
டாக்கா விமானநிலைய இமிகிரேஷன் சோதனையில் அலாரம் சப்தத்துள் முடங்கிப்போனார் ஜ.என்.டி.யூ.சி. தண்டபாணி. துப்பாக்கிக்குப் பயந்து கைகளைத் தூக்குவது போல் தூக்கிக் கொண்டார். அலாரம் தொடர்ந்தது. கைபேசி, பர்ஸ் உட்பட எல்லாமும் வெளியேற்றி விட்டார். இன்னும் அலாரம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஏதோ கண்டுபிடித்தவர் போல அலாரத்திற்கான காரணமாக இடுப்பில் இருந்து ‘அரணாக்கயிறு’ என்று அரைஞான்கயிறைச் சுட்டியபடி கத்திக் கொண்டிருந்தார். திரும்பத் திரும்ப அரணாக்கயிறு என்றார், பிறகு தமிழ்நாடு தமிழ்நாடு என்றார். அரைஞாண்கயிறு பற்றிய விளக்கத்தை அவர் தொடங்குவதற்கு முன்பாகவே அவரைப் போகச் சொல்லி விட்டனர்.ஏதோ சிரிப்புடன் அவரை போகச் சொன்னார்கள் உலகத் தொழிலாளி வர்க்கம் இப்படித்தான் கைகளைத் தூக்கி கேட்பாரற்று, எங்களை கவனிக்க யாருமில்லையா என்று கதறுவதாகத் தோன்றுகிறது. உலகம் முழுக்க மலின உழைப்பு, குறைந்த கூலியில் தொழிலாளர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள்.
தண்டபாணி டாக்காவில் நடந்த சில கூட்டங்களின் இடையே வெளியேறி வெளியே போய் சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பார்.
"என்னங்க, இங்க வந்திட்டீங்க?"
"எவ்வளவு நேரம்தா அவன் சொல்ற பொய்யைக் கேட்டுட்டு உக்காந்திட்டிருக்கிறது."
பொய்யும் புனைவும் லாபம் சம்பாதிக்க வார்த்தைகளைக் கொட்டியபடி முதலாளி வர்க்கம், கார்ப்பரேட் கம்பெனிகள் இருந்து கொண்டிருக்கின்றன. எட்டுமணி நேரஉழைப்பு என்பது 10மணிநேரம், 12மணிநேரம் என்றாகிவிட்டது. தினக்கூலிகள், பீஸ்ரேட் செய்பவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாய் தொழிலாளர் வர்க்கம் மாறிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கிறது.
மே தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு முதிய தொழிற்சங்கத் தலைவர் அழைக்கப்பட்டார். அவர் சொன்னது: " எட்டு மணி நேர உழைப்புக்கு மே தினம். கொண்டாட்டம் எல்லாம். உங்க ஊர்லதா அது 12 மணி, 16 மணி நேரம்னு அதே கூலியில் போய்ட்டிருக்கே. இதிலே எதுக்கு மேதினம் கொண்டாடறது?"
வங்கதேசப் பின்னலாடையில் ஐந்து ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதற்குக் காரணம் ஒன்றுதான்: மலின உழைப்பு. இது உலகம் முழுவதும் தொடர்கிறது. எல்லா தொழில்களிலும், துறைகளிலும் தொடர்கிறது. வங்கதேச வங்கிகள் 100 மில்லியன் டாலர் பணத்தைப் பின்னலாடை ஏற்றுமதியில் முதலீடு செய்யப் போகின்றன. வரும் ஆண்டில், 1989 முதல் வெளிநாட்டு மூலதனப் பொருட்கள் பருத்தி உட்பட்டவை தருவித்துக் கொள்ளப் பெரும் உதவி செய்திருக்கிறது. 330 மில்லியன் டாலர் இதுவரை உதவி தந்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் 3.5% வட்டியில் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தலாம். வழக்கமான வட்டி விகிதமான 12% விட இது மிகவும் குறைவு. இவ்வகையான உதவிகள் போட்டியான சர்வதேச சூழலில் தங்கள் வியாபாரம் பெருக உதவும் என்கிறார்கள். 29 வணிக வங்கிகள் உதவத் தயாராக உள்ளன. தொடர்ந்த வெளிநாட்டு மூலதனங்கள் தொழிலை இன்னும் ஊக்குவிக்கும்.

ஆனால் தொழிலாளி வர்க்கம் கையறு நிலையில் உழைப்பைக் கொடுத்து விட்டு சாவுப்பெட்டியைத் தயார் செய்து கொள்கிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் என்று வர்த்தக தார்மீகக் கோட்பாடுகள் உலகளவில் மனித உரிமைகளாகப் பேசப்பட்டு வரும் இன்றைய நாட்களில் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தினர் நவீனக் கொத்தடிமைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்க உரிமைகள், நிரந்தரப் பணி பாதுகாப்பு என்று எதுவும் கோராமல் தினக் கூலியாக நிரந்தர உருவம் எடுத்து வருகிறது. நவீன கொத்தடிமை முறையில் கோர முகம் பயஙகரமானதுதான். அது கார்ப்பரேட் உலகின் கவர்ச்சிகளையும், குரூரங்களையும் ஒருசேரக் கொண்டது.
"ஏலி ஏலி லாமா சபக்தானி" (தேவனே , என் தேவனே, ஏன் எங்களை கைவிட்டீர்).