலாளிகள் என்று உணர்கிற சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதிகப் படியான வேலை நேரங்களுக்கு வேலை செய்வதற்கான முறையான உரிமையைக் கோராமல் , இருக்கும் உரிமைகளைப் பற்றி எடுத்துரைக்கும் போது எங்களுக்கு வேலை கிடைப்பதே பெரிய வரம் என்பதாய் சொல்லிக் கொள்கிறார்கள். வார விடுமுறை நாட்கள் மற்றும் நீண்ட இரவு வேலைகள உடல்நலம் பொருட்டு தவிர்க்கவேண்டும் என்பதற்கு பதிலாக அவ்வாறு உழைத்தால்தான் குடும்ப நிலைகளைச் சமாளிக்கிற அளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் இதெல்லாம் அவர்களுக்கு உறுத்தலாக அமைவதில்லை. வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
தெழிற்சங்கங்கள் அவர்களின் வளர்ச்சிக்கும் இருப்பிற்கும் தங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவே எண்ணுகிறார்கள். தங்களுக்குத் தேவையில்லாதவர்கள் தங்களின் தினப்படி வாழ்க்கையில் குறுக்கிடுவது போன்ற பிரமைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.தொழிற்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வது தேவையற்றது என்பதாய் நிச்சயித்துக் கொள்கிறார்கள்.. தங்களின் வேலை பாதுகாப்பிற்கு குந்தகமாய் அமைந்து விடும் என எண்ணுகிறார்கள்.
தொழிற்சங்கங்களில் சேருவதன் மூலம் அதிகப்படியான் நேர உழைப்பு, குறைந்த கூலி இவற்றைத் தவித்து விட்டு முறையான அதிக சம்பளம் , தொழிலாளர்கள் உரிமைகள் , வேலை பாதுகாப்பு போன்றவை கிடைக்கும் என்பதை உணராமலே காலத்தைக் கழிக்கிறார்கள்.
வேலை நீக்கம், கூலி பாக்கி, தண்டனை என்று வருகிற போதே தொழிற்சங்கத்தினரை அவர்கள் அணுகுகிறார்கள். அப்போதுதான் தொழிற்சங்கத்தினர் அவர்களுகு தொழிற்சங்க உரிமைகள எடுத்துச் சொல்ல வாய்ப்பு அமைகிறது. கட்டாயத்தால் தொழிற்சங்கத்தில் சேர்கிறார்கள்.தங்களின் பிரச்சனைகள் தற்க்காலிகமாக தீர்ந்த பின்பு நிர்ப்பந்தங்கள் வருமானால் சந்தா செலுத்துவது மட்டும் அவர்களின் கடமையாகிறது. இவ்வகையான புதிய தொழிலாளர்கள் மிகப்பெருமளவில் வளர்ந்து வருகிறார்கள்.
பெரும் நகரங்களிலும் பெரும் தொழிற்சாலைகளிலும் இவ்வகை புதிய தொழிலாளர்கள் வளர்ந்து பெருகுகிற " முறை சாராத தொழிலாளர்களின் "கடலில்"
சங்கமித்திருக்கிறார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட தொழில் அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலவாணியைக் குவித்துக் கொண்டிருக்கும் தொழில்களின் மத்தியில் தொழிலாளர்கள் மட்டும் அங்கீகரிக்கப்படாதவர்களாக, முறை சாராத தொழிலாளர்களாக தள்ளப்படுவது தற்செயலாக நிகழ்ந்து வருவதல்ல. உலக மயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயாஜாலங்களில் ஒன்றாக சாதாரணமாக இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இது தொழிற்சங்கத்தினரை பலவீனமாக்கி சிதறுண்டு போகச் செய்து வருகின்றது. இந்தத் தேக்க நிலையை உடைத்தெரிவது தொழிலாளர்கள் தங்களைத் தொழிலாளிகள் என்று உணரச் செய்வதற்காக உபாயமாக இருக்கும். கொத்தடிமைகளாய் தொழிலாளர்கள் நீடிக்கிற அவலத்தை சிதறடிப்பதாக அமையும்.அதற்காக தொழிற்சங்கத்தினரும், அரசியல் கட்சிகளும் அக்கறை எடுத்துக் கொள்வது சரித்திர நிர்பந்தமாகும்