Tuesday, July 12, 2011

சிங்கப்பூரில் புத்தர்

ரஜினிகாந்த் சிங்கப்பூரில் இருக்கும் வரை சிங்கப்பூர் ஆச்சர்யங்களுக்குக் குறைவில்லைதான். 15 , 25 சிங்கப்பூர் டாலர் செலவழித்து ‘எந்திரன்’ படத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் , நூறு டாலர் செலவழித்து தேக்காவிலும் மற்ற இடங்களிலும் அம்மன், முருகன் கோவில்களில் விசேச பூஜை செய்து திருப்தி அடைந்திருக்கின்றனர். ரஜினி தெய்வங்களுக்கு நன்றி சொல்கிறார். ரஜினி ரசிகர்கள் அவரை தெய்வம், புத்தர் என்று வர்ணிக்கிறார்கள். சிங்கப்பூர் தமிழர்களைச் சந்தித்து விட்டு தான் சூப்பர் ஸ்டார் சென்னை கிளம்ப வாக்குறுதி தந்திருக்கிறார். ஜெயகோ.

சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்து கவனிக்கிறபோது இன்னும் ஆச்சர்யம் குறையாது. வாழுமிடத்து கலாச்சாரம், நம்பிக்கை, தொன்மம் முதற்கொண்டு பலவற்றைக் கிரகித்து, மொழிபெயர்த்து அவர் இருப்பை நியாயப்படுத்த அவர் செய்யும் முயற்சிகள் ஆச்சர்யப்பட வைப்பவை. சீன நாடோடிக் கடைகள் முதற்கொண்டு தொன்மக்கதைகள் வரை பல பாலியல் உவ்வே சமாச்சாரங்களை மிகவும் எளிமையாக மொழிபெயர்த்து வரும் அவரின் மொழிபெயர்ப்பு உட்பட நூல்களின் பட்டியல் 25 தொடும் சீக்கிரம். அவரின் கடைசி இரண்டு நாவல்கள் மனப்பிரிகை, குவியம் சரியாகக் கவனிக்கப்பட்டிருக்க வேண்டியவை..சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கையை அவ்வளவு கூர்மையாக அவதானித்து நேர்கோட்டுப்பாணி தவிர்த்த வடிவத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் ” வாழும் புத்தர் “ என்ற சமீபத்திய மொழிபெயர்ப்புக் கதை இப்படி முடிகிறது ( வடக்கு வாசல் ஜூன் 2011 ) : “ நிச்சயமாக இவ்வுலகில் தெய்வங்கள் இருக்க முடியாது. ஆனால் முட்டாள்தனத்தினால் எதன் மீதாகிலும் முக்கிய நம்பிக்கை வைக்கவும் மனிதன் தெய்வங்களை உருவாக்குகிறான். சக மனிதர்கள் அவனை வணங்கும்போது தானும் தெய்வம்தான் என்றே எண்ணத் தலைப்படுகிறான். தெய்வமாக நடந்து கொள்ளவும் ஆரம்பிக்கலாம். மனிதர்களும் முன்பை விட அதிகமாக அவனை நம்பவும் பைத்தியமாக வழிபடவும் ஆரம்பிக்கலாம். மக்களுக்குத் தெரியாது அவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பது. சொல்லப்போனால் தெய்வமாக்கப்பட்டிருக்கும் மனிதனுமே ஏமாற்றப்பட்டிருக்கிறான். ஆனால், காலம் செல்ல அம்மனிதன் வேறு வழியில்லாமல் தெய்வத்தைப்போலவே நடக்க முயற்சிக்க வேண்டியிருக்கிறது. இது மக்களை மேலும் முட்டாளாக்கும் வேலை. இதே போன்று ஏமாற்று வேலைகளில் பல்லாண்டுகள் கழிந்து போயின. அவ்வருடங்கள் அபத்தங்கள் நிறைந்தவை. அபத்த வருடங்கள் எல்லாம் போனது போனதுதான். அதே மக்களால்தான் வரலாறும் எழுதப்படும் என்பதுதான் மிகவும் வேடிக்கை.” ரஜினியை ரசிகர்கள் மனிதனாயும், தெய்வமாயும் பார்க்க சமீப சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கின்றன.

சிங்கப்பூரின் திரைப்பட ஆர்வம் கொண்டவர்களால் எடுக்கப்பட்டு தமிழகம் உட்பட உலகம் முழுக்க வெளியிடப்பட்ட படம் ’சிங்கையில் குருசேத்திரம்,’வழக்கமான வணிகப் பட வரிசையில் அமைந்ததே. போதைப் பொருட்களைக் கடத்தும் ஒருவன் அத்தொழிலுக்கு அவனது சகோதரியையும், மனவளர்ச்சி குன்றிய குழந்தையையும் பயன்படுத்துகிறான். சகோதரி ஒரு நிலையில் காவல் துறையினரிடம் மாட்டி சிறைக்குச் சென்று விடுகிறாள். தொழிலுக்கும் தன் தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்கும் உதவியாக தனது மாமாவை விரித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவர் தனது அப்பாவைக் கொன்றது, தாய், தம்பியைக் கடத்தியது உட்பட பலவற்றில் ஈடுபட்டிருந்தது தெரியவரும்போது அவரின் வியாபார மையங்கள் கலைந்து போக சூழ்ச்சி செய்வது பற்றி இப்படம் விவரிக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் இப்படத்தை மிரட்டலாக்கியிருக்கின்றன. வழக்கமான துப்பறியும் கதையாகவும் அமைந்துவிட்டது.

சிங்கப்பூர் என்பதே மிகப் பெரிய பொருட்களின் விற்பனைச் சந்தை-ஷாப்பிங் சென்டராக இருக்கிறது.அவ்வகை மால்களில் அடைக்கலமாகிற மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டபடம்.

“கான்ஷாப்பிங் “அதில் ரேணு என்ற தமிழ்ப் பெண் குழந்தையும் உண்டு. இதன் விரிவான அறிமுகத்தை கனவு 63ம் இதழில் எழுதியிருக்கிறேன்.

சிங்கப்பூரின் படங்களில் சமீப ஆண்டுகளில் கேன்ஸ் திரைப்பட உட்படுத்தலின் மூலம் பேசப்பட்ட படம் “ மை மேஜிக். “ 10 நாளில் எடுக்கப்பட்ட ஒன்றரை மணி நேர படம். பிரிக்ஹி என்ற இயக்குனரின் இப்படம் போஸ்கோ பிரான்சிஸ் என்ற மேஜிக் கலைஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. போஸ்கோ பிரான்சிஸ் மேஜிக் கலைஞனாகக் கூட நடித்திருக்கிறார். அவர் குடிகாரராகி தன் திறமைகளை வீணடித்துக் கொண்டிருப்பவர். அவரின் மகன் அவர் குடித்துவிட்டு எங்கோ கிடக்கிற போதெல்லாம் அவரைக் கூட்டிவந்து அவருக்கு உபசரிப்பு செய்கிறான். அவனின் திருமண வாழ்க்கையும் தோல்வியாகி அவனை அலைக்கழிக்கிறது. அவனது மனைவியிடம் தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சுவதில் பொழுது கழிகிறது. அவன் மேஜிக் கலையின் தீ விழுங்குதல், கண்ணாடி மேல் நடத்தல், உடம்பில் கம்பிகளைச் செலுத்துதல் போன்றவற்றில் பயிற்சியும் எடுக்கிறான். ஆனால் தாதா கும்பலைச் சேர்ந்த இன்னொருவன் அவனின் முயற்சிகளைக் குலைக்கிறான் என்பதைப் படம் சொல்கிறது. தொலைந்து போய் தங்களை அடையாளம் கண்டடைகிற முயற்சியில் இம்மனிதர்கள் ஈடுபடுகிறார்கள். புத்தராய் தொலைந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.