சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 3 ஜனவரி, 2016


         விஷக்காய்கறிகளும்,  அமைதி பள்ளத்தாக்கும்
                                                  சுப்ரபாரதிமணியன்

  கேரளா அரசு தமிழகக் காய்கறிகளை விசத்தன்மையுள்ளதாக முத்திரை குத்தி விட்டது. மெல்ல மெல்ல தமிழகக் காய்கறிகளை தவிர்க்க அது தீட்டியுள்ள திட்டங்களில் ஒரு பகுதியாக அது தெரிகிறது. மாடித்தோட்டக்காய்கறிகள், இயறகை உரக்காய்கறிகள், பள்ளிகளில் காய்கறித் தோட்டங்கள் என்று திட்டமிட்டு அது செயல்பட்டு வருவதை சமீப காலங்களில் அறிய முடிகிறது.
சமீபத்தில் கேரள அமைதிப்பள்ளத்தாக்கு பகுதிக்குச் சென்றிருந்த போது அங்கு தென்பட்ட மலையாளிகளின் பார்வையில் தமிழர்கள் விசம் என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பது போல் பார்வை தென்பட்டது முன்பே மலையாளத் திரைப்படங்களில் பாண்டி என்ற வசவு முதல் விளிம்புநிலை மக்கள்களில் ஒதுக்கப்பட்டவர்களாகவும், கீழ் நிலை வேலை செய்பவர்களாகவும் தமிழர்கள் சித்தரிக்கப்பட்டது உறுத்தலாகவே இருந்தது. அமைதிப்பள்ளத்தாக்கின் மேல் பகுதிக்குச் செல்ல ஏற்பாடாகியிருந்த   வனத்துறையினரின் வாகனத்தில் இருந்த இருபது பேரில் நான் உட்பட மூவர் மட்டுமே தமிழர்கள். மூவருக்கும் வி,ச, ம் என்று ஒவ்வொரு எழுத்தில் பெயரிட்டிருப்பார்களோ என்றார் கூட வந்த நண்பர். சற்றே கைப்பானப் புன்னகையுடன்.. வழிகாட்டியும் நாங்கள் தமிழர்கள் என்று தெரிந்திருந்தும் அழுத்திச் சொல்லியும் தொடர்ந்து மலையாளத்திலேயே விபரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார், அவர்களின் விசப்பார்வையில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.2ஜி, 3 ஜி என்று தொலைத்தொடர்புத்துறையில் மட்டுமில்லாமல் விவசாய உர உபயோகிப்பிலும் வந்து விட்டன..5ஜி உரங்கள் இப்போது உபயோகத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவை அதி தீவிரமானவை. 4ஜி உரங்கள் கொல்லாத பூச்சிகளைக்  கொல்ல 5ஜி  வந்து விட்டனவாம். 4ஜி எதிர்ப்பை உள்வாங்கிக் கொண்டு உயிர் வாழும் பூச்சிகளை அழிக்க 5ஜி உரங்கள் தேவைப்படுகின்றன. 5ஜி  பூச்சிக் கொல்லி மருந்துகள் ஒரு லிட்டர்  8000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. அதை ஒரு லிட்டர் நீரில் ஒரு சொட்டு கலந்தால் போதும். விவசாய நிலத்தில் வரும் காய்ப்புழுக்களைக் கொல்ல பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது அதனால் காய்ப்புழு வராத பிடி வகைப் பயிர்களை விவசாயி காரணமில்லாமல் நாட  வேண்டியிருக்கிறது.இது ஒரு அவலம். விதையில்லாத பழங்கள் பெரும்பாலும் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. விதையில்லாதவை ஆண்மையில்லாத மனிதர்களையே உருவாக்கும். ஆண்மையில்லாத ஒரு தலைமுறை  உருவாகும் அபாயங்களை இவ்வகை உணவுப் பொருட்கள் தயாராக்குகின்றன. உரங்கள்  உரகிடங்கு, உரக்கடை வைத்திருப்பவர்கள் சுலபமாக பணக்காரர்  ஆக உபாயங்கள்  இருக்கின்றன.விவசாயப் பல்கலைக்கழகங்கள் நவீன உரங்களின் உற்பத்திக்கும் வேகமான விற்பனைக்கும் வழிகோலுகின்றன என்ற விமர்சனங்கள் உள்ளன.மலைப்பிரதேசங்களில் முட்டை கோசு , திராட்சை போன்றவை ரசயானக்கலவையில் முக்கி எடுப்பதைப் பார்க்கும் எவர்க்கும் அவற்றைச் சாப்பிடவே தோன்றாது.
அமைதிப் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக மதிக்கப்படுவது. 100 சதுர கிமீ பரப்பளவு கொண்ட்து.1100  வகை மலர்கள், 250 வகைப்பட்டாம்பூச்சி வகைகள், பிராணிகள் , மிருகங்களை உள்ளடக்கியது. அதிகமாக கண்களில்  தென்பட்ட நீளமான வால்களைக் கொண்ட  கருங்குரங்கு அங்கு அதிகமாக உள்ளது..சாய் ரந்தி வனம் என்றும் குறிப்பிடப்படுவதாகும். மகாபாரத கதையில் வனவாச நாட்களில் திரவுபதி  வேலைக்காரியாக மறைந்து திரிந்த இடம் என்ற கதை உண்டு.  அடர்ந்த வனங்களைக் கொண்ட இப்பகுதியை சுற்றிய போது அதன் அடர்த்தியும் வனத்தின் இயல்பு மாறாத  தன்மையும் பல ஆண்டுகளாக கட்டிக் காப்பாற்றப்பட்டு வருவது தெரிகிறது.  அதைக்காப்பாற்ற அப்பகுதி மக்கள் போராடியிருக்கிறார்கள். நாறபது ஆண்டுகளுக்கு முன்னால் அங்கு குந்தி நதியின் மையத்தில் நீர்மின்சக்தி திட்ட்த்திறகாக ஒரு அணை கட்டும்  வேலை ஆரம்பித்தது. ஆனால் சுற்றுச்சுழல்வாதிகளும் எழுத்தாளர்களும் பத்தாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போராடி அத்திட்டத்தைக் கைவிட வைத்தனர். வழிகாட்டி  எல்லாப் பகுதிகளையும் சுற்றிக்காண்பித்த பின்  அணை கட்ட ஆரம்பித்து கைவிடப்பட்ட அந்தப் பகுதியையும்  காட்டினார். 3 கிமி நடந்துதான் அப்பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்த்து, இது போல் போராட்ட மையமான பகுதிகள் பற்றிய நினைவுச்சின்னங்களை . அரசு தரப்பு எபோபோதும் புறக்கணித்தே வைத்திருக்கும். அழித்து விட்டிருக்கும். வழிகாட்டி அதையும் சென்று காட்டியது ஆச்சர்யம் தந்த்து. சுகுதகுமாரி போன்ற கவிஞர்கள் அப்போராட்ட்த்தில் தொடர்ந்து ஈடுபட்டனர் என்பது ஞாபகத்தில் இருக்கிறது. 2000 மீட்டர் உயரத்தில் அப்பகுதி  இருக்கிறது. குந்தி நதியின் ஆற்றொழுக்கு அப்பகுதிக்கு இன்னும் அழகூட்டியது. உள்பகுதிகளில் இருளா, குரும்பா, முருகா போன்ற பழங்குடிகளும் தென்படுகிறார்கள்.அட்டப்பாடியில் தென்படும் இந்த பழங்குடியினர்  இந்த மலைகளிலும் இருக்கிறார்கள். அட்டப்பாடி எப்போதும் மாவோயிசப் போராளிகள் நடமாட்ட்த்திற்கும் காவல் துறையினரின் கணகாணிப்பிற்கும் ஆளான இடம். இந்த ஆதிவாசிகள் சிவராத்திரி போன்ற நாட்களில்  தங்களின் தொன்ம ஆதிக்கலைகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். மற்றபடி பெரும்பாலும் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கிறது அவர்களுக்கு.
கேரளத்திலிருந்து வந்திருந்தவர்கள்காட்டுக்கருவேப்பிலை மரத்தடியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு காட்டெருமையுடன் பேசுவது போல் பலர் சமவெளிப்பகுதியில் இருக்கும் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். ஒருவர் தனது வீட்டு கிணற்றில் கம்பி வேலி போட்டு குப்பைகளும் கழிவுகளும் சேராமல் பாதுகாத்து வைக்கச்  செலவிட்ட தொகை பற்றிச் சொன்னார்.பெரிய இரசாயனத் தொழிற்சாலைகள் எது வந்தாலும் ஒருங்கிணைந்த போராட்டங்கள் மூலம் அவர்கள் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். காய்கறியில் விசத்தன்மையும், தமிழ் விவசாயப்பகுதிகளில் உரங்களை அதிகம் பயன்படுத்து வதையும் அவர்கள் எதிர்ப்பது இயல்பானதாகவே தோன்றியது. .தினசரி  2000 டன் காய்கறிகள் தமிழ்நாட்டிலிருந்து  கொண்டு செல்லப்படுகின்றன. அதிலும் ஓணம் போன்ற பண்டிகைகள் நாட்களின் போது 10000 டன் காய்கறிகள் செல்கின்றன.. இந்தியாவில அதிகம் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துபவர்கள்  தமிழக விவசாயிகள். சுமார் 200 வகைப் பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் உள்ளன.ஒரு லட்சம் டன் என்ற அளவில் வருடந்தோறும் பயன்படுத்தப்படுகின்றன.  அவற்றில் குடல் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சு என்று பலவகைகள் உள்ளன.அய்ந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் இந்த நரம்பு நஞ்சுகள்.  பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி  கொல்லும் இயல்புடைய கொடிய விசம் கொண்டவை. உரக்கடை அதிபரே மருத்துவராகி அதிக கமிசன் பெற்றுக்  கொண்டு பூச்சிக்கொல்லிகளை சிபாரிசு செய்து விற்பனைசெய்கிறார்.கேரளாவில் பெருகி வரும் நோய்களும் அதிலும் குறிப்பாய்  ஆண்டிற்கு 50 ஆயிரம் புற்று நோயாளிகள்  உருவாக்கப்படுவதும் கேரள விஞ்ஞானிகளை அச்சப்பட வைத்திருக்கிறது. அய்ந்து ஆண்டுகளுக்கு முன் இயற்கை வேளாண்மை குறித்து அக்கறை கொண்டு  அவர்கள் திட்டிவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக் காய்கறிகளைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார்க:. 15 வகை பூச்சிக் கொல்லிகளுக்குத் தடை விதித்திருக்கிறார்கள் . அய்ரோப்பிய நாடுகளில் சில தமிழ்நாட்டுக் காய்கறிகள், பழங்களுக்கு ஏற்றுமதித் தடை வித்திதிருப்பது அவர்களுக்கு முன்னோடியாக உள்ளது. ஆகாது  கேரளாவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. கேரள அரசு தமிழக காய்கறிகளுக்கு தடையில்லை என்று இறுதியாய் அறிவித்திருப்பது ஆறுதல் தருகிறது. ஆனால் அதில் ஒரு எச்சரிக்கை அடங்கியிருக்கிறது.
அமைதிப்பள்ளத்தாக்கை இயறகை சூழந்த இடமாக அணை கட்டுவதிலிருந்து  காப்பாற்றி வைத்துக் காப்பாற்றி வருகிறார்கள் கேரளத்தினர். பெருந்துறை சிப்காட்டில் புதிய தனியார் குளிர்பதன தொழிற்சாலையின் நீர் சுரண்டலைக் கண்டித்து  மூன்றாண்டு போராட்டம் வெற்றி கண்டு தமிழக அரசு அத்தொழிற்சாலையின் அனுமதியை ரத்து செய்திருப்பது நாம் பெருமை கொள்ளும்  சமீபத்திய ஒரு விசயமே.
சுப்ரபாரதிமணிய, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602  /9486101003