டாக்கா நகரத்தின் பல்வேறு வீதிகளையும், முக்கிய இடங்களையும், மக்களின் வாழ்நிலையையும் இக்கவிதைகளில் இனம் கண்டு கொள்ளலாம். பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றிய குறிப்பிடத்தக்க கவிதை ஒன்றும் உள்ளது.

1) சந்தேகம்
நான் இறந்தால் எனது பிணத்தை அங்கே விட்டுவிடுங்கள்
இறந்த சவங்களை எங்கே பரிசோதனைக்கு
உட்படுத்துவார்களோ அங்கே
மருத்துவக் கல்லூரியின் பிணவறையில்
எனது மானுடச் சட்டகத்தை கொடையாகத் தருகிறேன் என
நான் உறுதி சொல்கிறேன்
நான் இறந்த பின்னால்
என்னைக் கல்கத்தாவில் இருக்க விட்டு விடுங்கள்
நான் உயிருடனிருக்கும்போது இந்த நகரம்
என்னைக் கைவிடுவது என உறுதி எடுத்திருக்கிறது.
நான் இறந்த பிறகாவது
இவள் என்னை ஏற்றுக்கொள்வாளா?
2) சந்திப்பு
சிறைச்சாலைகளில் கூட
சில நெறிமுறைகளை அவர்கள் மதிப்பார்கள்
தம்மைக் காண வருபவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிப்பது என்பது
ஒரு நியதியாகச் சிறைச் சாலைகளில் இருக்கிறது
நான் ஒரு கைதி
பலவந்தமாக ஒத்துவராதவளாக ஆக்கப்பட்டிருக்கிறேன்
நண்பர்களோ உறவுகளோ இல்லாதவளாக
தினமும் நான் கோரிக்கை மனுவை அனுப்புகிறேன்
கைதிiயைப் போல எனக்குச் சலுகை தாருங்கள்
எனக் கேட்கிறேன்
இந்திய அரசாங்கம் பேசாது தவிர்க்கிறது.
3) இது எனது நகரம் இல்லை
என்னுடையது என ஒருபோதும் நான் சொல்லிக் கொண்ட
மாதிரியிலான நகரம் இல்லை இது
குள்ளநரித்தனமான அரசியல்வாதிகளுடையது இந்த நகரம்
பழிபாவங்களுக்கு அஞ்சாத வியாபாரிகள்,
சதை வியாபாரிகள்,
கூட்டிக் கொடுப்பவர்களின், பொறுக்கிகளின், வன்புணர்வாளர்களின்
நகரமேயல்லாது இது
என் நகரமாக இருக்க முடியாது
வன்புணர்வுகளுக்கும் கொலைகளுக்கும்
ஊமை சாட்சிகளாயிருப்பவர்களுக்கானது இந்நகரம்
எனக்கானது இல்லை
அயோக்கியர்களுக்குச் சொந்தமானது இந்நகரம்
அனாதரவாளர்கள் குறித்த உணார்ச்சியற்று
பாசாங்குகள் நிறைந்தது இந்நகரம்
சேரிகளிலும் பணக்காரர்களது மரங்களடர்ந்த சாலைகளிலும்
பிச்சைக்காரர்கள் மடிகிறார்கள்
தப்பித்தல்வாதிகளுடையது இந்த நகரம்
குறைந்தபட்ச இன்னல் என்றாலும்
அதீதத் தயக்கத்துடன் பின்வாங்குபவர்களின் நகரம் இது
அநீதிகளின் குவியலின் மீது அமைதியாக அமர்ந்திருக்கும்
பேய்களின் நகரம் இது
வாழ்வும் மரணமும் குறித்த கேள்விகள் பற்றி
வீராவேசமாக இங்கு வாயடித்துக் கொண்டிருப்பார்கள்
முகத்துதிக்காரர்களின் நகரம் இது
தற்புகழ்ச்சியாளர்களின் பிரதிநிதிகளினதும்
சந்தர்ப்பவாதிகளினதும் நகரம் இது
இதனை இனி ஒருபோதும்
எனது நகரம் எனச் சொல்லமாட்டேன்
இனி ஒருபோதும்
பொய்யர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள்
மதவெறி அயோக்கியர்கள்
இங்கு கூடாரம் போட்டிருக்கிறார்கள்
விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய
ஆண்களும் பெண்களும்தான்
இங்கு தர்க்கமெனும் ஆயுதத்துடன், சுதந்திர சிந்தனைகளுடன்,
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டு
இதயம் துடிக்க வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இது எனது நகரம் இல்லை.
4) விளையாட்டு : மாற்றுச் சுற்று
அன்றொரு நாள் ரமணா பூங்காவில்
ஒரு பையன் ஒரு இளம் பெண்ணை
விலைபேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்
நானும் அய்ந்து அல்லது பத்து டாக்காவுக்கு
ஒரு வாலிபனை வாங்க விரும்பினேன்
நன்றாக சவரம் செய்து
மொழு மொழுவென்று இருக்கும் பையன்
நல்ல அழகான சட்டை அணிந்திருப்பவன்
நடுவகிடெடுத்துப் படிய வாரியிருப்பவன்
பார்க் பெஞ்சில் உட்கார்ந்திருப்பவன்
அல்லது பிரதான சாலையில் நின்றிருப்பவன்
உடல்வாகு கொண்டவன்.
சட்டைக் காலரைப் பிடித்து அவனை
இழுத்து நான்
ரிக்ஷாவில் வீச வேண்டும்-
கழுத்திலும் வயிற்றிலும் கிச்சுக்கிச்சு மூட்டி
அவன் துள்ளுவதைப் பார்க்க வேண்டும்
அவனை வீட்டுக்குக் கூட்டிவந்து
குதிகால் உயர்ந்த செருப்பைக் கழட்டி
நன்றாக விளாச வேண்டும்.
அப்புறம் அவனை வெளியே துரத்தியடித்துச்
சொல்ல வேண்டும்:
ஒழிந்து போ தேவடியா மகனே.
நெற்றியில் பேண்ட் எய்டை ஒட்டிக் கொண்டு
அந்தப் பையன்கள் அதிகாலையில்
தெருவோரத்தில் நின்று
தங்களது சிரங்கைச் சொரிந்துகொண்டிருக்க
அவன்களது
புரையேறிய காயங்களிலிருந்து வழியும் மஞ்சள் சீழை
நாய்கள் நக்கிக்கொண்டிருக்க
அவர்களைப் பார்க்கும் பெண்கள் தங்கள்
கைவளையல்கள் நொறுங்கும் சப்தம்
கலகலவெனக் கேட்கும்படி சிரிக்கட்டும்
நிஜமாகவே நான் எனக்கு
ஒரு வாலிபனை வாங்க விரும்புகிறேன்
ஒரு புத்தம் புதிய மெருகு குலையாத
நெஞ்சில் முடி கொண்ட பையன்
ஒரு பையனை நான் வாங்கி
அவன் உடம்பு முழுக்க உதைப்பேன் அவனது சுருங்கிக் கிடக்கும்
விரையில் உதைத்துக் கொல்வேன்:
ஒழிந்து போ தேவடியா மகனே.
5) அவமானம் 7 டிசம்பர் 1992
சதிபதா தாஸ் அன்று காலை
அவனது வீட்டுக்கு தேநீருக்கு வருவதாகத் திட்டம்
மனம் நிறைந்தபடி
அரட்டை அடித்துக் கொண்டிருப்பதும்
செஸ் விளையாடுவது யோசனை
சதிபதா தாஸ் தினமும் வருவது வழக்கம்
இன்று அவன் வரவில்லை
குல்லாக்கள் அணிந்த ஒரு கூட்டம்
சதிபதா தாஸின் வீட்டுக்குள் புகுந்து
பலவந்தமாக அவனைத்
தாக்கியது என்று செய்தி வந்தது
போனவர்கள் மண்ணெண்ணெயை
அறையின் எல்லா இடங்களிலும் தெளித்தார்கள்
மேசைகள், நாற்காலிகள், படுக்கைகள், அலமாரிகள்,
சட்டி பானைகள்
தட்டுமுட்டுச் சாமான்கள்
துணிமணிகள் புத்தகங்கள்
என எல்லாவற்றின் மீதும் தெளித்தார்கள்
அப்புறம் எல்லாத் தீக்குச்சிகளையும்
ஒருசேரக் கொளுத்தி
மண்ணெண்ணெய் தெளித்த எல்லா இடங்களிலும்
சுண்டி விட்டார்கள்.
தீப் பற்றியெறிந்தபோது சதிபதா தாஸ்
வீட்டு முன்றலில் வெறித்தபடி நின்று
தாதி பஸார் மீது களங்கமற்ற தாதிபஸாரையும்
அதன் மேல்
வேற்றுமையற்ற வானத்தில் படியும்
கரும்புகையையும் பார்த்தபடி நின்றான்.
மாலையில் நான்
சதிபதா தாஸின் வீட்டுக்குப் போனேன்.
சதிபதா தாஸ் தனது மூதாதையரின்
சாம்பலின் மீதும்
சரிந்த கட்டைகளின் மீதும்
தனியே அமர்ந்திருப்பதைப் பார்த்தேன் இரத்தம்
அவனது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது
மார்பிலும் முதுகிலும்
கறுத்த தழும்புகள் தெரிந்தன
அவமானத்தில் எனக்குக் கூசியதால்
என்னால்
அவனைத் தொட முடியவில்லை.
1.1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி பாபர் மசூதி இந்தியாவில் இடிக்கப்பட்டது. இத்துடன் வெறியாட்டம் ஆடினார்கள். ஏழாம் தேதி பங்களாதேஷில் நிகழ்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த கவிதை இது.
2.தாதிபஸார் டாக்காவில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அக்கலவரத்தில் அநேகமாக முழுக் குடியிருப்புகளும் நாசமாயின.
6) நேற்று ஒரு கெட்ட கனவினோடு
நேற்று பின் மாலையில்
பங்களா அகாதமியின் புல்வெளியில் நான்
ஒரு கெட்ட அவனைச் சந்தித்தேன்
அந்தக் கெட்ட கனவு
நிலக்கடலையைத் தின்று கொண்டு
தின்றுமுடித்த
கடலைத் தோலைத் தூக்கிப் போட்டு
நண்பர்களோடு குறும்பு பேசி
விளையாடிக் கொண்டிருந்தான்
அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்
மயங்கியபடி பார்த்தேன்
அந்தக் கெட்ட கனவின் கண்களுக்குள் நான்
வைகறை நிறத்தைப் பார்த்தேன்
கஞ்சாப்புகை காற்றில் வட்டங்களாகச் சுருண்டு
எனது கழுத்துப் பட்டையில் கலந்தது
கனவில் கிறங்கிய எனது கண்களுக்குள்
புகை மண்டிய வானத்தினுள்
அதன் நெற்றி முகப்பில் நூறாயிரம் பொட்டுகளாக
சந்தனச் சாந்து விரிந்தது
திடீரென அந்தக் கெட்ட கனவு
எதைப்பற்றியும் கவலைப்படாமல் என்னை இழுத்து
தனது கைகளுக்குள் இறுக்கினான்
முத்தமிடும் வேளையிலெல்லாம் எண்ணியபடி எனக்கு
முப்பத்தியொன்பது முத்தம் பொழிந்தான்
கெட்ட கனவின் மயிற்கற்றைகள்
வலிய காற்றில் அலைந்தன
அவனது சட்டைப் பொத்தான்கள் திறந்து கிடந்தன
நிலவொளியில் நனைந்து கிடந்த நான்
பின்னிரவில் வீடு வந்து சேர்ந்தேன்
அந்தக் கெட்ட கனவு
என்னுடன் ஒட்டிக்கொண்டு வழியெங்கும்
காதலைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தான்
அந்தக் கெட்ட கனவுக்கு
வெட்கமென்பது கிஞ்சிற்றும் இருக்கவில்லை
அந்த இரவு கழிந்தது
மறுநாள் பகலும் கழிந்தது
அவன் போகப் போகிறேன் என்று
ஒரு முறைகூடச் சொல்லவில்லை.
7) சட்டை தைக்கும் பெண்கள்
சட்டை தைக்கும் பெண்கள் சேர்ந்து நடக்கிறார்கள்
பங்களாதேஷ் வானத்தில் பறக்கும்
நூறு நூறு பறவைகள் போல
சட்டை தைக்கும் பெண்கள்
நள்ளிரவில் தங்கள் சேரிகளுக்குத் திரும்புகிறார்கள்
காசு பிடுங்குவதற்காகத் திரியும்
தெருப் பொறுக்கிகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்
தமது உடல்களை
அந்தப் பெண்களின் உடல்களின் மீது அழுத்தி
பொறுக்கிகள் இரவின் மிச்சத்தையும் திருடிச் செல்கிறார்கள்
உறக்கமற்ற இரவினையடுத்து
அதிகாலையில் மறுபடியும் அவர்கள் சேர்ந்து போகிறார்கள்
அவர்கள் கடந்து போகிறபோது ஆண்களுக்கு எச்சில் ஊறுகிறது
நடந்து கடந்ததும் துப்புகிறார்கள்
தம்மால் இயன்றவரை பெண்கள்
இவர்களை உதாசீனம் செய்கிறார்கள்
எவர்தரும் உணவையும் ஏற்றுக்கொள்வதில்லை
எவர்தரும் உடுப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை
நடக்கிறார்கள்
நடந்து போய்க்கொண்டேயிருக்கிறார்கள்
குருட்டு எருதுகள் போல
மேலே மேலே நடந்து செல்கிறார்கள்
ஏதுமற்றவர்கள் உள்ளவர்களைச் சார்ந்து நிற்கிறார்கள்
வானவில்லை அணிவிக்கத் தடுக்கப்பட்டு
அலைக்கழிய விதிக்கப்பட்டு
இருளின் கைகளின் பட்டு
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு
நிலவொளிரும் இரவுகளை அனுபவிப்பதற்கு மாறாக
பயந்து பயந்து
உலக வானத்தில் பறக்கும் நூறு நூறு வங்காளிகளாக
சட்டை தைக்கும் பெண்கள் நடக்கிறார்கள்
நடந்து சென்று கொண்டேயிருக்கிறார்கள்.
( இக்கவிதைகள் ‘ உயிர்மை’ பதிப்பக வெளியீட்டு நூலில் இடம் பெற்றுள்ளன)
subrabharathi@gmail.com