சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வியாழன், 1 ஜூன், 2017

shortstory

 பீங்கான்தட்டும் பூரிக்கிழங்கும்...: சுப்ரபாரதிமணியன்            பீங்கான் பொருட்களை கையாளுவது அவ்வளவு எளிதல்ல என்று தோன்றியது சுப்பையாவுக்கு. பைப்பிலிருந்து நீர் கொட்டும்போது பீங்கான் தட்டுகளின் மீது வழிவதை எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பது அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால்  பீங்கான் தட்டை இன்னொரு பீங்கான் தட்டின் மீது வைக்கும்போது அது எழுப்பிய சத்தம் பயமுறுத்துவதாக இருந்தது. வாஷ் பேசினிலிருந்து பொருட்களை எடுப்பது மிகுந்த கவனத்தை கோருவதாக நினைத்துக் கொண்டான் சுப்பையா. இந்த எவர்சில்வர் பொருட்களெல்லாம் எங்கே போயின திடீரென்று... அல்லது குறைந்து போய்விட்டனவா எல்லாவற்றிக்கும் மேலாக பீங்கான் தட்டுகளை முன்வந்து நிற்பது போல் இருந்தது. குழாயிலிருந்து வழியும் நீரை சோற்றுக்கற்றாழையிலிருந்து வழியும் பிசின் பால் போல இருப்பதாய் நினைத்தான். அவன் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவுடன் அவனை விரட்டுவது போல் ஏதாவது ஒரு குரல் வந்துவிடும்

             'என்ன தண்ணி வீணாகுதே' என்று காட்டமாய் குரல் இருக்கும் அடுத்த நொடியிலேயே 'அந்த நாலாம் டேபிள்லே யாரு பாக்கறா ஆள் வந்து உக்காந்து கெடக்கு' நாலாவது ஃபேனுக்கு கீழே காப்பி போகலே என்றபடி சொற்கள் கூட அவனை மிரட்டுவது போல் இருக்கும். அரை மணி நேரத்தில் வாஷ் பேசினில் கிடைக்கும் தட்டுகளை பாத்திரங்களையும் கழுவிக் கொண்டிருந்தாலே இரண்டு கைகளிலும் வெளுப்பு வந்துவிடுகிறது அவனுக்கு. ஏகதேசம் தொழுநோயின் ஆரம்பநிலை போல உள்ளங்கைகள்  வெளுத்துவிடுகின்றன.

            நாளைக்கு " ஆட்டோகிராஃப்" படத்திற்கோ "விருமாண்டிக்கோ" போக பணம் வேண்டியுருக்கிறது. முதல் நாளில் காட்சிகளைப் பார்ப்பதும் பின்னால் நிதானமாய் இன்னொரு தரம் பார்ப்பதும் அவனுக்கு பழக்கமாயிருந்தது. முழுநேர நாடகக்காரனாக இருப்பதில் எவ்வளவோ சிக்கல்கள் இருப்பதாக அவனுக்குத் தெரிந்துவிட்டது. பட்டத்து அரசியம்மன் கோவில் திருவிழாவிலோ, மாகாளியம்மன் கோவில் திருவிழாவிலோ ஒரு நாடகம் போட்டுவிட்டு காத்திருப்பதை மீறி நாடகக்காரனாகவே காலத்தைக் கழித்துப் பார்ப்பது என்ற பரிசோதனையில் வயிறுதான் பெரிய பிரச்சனையாக இருந்தது. பசியால் மயங்கிவிழும் வேளையில்தான் இந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்தான். கல்லாப்பெட்டிப் பக்கம் இருந்தவரிடம் சென்று மெல்ல புன்னகையுதிர்த்தபடி மெலிசான குரலில் கேட்டான்

"ரொம்ப பசியாயிருக்கு சாப்பிடணும் அப்புறம் அதுக்காக வேலையும் செஞ்சிடறே"  


"சரி... சரி...  அப்பப்ப வந்து போற ஆளுதானே போய் உட்கார்ந்து சாப்புட்டு வேலையைப் பாரு ஆமா எந்த ஊரு"

" பழையனூருங்க "

" இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானா

" ரண்டு நாளைக்கு வெச்சுக்கலாங்க "

          அப்படிதான் இரண்டு நாட்களாய் இந்த ஓட்டலின் வாஷ் பேசினில் அருகிலேயே நின்றுக்கொண்டிருக்கிறான். பாத்திரங்களைக் கழுவக் கழுவ அது வந்துகொண்டேயிருந்தது. குப்பை மலையாய் படர்ந்தது.  

கால்கள் கொஞ்ச நேரம் உட்காரும்படி கெஞ்சின. கைகளில் வெளுப்பும் சில சமயங்களில் அவன் உடம்பை உதறச் செய்யும். கழல்கள் நினைக்கையில் நடுங்கின
          இரண்டு மணி நேரத்தில் நாலாவது தடவையாய் கல்லாப் பெட்டிக்காரனிடம்  வந்து பேசிக்கொண்டிருக்கும் இளம்பெண் கலகலப்பாகவே இருந்தார். அவரின் உடம்பை சுடிதார் முழுமையாக மூடியிருந்தாலும் அவளின் மொத்த உடலையும் அழகாக்கி காட்டுவது போல்தான் இருந்தது. கல்லாப்பெட்டிக்காரனுக்கு என்னவாயிருக்கும் அந்த சுடிதார் பெண்ணுக்கு என்னவாயிருக்கும். அவனின் கலகலப்பு ஒரு வித அழகையே கொண்டு வந்துவிட்டதை போல் இருந்தது. அன்றைய செய்தித் தாளில் ஜீவசுந்தரி கடத்தல் வழக்கில் மூன்று வருட கடுங்காவல் செய்தியைப் பார்த்திருந்தான். இங்கேயும் அது அரங்கேறுகிறதா, கல்லாப்பெட்டிக்காரன்தான் அண்ணாச்சியா... சுடிதார் பெண் ஜீவசுந்தரியா என்ற நினைப்பு வந்தது

          வீட்டில்கூட ஒரு சுந்தரி அவனுக்காக இருக்கிறாள். விவசாயக்கூலிக்கு போய்விட்டு வந்து குடும்ப பாரத்தையே காப்பாற்றுகிறாள்.


"கொழந்தைங்க பெரிசாயி வளர்ந்தாதான் பிரச்சனை. அதுவரைக்கும் உனக்கும் ஒன்னும் தெரியாது  எனக்கும் ஒன்னும் தெரியாது. அதுவரைக்கும் இந்த நாடகம் தெருமுனையிலே கூட்டம்னு நீ போயிட்டு இருந்தா எனக்கொண்ணும் பெரிசா தெரியாது. அதுக்கப்புறம்தான் நான் உன்னோட கொரல்வளையே பிடிப்பேன்"

அவன் சார்ந்திருந்த முற்போக்கு அமைப்பு அவனை மாநில அளவிலான நாடகப் பயிற்சி முகாமிற்கு அனுப்பியிருந்தது அவ்வப்போது முக்கிய பிரச்சனைகள் சார்ந்து தெருமுனை நாடகங்களை நடத்தியிருந்தான். அதனால் அவனுக்கு வருமானம் எதுவுமில்லை. நாடகம் நடத்தும் நேரத்தில் அந்த வேலைக்கு வயிற்றை நிறைத்துக் கொள்ளமுடியும் வழக்கமான சமயத்தில் முயன்றால் உதிரியாய் ஏதாவது வேலை கிடைக்கும்

நாலைந்து பேருடன் சேர்ந்து "சுடரொளி" தன்னார்வக் குழுவுக்காக எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நாடகங்களை போட்டான். அப்படி இரண்டு மூன்று முறை குழந்தை தொழிலாளர் பிரச்சனை , எய்ட்ஸ் விழிப்புணர்வு நாடகங்களைப் போட்டான்
ஆனால் முற்போக்கு அமைப்பு அதற்கான விளக்கமும் கேட்டிருந்ததுஅவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு ஆட்சேபம் அதில் தென்பட்டது.

" அவங்கெல்லாம் சமூக மாற்றத்திற்காக எதிரானவங்க. அதில வேலை செஞ்சிகிட்டு இதுலேயும் நிறுக்க முடியாது" என்று கறாராகச் சொல்லி விட்டார்கள். முற்போக்கு அமைப்புக்குள் இருப்பது சிக்கலாகத்தான் தோன்றியது அவனுக்கு

     பூவா தலையாய் போட்டுப் பார்க்கலாமா . எந்தப் படத்திற்குப் போவது .ஆட்டோ கிராப்பா அல்லது விருமாண்டியா குழப்பமாகத்தான் இருந்தான். " கன்னத்தில் முத்தமிட்டால் " படம் தந்த ஆழமான பாதிப்பிலிருந்து அவன் மீளமுடியாமல் இருந்தான். விருமாண்டி அப்படி ஒரு பாதிப்பைத் தருமா அல்லது ஆட்டோகிராப் தருமா? போன ஆண்டு வெளி வந்த  "ஷக்கலக்கபேபி " மறுபடியும் ஓடிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது

அடுத்த அவனது இலக்கு ஒரு குறும்படம் எடுப்பதாக  இருந்தது. ஒரு பயிற்சி பட்டறைக்கு கூட போய்விட்டு வந்திருந்தான் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் கிடைத்தால் போதும் அடுத்து ஆண்டு ஒரு குறும்படம் எடுத்துவிடலாம் இப்படி ஹோட்டலில் தட்டையே கழுவிக்கொண்டுஇருந்தால் சாத்தியமாகாது. வீட்டில் போய் இருந்தால் கூட சுந்தரி இரக்கப்பட்டு வட்டிக்காவது வாங்கி கொடுப்பாள். குடும்பத்திற்கு ஒத்தாசையாக இருப்பது அவளுக்கு ஆறுதலைத்   தரும்.

          அந்த இரவில் அவன் பீங்கான் தட்டை நீட்டியபோது நான்கு பூரிகளும் உருளைக்கிழங்கு மசாலாவும் தட்டில் நிரம்பியது. சுந்தரி குழந்தைகளுக்கு இப்போது என்ன செய்து கொடுத்திருப்பாள் தோட்டத்தில் அலைந்துவிட்டு வந்து கொஞ்சம் அரிசியை போட்டு சோறுதான் வடிப்பாள். குழந்தைகளுக்கு இந்த பூரி ரொம்பவும் பிடிக்கும்தான்.

பூரி நிரம்பியிருந்த பீங்கான் தட்டையே பார்த்துகொண்டுஇருந்தான் சுப்பையா. பீங்கான் தட்டின் ஓரத்திலிருந்து ஏதோ வெளிச்சம் கிளம்பி சுற்றிலும் நிறைந்துக் கொண்டுயிருந்தது. பிரகாசமான விளக்குகள் அந்த அறையை இன்னும் வெளிச்சத்தில் உச்சத்திற்கு கொண்டு சென்றன.அவன் வெளிச்சம்  ஊடுருவதையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003