சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 3 ஆகஸ்ட், 2015

மறுபதிப்பு : தேனீர்  இடைவேளை நாவல் இரு விமர்சனங்கள்

1. நாமும் கொத்தடிமைகள்தான்:
 கோவை ஞானி


            நவீன காலத்தில் உலக அளவிலான நெருக்கடிகளுக்கு இடையில் மனிதர்கள் தமக்குள் தகர்ந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். இந்த மனிதர்களில் இப்பொழுது யாரும் தலைவர்களாக இல்லை. நாயகர்களாக இல்லை. தம் வாழ்க்கையைத் தாமே படைத்துக் கொள்கிற அல்லது தீர்மானித்துக் கொள்கிறவர்களை நாயகர்கள் என்று சொல்லலாம். நாயகர்கள் என்பவர்கள் தம்மைச் சார்ந்த உலகச் சூழலில் நீதியை நிலைநாட்டுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். இன்றைய சமூகச் சூழலில் இப்படி நாயகர்கள் என்று யாரையும் சொல்வதற்கு இல்லை. தலைவர்கள் என தம்மை நியமித்துக் கொண்டவர்கள் நம் சமூகத்தை, சமூக நீதியை அழிப்பதன் மூலம் தம்மை தலைவர்களாகக்காட்டிக் கொள்கிறார்கள். இவர்களை வில்லன்கள் என்று சொல்லுவதுதான் தகும். இப்படி இவர்களை நம்மால் சொல்லவும் முடியாது. இப்படிச் சொல்வதன் மூலம் வெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக நேரும்.
            ஆகவே நம் காலத்து நாவல்களில் நாயகர்கள் என எவரும் இல்லை. நாவல்களில் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்குள் சிதைவுக்குள்ளான மனிதர்கள். இவர்களுக்குள் மையம் இல்லை. முழுமை இல்லை. தொடர்ச்சியான லட்சியங்களோடு இவர்களால் வாழ முடியவில்லை. இவர்கள் வாழ்வுக்கான வழிதேடி அலைகிறார்கள். பிறந்த பூமியில் இவர்களால் வாழ முடியவில்லை. வயிற்றுப் பிழைப்பேகூட இவர்களுக்கான வாழ்க்கையாகிவிட்டது. நீத, நேர்மை என்று இவர்களால் பேச முடியாது. உறவுகள் என்று சொந்தங்கள் என்று இவர்கள் கொண்டாட முடியாது. இயற்கையோடு இவர்களுக்கு வாழ்வு இல்லை. கலைத்தரம், ரசனை என்று இவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ள இயலாது. யாரையாவது நம்பி, அவனுக்கு அடிமையாகி வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் இவர்கள் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை திருமணம் என்ற லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. கற்பைக் காத்துகொள்ள முடியுமா? குழந்தைகள், குடும்பம் என்று கனவு காண முடியுமா?
            பிறந்த காலத்தை மறந்துவிட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க முடியாது/கூடாது. நிகழ்காலத்தை எப்படியோ நகர்த்தி ஆகவேண்டும். திருமணத்திற்கு வழி இல்லை என்றால் உடல் தினவை எப்படித் தீர்த்துக்கொள்ள முடியும். சோரம் போக வேண்டும். இதில் ஆண்களுக்கு இருக்கிற சில வாய்ப்புகளும், வசதிகளும் பெண்களுக்கு இல்லை. பெண்கள துயரப்பட வேண்டும். கருக்கலைப்பு என்பது எளிதான காரியம் இல்லை. எத்தனையோ சங்கடங்களுக்கிடையே செய்தாக வேண்டும். சின்னவயதில் படித்த கல்வி இப்பொழுது கை கொடுப்பது இல்லை. பெரிய படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்குத் தயாராக இருக்க வேண்டும். தன்மானத்தைக் காத்துக்கொள்ள முடியாது. பெரும்பாலும் இன்றைய கூலி, உழைப்பு என்பது கொத்தடிமைத் தொழிலுக்கு மேம்பட்டதாக இல்லை. தன் வயிற்றைக் கழுவிக் கொள்ள, தன்னைச் சார்ந்தவர்களுக்கு 2 வேளை உணவாவது இட, இன்னொருவருக்கு கொத்தடிமைத் தொழில் செய்தாக வேண்டும். குடிநீர், சுகாதாரம் முதலிய வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லாத அல்லது குறைந்த அளவுக்கே இருக்கிற கொட்டடிகளில்தான் குடியிருந்தாக வேண்டும். பக்கத்தில் எங்காவது நூலகம் இருந்தால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளலாம். எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவோடு கொஞ்சகாலம் அலைந்து கொண்டிருக்கலாம். எழுதுவதற்கு, சிந்திப்பதற்கு, வெளியிடுவதற்கு இங்கு என்ன வாய்ப்புகள் கிடைத்துவிடும். கொஞ்சம் கவிதைகள் எழுதி, தானே வாசித்து மகிழலாம். நண்பர்கள் சிலரோடு வாசித்து மகிழலாம். மீறி மீறிப் போனால் ஒரு சிற்றிதழ் நடத்தலாம். அதுவும் கொஞ்ச காலத்திற்குத்தான். தன்னைக் கவிஞன் என்று கதாசிரியன் என்று சொல்லிக் கொள்ளலாம். தன்னைத் தானே இப்படி விளம்பரம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் ஆனபிறகு இதுவும் சாத்தியமில்லை.
            சுருக்கமாகச் சொல்வது என்றால் இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார். கோவை போன்ற நகரங்களில் உள்ள பெரிய பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில 10, 15 கிலோமீட்டர் தள்ளி புதிய பஞ்சாலைகள் தொடர்ந்து எழுகின்றன. பஞ்சாலைகளோடு சேர்ந்து வரிசைகளாக கொட்டகைகள். சுமார் 20/30 அறைகள் கொண்ட கொட்டகைகள். ஒரு கொட்டகையில் ஒரு குடும்பம் தங்கலாம். கொட்டகை அளவு  14/10க்கு அடி பொதுவான கழிப்பறை. தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீர் வண்ணக் கலவையில் மாற தொலைவிலிருந்து நீர் கொண்டுவந்து விற்கிறார்கள். குடம் ஒரு ரூபாய். 8 மணி நேர வேலை என்ற கட்டுப்பாடு இப்போது இல்லை. முடிந்தால் 12/16 மணிநேரம் உழைக்க வேண்டும். பெண்களுக்கும் இரவு வேலை உண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குப் போய் வரலாம். இளம் பெண்களுக்கு திருமணத்திட்டம். 5 ஆண்டு தொடர்ந்து வேலை செய்தால் 5ம் ஆண்டின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் கிடைக்கும். அதுவரை நாள் ஒன்றுக்கு சுமார் 50 ரூபாய் கூலி. அதற்குள் எல்லாம் முடித்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாது. யாராவது வாங்கி வைத்திருந்தால் அந்த அறைப் பெண்ணின் கற்பு பற்றி கேள்வி எழும். FM ரேடியோ வைத்துக்கொள்ளலாம். பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலை பார்த்தவர்களில் VRS பெற்றுக்கொண்டு கிடைத்த பணத்தை எப்படி எல்லாமோ செலவு செய்த பிறகு இந்தத் தொழிற்சாலைகளில் வேலைக்கு வரலாம். தினக்கூலி மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும். தொழிலாளர் பிரிவு, தொழிற்சங்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இந்த சிறிய நாவலில் ஆசிரியர் சொல்கிறார். இத்தகைய நம் காலத்து வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக ஆசிரியரை வெகுவாகப் பாராட்டலாம். திருப்பூர் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகள் சூழ்ந்த எந்த ஒரு நகரத்திலும் தொழிற்சாலைக் கழிவுகளால் எத்தனையோ வடிவங்களில் சூழல் சீர்கேடு அதிகரித்து வரகிறது. புதியவகை நோய்களால் எல்லோரும் தாக்கப்படுகிறார்கள். திருமணத் திட்டத்தில், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு உறுதி இல்லை. அப்படியே கிடைத்தாலும் திருமண வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலம் இந்தப் பெண்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு இவர்கள் உடல்நலம் சீர்கெட்டுவிடுகிறது. 30 வயதிற்குள் இவர்கள் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. தாயாகும் பெருமை இவர்களுக்கு இல்லை. இப்படி ஒரு அவலம் நம் காலத்திற்குரிய அவலம். இந்து மதம் பற்றி எவ்வளவோ பேசுகிறார்கள். புதிய கோயில்கள், கடவுள்கள் உற்பத்தி ஆகிறார்கள். புதிய கட்சிகளும், தொடர்ந்து உற்பத்தியாகின்றன. இந்தியா 2020ல் வல்லரசு ஆகிவிடலாம். யார் யாரோ காணும் வல்லரசு கனவுக்காக இவர்கள் தம் வாழ்வை இழந்த நொந்து சாக வேண்டும். இத்தகைய மக்கள் இந்தியாவில் எத்தனை கோடி பேர் இருப்பார்கள். இவர்களின் தொகை 50/60 கோடிகளுக்கு குறைவாக இருக்க முடியாது. இவர்கள் மூலம் எந்த இந்தியா ஒளிரமுடியும். இப்படி ஒர சோகத்தை இந்த நாவல் நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த சோகத்திலிருந்து நம்மால் மீள முடியாது. இந்த சோகத்தோடுதான் நாமும் வாழ்ந்தாக வேண்டும். இந்த சோகத்தை மாற்ற நாம் ஏதாவது செய்ய முடியுமா? ஏதாவது செய்யத்தான் வேண்டும் படித்து சுவைப்பதோடு நாம் இருந்துவிட முடியாது. ஏதாவது செய்ய வேண்டும். இந்த மனிதர்களை இப்படி அழிவில் ஆழ்த்துவதில் நமக்குள்ள பங்கு பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நமக்கான நல்ல ஆடைகளை மட்டுமா இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.
            இதன் பின் நவீனத்துவ வடிவம் தேவைதானா?
            தமிழ் நால்களில் காலந்தோறும் சோதனை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்த போதிலும், 80க்கு பிறகு பின் நவீனத்துவத்தின் வருகையோடு தீவிரமான சோதனை முயற்சிகள் அதிகரித்து வருகின்றன. நம் கால வாழ்வுக்குள் வந்து இருக்கிற நெருக்கடிகள். தகர்வுகள் முதலியவற்றை நுட்பமாக வெளிப்படுத்தும் முறையில் பின் நவீனத்துவம் நாவல் வடிவத்திலும் தகர்வுகள் முதலியவற்றை உள்ளடக்கிய சோதனை முயற்சிகளை விரிவுபடுத்தி உள்ளது. இத்தகைய போக்கின் தேவையை நாம் மறுப்பதற்கு இல்லை. இத்தகைய போக்கு ஒன்றுதான் தமிழ் நாவலுக்கு ஒரே வடிவமாக இருக்கமுடியும் என்பதையும் நம்மால் ஏற்க முடியவில்லை. மனிதனுக்குள் ஏற்பட்டுவரும் தகர்வை சித்திரிப்பதற்காக நாவல் வடிவத்தின் உள்ளும் தகர்வுதான் தேவை என்பதை நம்மால் ஏற்க முடியவில்லை. வாழ்க்கையில் மையம் அல்லது முழுமை இல்லைஎன்ற வாய்ப்பாட்டை வைத்து எதார்த்தவாதம் என்ற வடிவை முற்றாக ஒதுக்க வேண்டும் என்பதும் உண்மை இல்லை. நெருக்கடிகளும் தகர்வுகளும் கூட வாழ்வின் எதார்த்தங்கள் ஆகிவிடுகின்றன. எதார்த்தங்களைச் சித்திரிக்க படைப்பின் வடிவத்தை குழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின் நவீனத்துவ சித்திரிப்புகள் என்பன தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு பெரும் கவர்ச்சியாகப் பேசப்பட்டு வருவதில் இருந்து படைப்பாளிகள் தப்ப முடியவில்லை. சுப்ரபாரதிமணியனும் 'சாயத்திரை' நாவல் தொடங்கி இத்தகைய எழுத்து முறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.
            'தேநீர் இடைவேளை' நாவலும் இப்படிப்பட்ட ஒரு முயற்சி என்பதில் அய்யமில்லை. கோவை முதலிய பெரிய நகரங்களில் இருந்துவந்த பஞ்சாலைகள் தொடர்ந்து மூடப்படுகின்றன. நகரங்களுக்கு வெளியில் சிறிய சிறிய பஞ்சாலைகள் தோன்றுகின்றன. உலகமயமாதல் என்ற போக்கின் விளைவாக இங்கெல்லாம் அரசின் கட்டுப்பாடுகள் குறைந்துவிட்டன. கொட்டடிகளில் திருமணத்திட்டம் முதலிய பெயர்களில் தெற்கிலிருந்து வந்த பெண்கள, இளைஞர்கள் குடியேற்றப்படுகிறார்கள். குறைந்த கூலி, வசதிக் குறைவுகள் முதலியவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கெல்லாம் தொழிற்சங்கம் ஏற்படுத்த முடியாது. 12 மணிநேரம் கட்டாய வேலை. பெரிய தொழிற்சாலைகளில் நிரந்தர வேலைகளிலிருந்து நீக்கப்பட்ட/நீங்கிய தொழிலாளிகள் இங்கு தினக்கூலிக்கு வந்து சேருகிறார்கள். இவர்களும் கொட்டடிகளில் அடைபடுகிறார்கள். கொத்தடிமைகள் மாதிரி இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். நேர்மை, நீதி, கற்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. இவர்கள் தமக்குள் சிறுத்துப் போனவர்கள். படிப்பு இங்கு பயன்படாது. கவிதை, கலை என்பதற்கெல்லாம் இங்கு இடமில்லை. இத்தகைய அவலங்களோடு வாழ்கிற எத்தனையோ பேரை சுப்ரபாரதிமணியன் இந்த நாவலில் சித்திரிக்கிறார். இந்த அவலங்கள் நம்மையும் பாதிக்கின்றன. ஒரு புதிய உலகச் சூழல் வந்திருக்கிறது. நாமும் இதற்குள் அகப்பட்டு இருக்கிறோம். ஒருவேளை இந்த நாவலை சற்று அக்கறையோடு வாசிப்போம் என்றால் நாமும்தான் கொத்தடிமைகள் என்ற உணர்வைப் பெற முடியும். முதலாளிகளுக்குச் சேவகம் செய்கிறோம். அரசு அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோம். நாளுக்கு நாள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராடுவதால் பயன் இல்லை. ரங்கநாதன் போல நாம் இல்லை என்றாலும் ரங்கநாதனின் அவலத்திற்குள் நாமும் இல்லாமல் இல்லை. அந்தோணி ராஜ் மாதிரி நாமும் ஷேக்ஸ்பியர் என்று மார்க்சியம் என்றும் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம். உலகம் நம்மிடம் இருந்தும் பறிபோய்க் கொண்டிருக்கிறது. செந்தில் மாதிரி நாமும் திண்டாட்டத்தோடுதான் வாழ்கிறோம். இப்படி எல்லாம் இந்த நாவலை வாசிக்கும்போது நமக்குள்ளும் அவலம் எழுகிறது. தற்பெருமைகள் சொல்லி நம் அவலத்தை மறைத்துக்கொள்ள முடியாது. நமக்குள் நாமும் சிறுத்துக் கொண்டு இருக்கிறோம். சீரழிவுகளோடுதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த முறையை நமக்குள் ஏற்படுத்துவதன் மூலம் சுப்ரபாரதிமணியன் நமக்கு நன்மை செய்திருக்கிறார். நாம் அவரைப் பாராட்டலாம். ஒருவரையொருவர் பாராட்டுவதன் மூலம் நமக்குள் நிம்மதி ஏற்பட்டுவிடுமா? அப்படி ஒன்றும் ஏற்படாது.
            இனி இந்த நாவலின் வடிவம் பற்றிப் பேசலாம். நாவலின் பக்க அளவு 75 மட்டும். 3 பகுதிகள். முதல் பகுதியில் 10 கடிதங்கள். 2 வது பகுதி அந்தோணிராஜ் டைரி குறிப்புகள்: 3வது பகுதி செந்திலின் டைரி குறிப்புகள். நம் காலத்தில் நமக்குள் ஏற்பட்டு இருக்கிற அவலத்தைச் சொல்வதற்கு இந்த நாவலின் இத்தகைய வடிவம் எப்படி பயன்படுகிறது. முதற்பகுதியில் உள்ள 10 கடிதங்களில் இடம் பெறுபவர்களின் வாழ்க்கையை நாவலின் மற்றப் பகுதிகளிலும் எதிர்பார்க்கிறோம். முதற் பகுதியில் இடம் பெற்ற ரங்கநாதன் இரண்டாவது பகுதியில் கொஞ்சம் தலைகாட்டுகிறார். முதற்பகுதியில் புத்தகங்கள் படிப்பதற்காக தேடி அலையும் செந்தில் 3வது பகுதியில் டைரி எழுதுகிறார். அந்தோணிராஜ். செந்தில் ஆகியோர் டைரிகளில் அவரவர்களின் சிந்தனைகள் தெளிவாகத் தரப்படுகின்றன. முதற்பகுதியில் இடம்பெற்ற நெருக்கடி மிகுந்த வாழ்வியல் 2/3ம் பகுதிகளில் அனேகமாக இல்லை. நாவல் அல்லது எந்த ஒரு படைப்புக்கும் மனித வாழ்வியல் மற்றும் இதன் நெருக்கடிகள்தான் சாரமாக அமைய முடியும். நாம் இப்படிக் கேட்கலாம். இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி இ.எம்.எஸ்யைப்பற்றி, மார்க்சைப்பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் என்ற வடிவில் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படிக் கடைப்பிடிக்கத்தான் வேண்டுமா? மல்லிகா முதலியவர்களின் வாழ்வைப்பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அனேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான். கொட்டடிகளை விட்டு வெளியில் சென்றபிறகு நோய் நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள். இந்தக் கதை ஏன் இன்னும் தொடர்ந்து சொல்லக்கூடாது? செந்திலுக்கோ, ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை. நாம் புரிந்து கொள்கிறோம். யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி வடிவத்தைச் சிதைப்பதன்மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலான சுதந்திரம் கிடைத்திருக்கிறதா? இப்படியெல்லாம் வாசகனைத் திணறடிப்பதன் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார்? ஒருவேளை நமக்குள்ளும் நாம் சிதைந்து கொண்டு இருக்கிறோம் என்பதைச் சொல்வதுதான் நாவலாசிரியரின் நோக்கம் என்றால் நம்மைப்போன்ற மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த படிப்பாளிகள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் என்ற நம்மவரின் வாழ்க்கையை இந்த வாழ்க்கைக்குள் உள்ள நெருக்கடிகள், தகர்வுகள் பற்றிச் சித்திரிப்பதன் மூலம் நமக்குள்ளும் கூடுதலான அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நம்மைக்காட்டிலும் வாழ்வின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் அவலங்களைச் சித்திரிப்பதன் மூலம் நம்மை எந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒருவேளை சுப்ரபாரதிமணியன் தனக்குள் இந்த அதிர்வுகளை இன்னும் போதுமான அளவுக்கு உணரவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

2. சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள்
ஆர்.பி. ராஜநாயஹம்


            Hell is a city much like London என்றான் ஷெல்லி.
            Paris is a dingy sort of Town என்று அல்மெர் காம்யு கூறினான்.
            சுப்ரபாரதிமணியனின் 'தேநீர் இடைவேளை' நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும்போது Hell is a Town much like Tiruppur என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணர முடியும்.
            அவருடைய கட்டுரைகள் 'உலக மயமாக்கலும் உள்ளூர் அகதிகளும்', 'கரையும் நதிக்கரைகள்', 'கடத்தல் கலாச்சாரம்' போன்றவற்றை வாசிக்கும்போது அவர் Tiruppur is a dingy sort of Town என்று வேதனைப்படுவதை உணர முடியும்.
            இந்திரா பார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை. ஆதவன் விவரித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிருந்து வேறுபட்டு மணியன் தான்சார்ந்த திருப்பூர் கீழ்த்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதைக் காண முடியும். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல்,  கலாச்சார நிகழ்வுகளின் மீதான ஆய்வாக 'தேநீர் இடைவேளை' நாவல் பிரமாண்டமாக விரிகிறது. ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.
            உலகமயமாக்கலில் திறந்தவெளிச் சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருள்கள். அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களும், தண்ணீரும், வீடும் கூட அரிதாகி விடுகிற அவலம். ஐயாயிரம்கோடி அந்நிய செலாவணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறிவிட்டது. நொய்யலாறு ரசாயணக் கழிவுகளால் சாக்கடையாகிக் கரைந்துவிட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபான தொழிலையும் நிராகரித்துவிட்டு வந்திருக்கிற துயரம். சாதாரண தொழிலாளிகளும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள். முறையான தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்த பாதுகாப்புமே இல்லாத சூழ்நிலை. மில் கொட்டகைகளில் அடைபடும் பெண்களும், ஆண்களும், கல்யாணத்திற்குப் பணம் சேர்க்க, பெண்களுக்கு மாங்கல்யத் திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில்கூட இங்கே பெண்கள் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான பாலியல் வன்முறை, பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்களில் தினக்கூலிகளாக வேலை செய்ய வேண்டிய துரதிர்ஷ்டம்.
      'தேநீர் இடைவேளை' நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள். மல்லிகா, ரங்கநாதன், ஷமீம், போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஷ் சிங், வாசகர், செந்தில் ஆகியோரின் கடிதங்கள்-இரண்டாவது பகுதி தோற்றுப்போன தொழிற்சங்கவாதி அந்தோணி ராஜின் டைரிக் குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைரிக் குறிப்புகள்.
            தி. ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்திரித்தவர்கள். பெண் மனதின் நுட்பங்களைத் துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்தவர்கள். 'தேநீர் இடைவேளை' நாவலில் மல்லிகா, ஷமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடைய சிக்கல்களும் சிக்கனமான வரிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விரித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிரிஜா. அருக்காணி என்ற விளிம்பு நிலைப் பெண்கள் கூட முழுமையான பாத்திரங்களாகியிருக்கிறார்கள். ஷமீம் மில் கொட்டகையில் தன் அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம். அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அவளுக்கு ஏற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான இதுபோன்ற சித்திரிப்புகளில் ஆவேசமிக்க கலைஞனாக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேண்டும். ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்குச் சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில். பொதுவான கழிப்பறை, குளியலறை.
            ரோசாலக்சம்பர்க் மனிதகுலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா? கம்யூனிசமா என்று கேள்வி கேட்டதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அந்தோணிராஜின் டைரி ஒரு சமுத்திரம் போல ஷேக்ஷ்பியரின் டெம்பஸ்ட்., ஈ.எம்.எஸ். அருந்ததிராய், தொழிற்சங்கப் பெண்கள் அம்முவும் கோவிந்தம்மாளும், தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம் கேட் மீட்டிங் கூட்டங்களின் மூலம் ஜீவா, சி.ஏ. பாலன், பாலதண்டாயுதம் ஆகியோரின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்துவிட்ட விஷயம். கேட் மீட்டிங்கை ஒழிக்க நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்களை அமைத்தது. புரூக் பாண்ட் டீ வந்த புதிதில் தொழிலாளிகளுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேநீர் வழங்கப்பட்டு, பின் சம்பளப் பணத்தில் பிடித்தல் செய்து, அதற்கு எதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது. தெலுங்கானா போராட்டம், விவசாயிகளின் போராட்டம், தெபாகா போராட்டம், ஆனைகட்டி துவைப் பகுதி ஆதிவாசி போராட்டம் மாதிரி கூட கேட் பூங்காவுக்கு எதிராக போராட்ட அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு. சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விஷயங்களை அந்தோணி ராஜின் டைரி உள்ளடக்கியிருக்கிறது.
      ஏதேனும் ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா? என்ற கேள்வி உலுக்கி விடுகிறது.
      செந்தில் இளைஞன் His whole future is before him - மெகாசீரியல் அபத்தங்கள் இவனை உறுத்தும் அதே வேளையில் சிநேகாவைப் பிடிக்கிறது. லாரித்தண்ணீர், கல்வி, டியூசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை தமிழ்வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கல்வி பற்றி, குழந்தையின் மருந்து செலவுப்பணம் பள்ளிக் கட்டணமாகக் கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறையச் சிந்திப்பவன், வாசிப்பதுதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாசிப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரமைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனிமனித விருப்பம். ஜர்னலிசம் செய்ய முடியாத சில விஷயங்களை நாவல் செய்துவிடும் என்று இவனால் கருத முடியவில்லை. மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக் கனவுகளில் மிதக்கிறான். கேபிரியல் மார்க்வெஸ் "நான் பத்திரிகையாளன். கூடவே கொஞ்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன்" என்று கூறியிருப்பதனால் பத்திரிகைச் செய்தி எழுதும் பாணியிலான இலக்கியப் படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப் பேரைச் சென்று சேர்க்கின்றன என்று செந்தில் டைரிக் குறிப்பு எழுதுகிறான். 40 வயது பெண் பிணவண்டியை இடுகாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போவதைப் பற்றிக்கூட டைரியில் எழுதுகிறான்.
            வாசிப்பு இலக்கியக் கூட்டம் என்று இருந்த ராஜேந்திரன், இப்போதெல்லாம் மாறிப்போய் இலக்கியவாதிகளின் துரோகங்களும், ஒதுங்கும்படி செய்துவிட்டதாகக் கூறுவதை இவனால் அங்கீகரிக்க முடியவில்லை. செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். ஐன்ஸ்டீன் I have never read anybody என்று சொல்லவில்லையா? 'புயலிலே ஒரு தோணி' ப. சிங்காரத்தை நான் 1989ஆம் ஆண்டு மதுரை YMCAயில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது நம் தளத்து படைப்பாளிகள் யாரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது. ஒருவேளை அதனாலேயே கூட 'புயலிலே ஒரு தோணி' போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ? வாசிப்பு, இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் 'கதவு' கதையை பாராட்டி சுந்தர ராமசாமி அதில் செகாவியன் டச் இருப்பதாகச் சொன்னபோது கி.ரா. செகாவியன் என்றால் என்ன என்று அந்தக் காலத்தில் கேட்டார். முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்ற படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்டபோது சிட்டி பதட்டத்துடன் வேண்டாம். ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் என்று சொன்னாராம்.
            ஃபிடல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிரியல் கார்சியா மார்க்வெஸின் அனைத்து புத்தகங்களையும் படித்தவர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள். ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களைக் கோபப்படுத்துகிறது.
            நாவலில் ரங்கநாதன் sexual poverty திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது ஐம்பது என்பது சரியில்லை. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள். ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைரியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக்கூடாது என்ற தீர்மானம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக்கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாரிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
            சமீபத்திய கதைசொல்லி 15து இதழில் திரும்புதல்... என்ற சிறுகதையின் ஆண்பாத்திரம் எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் என்று கேட்டதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை அக்டோபர் 2004 இதழில் இவருடைய 'நீலப்படமும், சுசித்ராவும்' புதிய பார்வை அக்டோபர் 1-15-2004 இதழில் பிரசுரமாகியுள்ள 'சூடு' ஆகிய கதைகளும் பாலியல் உணர்வையே வெளிப்படுத்துபவை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதிய கோடாங்கியில் பிரசுரமாகியுள்ள 'மாற்றங்கள்' உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலைமாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதரணநிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளைக் குறியீடாக்கிப் பேசுகிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் வருவது போல இந்தச் சிறுகதையிலும் தெருவோர குடியிருப்பில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது. தேநீர் இடைவேளை நாவலில் தெருவோர குடியிருப்பு பெண்களைப் பற்றி மணியன் அழுக்கான பெண்கள் எல்லாத் துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டார்கள் என்று கவிதையாகச் சுட்டுகிறதைப் பார்க்கலாம். சினிமா பற்றி சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ள பல கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நுலாக வரவேண்டும். நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான விமர்சனக் கட்டுரைகள். அவர் நடத்திவரும் கனவு பத்திரிகையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ள முடியும்.
      இங்க்மார் பெர்க்மன் Face to Face படம் பற்றி தணிக்கை குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிப்பெயர்ப்பு. 'முகாமுகம்'. ஒரு சரிதம் ஒரு திரைப்படம். மதவாத மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள். தில்லி கதா திருவிழா. மங்கம்மாக்கள், பூலன் தேவியின் குரல், மீரா நாயரின் 'மான்சூன் வெட்டிங்', மலையாளிகளின் சிம்மாசனங்கள். கவிஞனும் தடைசெய்யப்பட்ட இசைக் குறிப்புகளும், ரகு ரோமியோ, குறும்படங்களின் தணிக்கை மீதான வன்முறை போன்ற கட்டுரைகள் பல அபூர்வ உலகளாவிய திரைப்படங்களிலிருந்து 'பீ' குறும்படம் வரை விரிவாகத் தொட்டுப் பேசுபவை.
            பிராணிகள், பறவைகள், காட்டு உயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்பதாக கானுயிர் காப்போம் என்ற கட்டுரையின் அக்கறை. சா. கந்தசாமி என்னும் கலைஞன் மிக சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைஞனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். படைப்பு மனம் சஞ்சலமுறும் பின் நவீனத்துவம் என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பைத் தெரிவிக்கிறது.
            ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கித்தூக்கி ஒரு பச்சோந்தி பார்த்துக் கொண்டிருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். அப்படியா? நானும் கூட கலையாகத்தான் இருக்கிறேன் என்று அதனிடம் வாய்விட்டு சத்தமாகவே கூறினாராம்.


மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு

சுப்ரபாரதிமணியனின் “ சப்பரம் “ நாவல்
கே. ஜோதி


ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை இல்லாததாக இருந்த தொழில் நெசவு..கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் கூட நெசவில் ஈடுபட்டிருந்தனர். அது நசிந்து விட்டது. அந்த நெசவாள சமூகம் பற்றிய ஒரு நாவலை திருப்பூரை மையமாக வைத்து  எழுதியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.  நெசவாள சமூகம் பற்றிய   இன்னொரு  நாவலை முன்பே எழுதியிருக்கிறார். ” தறிநாடா “ என்ற பெயரில். எழுதியிருக்கிறார். அதுவும் திருப்பூரை மையமாகக் கொண்டதே. இந்த நாவலில் திருமணமாகாத ஒரு முதிர்கன்னிப் பெண்  தன் குடும்பத்திற்காக தானே நெய்து பிழைக்கிறாள். அப்பா குடிகாரன். சிறுவயது  சின்னம்மிணி அவளுக்குத் தோழி. பகிர்ந்து கொள்ள சிறு ஜீவன். அவள் வேதகாரனான, கிறிஸ்துவனான ஜெயராஜிடம் நட்பு கொண்டிருக்கிறாள். ஆனால் கல்யாணம் என்று வரும் போது மதமாற்றம் அவசியமாகிறது . அவனிடமிருந்து பிரிந்து விடுகிறாள்.அவளின் திருமணத்திற்காய் தானே பட்டு சேலை நெய்கிறாள். குடிகார அப்பா அதை விற்று விடுகிறார். அதைத் தேடி ஜவுளி வியாபாரிகளிடம் செல்கிறாள். கிடைக்கவில்லை. அவள் நெய்த சேலையின் ஒரு பாகத்தை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்கிறாள். சப்பரம் கடவுள் சிலைகளை கொண்டு செல்லும் வாகனம். இப்போது அவளின் பிணத்தை கொண்டு செல்வதையும் சப்பரம் என்றே சொல்கிறார் சுப்ரபாரதிமணியன். நெசவாளர் சமூகம் பற்றிய வறுமை தோய்ந்த சித்திரம், குடியால்  அழியும் குடும்பம், முதிர்கன்னிப் பெண்ணின் அவல நிலை என்பதை நாவல் சொல்கிறது. பட்டு சேலை, நூல் சேலைக்கும் இடையிலான சில குழப்பங்கள் இதில் உள்ளன. நெசவுத் தொழில் பற்றிய  பிரத்யேக வார்த்தைகளுக்கு  விளக்கம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நாவலின் வெகு எளிமையான கதை சொல்லும்  முறை வசீகரமாயிருக்கிறது.. சில வர்ணனைகள் மனதை வெகுவாக்க் கவர்கின்றன.  பாவு -மயில் தோகை போல் விரிந்து கிடந்த்து.கருவேலா மரத்து பிசின்  பெண்ணின் கழுத்து நகை  போல் மின்னியது.பூசப்படாத கல் சுவற்றில் நீட்டிக் கொண்டிருந்த கற்கள் இளம் வயது ஆணின் முகப்பரு போல இருந்தது. மீனின் செதில் போல் வீட்டின் ஓடுகள் இருந்தன,வீட்டு கேட் இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப்போல் நிற்கிறது. இது போல் பலதைச் சொல்லலாம். ஒரு திரைப்பட்த்திற்காக நாவலாக எழுதப்பட்டு பின் அது வேறொரு படமாக வெளிவந்த திருட்டு அனுபவத்தை முன்னுரையில் வேதனையுடன் சொல்கிறார். நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.சவுண்டியம்மன் கோவில் விசேசங்கள், .அண்ணன்மார்சுவாமிகதை, நாட்டுப்புற வழக்குகள் மனதைக் கவர்கின்றன. நல்ல திரைப்படம் போல் இந்த நெசவாளர் பற்றிய நாவல் விரிந்து செல்கிறது.கடவுள் சிலைகளைச் சுமக்கும் கோவில் சப்பரங்கள் தோளில் பாரமாகக் கிடக்கும். இந்த நாவல் “ சப்பரம் “ மனதில்  பாரமாய் கிடக்கிறது.


திங்கள், 20 ஜூலை, 2015

அஞ்சலி : சுப்ரபாரதிமணியன்
திருமதி கமலா இந்திரஜித் அவர்கள் ஜீன் 28ல் மறைந்தார். மன்னார்குடி புள்ளமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர். 200க்கும் மேற்பட்டச் சிறுகதைகளை எழுதியவர். நல்லாசிரியர் விருது பெற்றவர். நல்லாசிரியருக்கு மேலாக உயர்ந்த உள்ளமாகத் திகழ்ந்தவர். புள்ளமங்கலம் கிராம மக்களிடம் அவரின் குடும்பம் கொண்டிருந்த பிணைப்பும் அன்பும் சொல்லி மாளாது.அவரின் மகன் வில்சனும், மருமகளும் கூட எழுத்தாளர்களே . ( வில்சன் 75 சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நெய்வேலி புத்தகக் கண்காட்சியை ஒட்டிய தினமணி சிறுகதைப்போட்டியில் வில்சனின் கதைக்கு இரண்டாம் பரிசு- சென்ற வாரச் செய்தி இது ) . அவரின் ஒரு சிறுகதைத் தொகுப்பை ” காவ்யா ” வெளியிட்டுள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு அஞ்சலி. நாவல் ஒன்றை எழுதுவதைக் கனவாகக் கொண்டிருந்தார். எம்.ஜீ. ஆர் , எம்மெஸ்சுப்புலட்சுமி நூற்றாண்டுகளை ஒட்டி இரு நூல்களை எழுதத் திட்டமிட்டு பணிபுரிந்து வந்தார். இறுதி வரை வாசிப்பும், எழுத்தும் என்று தோய்ந்து கிடந்தார். நோய் அவரை ஓய்வு கொள்ள வைத்து விட்டது.
. அவரின் சிறுகதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை கீழே உள்ளது. :
வெகுஜன இதழ்களின் முக்கிய பரிசுக்கதைகள் மூலம் என் கவனத்திற்கு வந்தவர் திருமதி கமலா இந்திரஜித் அவர்கள். இவர் பரிசு பெற்ற ஒரு கதை ரூ 50,000 பரிசை பெற்ற போது ஒவ்வொரு வார்த்தையும் நூறு ரூபாய் சன்மாம் பெற்றிருப்பதாய் கணக்கிட்டு எழுத்தாளனுக்கு கிடைத்த அங்கீகாரத்தை எண்ணிப் பூரித்துப் போயிருக்கிறேன்.சக எழுத்தாளர்கள் பரிசும் பாராட்டும் பெறுவது மகிழ்ச்சியே தருகிறது. (ஆனால் பரிசுக் கதைகளுக்கான் பார்முலாவில் தொடர்ந்து இயங்குகிற எழுத்தாளர்களின் உலகம் உவப்பானதாக இல்லை )
இவரின் 30 ஆண்டுகளுக்கு மேலான ஆசிரியப் பணியும்., தஞ்சை மக்களின் வாழ்க்கையும், கிராமியச் சூழலும் இவரின் படைப்புகளுக்கான களமாக இருக்கின்றன. இதைத்தாண்டி புள்ளமங்கலம் என்ற இவர் வாழும் கிராமத்துச் சூழலும் , பெரிய கடை என்ற பல்பொருள் அங்காடியும் அது சாதாரண மக்களை கொண்டு சேர்க்கிற அம்சங்களும் மிக முக்கியமானவை..
இக்கதைகளில் தஞ்சை மாவட்ட விளிம்பு நிலை மக்களின் வாழக்கைப் பதிவுகளைப் பிரதானமாகச் சொல்லலாம். அவர்களில் பெரும்பான்மியினர் விவசாயக்கூலிகள் சாதாரண விதியின் சதிக்குள்ளும், நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளுக்குள்ளும் அடங்கிப்போனவர்கள்.தேர் வடக்கயிறு பிடிக்க அருகதையற்ற வகையில் புறகணிக்கப்பட்டவர்கள். அறுவடைகால நியாயங்களில் முடங்கிப் போனவர்கள்.. வெகு சாதாரணமாக கைவிடப்பட்டவர்கள். ” இந்த வலி எல்லோருக்கு கிடைக்காது. பொம்மனாட்டிகளுக்கு மட்டுந்தா ” என்று பிரசவத்தையும், தாய்மைப் பேற்றையும் மனதில் கொண்டிருப்பவர்கள். கணவன்மார்களின் சிதரவதைகளைப் பொறுத்துக் கொள்பவர்கள். தேனீக்களோ, இயற்கை நியாயங்களோ அவர்களை கேள்வி கேட்கும் என்று திடமாய் நம்புகிறவர்கள். விவாகரத்து கோரினாலும் 60ம் கல்யாணக் கோலங்கள் பார்த்து திருந்தி விடுபவர்கள். உழைப்பை பிரதானமாகக் கொண்டு வாழக்கையை நடத்துபவர்கள். உறவுகள் சொந்தமாக்குகின்றன. சொந்தங்கள் உறவுகளாகின்றன இவர்களுக்கு,
மறுபுறம் கிராமத்தின் கால்நடைகளும், மிருகங்களூம் வெகு லகுவாக இந்தக் கதைகளில் பிரவேசித்து சக மனிதர்களுடன் நடமாடுகின்றன. கால்நடைகளின் மீதான பிரியம் வாழக்கைக்கு வேறொரு அர்த்தம் கொடுக்கிறது. உயிரற்ற பொருட்களும் தரும் புது உபயோக்ஙக்ளும், அணைப்பும் சக மனிதர்களின் பூரிப்பிற்கு இடம் தருகின்றன.இவர்களுக்கு சடங்குகள் பாரங்களாக அமைவதில்லைல் பாரத்தைக் குறைக்கிற அருமருந்துகளாக அமைகின்றன. மனித நேயம், சமய சங்குகளை ஒழித்த அன்பின் வெளிப்பாடு எங்கும் பரவிக்கிடக்கிறது.
பரிசுக்கதைகளின் பார்மலாவிற்கென்று கட்டமைக்கப்பட்ட பல்சமயமனிதர்களின் நோக்கும் மனிதாபிமானமும் எப்போதைக்கும் சகமனிதர்களின் சாதாரண உணர்வுகளை கவ்விப்பிடித்து விடுவதை இதில் உள்ள சிலகதைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஹேமாவின் அம்மா போன்ற கதைகளில் தலைப்பு முதல் பிறரின் புகழ் பெற்ற கதைகளின் பாதிப்பையும் காண முடிகிறது, கிராமியப்பாடல்கள், குழந்தைப்பாடல்கள் என்று கிராமியச் சூழலில் இணைந்த கதையாடல்கள் கதைகளை வேறு தளங்களுக்கு நகர்த்திச் செல்கின்றன. மூடு பல்லக்கில் உலவும் பல பெண்களின் முகங்களைக் காட்டுகிறார். அல்லது கிழித்தெறிகிறார். ஆழ்கடலென பல்வேறு சமய மனிதர்கள் சக பயணிகளாக மனிதாபம் கொள்ளச் செய்கிறவர்களாக் இருக்கிறார்கள். கதை சொல்வதில் சரளத்தன்மை இருக்கிறது. புழங்கும் மொழியில் தஞ்சையும், பிராமணியமும் மணக்கிறது. இன்னும் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கலாம் என்று பல சமயங்களில் நினைக்கத் தோன்றியது. வெகுஜன இதழ்களின் பிரசுரிப்பும் முக்கிய காரணம்.
பெரியகடையும், புள்ளமங்கலமும் இன்னும் நிறைய செய்திகளையும், அனுபவங்களையும் சுரங்கங்களாகத் தர இருப்பதன் முதல் அடையாளமாக மூடுபல்லக்கில் முகம் விலக்கிப் போகும் பல தஞ்சை மனிதர்களுடன் இக்கதைகளில் பயணிக்கிறோம்.
சுப்ரபாரதிமணியனின் தறிநாடா நாவல்

பி. சத்திய மூர்த்தி.,
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் – 624 302
முன்னுரை:
இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
பொன்னு:
தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.
பரமேஸ்வரன்:
மில் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்த போது நடந்த பொது துப்பாக்கி சூட்டில் இறந்து பட்டார். இவரின் இழப்பு ஊர் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவன் இறந்தவுடன் அவன் சொர்க்கத்துக்கு செல்கிறானா, இல்லை நரகத்துக்கு செல்கிறானா, என்பது இப்பூமியிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இவன் சொர்க்கத்திற்குதான் செல்கிறான் என்பது இவ்வூர் மக்களின் பேச்சு தீர்மானித்தது. இவர் இறந்த பின்பும் இப்பூவுலகில் வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தெருவிற்கு “தியாகி இல்லம்” என்று பெயர் வைத்தனர் பரமேஸ்வரன் என்றப் பெயரை மறந்து தியாகி என்றே அழைத்தனர். இவரின் வீட்டைக்கடந்து செல்கிறபோது ஊர்மக்கள் அடைகிற ஆனந்தம் அளப்பறியது.
காசி:
தனது சம்சாரம் இறந்து போனப் பின்பு காவிஉடையை அணிந்து கொண்டார். திருமணம் செய்துவிட்டு விக்ரமாதித்யன் போல ஊரில் ஆறுமாதமும், புண்ணியஸ்தலமான காசியில் ஆறுமாதமும் என்று தனது வாழ்வைக் கழித்து வந்தார். குட்சியஜல்இருந்து திரும்பும் போழுது காசி மாலை தீர்த்தம் சாமி உருவங்கள் என்று வாங்கிவந்து அதைத் தன்னுடைய உறவினர்கள், ஜாதிக்காரர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு மறுபடியும் காசிக்குச் செல்வார். இப்படித்தான் இவரின் வாழ்வு ஏகாந்தமாய் ஓடிக்கொண்டிருந்தது.
ரங்கச்சாமி:
ரங்கசாமி தறிநெய்யும் போது சீரான தளத்திற்கேற்ப கால்களை மாற்றிக் கொண்டு “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி” என்று முணுமுணுத்துக் கொள்வார். அதை ராகம் போட்டுப் பாடுவதை விட இப்படி முணுமுணுப்பதுதான் அவருக்குப் பிடிக்கும் இவருடைய உடம்பானது ஒல்லியாக இருக்கும் என்று பலர் கூறுவர். மிகவும் சிரம்மப்பட்டு தன்னுடைய மகனைப் படிக்க வைத்தார். இவருக்கு வடிகஞ்சியானது மிகவும் பிடிக்கும்.
நாகமணி:
அழுக்குப் புடவையுடன் இருக்கும் நாகமணி கல்யாணம் ஆகிஇருப்பது வருடமாகியும் ரங்கசாமியை (கணவன்) விட்டுப்பிரியாமல் கணவனுக்கும், பிள்ளைக்கும் “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்ற ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தாள். இல்லறத்தை மட்டும் பேணிக்காத்த அவள்
“சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
தாழ்ச்சி உயர்ச்சிச் சொல்லல் பாவம்”;
என்ற பாரதியின் கூற்றை மறந்து “பலசாதி பலவட்டற ஜாதி” என்று கீழ்ச்சாதி மக்களை இழிவாகப் பேசும் தன்மை கொண்டவளாக விளங்குகின்றாள்.
அருணாச்சலம்:
பதறிய காரியம் சதறிப்போகும் என்றப் பழமொழிக்கேற்ப அருணச்சலம் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் அவசரபுத்தி உள்ளவன். இவன் நெசவாளர்களைப் பற்றி கூடினா கோ~ம் போடறகோஹ்டி என்று சொல்லுவான். அவன் போராட்டத்திற்குச் செல்லும்போது தறிநாடாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுவான் எதிரில் படும் முதலாளிகளைக் குத்தலாம் அப்படியாவது விடிவு காலம் பிறக்குமா என்று நினைத்தான் எங்களுடைய போராட்டத்திற்காக நான் தீக்குளிப்பேன் என்று காவல் துறையினர் இவனை எச்சரித்தனர். போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இவனுடைய உயிர் பிரிந்தது. மக்கள் இவனைப் பற்றி பல்வேறாக பேசினர். துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை யென்றால் தானே தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கூறியதாக மக்கள் கூறினர்.
தர்மன்:
தர்மன் வீடானது நெசவாளர்களுக்குப் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. இவருடைய வீட்டில் எப்போதும் சீட்டாட்டம் நடந்துகொண்டே இருக்கும் தர்மன் முன்பெல்லாம் மாசம் மூணு பாவு நெய்சாச என்று கேட்பான். அதுஎன்ன மூணுபாவு முந்தியெல்லாம் மாசம் மூணு மழை பெஞ்சுதான்னு ராசா கேட்கிற கதைதா சரி அதென்ன மாசம் மூணு மழை “நீதிராசாவுக்கு ஒரு மழை, பெண்ணுக்கொரு மழை, நல்லவங்களுக்கு ஒரு மழைன்னு கணக்கு” மாசமூணு மழை என்றால் நீதிராசாவுக்கு ஒரு மழையும்
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை
என ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க நல்லவர் பொருட்டு ஒருமழையும் பொய்யும் என தர்மன் கூறுகிறார். இப்பொழுது நீதிராசாவும் இல்லை நல்லவரும் இல்லை மழையும் பெய்வதில்லை என்றார்.
முடிவுரை:
இந்நாவலில் குறிப்பிடும் ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன. பொன்னு என்பவன் பகுத்தறிவு நிறைந்தவனாகக் காணப்படுகிறான். பரமேஸ்வரன் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்து தியாகி என்னும் பட்டத்தோடு இன்றும் திகழ்கிறான். ரங்கசாமிக்குப் பல்வேறு குடும்பச் சிக்கல் இருந்தாலும் தன்னுடைய மகனைப் படிக்க வைத்துச் சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கி பார்ப்பதே இவருடைய கனவாகும். நாகமணி சிறந்த குடுபத் தலைவியாக இருந்த போதிலும் மற்ற சாதியைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கம் அவளிடம் இருக்கிறது.
அருணாச்சலம் அவசர புத்தியுடையவன். ஏந்தவொரு செயலைச் செய்தாலும் அவனிடம் வேகம் மட்டுமே இருக்கும் விவேகம் இருக்காது. துர்மன் வீடானது பொழுதுபோக்கு அம்சமாக நெசவாளர்களுக்கு இருக்கிறது பல்வேறு தத்துவங்களை பேசக்கூடியவன். ( ரூ 180, என்சிபிஎச்., சென்னை வெளியீடு )

செவ்வாய், 14 ஜூலை, 2015

கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :
“ மொய் “ : சுப்ரபாரதிமணியன்  சிறுகதை
          - பூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை )

“ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின்  பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்தரிக்கின்றது.இவற்றுள்  தனி மனிதனுக்குள்ளும் அவனது வாழ்க்கையும் வரலாற்றுச் சமூக சூழ்நிலையில் பண்பாட்டைக்காட்டுபவை  கதைகள் “ என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் வாசகங்கள் ( தமிழில் இலக்கிய  வரலாறு, என்சிபிஎச் வெளியீடு  )  சுப்ரபாரதிமணியனின்      “ மொய்” என்ற சிறுகதையை இந்த வாரம் “ திண்ணையில்” படித்த போது தோன்றியது.
  கொங்கு மக்களின் வாழ்க்கையை ஆர். சண்முகசுந்தரத்தைப் பின் பற்றி சிறப்பாக பதிவு செய்து வருகிறவர்களில் சி ஆர் ரவீந்திரன், மா.நடராசன்,,பழமன் போன்றோருடன் சுப்ரபாரதிமணியனும் இருக்கிறார். இக்கதை கொங்கு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபங்கைச் சொல்கிறது. கோவை அருகிலான சோமனூர், செகடந்தாளி, எளச்சிபாளையம், செம்மாண்டாம்பாளையம், கருமத்தாம்பட்டி போன்ற ஊர்களும் அந்த ஊர்களின் கொங்கு மனிதர்களும் என்று நிறைத்திருக்கிறார்.
`       தபால்காரர் ஒருவருக்கு திருட்டுத்தனமாய் கடிதங்களை பிரித்துப் படிக்கும் பழக்கம். உமா என்ற ஆசிரியை பயிற்சி படித்த கிராமத்துப் பெண்ணின் - உமாவின் கடிதங்களை பின் தொடர்கிறார். பக்கத்து கிராமத்து குடிகாரனுக்கு திருமண ஏற்பாட்டில் இருக்கையில் ஆசிரியைப் பயிற்சி நண்பருடன் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அவள் பேருந்தில் புறப்படுகையில் அவள் கையில் அய்நூறு ரூபாய் கொடுத்து “ மகராசியா இரு “ என்று ஆசீர்வாதம் செய்கிறார், இருபத்தைந்து வருடம் கழித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல்  வருகிறது.” என்ன திருட்டுத் தபால்  ஏதாச்சும் கிடச்சுதா “ என்று கேட்கிறாள் மனைவி.உமாவின் மகன் அமெரிக்காவிலிருந்து  அனுப்பி இருக்கிறான். என் அம்மா  அந்தகிராமத்தை விட்டு கிளம்பும் போது  மோய் ஆசீர்வாதம் செய்த உஙக்ளைப் பற்றி அம்மா சொன்னார்.உங்களைப் பார்க்க வருவேன்” என்கிறது மின்னஞ்சல்.
     கொங்கு கிராம வாழ்க்கையின் அடையாளமானப் பேச்சு வழக்கு,    கொங்கு மனித இயல்புகள் விரவிகிடக்கின்றன. மாறி வரும் தலைமுறை அடையாளங்கள், மனித இயல்பிம் தென்படும் மாறுதல்களை இக்கதை துல்லியமாகச் சித்தரித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனை இக்கதியில் அடையாளம் கண்டு  கொள்ளமுடிகிறது. ஒரு சிறுகதைக்குள் கொங்கு உலகத்தையே கொண்டு வந்து விடுவது பெரும் சிறப்பாகும்.
( கோவை இலக்கியச் சந்திப்பு 47 ம் நிகழ்வில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த ” உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைத் தொகுப்பு  நூலை கவிஞர் புவியரசு வெளியிட் பூ.அ.ரவீந்திரன் பெற்றுக்கொண்டு பேசியது - ” உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைகள் விலை ரூ 160 ; சாகித்ய அகாதமி வெளியீடு சென்னை ) . 

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு ” நூல்
                            பேரூர்  ஜெயராமன்
     சுப்ரபாரதிமணியனை  அவரின் “ சாயத்திரை”  நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல்  பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது  வெளிப்படுத்துகிறது.இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது. ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.
2013ம் ஆண்டின் மிக முக்கியமான சுற்றுச் சூழல் சார்ந்த உலக அளவிலான பாதிப்புகளைப் பற்றி இந்நூல் பேசுகிறது.ஜார்கண்ட்டின் பெரும் வெள்ளம், இந்தோனிசியாவின் புயல்,  ஹயான்னாவின் சிரமம், கார்களால் சுற்றுசூழல் கேடு உட்பட பல தகவல்களைச் சொல்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய பலரை அறிமுகப்படுத்துகிறார். அதில் நம்மாழ்வாரும்  இருக்கிறார்கள்.இந்த கட்டுரைகளின் அறிமுகங்கள் மூலம் குப்பையை உற்பத்தி செய்பவனுக்கு அதை ஒழுங்குபடுத்த, சுத்தம் செய்யும் பொறுப்பு இருப்பது உணர்த்தப்படுகிறது. சிறு ஆறு அதன் உற்பத்தி இடத்தில் சின்னதாக அமைந்திருந்தாலும் அது போகப் போக அக்லமான, நீளமான ஆறாகப் பரிமாணம் அடையவும் அதிகப்யன்பாடு கொள்ளவும் நம் செயபாடும் இருக்கவேண்டும். சுற்ற்சுசூழல் பற்றித் தனியே பேச வேண்டியதில்லை. அது வாழ்க்கையோடு இணைந்தது.  அதைப் பேசுவதைத் தவிர்க்க இயலாது விஞ்ஞானம்  நம் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதை இக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.மிச்சமுள்ள மலை எவ்வளவு, .  மிச்சமுள்ள மரங்கள் எத்தனை என்று ஒவ்வொரு மரம் நடும் போதும், மலையைப் பாதுகாக்கப் பேசும் போதும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விகளை இக்கட்டுரைத் தொகுப்பும் வெளிப்படுத்துகிறது. சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து எழுதியும் இயங்கியும் வருவதை சாயத்திரை நாவல், குப்பை உலகம், நீர்ப்பாலை போன்ற கட்டுரைத் தொகுப்புகளின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. எழுத்துப் பதிவு சுற்றுசூழல் சார்ந்த செய்ல்பாடுகளில் முக்கிமானது என்பதை இவரின் எழுத்து மெய்ப்பிக்கிறது.

( மேக வெடிப்பு   ரூ 50 , எதிர் பதிப்பகம்., பொள்ளாச்சி :9865005084 )


சனி, 11 ஜூலை, 2015

சுயசரிதைத் துணுக்குகளும்,
சுயமரியாதைக் குறிப்புகளும்
முதல் தலைமுறை :
வெ.இறையன்புவின் சமீபக்கட்டுரைகள் – தொகுப்பு( 2014 )
சுப்ரபாரதிமணியன்

    ” நான் அதிகம் செலவிடும் தொகை புத்தகங்களுக்காகத்தான்.அவையே என் மூளையின் முதலீடுகளாக இருக்கின்றன.எளிமையான வாழ்வு, இயல்பான உணவு, அவா இல்லா பக்குவம் ஆகியவற்றால் பணக்காரனாக இல்லாவிட்டாலும் மனக்காரனாக வாழ்கிறேன்.பெரிய இல்லத்தை விட பரந்த உள்ளமே  உயர்ந்த செல்வம்என்பதை அறிவேன். அதிகப் பணம் இருப்பவனை விட  குறைவானத்  தேவைகள்  இருப்பவனே செல்வந்தன் என்பது என் கொள்கை “. இறையன்புவின் இந்த வாக்குமூலத்தைத் தாண்டி எதுவும் அவரின் படைப்புகளில்  இருக்காதுதான். ஆனால் இதை வலியுறுத்தும் ஒவ்வொரு சொல்லின் தீவிரமும் அவரின் எல்லாப் படைப்புகளிலும் தென்படுவதுண்டு.
            இத்தொகுப்பின் கட்டுரைகளை இப்படி பாகுபடுத்தலாம்.1. சுயசரிதை சார்ந்த அனுபவங்கள் 2. விழிப்புணர்வு தரும் வாழ்க்கையின் வெற்றி அம்சங்கள்         3.  படைப்பாக்க அனுபவங்கள் 4. சில மனிதர்கள் 5.. சில  உரைகள் 6. மாணவர்களின் படிப்பிற்காக சில டிப்ஸ். 7. வேளாண்மையும், கல்வியும்.

1. சுயசரிதை சார்ந்த அனுபவங்கள் :  வேளாண்மைக்கல்லூரி படிப்பு அனுபவங்களில் ஆசிரியர்கள், பாட முறைகள், நண்பர்கள் பற்றியக் குறிப்புகள் உள்ளன. ஒருகாலத்திய கோவை நகரத்தின்  முகத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் எந்த மாணவனுக்கும் நேரும் அனுபவங்கள் இவை.என்னதான் சுவையானதாக இருந்தாலும் உணவு விடுதி  விமர்சனங்களுக்குத் தப்புவதில்லை. கல்லூரி காலச் சுற்றுலாக்களில் இருக்கும் அலட்சியமும் ,கேளிக்கையும் சொல்லி மாளாது. வேற்று மாநிலங்களில் வேலை செய்யும் போது அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை சொல்லப்படுகிறது. அதிகாரிகள் என்றாலே அதிகாரம் மிக்கவர்கள். அதுவும் மொழி தரும் ஆதிக்கம் மனிதர்களைப் பிரித்து விடுவது பற்றிய வேதனையை நகைச்சுவையோடு சொல்கிறார். இந்தி மொழி ஆதிக்கம், இந்தி மொழி பேசுபவர்கள் நம்மைப் பார்க்கும் பார்வையும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இளமை என்னும் தென்றல் காற்று  வருடிச்செல்லும் பல அனுபவங்கள் இத்தொகுப்பில் உள்ளன.
 2. விழிப்புணர்வு தரும் வாழ்க்கையின் வெற்றி அம்சங்கள் ; அடுத்தவர் நலனுக்காகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனையாக அமைந்து வெற்றிக்குப் படிக்கட்டுகளாகின்றன.ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன்  அணுகினாலே வாழக்கை வழிபாடுதான்  என்பதை சில சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். அவை சாதாரண சம்பவங்கள். ஆனால் சாதனைக்கு அளவிடும் வெகுளித்தனமான, நேர்மையான அனுபவங்கள்.

 3. படைப்பாக்க அனுபவங்கள் ; வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்கள்  படைப்புத்தளத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னைப்படைப்பாக்கு என்று தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உள்மனம் அவ்வகை சீண்டல்களால் நிறைந்திருக்கும். அந்தச் சீண்டல்கள் தொடர்ந்து இருந்து மன அழுத்தங்களாகி நீண்ட அளவுப் படைப்புகளையும்  தர வல்லவை. குறிப்பாக நாவல் எழுதும் அனுபவங்களைச் சொல்லலாம்... மசூரி பகுதியின் பயிற்சி பற்றி ஒரு நீண்ட கட்டுரை இருக்கிறது. பழங்குடியினரின் இடப்பெயர்வும், இடர்பாடுகளும் அவரை வெகுவாக பாதித்திருக்கின்றன.  ‘ பெரிய அணைகளின் பெயரால்  அந்த மண்ணில் வாழும் மைந்தர்கள் எந்த உத்தரவாதமுமின்றி  ஒரு நாள் தூக்கி எறியப்படுவது பற்றியும், கரை மேல் தலைக்குப்புற விழுந்த மீன்களைப் போல எந்த ஆரவாரமும் இல்லாமல் அவர்கள் பண்பாடும், இருந்ததும் கரைந்து போவது பற்றியும் ’’  அவரின் சிந்தனைகள் ஒரு நாவலாக பின்னர் பரிணமித்ததையும் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். 1988ல் நர்மதை சர்தார் அணைப்பகுதிக்குச்  சென்ற அனுபவங்கள்  1995ல் அதை ஒரு நாவலாக்கப்பயன்பட்டிருகின்றன. அவ்வாண்டின் சிறந்த நாவலாக ( “ ஆற்றங்கரையினிலே.. “ என்ற நாவல்) அது திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் பரிசையும் பெற்றது.


 4. சில மனிதர்கள் :  சந்திக்கிற நல்ல மனிதர்கள் பற்றி பிறருக்குச்  சொல்லாமல் விடுவதென்பது அவர்களை மற்றவர்கள் அறிமுகப்படுத்தாமலும் அவர்களின்  வாழ்க்கை அம்சங்களை முன்னெடுத்துச் செல்லாமலும் தடைப்படுத்தும் செயல்களாகும்.அந்த வகையில் மோத்தி ராஜகோபால் பற்றிய கட்டுரைக்குப் பின்,  வாசிப்பும் நேசிப்பும் கொண்ட ஒரு உயர்ந்த மனிதரை இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஒரு கட்டுரை உதவுகிறது. இது போல் பல்வேறு இடங்களில் பல்வேறு உயர்ந்த உள்ளங்களை முன்னம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  
 5.. சில  உரைகள் : இதிலுள்ள உரைகள் இளைஞர்களுக்கு வழி காட்டுபவை. குறுக்கு வழிகளைத் தவிர்த்து உண்மையானத் தேடுதலை மேற்கொள்ள வேண்டிய வழிகளைக் காட்டுபவை.  உரைகள் பெரும்பாலும் கை தட்டல், பொழுதுபோக்கு என்று மாறி காற்றில் கலந்து விடுபவை அந்த வகையில் அவை அமைந்து விடாமல் எண்ணப்பதிவுகளாக அமைய இது போன்றத் தொகுப்புகள் வழிகோலுகின்றன. அவை மாணவர்களோ, இளைஞர்களோ யாருக்கும் வழிகாட்டலாம். ஏன் இறையன்பு அவர்களுக்கே மசூரி பயிற்சிப்பள்ளியில்         ‘ கூந்தலின் கரைகளில் நரை ததும்ப, எந்த ஒப்பனையிலும் கற்பனையானத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யாமல் எளிமையாக கசங்கிய பருத்திப் புடவையுடன் தீர்க்கமும், கண்ணியமும் கொண்ட விழிகளுடன் ‘ பேசிய ஒரு பெண்ணின்  உரைதான் அவரை “ ஆற்றங்கரையினிலே.. “ என்ற நாவல் எழுத அஸ்திவாரமாக இருந்திருக்கிறது.  இதில் இடம் பெற்றிருக்கிற உரைகள் பல இளைஞர்களுக்கு அடைக்கப்பட்ட வழிகளைத் திறந்து வைத்து வழிகாட்டும்தன்மை கொண்டவை என்பது தெரிகிறது.அந்த வகையில் ஆனந்த விகடன்  வாசகர்களுக்கான  சில உரைகள்  இதில் தொகுக்கப்பட்டிருகின்றன. இன்னொரு புறம் பெரும் உரைகள்  கவனத்திற்குரியதாகின்றன.. சென்னை கமபன் விழாவின் “ கம்ப இராமயாணத்தில் போர்க்கலை “ என்ற தலைப்பில் அமைந்த உரைக்குத் தேவைப்பட்ட வாசிப்பும் , உழைப்பும்  மனதை அதிரவைக்கிறது. அதன் மூலம் நியாயத்திற்காக , உண்மைக்காக ஒவ்வொரு மனிதனையும் வீறு கொண்டு எழச்செய்யும் உண்மையான சக்தி  உருவாவது வெளிப்படுகிறது.வாசிப்பும் யோசிப்பும் மனதில் கொண்டு வரும் மாற்றங்களைச் சொல்கிறது.  கம்ப ராமயாணமூலமும், கிரேக்க , இந்திய இதிகாசங்களோடும் இந்த உரையில் அவர் பயணப்பட்டிருப்பதும்  இன்னொரு வித்தியாசமானக் கோணமாக அமைந்திருக்கிறது.உச்சி முதல் பாதம் வரை நம் உடம்ப்பிம் பாகங்களை நாம் பராமரிக்க வேண்டிய  அவசியம் பற்றியும் அவற்றின் நுணுக்கமான செயல்பாடுகள் மூலம் உடம்பே கோவில் என்ற நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் உரைகள் புதிதாகத் தோன்றுகிறது. உடம்பின் பாகங்கள் பற்றிய வெவ்வேறு இலக்கியக் குறிப்புகளும், சம்பவங்களும் தரப்பட்டுள்ளன.
6. ” விரல்களையே நாராக்குபவர்கள்  கைகளில் பூக்கள் விரைவில் மாலையாகின்றன. கரங்களே உளியாகிறவர்கள்  மத்தியில்  கற்கள் இளகிச் சிற்பமாகின்றன. பணியை நேசிப்பவர்கள் எவ்வளவு நேரம் உழைத்தாலும் களைப்படிந்து காலாவதியாவதில்லை. உழைப்பே ஓய்வு என நினைப்பவர்களுக்கு வேர்க்குறுகளே முத்தாரஙகள். ஒவ்வொரு பணியும் எதிர்பார்த்த மாதிரி கச்சிதமாக முடியும் போது ஏற்படும் மகிழ்ச்சியே  அடுத்த பணிக்கான  அடித்தளமாகி அதை கோபுரமாகக்  கும்பிட வைக்கும் “ என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.இதை மாணவர்களுக்கும், அவர்களின் படிப்பிற்குமாக வெவேறு தளங்களில் பொருத்திப் பார்க்கச் செய்கிறார். வெற்றிக்கானப் படிக்கட்டுகளாய் காட்டுகிறார்.
7. உதிரியான வகையிலமைந்துள்ள கட்டுரைகளில்  ஆசிரியர் சமூகம் பற்றியக் கட்டுரையும், வேளாண்மை பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானவை.           “ கிராமங்களோ முதுமக்கள் தாழிகளாகிவிட்டன. இன்று நாம் முற்றிலுமாக விஞ்ஞானத்தின் வள்ர்ச்சி , தொழில் நுட்ப மாற்றங்களை மறுதலித்து விட்டு  பழைய முறையில் விவசாயம் செய்ய முடியாது . ஆனால் அதே நேரத்தில்  நம் மண் சார்ந்த மரபுகளை  முழுவதுமாக வழித்து எறிந்து விட்டு மேற்கத்திய முறையிலேயே விவசாயம் செயவது சரியல்ல  “  என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.பாடத்திட்டத்தைத் தாண்டி  ஆசிரியர்கள் குழந்தைகளை அணுகுவது, பாடப்புத்தகங்களைத் கடந்து செல்வது, ஒவ்வொரு ஆசிரியரும் இறுதி வரை மாணவனாக இருப்பது போன்ற அம்சங்களை வலியுறுத்துகிறார். கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு அரசியல் நடவடிக்கை, ஆசிரியர் என்பவர் நடுநிலையாக  இருக்க முடியாது என்பதை யோசிக்கையில்   மாற்றுக்கல்வி சார்ந்த அம்சங்களை இவை கோடிவதும் தெரிகிறது.

அடையாள அரசியல் பற்றி அதிகமாய் பேசப்படும் சூழலில் சாதாரண மனிதனின் அடையாளச் சிக்கல் பற்றியும் இந்நூல் பேசுகிறது. அடையாளச் சிக்கல் என்று எதுவுமில்லை. அடையாளமே சிக்கல்தான். இயறகை  நம்மைப் போதிய அடையாளங்களோடுதான் படைத்திருக்கிறது. ஆனால் நாமோ அவற்றில் திருப்தியடையாமல் இன்னும் வேண்டும் என்று  அதிக அடையாளங்களை அப்பிக் கொள்ள ஆசைப்படுவதை பட்டியலிடுகிறார். சாதாரண மனிதர்களின் இயல்பில் அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு போகிற போது சிக்கல்ளைத் தீர்த்துக் கொள்ள   அடையாளங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்துகிறார்.ஆனால் அரசியல் ரீதியான யோசிப்பிற்கு அவசியம் இல்லாமல் ஆரம்ப நிலையிலேயே அது நின்று விடுகிறது.

                இவற்றினூடே,  வெற்றிக்கு சமரசம் இல்லாத சுயமரியாதைத்தன்மை ஊடாட வேண்டிய  அம்சங்களை இந்நூல் நிறைத்துள்ளது.வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்ட இதில் தென்படும் பிரதி சார்ந்த,   சொற்பொழிவு  சார்ந்த நகைச்சுவை தேனீரின் இனிப்பாக இயைந்து அமைந்துள்ளது.மற்றத்தொகுப்புகளைப் போல குட்டிக்கதைகளின் ஆதிக்கம் அதிகம் இல்லாதது ஒரு ஆறுதல்.
                ” எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் கண்டு பிடிக்க வேண்டும் “ என்பதை முதல் தலைமுறையும் கண்டு கொள்ள இந்தப் பயணத்தை வாசகர்களுடன் இறையன்பு நிகழ்த்தியிருக்கிறார். வாசிப்பும், கற்றலும்  இலக்கு மட்டுமல்ல , இனிய பயணம் என்பதை இக்கட்டுரைகள்  மெய்ப்பிப்பதற்குக் காரணம் ’ ஒவ்வொரு நாளும் சூரியன் புதிது ‘ என்பது போல இறையன்புவின் ஒவ்வொரு புத்தகமும் சொல்லும் முறையிலும், புதுத்தகவல்களாலும் நிரப்பப்பட்டதாய்   புதிதாக இருக்கிறது. என்பதுதான்.
( ரூ 110, 200 பக்கங்கள், விஜயா பதிப்பகம், கோவை வெளியீடு 0422- 2382614, 2385614 )
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,
திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com