


கவிதைச்சுழல் - 1 (30/08/2009)(செய்தி - பதியம் )
25 கவிஞர்கள் ஒன்று கூடினால் என்ன நடக்கும்,,,, ஆளுக்கொரு அரிவாளும. வெட்டும் குத்தும் (உபயம் டாஸ்மாக்) நடக்கும். 28 குழுக்களாகப்பிரிந்து - ஆளுக்கொரு பிரபல சிற்றிதழ்களில் பக்கம்பக்கமாக விணை, எதிர்விணை எழுதிக்குவிப்பார்கள். தொடர்ந்து ஏழெட்டு இதழ்கள் அவர்கள் எழுத- வாசகர்கள் அதற்கு வரிந்துகட்டிக்கொண்டு அதிபுத்திசாலிகளாக விமர்சனமெழுத..... அப்பப்பா...
இதெல்லாம் எதுமின்றி 25 கவிஞர்கள் ஒன்றுகூடி கவிதைகுறித்து விவாதம்செய்தது ஆரோக்கியமான நிகழ்வாக அமைந்தது.
பதியம் ஏற்பாடுசெய்திருந்த கவிதைச்சுழல் நிகழ்வு 30-08-09 ஞாயிறுமாலை 5மணிக்கு துவங்கி இரவு 8.30 மணிவரை தென்னம்பாளையம் பள்ளியில் நடைபெற்றது. பாரதிவாசன் தலைமையுரையில் - இலங்கைச்சூழல், எந்தவொரு நிகழ்விற்கும் மனமொப்பாததாலேயே - (இளவுவீட்டில் கொண்டாட்டமா என்கிற மனநிலையில்) - பதியம் எந்த நிகழ்வையும் ஒருங்கிணைக்கவில்லை. நீண்ட மௌனத்திற்குப்பின் - கவிதை குறித்து ஒரு நிகழ்வை ஏற்பாடுசெய்திருக்கிறோம். கவிதை வாசிப்பு. அதுகுறித்து விவாதம் என்கிற முறையில் நிகழ்ச்சி அமையும் - என்றார்.
முதல்அமர்விற்கு எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்துப்பேசினார். இன்றைய கவிதைகளின் போக்கு, அதுகுறித்தான இப்படியான விவாதங்கள் வரவேற்க வேண்டியவை என்றார்.
தொடர்ந்து முதலாவதாக கவிதை வாசிக்க வந்த கே.பொன்னுச்சாமி, தான்கொண்டு வந்திருந்த கவிதைத்தாளின் நகலச்சுக்களை (விவாதிப்பதற்கு ஏதுவாக அனைத்துக்கவிஞர்களையும் தத்தமது கவிதைகளை 25 நகலச்சு(ஜெராக்ஸ்) எடுத்துவரக் கூறியிருந்தோம்) அனைவருக்கும் கொடுத்து - பின் கவிதை வாசிக்கத் தொடங்கினார், விடியுமா? என்கிற தலைப்பில் அவர் வாசித்த கவிதைக்கு - பரவலாக விமர்சிக்கப்பட்டது. தொழிற்சங்கவாதியான பொன்னுச்சாமி இலக்கிவாதியாகி கவிதைவாசித்தது - அவர் தன்னை - நான்முதலில் இலக்கியவாதி, பின்பு தான் தொழிற்சங்கவாதி என்று கூறியது ஆச்சர்யப்படவைத்தது.
தொடர்ந்து - இளஞாயிறு, தமிழவன், சுப்ரபாரதிமணியன், செங்கதிர், அ.கார்த்திகேயன், இளஞ்சேரல், செல்வக்குமார், தமிழ்முதல்வன், அருணாச்சலம், அனுப்பட்டி பிரகாஸ், வான்மதி வேலுச்சாமி, யாழ்மதி, செந்தில்முருகள், வைகை ஆறுமுகம், பாரதிவாசன், ஷெய்கிருஸ்ணன், சுரேஸ், சுரேஸ்வரன் உட்பட பலரும் கவிதை வாசித்து - ஒவ்வொருவர் கவிதைவாசித்து முடித்தவுடன் அந்த கவிதை விமர்சனத்தில் துவங்கி - பொதுவான கவிதைச்சுழல் வரை அலசப்பட்டன. கவிதைகளில் ஈழம் சார்ந்த கவிதைகளே கூடுதலாக வாசிக்கப்பட்டு - இன்றைய ஈழ நிலவரம், அதை அந்த கவிதை சொன்ன விதம் என்று விவாதம் நடைபெற்றன.
தமிழவனின் கவிதை தலித்தியம் சார்ந்து பேசியது. டி.என். ராஜ்குமார் கவிதை வீரியத்துடன் வெளிப்பட்டது கவிதை.
கவிதைவாசிப்பிற்குப்பின்னான நீண்ட மௌனமே கவிதை வெற்றியாக பாவிக்கபடவேண்டியது - என்றார், இளஞ்சேரல்.
கவிஞர் தமிழவனுக்கு தான் கொண்டு வந்திருந்த டி.என்.ராஷ்குமாரின் -கல்விளக்குகள்- கவிதைப்புத்தகம் பகிர்ந்தார் (கவிதை வாசிப்புக்கு வருகிற அனைவரையும் ஒரு கவிதைத்தொகுப்பு வாங்கிவர பணித்திருந்தோம். வருகிற அனைத்துக்கவிஞர்களும் அனைவருக்கும் புத்தகம் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்பதற்காக. வாசிப்புத்தளத்தை விரிபடுத்துகிற சின்ன ஆவலில்)
அடுத்து - அனுப்பட்டி பிரகாஸ் தான் வாழ்ந்த கிராமம் - அதன் நினைவுகள் குறித்தான கவிதை வாசித்தார். மற்றும் கோவை இராஹவ வாகனம் தாக்குதல் வழக்கில் கைதி சிறையிலிருந்த போது எழுதப்பட்ட ஈழம் பற்றிய கவிதையும் வாசித்தார்.
செந்தில் முருகன் மரணம் குறித்தான தனது பதிவினை கவிதையாக்கியிருந்தார். இடம்பெயர்தல் குறித்த கவிதையினை பாரதிவாசனும், ஈழம் அதன் தொடர்ச்சியான தமிழ்த்தேசியம் குறித்து செங்கதிரும் கவிதை வாசித்தனர். பெண்ணியம் குறித்து செல்வக்குமாரும், ஈழம் குறித்து இந்திய இடதுசாரி களின் நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இளஞாயிறும், மதுமாலை தலைப்பில் கார்த்திகேயனும், துணுக்குக்கவிதைகளாய் ஜெய்கிருஷ்ணன், ஈழம் பற்றி வான்மதி வேலுச்சாமியும். ஈழ நிலைபாட்டில் மிப்பெரும் தவறிழைத்த கருணாநிதி விமர்சித்து - மற்றும் தமிழக அரசை விமர்சித்து சுரேஷூம் கவிதை வாசித்தனர்.
இரண்டாவது அமர்வாக சேலத்திலிருந்து அ.கார்த்திகேயனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இனிது இனிது கவிதைச் சிற்றிதழை முனைவர் இரா.இரமேஸ்குமார் அறிமுகம் செய்து உரையாற்றினார்.
மனம் நிறைவானவொரு கவிதை அமர்வாக அமைந்திருந்தது. தொடர்ந்து மாதாமாதம் இப்படியான கவிச்சுழல் அமர்வு நடத்தவேண்டும் என்கிற அனைத்துக்கவிஞர்களின் விருப்பத்துடன் - நிகழ்வு இரவு 8.30 மணிக்கு நிறைவுபெற்றது.
- வதனன்
(நன்றி பதியம்)