Monday, November 23, 2009

குறு குறு குறும்படங்கள்

குறுகுறு குறும்படங்கள்
=====================

1. Texture of Soul ( Direction : Deepath Gera )
--------------------------------------------------------------------

தொழு நோய் பற்றிய படம். ஒரு வகுப்பில் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2ம் 2ம் எவ்வளவு என்று கேட்கிறார். மாணவர்கள் 4 என்கிறார்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் கையை மேலே நீட்டி “ 0 “ என்கிறான். அவனின் கைகளில் விரல்கள் இல்லை.


2. Stair case ( Direction : George Mangalath Thomas )

முதிய பெண்ணொருத்தி கதவை பூட்டி விட்டு மாடியிலிருந்து கீழ் இறங்குகிறாள். இறங்க சிரமப்படுகிறாள். தரைப்பகுதிக்கு வந்த பின் மேலே பார்க்கிறாள். மீண்டும் படியேறுகிறாள். இறங்கியதை விட ஏறுவதற்கு வெகு சிரமப்படுகிறாள். வெகுவாக சிரமப்படுகிறாள். மாடிக்குச் சென்று கதவைத் திறந்து அண்ணாந்து பார்க்கிறாள். பேன் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை அணைப்பதற்காக ஸ்விட்சை பார்த்து, ஆப் செய்கிறாள். பேன் நிற்கிறது. மிகுந்த சிரமத்துடன் மீண்டும் படிகளில் இறங்குகிறாள்.


3. மலைகளை.... ( இயக்கம் : ராஜா சந்திரசேகர் )

” மலைகளை வரைகிறவன் ஏறிக் கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே” என்ற கவிதைவரிகளுக்கான ஓவிய சித்திரம் இது. இதையடுத்து தற்போது வெளிவந்திருக்கும் மூதாட்டி என்ற கவிதையின் ஒளி வெளிப்பாடும் மிகவும் உருக்கமானது.


4. மரம்.. மரம் அறிய ஆவல் ( இயக்கம்: தி. சின்ராஜ்)

ஒரு நிமிடப்படம் இது. மரங்கள் வெட்டப்படுவதன் வலியை மலையின் இயற்கை அழகு மூலமும், மரத்தை வெட்டி கோடாரிக்கு கைப்பிடியாவதும், அதுவும் மரம் வெட்டப் பயன்படுவதும், குருவிகளின் கதறலாய் மரம் பற்றிய வாசகமும் கொண்ட படம்.