சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வியாழன், 15 மே, 2014

“ மிளிர்கல் “

கண்ணகியும் , காங்கேயம் கல்லும்: இரா. முருகவேளின் “ மிளிர்கல் “ நாவல்

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்
ஆவணப்படத்தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல்;, நிலவரவியல் அம்சங்களோடு “ டாக்கு நாவல் ‘ என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை இரா. முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும்போது நிலவரவியல் அம்சங்களும், அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து இயங்கும் சமூக ஆய்வுத்துறையின் அனுபவங்களைக் கொண்ட முறைப்படுத்தலில் இவை அலசல்கள், உரையாடல்கள் , எதிர்வினைகள் என்று முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓர் ஆவணப்படத்தயாரிப்பு சார்ந்த அனுபவ விசயங்கள் அப்படம் தயாரிப்பில் சாத்தியமாகாத போது நாவலின் வெளிப்பாடு என்ற வகையில்லாமல் பதிவாகி ஒரு வடிவம் கொண்டிருக்கிறது. எந்த அனுபத்தையும் மறைத்து வைத்துக் கொண்டிருப்பதில் படைப்பாளிக்கு சாத்தியமில்லை.அது எப்படியாயினும் வெளிப்பட்டு விடும். ரோடு மூவி அம்சங்களைப் போல, டாக்கு நாவல் அம்சங்களைப்போல் இப்படி வடிவமைந்திருக்கிறது இரா. முருகவேளிடம்.
கண் முன்னான அனுபவங்களை எதிர்த்துப் போராடுவது எவ்வளவு முக்கியமோ அவ்வள்வு முக்கியம் வேர்களைத் தேடிப்போவது என்றத் தேடலும் கூட இதில் உள்ளது.. இதன் அடிநாதமாய் கட்டிடங்களை மீறி மண்ணின் ஆன்மாவைக் கண்டுணர்கிற அனுபவங்களை இதில் தேடுகிறார். மதுரையை எரித்தபின் கண்ணகி போன பாதையைத் தேடிப்போய் கண்ணகி கோவிலையும் அடைந்து வேடிக்கை பார்த்திருக்கிறார். . சிலப்ப்திகாரம் நடந்ததாக்க் கூறப்படும் இடங்களைக்கூட. . இதில் முக்கியமானவர்களாய் முல்லை, நவீன் போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் தென்படுகிறார்கள், முருகவேளின் அரசியல் ரீதியான அனுபவங்கள், அனுதாபிகளின் கலந்துரையாடல்கள், பேச்சுத்தொனி அம்சங்கள் இணைந்து வருகின்றன.
கொங்குமண்டல்த்தின் மாணிக்க மரகத ரத்தினக்கற்களின் வணிகம் உலகமயமாக்கலில் விரிவடைந்து அது பெரும் முதலாளிகளின் கைகளுக்குள் சென்றடைவதைக் காட்டுகிறார். தமிழினப்பெருமை படிமமாய் இறுக்கிக் கொள்கிறது. இது குறித்தத் தகவல்கள் ஆய்வுகளாய் ஆய்வு மாணவர்களுக்கு புதையல் புதையலாக இதில் கொட்டிக்கிடக்கின்றன. ஆவணப்படக்குழு பூம்புகாரிலிருந்து காவிரிக்கரையோரமாக ஸ்ரீரங்கம் , கொடுங்காநல்லூர் என்று பயணித்து கண்ணகி கோவில் இருக்கும் கேரள எல்லைக்குள்ளும் நீள்கிறது. இந்தப்பயணம் நாவலை வெவ்வேறு அடுக்குகளாக ஆக்கியிருக்கிறது.தங்குமிடங்களும் வழிப்போக்கர்களின் உரையாடல்களும் ஒரு அடுக்காக நீள்கிறது. இன்னொரு அடுக்காக பொதுவுடமைச்சார்ந்த தோழர்களின் விவாதங்கள் சமகால அரசியலோடு இயைந்து போகிறது. இன்னொரு அடுக்கு சிலப்பதிகாரத்தில் தோய்ந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் கதை காங்கேயம் கல்லாக மாறும் உலகளவிலான வியாபாரம் இன்னொரு அடுக்காகிறது. ( இந்த வியாபாரத்தின் உட்சபட்சமான உதாரணமாக இரத்தினக்கல்லால் நகை இல்லாத ஒரு வீடு கூட இன்றைய அமெரிக்கவில் இல்லை என்பது மிக் முக்கியம் ). மனித உணர்வுகளின் மோதலும் வாழ்வும் எதிர்பார்க்கிற சாதாரண வாசகனுக்கு இந்த வடிவ அளவிலும் சொல்லப்பட்ட விசயங்களின் தொனியிலும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
கொங்கு நாட்டுப்பகுதிகளில் திருப்பூர் அருகிலான காங்கேயம், சிவன்மலை போன்றவற்றில் தெலுங்கு பேசும் ஜங்கமர் எனப்படுவோர் கற்களைக்குலத்தொழிலாகச் செய்வதும், கற்களைத் தேடி அலைகிற மனிதர்களின் அவஸ்தையும், பேராசை காரணமாக மனம் பித்தாகிப் போவதும் நடக்கிறது.அதிலும் கிருஷ்ணசாமி போன்றோரின் ஆசையும் அலைச்சலும் அவர்களை வெவ்வேறு விரக்தி நிலைக்குக் கொண்டுச் செல்கிறது. ஆள் கடத்தும் வித்தைக்கும் கொண்டு செல்கிறது.பட்டை தீட்டும் தொழிலில் அவர்களின் நுரையீரல்களை சிலிக்கா பொடி தின்று விட்டதால் உயிரை விட்டவர்களைப் பற்றிய விபரங்களும் இதில் உண்டு. சமூக மதிப்பீடுகளுக்கு பதிலாக தனிமனித மதிப்பீடுகளை உருவாக்கும் மனிதர்களும் இதில் தென்படுகிறார்கள். கண்ணகி கொங்கர் செல்வி என அழைக்கப்பெறும் காரணம் பற்றிய அலசல்கள், கண்ணகி மீனாட்சியா, ஆதிகுடிப்பெண்ணா என்பது முதற்கொண்டு பிதாகாரஸ் தேற்றங்கள வரை பல அலசல்கள் உண்டு.காடுகளில் நிறைந்திருக்கும் கெரில்லாக் குழுக்கள், வர்க்க உணர்வு கொண்ட மக்கள், கெரில்லா முதுகுப்பை தாங்கி இடையறாது நகர்ந்து கொண்டிருப்போம் என்று தான் செய்த கற்பனை இப்போது எப்ப்டி நடக்கிறது என்ற அலசல்களில் சுவாரஸ்யம் நிறைந்திருக்கிறது. . புரட்சியைத்தவிர வேறெதையும் யோசிக்காத புரட்சிகர இயந்திரங்கள் என்னவானார்கள் என்ற அலசலும் உள்ளது.ஒவ்வொரு நாளும் கற்றுக் கொண்டே இருக்கிறோம் இந்த மண்ணையும் மக்களையும் இன்னும் நன்றாகத் தெரிந்து கொள்வோம். என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற அரசியல் செயல்பாட்டாளர்களும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஆவணப்படத் தயாரிப்பை மீறி செய்ய வேண்டியவை பற்றிய அக்கறையும் இதில் உள்ளது. “ எந்தச் சிலம்பைக் கொண்டு மாணிக்கப் பரல்களைக் கொண்டு , கண்ணகி நீதியை நிலைநாட்டினாளோ அதேமாணிக்கம் இப்போது ஏழை மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதைக்காட்ட வேண்டாமா.. இந்தப்பன்னாட்டு நிறுவனங்களின் உண்மை முகங்களை காட்ட வேண்டாமா பல ஆயிரம் மக்கள் வாழ்வை நிலங்களை இழப்பதற்கான சூழல் இருக்கும் போது மக்களுக்காகச் செயல்படுபவர்கள் வேட்டையாடப்படும் போது ஆவணப்படம் எடுப்பதைவிட வேறு வேலைகள் இருப்பதும் ” சொல்லப்படுகிறது. புகாரிலிருந்து கொடுங்கலூர் வரை லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் எதற்காக கண்ணகியை நினைவில் வைத்திருக்கிறார்களோ அத நம்பிக்கையை பிரதிபலிக்க வேண்டியதாக அந்த ஆவணப்படமும் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் உணர்ந்திருக்கிறார்கள். அநீதிக்கெதிரான எல்லா போராட்டங்களிலும் கண்ணகி இருக்க வேண்டிய அவசியம் பற்றிய பார்வை முடிவாய் முன் வைக்கப்படுகிறது.. இதை உள்வாங்கிக் கொண்ட முல்லையும் ஒரு உக்கிர தேவதையாக மாறும் வித்தையை இந்நாவல் காட்டுகிறது. முல்லைப் போல் பலர் மாறும் வித்தையை இந்நாவலைப்போல் பல்வேறு போராட்டங்களும் உருவாக்குவதை தெரிந்து கொள்ளலாம்..அதுதான் இந்நாவலை எழுதிய முருகவேளின் தொடர்ந்த சிந்தனைப்போக்கும், இயக்க செயல்பாடுகளும் என்றைக்கும் உணர்த்தும் விசயங்களாக இருக்கின்றன..
நவீனத்துவம் உருவாக்கியிருக்கும் குறுகிய நாவல் வடிவத்தை இது போன்ற நாவல்கள் உடைத்து விட்டன என்று கூடச் சொல்லலாம்.நாவல்களின் பேசுபொருள் சார்ந்து அதிகம் யோசிக்கிற போது இவ்வகை வடிவங்கள் பற்றியும் யோசித்துபார்க்கலாம். வடிவப்போதாமை என்பது நவீனத்துவ அழ்கியலுக்கு உரிய மனநிலையாகக் கூடப்பார்க்கலாம்.என்று தோன்றுகிறது.இலக்கிய வடிவம் என்பது வாசக மனநிலை உருவாக்கிக் கொள்ளும் ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது. வடிவங்களைப் பற்றி பல சமயங்களில் இட்டு நிரப்பிக் கொள்ளலாம்.அனுபவம் அது தரும் விளைவு, எதிர்வினை ஆகியவற்றின் மையத்தில் இருந்து கொஞ்சம் கற்பனையை ஓட விடும். பந்தயக்காரனைப் போல ரொம்ப தூரம் கடக்க முடியாது. அப்படித்தான் இந்த பயண அனுபவங்களை முருகவேள் கொஞ்சம் ஓடிப் பார்க்கிற தூரத்தில் சென்று கடந்து காட்டுகிறார்.வாழ்க்கை சிக்கல்களும் பன்முகத்தன்மையும் கொண்டதாய் இருப்பதில் எல்லாம் நிரம்பி வழிகிறதாய் இருக்கிறது. அனைத்தையும் வரலாற்றின் முன் நிறுத்திப் பார்ப்பதுதான் அவரின் கடமையாக நினைக்கிறார்.சிதறிக்கிடக்கிறத் தோற்றத்தின் வழியாக நோக்கமும் தரிசனமும் உருவாகிவிடுவதைக்காட்டுகிறார்.இதில் தலையிடுகிற குறுக்கீடு இதைச் சொல்வதில் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.வடிவ முத்திரையில் திருப்பதிப்படாதவர்கள் இதை நீள்கதை என்றும் சொல்லிக்கொள்ளலாம்.செய்யுள் நாவல், நாடக நாவல் என்றெல்லாம் அறிமுகமாகிற போது இந்த நாவலின் வடிவமும் குறுக்கீடு செய்யாததே. இரா. முருகவேள் “ ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” , “எரியும் பனிக்காடு”, தூக்கிலிடுபவரின் குறிப்புகள் “ ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். “ நாளி” என்ற் ஆதிவாசிகள் பற்றிய ஆவணப்பட்த்தின் இயக்குனர், “ கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்/ என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் “ போன்ற நூல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
( மிளிர்கல் – இரா.முருகவேளின் நாவல், ரூ 200, பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 9486641586