சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 1 ஜூன், 2017

shortstory

 பீங்கான்தட்டும் பூரிக்கிழங்கும்...: சுப்ரபாரதிமணியன் 



           பீங்கான் பொருட்களை கையாளுவது அவ்வளவு எளிதல்ல என்று தோன்றியது சுப்பையாவுக்கு. பைப்பிலிருந்து நீர் கொட்டும்போது பீங்கான் தட்டுகளின் மீது வழிவதை எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பது அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால்  பீங்கான் தட்டை இன்னொரு பீங்கான் தட்டின் மீது வைக்கும்போது அது எழுப்பிய சத்தம் பயமுறுத்துவதாக இருந்தது. வாஷ் பேசினிலிருந்து பொருட்களை எடுப்பது மிகுந்த கவனத்தை கோருவதாக நினைத்துக் கொண்டான் சுப்பையா. இந்த எவர்சில்வர் பொருட்களெல்லாம் எங்கே போயின திடீரென்று... அல்லது குறைந்து போய்விட்டனவா எல்லாவற்றிக்கும் மேலாக பீங்கான் தட்டுகளை முன்வந்து நிற்பது போல் இருந்தது. குழாயிலிருந்து வழியும் நீரை சோற்றுக்கற்றாழையிலிருந்து வழியும் பிசின் பால் போல இருப்பதாய் நினைத்தான். அவன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவுடன் அவனை விரட்டுவது போல் ஏதாவது ஒரு குரல் வந்துவிடும்

             'என்ன தண்ணி வீணாகுதே' என்று காட்டமாய் குரல் இருக்கும் அடுத்த நொடியிலேயே 'அந்த நாலாம் டேபிள்லே யாரு பாக்கறா ஆள் வந்து உக்காந்து கெடக்கு' நாலாவது ஃபேனுக்கு கீழே காப்பி போகலே என்றபடி சொற்கள் கூட அவனை மிரட்டுவது போல் இருக்கும். அரை மணி நேரத்தில் வாஷ் பேசினில் கிடைக்கும் தட்டுகளை பாத்திரங்களையும் கழுவிக் கொண்டிருந்தாலே இரண்டு கைகளிலும் வெளுப்பு வந்துவிடுகிறது அவனுக்கு. ஏகதேசம் தொழுநோயின் ஆரம்பநிலை போல உள்ளங்கைகள்  வெளுத்துவிடுகின்றன.

            நாளைக்கு " ஆட்டோகிராஃப்" படத்திற்கோ "விருமாண்டிக்கோ" போக பணம் வேண்டியுருக்கிறது. முதல் நாளில் காட்சிகளைப் பார்ப்பதும் பின்னால் நிதானமாய் இன்னொரு தரம் பார்ப்பதும் அவனுக்கு பழக்கமாயிருந்தது. முழுநேர நாடகக்காரனாக இருப்பதில் எவ்வளவோ சிக்கல்கள் இருப்பதாக அவனுக்குத் தெரிந்துவிட்டது. பட்டத்து அரசியம்மன் கோவில் திருவிழாவிலோ, மாகாளியம்மன் கோவில் திருவிழாவிலோ ஒரு நாடகம் போட்டுவிட்டு காத்திருப்பதை மீறி நாடகக்காரனாகவே காலத்தைக் கழித்துப் பார்ப்பது என்ற பரிசோதனையில் வயிறுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது. பசியால் மயங்கிவிழும் வேளையில்தான் இந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்தான். கல்லாப்பெட்டிப் பக்கம் இருந்தவரிடம் சென்று மெல்ல புன்னகையுதிர்த்தபடி மெலிசான குரலில் கேட்டான்

"ரொம்ப பசியாயிருக்கு சாப்பிடணும் அப்புறம் அதுக்காக வேலையும் செஞ்சிடறே"  


"சரி... சரி...  அப்பப்ப வந்து போற ஆளுதானே போய் உட்கார்ந்து சாப்புட்டு வேலையைப் பாரு ஆமா எந்த ஊரு"

" பழையனூருங்க "

" இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானா

" ரண்டு நாளைக்கு வெச்சுக்கலாங்க "

          அப்படிதான் இரண்டு நாட்களாய் இந்த ஓட்டலின் வாஷ் பேசினில் அருகிலேயே நின்றுக்கொண்டிருக்கிறான். பாத்திரங்களைக் கழுவக் கழுவ அது வந்துகொண்டேயிருந்தது. குப்பை மலையாய் படர்ந்தது.  

கால்கள் கொஞ்ச நேரம் உட்காரும்படி கெஞ்சின. கைகளில் வெளுப்பும் சில சமயங்களில் அவன் உடம்பை உதறச் செய்யும். கழல்கள் நினைக்கையில் நடுங்கின
          இரண்டு மணி நேரத்தில் நாலாவது தடவையாய் கல்லாப் பெட்டிக்காரனிடம்  வந்து பேசிக்கொண்டிருக்கும் இளம்பெண் கலகலப்பாகவே இருந்தார். அவரின் உடம்பை சுடிதார் முழுமையாக மூடியிருந்தாலும் அவளின் மொத்த உடலையும் அழகாக்கி காட்டுவது போல்தான் இருந்தது. கல்லாப்பெட்டிக்காரனுக்கு என்னவாயிருக்கும் அந்த சுடிதார் பெண்ணுக்கு என்னவாயிருக்கும். அவனின் கலகலப்பு ஒரு வித அழகையே கொண்டு வந்துவிட்டதை போல் இருந்தது. அன்றைய செய்தித் தாளில் ஜீவசுந்தரி கடத்தல் வழக்கில் மூன்று வருட கடுங்காவல் செய்தியைப் பார்த்திருந்தான். இங்கேயும் அது அரங்கேறுகிறதா, கல்லாப்பெட்டிக்காரன்தான் அண்ணாச்சியா... சுடிதார் பெண் ஜீவசுந்தரியா என்ற நினைப்பு வந்தது

          வீட்டில்கூட ஒரு சுந்தரி அவனுக்காக இருக்கிறாள். விவசாயக்கூலிக்கு போய்விட்டு வந்து குடும்ப பாரத்தையே காப்பாற்றுகிறாள்.


"கொழந்தைங்க பெரிசாயி வளர்ந்தாதான் பிரச்சனை. அதுவரைக்கும் உனக்கும் ஒன்னும் தெரியாது  எனக்கும் ஒன்னும் தெரியாது. அதுவரைக்கும் இந்த நாடகம் தெருமுனையிலே கூட்டம்னு நீ போயிட்டு இருந்தா எனக்கொண்ணும் பெரிசா தெரியாது. அதுக்கப்புறம்தான் நான் உன்னோட கொரல்வளையே பிடிப்பேன்"

அவன் சார்ந்திருந்த முற்போக்கு அமைப்பு அவனை மாநில அளவிலான நாடகப் பயிற்சி முகாமிற்கு அனுப்பியிருந்தது அவ்வப்போது முக்கிய பிரச்சனைகள் சார்ந்து தெருமுனை நாடகங்களை நடத்தியிருந்தான். அதனால் அவனுக்கு வருமானம் எதுவுமில்லை. நாடகம் நடத்தும் நேரத்தில் அந்த வேலைக்கு வயிற்றை நிறைத்துக் கொள்ளமுடியும் வழக்கமான சமயத்தில் முயன்றால் உதிரியாய் ஏதாவது வேலை கிடைக்கும்

நாலைந்து பேருடன் சேர்ந்து "சுடரொளி" தன்னார்வக் குழுவுக்காக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நாடகங்களை போட்டான். அப்படி இரண்டு மூன்று முறை குழந்தை தொழிலாளர் பிரச்சனை , எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகங்களைப் போட்டான்
ஆனால் முற்போக்கு அமைப்பு அதற்கான விளக்கமும் கேட்டிருந்ததுஅவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஆட்சேபம் அதில் தென்பட்டது.

" அவங்கெல்லாம் சமூக மாற்றத்திற்காக எதிரானவங்க. அதில வேலை செஞ்சிகிட்டு இதுலேயும் நிறுக்க முடியாது" என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். முற்போக்கு அமைப்புக்குள் இருப்பது சிக்கலாகத்தான் தோன்றியது அவனுக்கு

     பூவா தலையாய் போட்டுப் பார்க்கலாமா . எந்தப் படத்திற்குப் போவது .ஆட்டோ கிராப்பா அல்லது விருமாண்டியா குழப்பமாகத்தான் இருந்தான். " கன்னத்தில் முத்தமிட்டால் " படம் தந்த ஆழமான பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியாமல் இருந்தான். விருமாண்டி அப்படி ஒரு பாதிப்பைத் தருமா அல்லது ஆட்டோகிராப் தருமா? போன ஆண்டு வெளி வந்த  "ஷக்கலக்கபேபி " மறுபடியும் ஓடிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது

அடுத்த அவனது இலக்கு ஒரு குறும்படம் எடுப்பதாக  இருந்தது. ஒரு பயிற்சி பட்டறைக்கு கூட போய்விட்டு வந்திருந்தான் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்தால் போதும் அடுத்து ஆண்டு ஒரு குறும்படம் எடுத்துவிடலாம் இப்படி ஹோட்டலில் தட்டையே கழுவிக்கொண்டுஇருந்தால் சாத்தியமாகாது. வீட்டில் போய் இருந்தால் கூட சுந்தரி இரக்கப்பட்டு வட்டிக்காவது வாங்கி கொடுப்பாள். குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருப்பது அவளுக்கு ஆறுதலைத்   தரும்.

          அந்த இரவில் அவன் பீங்கான் தட்டை நீட்டியபோது நான்கு பூரிகளும் உருளைக்கிழங்கு மசாலாவும் தட்டில் நிரம்பியது. சுந்தரி குழந்தைகளுக்கு இப்போது என்ன செய்து கொடுத்திருப்பாள் தோட்டத்தில் அலைந்துவிட்டு வந்து கொஞ்சம் அரிசியை போட்டு சோறுதான் வடிப்பாள். குழந்தைகளுக்கு இந்த பூரி ரொம்பவும் பிடிக்கும்தான்.

பூரி நிரம்பியிருந்த பீங்கான் தட்டையே பார்த்துகொண்டுஇருந்தான் சுப்பையா. பீங்கான் தட்டின் ஓரத்திலிருந்து ஏதோ வெளிச்சம் கிளம்பி சுற்றிலும் நிறைந்துக் கொண்டுயிருந்தது. பிரகாசமான விளக்குகள் அந்த அறையை இன்னும் வெளிச்சத்தில் உச்சத்திற்கு கொண்டு சென்றன.அவன் வெளிச்சம்  ஊடுருவதையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003



shortstory
சில நிறுத்தங்கள்: சுப்ரபாரதிமணியன்

            பழையனூரில் மூன்று பேருந்து நிறுத்தங்கள் உLLanண்டு. எதிலும் நிழலில் நின்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள நிழல் குடையோ மறைப்புகளோ இல்லை. வெய்யிலானாலும் மழையானாலும் ஏதாவது மரத்தடி கிடைத்தால் பாக்யம் என்பது போல் தவிப்பார்கள் சுடுமணலில் கால்களை வைத்தவர்கள் போல் தள்ளாடுவார்கள். ஆண்கள் ஏதாவது தேநீர் கடையில் போய் தேனீர் குடித்து விட்டு கொஞ்சம் நேரம் உட்கார அனுமதி கிடைக்கும். பெண்கள் என்றால் தெருதான். தெருவில்தான் நிற்கவேண்டும். வெயிலில் காயவேண்டும் .

முதல் பேருந்து நிறுத்தம் பழைய பழையனூர் . பத்து பேர் கொண்ட கும்பல் பூவரச மரத்தடியில் இருந்தது. நூறு நாள் திட்ட வேலைக்கு போகிறவர்களை அங்கு வரச்  சொல்லியிருந்தான் சூப்பர்வைசர் மங்கள கிருஷ்ணன். வாய்க்கால் மேடு பகுதிக்கு போக வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தான். அருணாதேவி அந்தக் கும்பலில் அன்று சேர்ந்திருந்தாள்.

எங்கு வேலைக்குச் சென்றாலும் அதிகபட்சம் மூன்று மாதங்கள் செய்வாள். அப்புறம் வேலை இடம் மாற்ற புது இடம் தேடுவாள்.முன்பு வேலை செய்த இடங்களில் ஆண்களின் தொல்லை பற்றி சொல்வாள்.
 " பார்க்கற பார்வை...சேலையிலிருந்து ஆரம்பிச்சு மெதுவா கேக்கறது. சாப்பாட்டு பொட்டலம் வாங்கித் தந்துன்னு ஆரம்பிச்சு மொக்கை போடுவானுக..."

" நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா அருணா..."

" இங்க இருக்கறவங்களெ விட அழகுதா..."

" செரி... செரி... பேரழகியா நெனச்சக்காதே"

 ஏதாவது பிரச்னை என்றால் மஞ்சுளாவிடம்தான் சொல்வாள். அவளும் " நீ என்ன பெரிய அழகியா என்றுதான் கேட்டிருக்கிறாள். " உன்னெ விட நான் அழகிதாண்டி " என்பாள். ஏதோ வொருவகையில் அவள் தூரத்துச் சொந்தம். அப்பா அம்மாவை மஞ்சுளா கூட வைத்துக்கொண்டு திண்டாடுபவள். அவள் அண்ணன் திருமணம் செய்து கொண்டு தனியே போய் விட்டான். அவள் அம்மா செம்மறி ஆடுகள் நாலைந்தை வைத்துக் கொண்டு புல், செடி கண்ட இடங்களில் மேய்த்துக் கொண்டிருப்பாள்.
       மஞ்சுளா பெரிய மனுஷி ஆன பின்பு ஆடு மேய்க்கப் போவதில்லை. கொஞ்ச நாள் மில்லிற்கு போனாள். பஞ்சு மூக்கில் நுழைந்து இருமலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருந்ததால் மில்லிற்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். இன்றைக்கு நூறு நாள் வேலைக்கு மங்கள கிருஷ்ணன் கூப்பிட்டால் போலாம். இல்லையென்றால் மஞ்சுளா வீட்டிற்கு போகலாம் என்று நினைத்திருந்தாள் அருணாதேவி.  ஒரு நல்ல பருப்பாவது சாம்பாராவது சுவைக்காக கிடைக்கும். புது இடம் புது ருசி என்பாள்.

பழையனூரின் இரண்டாம் பேருந்து நிறுத்தம் புதிய பழையனூர் நிறுத்தம். பெரிய வேப்பமரம் ஒன்று அதன் ஆகிருதியுடன் நின்றிருக்கும். ஒவ்வொரு காலத்திற்கும் தகுந்த மாதிரி வேப்பிலை கொழுந்து, வேப்பம்பழம், இலைகள் உதிர்ந்து அந்த மரத்தடி ரம்மியமாகவே இருக்கும். இளஞ்சேரல் பழையனூர் வடக்குப் பகுதி மூலையில் ஒரு தோட்டம் வாங்கி சுள்ளிக் கரடாக இருந்த இடத்தில இயற்கை வேளாண்மைக்காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தான். கணிணிப் பொறியாளராக இருந்து பெங்களூர் , அமேரிக்கா என்று பத்தாண்டுகள் அலைந்துவிட்டு கோவைக்குத் திரும்பியவன் அங்கு வந்து இடத்தை வாங்கினான். நிலத்தை ஒழுங்குபடுத்தி வேலி போட்டான். மண் புழு உற்பத்தி என்று ஆரம்பித்திருந்தான். காய்கறி போட ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். அந்த இடத்தில யாரவது தங்கியிருந்து பார்த்தால் நல்லது என்று ஷெட் போட்டிருந்தான். ஒரு குடும்பமாக இருந்தால் நல்லது என்று நினைத்திருந்தான். சுப்பையாவைப் பற்றி யாரோ சொல்ல இளஞ்சேரல் தொடர்பு கொண்டிருந்தான். சுப்பையாவிற்காக இளஞ்சேரல் காத்திருந்தான். அவனின் கண்களில் இருந்த கறுப்புக் கண்ணாடி வெய்யிலின் தாக்கத்தை குறைத்திருந்தது. எல்லாவற்றையும் லேசான கறுப்பில்தான் காட்டிக் கொண்டிருந்தது

" எனக்கே இது மாதிரி நினைப்பு இருந்துச்சு. ஒரு தாய் தமிழ்ப் பள்ளி ... ஒரு இயற்கை வேளாண்மைத் தோட்டம்ன்னு கொஞ்சம் கனவு இருக்குது. "

" தாய்த் தமிழ்ப் பள்ளி பெய்லியரா "

" அரசாங்க ஆதரவு இல்லெ. நோஞ்சான் கொழந்தை மாதிரி இருக்குது. "

" நாம ஒன்னு இங்க முயற்சி பண்ணலாமா..."

" மெட்ரிகுலேஷன் பள்ளிக நாலஞ்சு ஊரச் சுத்தி இருந்து பயமுறுத்துது. மொதல்ல இயற்கை வேளாண்மைத் தோட்டம் பாருங்க. எனக்கே இதிலே தங்கிப்பார்த்துக்க ஆசைதா. வீட்லே யாருக்கும் அக்கறை இல்லே. பரம்பரையான வூடு. வெளியே போக வேண்டாமுன்னு பாக்கறேன்" என்று சொல்லியிருந்தான். சுப்பையாவுக்காக இளஞ்சேரல் காத்திருந்தான். கை குறி பார்க்கும் பெண்ணொருத்தி பத்தடி தூரத்தில் கனத்த பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.அந்தப்பாறையை உடைக்காமல்  அப்படியே விட்டு வைத்திருப்பதை ஆச்சர்யத்துடன் பலர் பார்த்துச் செல்வார்கள்.

பழையனூரில் மூன்றாவது சந்திப்பு முனியப்பன் கோவிலின் முகப்பில் இருந்தது. அங்கு கிளி ஜோசியர் ஒருவர் உட்கார்ந்திருப்பது பழமையான விஷயம். மலை வெய்யில் என்று தாக்குபிடிப்பிக்காமல் இருக்கும் போது கொஞ்சம் இடம் மாறி உட்காருவார். மற்றப்படி முனியப்பன் கோவில் மேடைக்கு கீழ் இருந்த இடம் அவருக்கு நிரந்தரமானது. என்பதுபோல் உட்கார்ந்திருப்பார். மேடைச் சுவரோடு கட்டிவைத்தது போல் அவரின் கிளிக்கூண்டு நெருங்கியிருக்கும்.

" தாலிக்குத் தங்கம், 3 வருடம் வேலை செய்தால் 30,000 ரூபாய் கல்யாண செலவுக்கு. தங்குமிடம், சாப்பாடு இலவசம்." என்ற ஒரு பிரசுரத்தை ஒருவன் கொடுத்துக்கொண்டிருந்தான். 
ஜோசியக்காரர்    " தள்ளி நில்லுப்பா...நம்ம கிளிக் கூண்டை மறைக்கறே " என்று சத்தமிட்டார்.
 " இது எங்கப்பா..எந்த ஊர்லே ."

" வேட செந்தூரிலே "

" அங்கதா மில்லுக குவிஞ்சு கெடக்குதே. இந்த ஊர்ல இருபது வருஷத்துக்கு முந்தி ஒரு மில்லு இருந்து அப்போ மாங்கல்யத் திட்டம்ன்னு பேர் இல்லாமெ கேரளப் பொண்ணுகளே வெச்சு வேலை வாங்குனாங்க. பணம் தர்லே ஏமாத்திட்டாங்க.ஒரு பொண்ணெ கர்ப்பம் பண்ணிட்டாங்கன்னு ஏக காம்ப்ளயிண்ட். ஒரு கேஸ் கூட கோர்ட்ல இருக்கு. சொன்ன பணம் வரலேன்னு.."

" இதுலே எல்லாம் செரியா நடக்கும். நல்ல சாப்பாடு . தங்கற வசதி "

" உனக்கு எவ்வளவு கமிஷன் "

" இருக்கு... ஆயிரம் ஒரு ஆளுக்கு. ரெண்டாம் வருசமும் அவங்க அங்கேயே இருந்தா இன்னம் ஐநூறு கிடைக்கும். ஆமா ஜாதகம் பார்க்கறதுக்கு வர்ரவங்க இருக்கற ஊர்ல நீ வந்து கிளி ஜோஸ்யம் போட்டிருக்கே "

" பாஸ்ட் புட் மாதிரி உடனே பலன் கேட்க வர இன்னும் ஆளுக இருக்காங்க. உனக்கு கல்யாணம் ஆகலையா. ஒரு சீட் பாத்திரலாமா. சுமங்கலித் திட்டப் பொண்ணேயே பாத்திரலாமா."
உன் வேலையெ நிறுத்தற மாதிரி ஏதாச்சும் செய்யணும் ..
அவன் எதைச் சொல்கிறான். கிளி ஜோதிடம் பார்ப்பதைச் சொல்கிறானா. சுமங்கலித்திட்டத்திற்குப் பெண்களைப் பிடிக்கும் வேலையைச் சொல்கிறானா  என்று யோசிப்பதைப்போல் கிளிக்கூண்டைப் பார்த்தான் ஜோசியகாரன்.





*        subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 


கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய  “ சுற்றுச்சூழல் முகாம்-சூழலியல் “
--------------------------------------------------------------------------
 திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் முகாமினை  இருதினங்கள் 27,28 மே- கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தியது   பத்திரிக்கையாளர்  ஜெயப்பிரகாஷ் ஒருங்கிணைத்தார். ஈரோடு பசுமை இயக்கம் டாக்டர் ஜீனானந்தம், பாமயன், அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் போன்றோர்  நாம் எதிர்கொள்ளும் சூழலியல் நிலைகள் பற்றிப் பேசினர் .   படைப்பிலக்கியத்தில் சுற்றுச் சூழல்  என்ற தலைப்பில் சுப்ரபாரதிமணியன் பேசினார்
திண்டுக்கல் சுற்றுச்சூழல் முகாமில் சுப்ரபாரதிமணியன் பேசியதில்..சுற்றுச் சூழல் படைப்பிலக்கியத்தில்..
----------------------------------------------------------------------------
என் சுற்றுச்சூழல்  நாவல்கள் ( சாயத்திரை, புத்துமண் )  முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது.  சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன.  அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில்  முதலாளித்துவதின்  கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில்  நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக்  கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல் சுற்றுச் சூழல் படைப்புகள்

    கடந்த 20 ஆண்டுகளாக நானும் படைப்பிலக்கியவாதிகளும் எழுதிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள், குழந்தைத்தொழிலாளர் நலன்கள் குறித்த அக்கறையை  அக்கறைகொண்டு அவை பற்றிய படைப்புகளை முன்னிருத்துகிறது. கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களையும் அக்கறையுடன் வெளியிட்டு வருகிறது.கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரைமண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக  கார்ப்பரேட்  சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும்  என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை  என் கட்டுரைகள் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உலக அளவில் மனித உரிமைப்பிரச்சினைகளாக   முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும்.  சமூகத்தின் மனச்சாட்சியின் குரலாக, ஒருவகையில் எழுத்தாளர்களின் குரலாக   அது இலக்கிய ஆளுமைகள், கலைத்துறையினர், அறிவுத்துறை முன்னோடிகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறது.உலக மயமாக்கலால் கிராமங்களிலிருந்து துரத்தப்படும்  மக்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். இங்கு அவர்கள் தொழிலாளிகளின் உரிமையற்று, வெறும் கூலிகளாக, கொத்தடிமைகளாக, சுமங்கலித்திட்டத்தின கீழான அடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக தொடர்ந்து இயங்கி வருகிற அவலத்திலிருந்து மீட்டெடுக்கிற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நுணுக்கமாகவும், பூடகமாகவும்  சமீப்ப் படைப்புகள் வெளிவருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது. இது இலக்கிய தர்மத்தின் குரலாக ஊடகங்களுக்கு முன் உதாரணங்களை முன்வைக்கும் முயற்சியாகும்