சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 2 ஆகஸ்ட், 2017

தினமலரின் நூல் வெளி.காம் 7//17


தலைப்பு :    புத்துமண் ஆசிரியர்    :    சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம்    :    உயிர்மை பதிப்பகம்
விலை  :    100/- புத்துமண் - சுப்ரபாரதிமணியன்


0
ஒரு வரியில் சொல்லவேண்டுமென்றால் ஒரு பிழைக்கத் தெரியாதவனின் கதைதான் புத்துமண். அப்படியான பிழைக்கத் தெரியாதவனின் கதையைப் படிப்பதில் என்ன பெரிய ஆர்வம் கிளர்ந்துவிடப் போகிறது எனத் தோன்றலாம். இந்த சோ கால்டுபிழைக்கத் தெரியாதவனுக்கு இன்னொரு பெயர் சூட்டினால் என்ன?. சரி போராளி என்று சூட்டிடலாமா?. அந்தப் போராளிகள் அப்படியொன்றும் அந்நியமானவர்கள் அல்ல. நம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்தான். பொதுவாக போராளிகளிடம் தோல்விகள் இருக்கும். வலி இருக்கும். உறுதி நிரம்பியிருக்கும். நோக்கம் கூர்மையாக இருக்கும். அவஸ்தை இருக்கும்.  குடும்பம் தனித்திருக்கும். அதையெல்லாம் விட அவர்களிடம் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும். மிக வேகமாய் தன்னை வளர்த்துக்கொண்ட திருப்பூரின் வரைபடத்தில் ஒரு நுண்ணிய சிறு கோடுதான் புத்துமண் நாவலில் வரும் மணியன்’.

மணியன் மாதிரியான கோடுகள்தான் மதயானையினைப்போல் தான்எதிர்கொண்ட எல்லாவற்றையும் சிதைத்தோடும் ஒரு தொழில் நகரத்தில் அவ்வப்போது கேள்விக்குறியாய் கொம்பு முறுக்கி நிற்பவை. வளர்ச்சி முறித்துப்போட்ட கிளைகளுக்காகவும், நசுக்கிப்போட்ட தளிர்களுக்காவும் எழும்பும் இவர்களின் குரல், வளர்ச்சி முழக்கத்தில் பெரும்பாலும் தேய்ந்துபோவதுதான் முரண்.

மனித உரிமைக்காகவும், குத்துயிரும் குலையுயிருமாய்க் கிடக்கும் நொய்யலைப் பாதுகாக்கவும், சுமங்கலித் திட்டத்தில் நசுக்கப்படுவதைத் தடுக்கவும்அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாகக் காட்டப்படும் ஒரு நகரத்தின் பாய்ச்சலில் எதிர்நீச்சல் போடுகிறான் மணியன்.

அவருடைய வாழ்க்கையில் யதார்த்தமான பாத்திரங்களாய் வரும் மணியனின் மனைவி சிவரஞ்சனி, மகள் தேனம்மை, தனது எம்.பில் ஆய்வுக்காக தேடிவரும் ஜூலியா மற்றும் மணியனின் வீடு உள்ளிட்டோர் நிறைய உணர்வுகளை கடத்துகிறார்கள். மாற்றங்களுக்குள் ஆட்படும் தேனம்மை வெகு இயல்பாய் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் பிம்பமாய் இருக்கிறார்.

ஆச்சரியக்குறிகளை மட்டுமே விரும்பும் சில முதலாளிகளுக்கு கேள்விக்குறியாய் இருக்கும் மணியன் உறுத்தலாய்ப் படுகிறார். அவரை வளைக்க அல்லது வதைக்க அவர்களுக்கு ஆஜானுபாகுவான நைஜீரிய இளைஞன் விலைக்குக் கிடைக்கிறான். நைஜீரிய இளைஞர்கள் இதற்கும் பயன்படுகிறார்கள் அல்லது பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது அவசரத்திலும் அவசரமான ஒரு எச்சரிக்கை. வதையில் சிக்கிய மனிதனை வாதை ஆட்கொள்கிறது.

இடையில் வரும் மருத்துவர் ஜீவானந்தத்தின் கடிதமும், இறுதியில் தொகுக்கப்பட்ட மணியனின் கை பேசியில் சேர்ந்துகிடந்த குறுந்தகவல்களும், அவர் சேகரித்து வைத்திருந்த குற்றங்களின் செய்திகளும் நிறைய உணர்த்துகின்றன.

நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருக்கும் லட்சுமணனின்,

ஒடியன்கவிதை வரிகள் வாசிப்பின் தன்மையை அடர்த்தியாக்குகின்றன. எழுத்துவடிமற்ற இருளர்களின் கவிதைகளை தமிழ் வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒடியன் தொகுப்பு வாசிக்க வேண்டிய ஒன்று. அதிலிருக்கும் கவிதைகளை மிகப் பொருத்தமாய் அத்தியாயங்களின் தலையில் சூட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன்.

ஆட்டுக்கு நல்ல தீனி கிடைக்க வேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்து ரிசர்வ் காட்டில் மேய்க்கிறாள் கோசி. தான் நன்றாக மேய்ந்தாலும் அவளுக்கு என்ன லாபம்?

உனக்கும் இல்லாமல்

காட்டு நரிக்கும் இல்லாமல்

ரேஞ்சர் வீட்டுக்கு

விருந்தாகப் போகிறேன்

செம்போத்து குறுக்கே பறக்கும்

கெட்டசகுனமும் தெரிகிறது. கோசி என்னைக் கொன்று தின்னு இப்பவே’  என்கிறது ஆடு
*
அரசாங்க லோன் மூவாயிரம்

அதற்கு செய்த செலவு மூவாயிரத்து அய்நூறு. இப்போது

அரசாங்கம் எனக்குக் கடன்காரன் 

அத்தியாயங்களையும், அதிலிருக்கும் மனிதர்களையும், சூழலையும், நிலைமைகளை எதிர்கொள்வதற்கு இவை நம்மை வெகுவாகத் தயார்படுத்துகின்றன.

நாவலை முடித்து விழிகளை இறுக்க மூடி, ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசப் படுத்திக் கொள்கையில் முன் அட்டை பார்வையில் கூர்மைப்பட்டது. வெளுத்த ஒரு உள்ளங்கை முழுவதும், விரல்களின் நீளம் வரைக்கும் புத்துமண் அப்பியிருக்கிருக்கும் படம் மனதில் அப்பிக்கொள்ளும். விரல் நுனிகளால் அதை வருடும்போது எங்கோ ஏதோ ஒரு இளகுகிறது, ஏதோ ஒன்று உதிர்கிறது. பொதுவாக கரையான் கட்டியெழுப்பும் புற்று எவரும் கற்பனை செய்திடாத ஒரு ஈரத்தை தனக்குள் கொண்டிருக்கும். புதினம் முழுக்கவுமே ஈரத்தின் நசநசப்பு மனதிற்குள் நீடிக்கிறது.

புத்துமண் அளவில் கனமான நாவல் அல்ல. கனமற்ற அந்த நாவலின் கடைசிப் பக்கங்களை நாம் எட்டும்போது நிச்சயம் மனது கனக்கும் என்பது மட்டும் உறுதி.
- ஈரோடு கதிர்