சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 9 பிப்ரவரி, 2009

பள்ளி மறுதிறப்பு




















































































ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

கனவு தொகுப்பு

கனவின் புதிய தொகுப்பு நூல்
---------------------------------------































































சனி, 31 ஜனவரி, 2009

சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா?

சுந்தர் அர்னவா (பக்ருதீன் அலி அகமது)
------------------------------------------- -----------
கமண்டலத்தில் நதி (நன்றி : கலாப்ரியா கவிதை)
-------------------------------------------------

சுப்ரபாரதி மணியனின் ஓடும் நதி பற்றி ஜெயந்தி சங்கரின் கட்டுரை சென்ற இதழில் வெளியாகியிருந்தது. அது சில யோசிப்புகளுக்குக் கொண்டு சென்றது.

துயரம் என்பது எப்படி வரும். உடலால், மனதால், சூழ்நிலையால் இன்னும் எப்படி எல்லாம் வருமோ? அப்படியெல்லாம் வருகிறது செல்லம்மிணிக்கு. செல்லமணியின் துயர நதி - அவள் அனுபவம் ஓடும் நதியாக மாற்றம் அடைந்துள்ளது. நதி என்ற குறியீடு பெண்ணையும், அவள் அனுபவ எண்ணங்களையும் குறிப்பதாகவே தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

செல்லம்மிணியின் தற்கொலை எண்ணத்தில் ஆரம்பமான நாவல் அவள் நொண்டி புருஷ னோடு வாழ்வதாக முடிகிறது. நிறைய முரண்பாடுகள் நிறைந்தது இந்த நாவல். செல்லம்மிணியின் பல மாத அனுபவங்கள் நீண்ட அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. அவளோடு சில கண அனுபவங் கள்கூட நாவல் முழுவதும் வருகிறது. பல வருட வாழ்க்கை சில பாராக்களில் முடிகிறது. இப்படித் தான் வாழ்வு அமைகிறது. சொக்கன் என்ற தலித் பாத்திரம் வில்லனாக ஏன் சித்தரிக்கப்பட வேண்டும்? சொக்கன் செல்லம்மிணியை விட்டுச் செல்லக் காரணம் என்ன என்பது நாவலில் இல்லை. செல்லம்மிணியோடு இருக்கும் துயரத்தோடு அவன் செல்கிறான். நாவலை விட்டு வெளியேறுகிறான். சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராகவே அந்த அத்தியாயங்கள் நீள்கிறது. ஆனால் பின் அத்தியாயங்களில் கவுண்டர்களின் சாதி ஆதிக்கம் குறித்தும், தண்ணீர் பிரச்சனையில் ஆதிக்க வெறியோடு தலித்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலும் விவரிக்கிறது. அதில் கம்யூனிஸ்ட்டுகளும் சாதி பின்னணியோடு இருப்பதாக குற்றச்சாட்டை, விமர்சனத்தை முன் வைக்கிறார். இது சிறுபான்மையினருக்கு எதிரான குரலாக அமைந்துவிடும் அபாயத்தை தருகிறது.

நாவலில் செல்லம்மிணி அனுபவத்தைவிட நம்மை வியக்க வைப்பது என நாகாலாந்து கடிதங்களைச் சொல்லலாம். அது தனித்து நாவலாக வந்திருக்க வேண்டியது. செல்லம்மிணி வாழ்வோடு - எந்த வகையிலும் ஒட்டாதது. நவீன எழுத்தும் உத்தியும் புதிய அனுபவத்தோடும் ஆதி பொதுவுடைமை மக்களின் தொடர்ச்சியாகவும், கடிதங்கள் நன்றாக வந்துள்ளன. அப்புறம் மேரி, பக்ருதீன் உறவு வித்தியாசமாக அமைந்து உள்ளது. வயதானவர்களின் காமம், இளம் பெண் களின் தேவை என்ற உறவு நிலை - மிகச் சரியாக சித்தரிக்கப்படுகிறது. வக்கீல், செல்லம்மிணி உறவு கூட அப்படித்தான். ரமேஷ்குமார் அவள் வாழ்வில் வருவதை - அந்த வன்புணர்ச்சி நிகழ்வை விவரிப்பது - இன்னும் துயரம் மிக்க அவள் உடல் வலியையும், மனவலியையும் - இன்றும் பதிவு செய்ய வேண்டியது.

செகந்திராபாத் ஜுலியின் வாழ்வுகூட நமக்கு புது அனுபவமே. இன்னும் வடிவ நேர்த்தி கொண்டு நல்ல பெண்ணிய நாவலாக வரவேண்டியது அவரின் ஆண் பார்வை நாவலில் மிகுந்தே வருவதும்... நவீன கதை சொல்லல் முறையும் - வாசகன் அவரின் மற்ற நாவல்களில் கண்டடைந்ததே. என்றாலும் குறிப்பிடத்தக்க நாவல் ஓடும் நதி.


ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

- பால்கி மாநில செயலாளர் SNEA - BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு

சென்னை அம்ருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான ஓடும் நதி வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக் கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன். சென்ற திண் ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கு:ம தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடைமைவாதிகள் மீதான சாதீய விமர்சனம் போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட வேண்டிய விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.

நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப் போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டுவரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதற்பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுடைய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாகக் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறச்சூழல் அக்கறை பல சமயங்களில் வாசக ருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம் - இரசாயன நெடி - தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினைச் சொறிபவர்கள் யாராக இருந்தாலும் - இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினைப் பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.

செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்தக் காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லம்மிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர். படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாக ஏற்படும் அதிர்வுகளாக நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழி தெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடி சத்தங்கள் அதிக மாக இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப் பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்கிறாள் பெண் என்பதை இந்நாவலின் மையப்பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத் துக்களில் தன் மனசாட்சியை பேச வைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டுவந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.

நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப் பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதி யின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்தி ருப்பது லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லையோ நாவலின் மூலம் ஓடும் நதியின் இயல்லை உணர்ந்திருக்கிறோம்.

(ஓடும் நதி அமிர்தா, சென்னை ரூ. 150)




கண்காணிப்பு அரசியல்

சுப்ரபாரதிமணியன்
--------------------

அதிகாரத்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன் பீடம் தகர்ந்து போகாமல் இருக்கவும் தன் கீழ் உள்ள மக்களைக் கண்காணிப்பதும் அதிகா ரத்தைக் கட்டமைத்து அழுத்துவதும் சாதாரணமாக நடந்து வருவதாகும். இந்தக் கண்காணிப்பின் கீழ் எழுத்தாளர்களும் கலைஞர்களும் சுலபமாக ஆட் பட்டுவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கிளம்பும் எந்த சிறு பொறியையும் அதிகாரத்துவம் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இவ்வகை கண்காணிப்பின் அரசியலில் சிக்கிக் கொள்ளும் ஒரு எழுத்தாளனைச் சுற்றிய உலகைச் சித்தரிக்கும் " The lives of others" என்ற ஜெர்மானியப்படம் இவ்வாண்டின் ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கும் படங்களில் ஒன்றாகும்.

அரசாங்கமும், நிறுவனங்களும், கட்சிகளும் தங்களுக்கென்று கட்டமைக்கப் பட்டவை தவிர மற்றவற்றையெல்லாம் தங்கள் கட்டமைப்பை சீர்குலைக்கச் செய்யும் நடவடிக்கைகளாகக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். எந்தக் கலைவடிவத்தின் மையமும் கவனமாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்தக் கண்காணிப்பின் தீவிரத்தை அடக்குமுறை தனமாக எடுத்துக் கொள்கிறார்கள். உளவாளிகளும், கண்காணிப்பும் பொதுமக்களை ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. எல்லா வகை சூதாட்டங்களுக் குள்ளும் பகடைகளாக்கப்படுகிறார்கள்.

ஜெர்மன் ஜனநாயகக் குடியரசின் ரகசிய போலீஸ் துறையின் கண்காணிப்பு அரசியலைப் பற்றி இப்படம் பேசுகிறது. கிழக்கு ஜெர்மனியின் அரசு கண்காணிப்புப் பிரிவு ஸ்டஸி ஒரு லட்சம் ஊழியர்களும், இரண்டு லட்சம் ஒற்றர்களையும் கொண்டிருக்கிறது. தங்கள் குடிமக்களின் நடவடிக்கைகளை வெவ்வேறு தளங்களில் கவனிக்கிறது. எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து கொள்வது அதன் நோக்கமாக இருக்கிறது. கட்சிக்கு எழுத்தாளர்களும் கலைஞர்களும் தேவைப்படுகிறார்கள். அதேபோல் எழுத்தாளர்களும் கலைஞர்களும் இன்னும் இன்னும் கட்சிக்காகவே தேவைப்படுகிறார்கள். அவர்கள் ஆன்மாவைச் செம்மைப்படுத்தும் பொறியாளர்கள் அல்லவா? என்கிறார் இப்படத்தின் ஆரம்பக் காட்சியன்றில் முக்ய மந்திரியாக இருக்கும் கட்சியைச் சார்ந்த ஒருவர். சோசலிசத்தின் எதிரிகளை அடையாளம் காட்டுவது இவர்களின் பணி என்றும் சொல்கிறார். கட்சி அவர்களுக்கான கேடயமாகவும், வாளாகவும் இருக்கும் என்கிறார்.

இப்படத்தின் ஆரம்ப காட்சியில் மேற்கு ஜெர்மனிக்கு தப்பி ஓட முயன்ற ஒருவருக்கு உதவிய கிழக்கு ஜெர்மானியர் ஒருவர் விசாரணைப்படுத்தப்படுவதை விவரிக்கிறது. விசாரணையே சித்ரவதையாகவும் அமைந்துவிடுகிறது. வீஸ்லர் என்ற விசாரணை அதிகாரி உண்மை சொல்பவன் எப்போதும் ஒரே மாதிரியாகத் தான் இருப்பான். விசாரணையில் பொய் சொல்பவன் அதனை மனனம் செய்து வைத்து அப்படியே ஒப்பிப்பான். அதிலிருந்து தப்பிப்பதற்காக அழுவான் என்கிறான். வீஸ்லருக்கு டிரைமேன் என்ற நாடக ஆசிரியரை கண்காணிக்கும் வேலை தரப்படுகிறது. டிரைமேனின் வீட்டில் ரகசிய ஒட்டுக் கேட்புக் கருவிகள் பொருத்தப்பட்டு ஒட்டுக் கேட்கப்படுகிறது. டிரைமேனின் பெண் சிநேகிதியான டிரிஸ்டா மரியா ஒரு நாடக நடிகை. அவள் மேல் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினரும், அமைச்சருமான ஒருவருக்கு கண். டிரைமேன் கைது செய்யப்பட்டால் மரியா தனக்கானவள் ஆவாள் என எதிர்பார்த்து டிரைமேனை முடக்க கண்காணிக்க உத்தரவிடப்படுகிறது. வீஸ்லர் இந்த காரணத்தை அறிகிற போது கண்காணிப்பை அவர் அலட்சியமாகவே எடுத்துக் கொள்கிறார்.

டிரைமேன் கலகக்காரர் இல்லையென்றாலும், கட்சியை விமர்சிப்பவர்கள் கையாளப்படும் விதம் பற்றி மாற்று கருத்து கொண்டவர். அதை வெளிப்படுத்தி விடுபவர் கூட. ஜெர்ஸ்கா எனும் இயக்குனர் ஒருவர் கண்காணிப்பு பட்டியலில் இருப்பதை அறிந்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கிறார். டிரைமேனின் பிறந்த நாளுக்கு வந்து பரிசளிக்கும் ஜெர்ஸ்கா பின்னொரு நாளில் தற்கொலை செய்து கொள்கிறார். மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையில் டிரைமேன் 1970க்குப் பின்னால் கிழக்கு ஜெர்மனியில் தற்கொலை விகிதம் அதிகரித்திருப்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுவது கண்காணிக்கப்படுகிறது. (இப்படம் 1984க்கு பிறகு தளம் கொண்டிருக்கிறது) அதை எழுதியவனின் டைப்ரைட்டரின்மூலம் எது என அலசப்படுகிறது. டிரைமேன் பயன்படுத்தும் டைப்ரைட்டரை அவர் வீட்டில் ஒளித்து வைத்து பாதுகாக்கிறார்.

வீஸ்லர் கிறிஸ்டா மரியா நாடகக் கலையில் சிறந்து விளங்குபவள், கட்சி மந்திரிக்கு பலியாகி அவள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியமல்லை என்பதும் டிரைமேன் மீதுள்ள அபிமானமும் ஒட்டுக் கேட்பு விஷயத்தில் கட்சிக்கு சாதகமாக இருக்கும் வரையில் கண்காணிப்பு அறிக்கை தருவதில்லை. ஆனால் மரியாவின் மீது எரிச்சலடையும் மந்திரி அவளை போதைப் பொருள் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்து டிரைமேனின் நடவடிக்கைகள் குறித்து சித்ரவதை செய்கிறார். அவர் பயன்படுத்தும் டைப்ரைட்டர் எங்குள்ளது எனத் தெரிவித்து விடுகிறார். வீஸ்லர் அந்த டைப்ரட்டரை எடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் தேடும்போது இல்லாததாக்கி விடுகிறார். இது மரியாவை உறுத்த அவள் வாகனம் ஒன்றின் மீது விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறாள். வீஸ்லரின் மீது சந்தேகம் வந்து பதவியிறக்கம் செய்யப்படுகிறார். சோவியத்தின் புதிய செயலாளராக கார்பசேவ் நியமிக்கப்படுகிற நாளில் இது நடக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெர்லீன் சுவர் தகர்ப்படுவது இன்னொரு செய்தியாகிறது.

ஸ்டஸி ஆய்வக அலுவலகத்தில் டிரைமேன் தன் மீது கண்காணிப்பு நிகழ்த்தப்பட்ட விபரங்களை அறிந்து கொண்டு வீஸ்லர் டைப்ரைட்டரை மறைத்தும், கண்காணிப்பு விடயங்கள் சரியாக கட்சிக்குத் தராமல் தன்னைக் காப்பாற்றியிருப்பதை உணர்கிறார். வீஸ்லரை தேடுகிறார். இரண்டாண்டுகள் கழித்து டிரைமேன் "செனட்டா பார் ஏ குட் மேன்" எனும் நாவலை வீஸ்லருக்கு சமர்பித்து வெளியிடுகிறார். அதை வீஸ்லர் பார்க்க நேரிடுகிறது.

வீஸ்லர் எழுத்தாளர்கள் கலைஞர்களை கண்காணித்ததில் அவருள் ஏற்படும் மாற்றமோ, எதிர் உணர்வோ வெளிப்படாமல் இருந்தாலும் அவர்களுக்கு எதிரானவராக உருவாவதில்லை. இந்த தார்மீக ஆதரவு எல்லா காலங்களிலும் எல்லா தரப்பு களிலிருந்தும் எழுத்தாளர்கள் பெற்றிருக்கிறார்கள். சமீபத்திய ரோமன் பொலன்ஸ்கியின் "பியானிஸ்ட்" படத்தில் போலீஷ் யூத இசைக்கலைஞன் ஒருவன் மீதான ஜெர்மானிய அதிகாரியின் பரிவை இப்படித்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

இப்படத்தின் காட்சியன்றில் டிரைமேன் பித்தோவானின் இசையைப்பற்றிச் சொல்கிறான்: "பித்தோவனின் இந்த இசையை முழுக்கக் கேட்டுக் கொண்டிருந்தால் நான் புரட்சியை நடத்தி முடிக்க மாட்டேன் என்று லெனின் சொல்லியிருக்கிறார்" இந்த இசையின் தாக்கம் வீஸ்லரை பெருமளவில் பாதித்திருக்க வேண்டும். எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக ஆன்மாவின் அடித்தளங்கள் என்பதையும் புரிந்திருக்க வேண்டும். வீஸ்லரிடம் ஒரு சிறு பையன் லிப்ட்டின் ஒரு நிமிட பயணத்தில் கேட்கும் கேள்வியும் அவரை வெகுவாக சிந்தனைகளுக்குள் செலுத்தியிருக்க வேண்டும்: "நீங்கள் ஸ்டஸி ஆளா. ஸ்டஸி ஆட்கள் சாதாரனவர்களை சித்ரவதை செய்வார்களா.." வீஸ்லர் பதில் சொல்ல இயலவில்லை. அந்த பதிலைத் தான் மரியாவின் மீதுள்ள இரக்கமாக்குகிறார்.

அவள் தனது மேம்பட்டக் கலையைக் காப்பாற்றிக் கொள்ள கட்சிக்காரர் ஒருவருக்கு பலியாகத் தேவையில்லை என்பதும் இப்படித்தான் இருக்க வேண்டும். டிரைமேனைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. டிரைமேனின் ஒரு நாவல் அவருக்கு சமர்ப்பிக்கப்படும் அளவு அவர் தன்னை உயர்த்திக் கொள்வது கட்சி, உத்யோகம், தனிமனித இழப்பு இவற்றையெல்லாம் மீறி நிகழ்வது தான். இதை எதிர்பார்த்து அவர் செய்ததில்லை. ஒடுக்கப்படும் நிலைகளில் சுதந்திரத்தை நாடும் தனிமனிதர்களின் விருப்பங்களின் குறியீடாக வீஸ்லர் தென்படுகிறார். தார்மீக ஊழலும் கறைபடிதலும் மீறி சிலர் நிற்க முடிகிறது. ஸ்பீல்பர்க்கின் "ஸ்சிண்ட்டலர்ஸ் லிஸ்ட்"டில் இடம் பெறும் மனிதனும் இவ்வகைச் சார்ந்தவன் தான். இவர்கள் கண்காணிப்பு அரசியலுக்கு எதிரானக் கலகக்காரர்களாகிறார்கள்.




சனி, 24 ஜனவரி, 2009

ஈரம் : சிறுகதை : சுப்ரபாரதிமணியன்





திண்ணை

ஈரம்
------
சுப்ரபாரதிமணியன்
----------------
கதவை அடைப்பதற்கான நேரம் வந்து விட்ட்டது. இந்த நேரம் இப்போதெல்லாம் முன்னதாகவே வந்து விடுகிறது. மாலை ஆறு மணிக்கு என்று முன்பிருந்தது. சமீபமாய் குறைந்து இன்னும் முன்னதாகவே என்றாகிவிட்டது. கதவை அடைப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை சிவக்கண்னனும் உணரந்திருந்தான்.

செல்வி கதவையடைப்பதற்கு முன் பனியன் கம்பெனியின் வேலை முடிந்து போதும் வேலை என்று புறந்தள்ளி விட்டு வருபவள்தான். ஆனாலும் ஏழெட்டு மணியாகி விடுகிறது. நன்கு இருட்டின பின்பு வந்து கதவைத் தட்டும் பேர்வழியாக மாறி விட்டாள். அவன் கதவைத்திறக்கிற ஒவ்வொரு நாளும் கத்துவது இப்படித்தான் இருக்கும். : " முந்தியே வந்து தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்ற உசிரெ வாங்கறே"

அணையிலிருந்து வரும் பூச்சிகளிலிருந்து தப்பிப்பதற்காகக் கதவை அடைக்க வேண்டியிருக்கும். அணையைச் சுற்றியிருக்கிற எல்லா வீடுகளிலும் இப்படித்தான். முன்பெல்லாம் கொசுவை அடிப்பது போலத்தான் நினைத்து உடம்பில் ரத்தக்கறைகளைக் கொண்டிருந்தான். கொசுக்கள் ரொம்பவும்தான் கொழுத்துத் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டிருந்தான். அவை கொசுக்களல்ல என்று தெரிந்தற்கே பல மாதங்களாகி விட்டன. அவை ஏதோவகைப் பூச்சிகள் , ரசாயனப்பூச்சிகள்ள்.

அணையில் தேங்கி நிற்கும் ரசாயனக் கழிவுகளைத் தின்று பெருத்து விட்டன. ரசாயனக்கழிவுகளின் மினுங்கும் வர்ணங்களில் எவையும் வீழ்ந்து விடும். இந்தப்பூச்சிகளும் விழுந்து எழுகிற போது ராட்சதையாக மாறி விடும். இல்லாவிட்டால் எப்படி இவ்வளவு žக்கிரம் கொழுக்கும். விவசாயத்திற்கென்று கட்டப்பட்ட அணை. சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்தோடி வந்து நிற்கிற இடமாகி விட்டது.

. அணை நிரம்பி விட்டது . வெடிக்கவிருக்கும் வெடிகுண்டைப்போல தகதகத்து நிற்கிறது. மதகுக் கதவுகள் இற்றுப் போய் விட்டன. அணைக்கதவுகளித் திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால் நீர் மெல்ல மெல்ல வழிய ஆரம்பிக்கும். அணை நிரம்பிய பின்பு திறந்து விடாமல் இருக்க முடியாது. சமீபமாய் பெருத்த மழை பெய்து விட்டது. திறந்து விட வேண்டாம் என்று கரையின் ஓரத்தில் இருக்கும் விவசாயிகள் கதறுகிறார்கள். சாயக்கழிவு தண்­ர்ரோடு கலந்து இருபது மைல்களுக்குப் பரவ எல்லாம் சாயமாகி விடுகின்றன என்று தூரத்து ஊர்காரர்களெல்லாம் அலறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிவக்கண்ணனுக்கு எல்லாம் மூழ்கிப்போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். சாயங்களை அடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக மனிதர்களை கும்பல்கும்பலாக அடித்துக் கொண்டு போகட்டும் என்றிருக்கும்.

கதவை அடைத்து விட்டால் இருக்கும் அசௌகரியங்களில் ஒன்று தண்­ர் லாரிகளின் பிரத்யேக ஓசையும் தட தடப்பும் சரியாகக் கேட்க முடியாமல் போவதுதான். அ€ணைக்கட்டும், சுற்றியுல்ள நிலமும் சாயம் பூத்து விட்டன.குடிப்பதற்கு லாயக்கற்று போய்விட்ட போது நாற்பது கி மீ க்கு அப்பாலிருந்து தடதடத்து தண்­ர் லாரிகள் வந்து போகின்றன. குடிக்கிற தண்­ரை ஏற்றி வரும் தண்­ர் லாரிகள். கதவை அடைத்து விட்டால் கதவுகளுக்குப் பின்னாலும் ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரம் கேட்டு விடுவதால் தண்­ர் லாரிகளின் ஹாரன் சப்தங்கள் சில சமயங்களில் கேட்காமல் போய் விடுவதுண்டு. யாராவது கதவைத் தட்டி சொல்லி விட்டுப் போங்களேன் என்று சிவக்கண்னன அலறியிருக்கிறான். ரசாயனப்பூச்சிகளின் ரீங்காரத்துக்குள் எல்லா கதறல்களும் அடக்கம் என்பது போலாகிவிட்டது.

ரசாயனப்பூச்சிகளை விரட்டுவதற்காக ஆளுக்கொரு உபாயம் வைத்திருக்கிறார்கள். சிவக்கண்ணனுக்கு எல்லாமே வினேதமாகத்தான் தெரிந்தன. கைகளை அப்படியும் இப்படியும் ஆட்டி பயமுண்டாக்கி துரத்திவிடலாம் என்றுதான் முன்னம் நினைத்திருந்தான். ஆனால் தேனடையை மேய்க்கும் தேனீக்கள் மாதிரி கொசகொசவென்று உடம்பை மொய்ப்பது சாதரணமாகிவிட்டது. சிவக்கண்ணனுக்குத் தெரிந்த ஒரே வித்தை வேப்பிலை புகை போடுவதுதான். முன்பெல்லாம் கொழுந்தை விட்டு விட்டு முற்றின இலைகளய்க் கொண்டு வந்து போட்டு புகையெழுப்புவான். கமறலுடன் அறைகள் முழுக்கப் பரவும். இப்போதெல்லாம் எவ்வளவு அடர்த்தியாய் புகை கிளம்பினாலும் கமறல் வருவதில்லை. முத்துசாமி செய்யும் வித்தையும் செலவும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. டுயூப்பிலிருந்து பற்பசை மாதிரி எதையோ பிதுக்கிக் -காள்வான். உள்ளங்கையில் வைத்து நசுக்கிக் கொண்டு முகர்ந்து பார்ப்பான். சரசரவென்று கைகள் மற்றும் கால்களில் பரவலாகத் தேய்த்துக் கொள்வான்.

" பறக்கிற டைனோசர் இருக்கா'

" இருந்திருக்கும் .இல்லீனன்ன நாலெட்டு வச்சு ஒரு தெருவையேன் அடச்சிக்குற டைனசரை சினிமாவிலெ காமிப்பாங்களா "'. அவன் டுயூப் பிதுக்கலுக்கென்று செலவு செய்யும் தொகை செல்வியின் ஒரு வாரச் சம்பளத்திற்கு ஏக தேசம் வந்திருந்தது. லாரித்தண்­ரை நம்பாமல் மினரல் வாட்டர் கேனை ஊருக்குள் கொண்டு வந்தவன் முத்துசாமி என்ற பெயரும் பெருமையும் ஊருக்குண்டு. சிறுவாணித்தண்­ரின் சுவையை விட மினரல் கேன் தண்­ரின் சுவை அவனை திணறடித்தது என்பது சமீப சாதனை. இன்னொரு சாதனைச் செய்தி சமீபமாய் பதிந்தது என்னவென்றால் ஆயுத பூஜையின் போது செல்வி அவள் வேலை செய்யும் பனியன் கம்பனியிலிருந்து வழக்கமாய் கொண்டு வரும் பத்து படி பொட்டலத்துடன் ஒரு

டி சட்டையையும் கொண்டு வந்தது. கிடைத்த டி சட்டையைப் போடப்போகிற கற்பனை அவனைச் சுத்தமான அணை நீருக்குள் நீச்சடிக்க இறக்கி விட்ட மாதிரி இருந்தது. டி சர்டின் நீலமும் பச்சையும் சிவப்பும் கலந்த வர்ணக் கல€வை அவனுக்குப் பிடித்திருந்தது. " நம்ம ஊரு அணையில உங்களை முக்கி எடுத்த மாதிரி இருக்கீங்களோ" ரசாயனப் பூச்சியென்று அவனை அவள் சொல்லாதது ஆறுதலாகத்தான் இருந்தது.

தண்ணிர் லாரி நேற்றுதான் வந்திருந்தது.இன்றைக்கு வராது என்பது மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. கதவைச் சாத்திவிட்டுப் புகை போடலாம்.. ஆரம்ப நிலையிலானக் கமறலைத் தவிர்த்து விட்டால் மூச்சு முட்டுவது கூடத் தெரியாது. கமறல் இல்போதெல்லாம் அபூர்வமாகத்தான் வருகிறது.

வேப்பிலைகளை மூலையில் சேர்த்திருந்தான். நேற்று நல்லூர் போனபோது வேப்பிலைலளைப் பறித்து பிளாஸ்டிக் பை ஒன்றில் நிரப்புவதற்கென்று ரொம்பதூரம்தான் போக வேண்டியிருந்தது. பக்கத்து கிராமங்களில் இருக்கும் மரங்களெல்லாம் மொட்டையாகி விட்டன. நல்லூர்ப்பக்கம் போகிற போது வெளுத்ததாய் சில தென்படும் விளக்கெண்ணெயைக் கண்களில் ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டியிருக்கும். வேப்பங்குச்சிகளையும் கொஞ்சம் ஒடித்துப் போட்டுக் கொள்வான். பற்கள் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டன. கிருஸ்ணமூர்ர்த்தி பிரஸ் போட வேண்டாம். கைகளில் விளக்கவும். பற்பசை வேண்டாம் .ஆயுர்வேதப் பல்பொடி போதும். வேப்பங்குச்சி குறைந்தது நான்கு நாட்களுக்காகும். ஒரு முனையை ஒரு நாள் என்று ஆரம்பித்து நான்கு நாளில் பிடி அளவிற்கு வரும் வரையில் உபயோகப்படுத்துவதில் தன்னைத் தேர்ச்சியுள்ளவனாக்கிக் கொண்டான்.

புகை போடும் மண் சட்டிகள் அடிக்கடி உடைந்து போகின்றன.. சூடான நிலையில் அவற்றை கையில் தொடுவதும் , நகர்துவதும் சிரமமாக இருந்தது. பழைய ஒடுக்கு விழுந்த அலுமினியச் சட்டியை சமீபமாய்ப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தான். செத்த எலியைத் தூக்குவது மாதிரி அலுமினியச் சட்டியைப் பயன்படுத்துவது அவனுக்குச் சுலபமாக இருந்தது..

வேப்பிலை பழுப்பு நிறத்துடன் துவண்டு போய் விட்டது. பிளாஸ்டிக் பையிலிருந்து கொட்டும் போது காய்ந்த இலைகளுக்கான சரசரப்பு வந்து விட்டது. காகிதங்களைப் போட்டு தீ மூட்டினான். சோம்பலுடன் எரிய ஆரம்பித்தது. ஒரு சொட்டு விளக்கெண்ணை அல்லது பெற்றோல் இருந்தால் சுலபமாகப் பற்றிக் கொள்ளும். குனிந்து ஊத சாம்பல் துணுக்குகள் முகத்தில் தெறித்தன.

மெல்ல புகை பரவ ஆரம்பித்ததும் முன் பக்க அறையின் இடது மூலையில் வைத்தான். உள் அறைக்குள் மெல்ல புகை பரவும் . தூக்கம் வரவில்லையென்றாலும் கண்களை மூடிக்கொண்டு கிடக்கல்லாம். ரசாயனப் பூச்சிகள் எங்காவது மூலைகளில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அவனே அவனைப் பாராட்டிக்கொள்வதைப் போல் வலது கையின் மேற்பகுதியைக் கொசுவை அதட்டுவது போலத் த்ட்டிக் கொண்டான். மெல்ல புகை ஆரம்பித்தது. லேசான கமறல் வந்தது ஆச்சர்யமாக இருந்தது. புகையினுள் மூழ்க ஆரம்பித்தான். இடது கையில் வந்து தைரியமாக உட்கார்ந்தது ஒரு ரசாயனப் பூச்சி. புகையை விழுங்கி அது சிவக்கண்ணனின் பாதி உடம்பிற்கு வந்தது. வாயைத் திறந்த போது புகை வெளிவந்தது. கண்களைச் சிமிட்டிக் கொண்டு அது வாயைத் திறந்தது.



* பத்திரிக்கையாளர் சந்திப்பிற்காக சிவக்கண்ணனை உட்கார வைத்திருந்தார்கள். பத்திரிக்கையாளார் சங்கத்தின் பெயர் அவன் தலைக்குப் பின்புறம் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அடைபட்டிருந்தன. ஏகதேசம் நாற்காலிகளில் அடைபட்டிருந்தவர்களின் கைகளில் இருந்த கேமிராக்கள் ஒரே சமயத்தில் ஒளிர்ந்து நின்றன. வந்து சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் வெவ்வேறு நேரங்களில் வந்த காரணத்தால் அவர்கள் கேட்டது ஒரே மாதிரியான கேள்விகள் சிவக்கண்ணனுக்கு அலுப்பைத் தந்திருந்தது.

சிவக்கண்ணனுக்கு கால்களில் ஒரு வலி ஆரம்பித்திருந்தது. வலது காலை எடுத்து இடது காலின் மேல் போட்டுக் கொண்டான். ஒருவகை ஆசுவாசமாய் பெருமூச்சு வந்தது.. பெரும்பான்மையோர் கேட்ட கேள்வி; :"ரசாயனப் பூச்சியை இந்த வெற்றிப் படத்தில் நடிக்க வைப்பதற்காக நீங்கள் எப்படி அதன் மொழியை புரிந்து கொண்டு கட்டளையிட ஆரம்பிதீர்கள் "

ரரசாயனப் பூச்சியைப் பார்த்தான், தனது இடுப்பு உயரத்திற்கு இருந்தது. முப்பது நாற்பது கிலோ எடையாவது இருக்கும். சற்று சிரமப்பட்டுதான் இடுப்பில் அதை வைத்து இடுக்கிக் கொண்டு ஸ்டுடியோவிற்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கும் சென்றிருந்தான். அதன் கண்களில் ஒளிர்ந்த ஒளியில் இருட்டான பகுதி வெளிச்சமாகி இருந்தது. ஏதாவது சிரமம் வருகிற போது ராட்சத பூச்சியின் நகங்களச் சுலபமாக தற்காப்பிற்கென்று பயன்படுத்திக் கொள்ளலம். அவ்வளவு சௌகரியமான நீளத்தில் இருந்தது.

" படத்தில் ராட்சத மனிதர்களியெல்லாம் செத்த எலிகளத் தூக்கிப் போடுவது போல போடுகிறாயே ரசாயனப் பூச்சியே, உனது அன்பு முகத்தை தடவலாமா." பெண் நிருபர் ஒருத்தி கேட்டாள். அவளின் கண்களில் ஒரு வகை பயம் இருந்தது. கேள்விகளைக் கேட்டு விட்டு நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். " என்ன எதிர்பார்க்கிறிர்கள். எனது ராட்சத பூச்சி உங்களை நெருங்கி முத்தமிட வேண்டுமா அல்லது பலத்காரம் செய்ய வேண்டுமா " சிவக்கண்ணன் ஆங்கிலத்தில் கேட்டபடி முறுவலித்தான். பெண் நிருபரும் சிரித்தாள். லேசான லிப்ஸ்டிக் அவளின் உதட்டை வžகரமாக்கியிருந்த்து. அவள் போட்டிருந்த காலர் சட்டையில் பறந்து கொண்டிருந்தது ஒர் பட்சி. ரசாயனப் பூச்சி காலர் சாட்டையில் இருந்த பட்சியஈப் பார்த்துக் கொண்டிருந்தது. உடம்பை அசைத்துக் கொண்டிருந்தாலும் பட்சி சற்றே பறப்பது போலக் க'ட்சியளித்தது.

" நீ துவம்சம் செய்ய யார் யாரோ இருக்கிறார்கள். தீயது தோற்கும்." என்ற தர்மத்தை நீயும் வெற்றி பெற்றுச் சொல்லிக்கொண்டிருக்கிறாய் இப்படத்தில். ஆனால் நீ ரசாயனப் பூச்சியாக இல்லாமல், கிருஸ்ணப்பருந்தைப் போலவோ, ராட்சதப் புறாவைப் போலவோ இருந்திருந்தால் உனக்கு கோவில் கட்டலாம். "கிழ நிருபரின் தாடி ஏக தேசம் வெளுத்திருந்தது மீசைக்கு மட்டும் டை அடித்து அழுத்தமான கறுப்பாக்கியிருந்தார். அவர் போட்டிருந்த முரட்டுக் கதர் சட்டையின் அழுக்குச் சட்டைக்குப் புது நிறத்தைக் கொண்டு வந்திருந்தது.

" சினிமாவில் நடிக்கிற எல்லோருக்கும் கோவில் கட்டி விடுவீர்கள் போலிருக்கிறது. கதாநாயகர்கள், நாயகிகள் மூலஸ்தானத்தில் இருக்கும் போது இது போன்ற பட்சிகளும் ராட்சதபறவைகளும் மூல ஸ்தானத்தைப் பிடிக்க முடியாதே " சொல்லி வைத்த மாதிரி எல்லா காமிராக்களும் மிளிர்ந்து மறைந்தன. வீடியோ காமிராக்களின் பிரேமிற்குள் ரசாயனப்பூச்சியின் ஒளிரும் கண்களை அடைத்தார்கள். எல்லோரும் வேலை இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் போல அவசர கதியில் எழுந்தார்கள்..

" ராட்சத மனிதர்களையெல்லாம் அலாக்காகத் தூக்கிப் போடும் இப்பூச்சி ரசாயன அணைக்கட்டை வாரியெடுத்து எங்காவது கொண்டு போய் விடலாம் ". பூச்சியை நெருங்கியவர் சிவக்கண்ணனைப் பார்த்தபடி சொன்னார். திகைப்பில் பூச்ச்சியின் கண்கள் மிளிர்ந்தன.

" தற்கொலை செய்து கொண்ட நடிகையின் அம்மா பேட்டி அடுத்த ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. நட்சத்திர ஓட்டலில் நடிகையின் தற்கொலை பற்றின கிசுகிசுக்களுக்கு முறையான பதில் கிடைக்கலாம். நடிகையின் குடிப்பழக்கமும், மூன்றாவது காதலன் அவளைத் திருமணம் செய்து கொள்ள தாமதப்படுத்தியது பற்றி நிறைய ஹேஸ்யங்கள் கிடைக்கும். " கலைந்து போவதில் žரான வேகம் இருந்த்து. பெண் நிருபர் ரசாயனப் பூச்சியின் அருகில் வந்தாள். அவளின் காலர் சட்டையில் இருந்த பட்சி மெல்லப் பறந்து கொண்டிருந்தது. ராசாயனப்பூச்சியின் சொரசொராக் கன்னத்தைத் தடவினாள். பூச்சிகிறங்கிப்போனது போல கண்களை மூடியிருந்தது. கண்களைத்திறக்காதபடி இறுக்கியிருந்த்து. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடிமறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியிருந்தது. கண்களைத் திறக்காதபடி இறுக்கியிருந்தது. வெடுக்கென்று வலது பக்க இறக்கையொன்றை பிய்த்தெடுத்தாள். பூச்சி ஒருவகை வலியை மூடி மறைப்பதற்காக இன்னும் கண்களை மூடியபடியே இருந்தது. " சினிமாவில் நடித்த ராட்சச பூச்சி ஆயிற்றே.. ஞாபகமாக இருக்கட்டுமே " . இன்னொரு நிருபர் சற்றே முதிர்ந்த இறக்கையினைப் பிய்த்தெடுத்தார். ஒருவகை வரிசை அமைந்து விட்டது. வருகிற ஒவ்வொருவரும் ராட்சதப்பூச்சியின்யைத் தொட்டு அவர்களின் கைவிரல்களின் வலிமைக்கேற்ப அதன் உடம்பிலிருந்து எதையாவது பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். " பெர்லின் போயிருந்த போது கிழக்கு செர்மனிக்கும், மேற்கு செர்மனிக்கும் இடையிலான பெர்லின் சுவரின் இழந்த இடிந்த துண்டை எடிடுத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். இதுவும் இருக்கட்டுமே" ராட்சதப்பூச்சி அதன் இறகுகளை மெல்ல இழந்து முழு நிவாணமாகிக் கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒளி வலுவிழந்திருந்தது. ஒரு வாகை சோம்பல் தன்மையுடன் கண்களைத் திறந்து மூடியது. கண் புருவத்திற்கு மேலிருந்த மயிர்களும் உதிர்ந்திருந்தன. சமையலுக்கென்று சுத்தம் செய்யப்பட்ட கோழி போல் பூச்சியின் உடம்பு நிர்வாணமாகிச் சிறுத்தது. ஓங்கித் தட்டினால் கொசுவைப் போலச் சிறுத்துவிடும் என்றபடி வலது கையினை முழுபலத்தையும் பிரயோகித்து கீழிறக்கினான்.

வேப்பிலை புகை முழுசாகக் குறைந்து போயிருந்தது. கண்களைத்திறக்காதபடி எரிச்சல் அப்பியிருந்ந்தது. வலது கையை உயர்த்தித் தாழ்த்தியபோது சற்றே ஈரம் தென்பட்டது. கொசு ஒன்றின் ரத்தக் கசிவு பிசுபிசுப்பாக ஒட்டியிருந்தது.



சுப்ரபாரதிமணியன் . subrabharathi@gmail.com

செவ்வாய், 13 ஜனவரி, 2009

சனி, 3 ஜனவரி, 2009

கனவு "நனவு" ஆனது மலயாளத்தில்

கனவு "நனவு" ஆனது மலயாளத்தில்
----------------------------------------------------



செவ்வாய், 30 டிசம்பர், 2008

"உயிர் எழுத்து" ஓராண்டு பயணம்




சுப்ரபாரதிமணியன்
---------------------



படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில் 10 முதல் 15 சிறுகதைகளே இடம்பெரும் வாய்ப்புள்ளது. அதுவும் அந்த இலக்கிய இதழின் குழு சார்ந்தவர்களின் படைப்புகளாகவே பெரும்பாலும் அவை இருக்கும். இந்நிலையில் "உயிர் எழுத்து" கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெளியிட்டிருப்பது ஒரு சாதனையாகவே நிகழ்ந்துள்ளது. படைப்பிலக்கியத்தளத்தில் சிறுகதைப் படைப்பாளிகளுக்கான மேடையாகி உள்ளது.


வெகுஜன இதழ்களில் சிறுகதைக்கான பக்கங்கள் சிறுத்துவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபாத்தில் வசித்த போது ஒரு தெலுங்கு பத்திரிக்கை "இன்லெண்ட் லெட்டர்" சிறுகதையொன்றை வெளியிட்டது. கடித வடிவ கதை. கதையை லே அவுட் செய்த ஓவியர் 'இன்லெண்ட் லெட்டர்' வடிவில் அதை வெளியிட்டிருந்தார். அடுத்த வாரம் 'இன்லெண்ட் லெட்டர்' கதைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதைப் பார்த்த அதன் ஆசிரியர் எழுத்தாளரிடம் "இன்லெண்ட் லெட்டரில்" எழுதப்படும் கதைகளை வரவேற்பதாக எழுதினார்.பிறகு இன்லெண்ட் லெட்டர் கதைகள் அதில் வெளிவந்தன.

அதில் இருந்த சௌகரியம் சிறுகதைக்கான பக்க அளவை குறைத்து விட்டார். தொடர்ந்து அவ்வகைக் கதைகள் அந்த இதழில் பிரசுரமாகின. பிறகு கொஞ்ச நாள் கழித்து "போஸ்ட் கார்ட்" கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்பதாக அந்த ஆசிரியர் அறிவித்தார். பிறகு நிறைய இன்லெண்ட் லெட்டர் கதைகளை அடுத்து போஸ்ட் கார்டு கதைகள் பிரசுரமாகின.அப்போது கல்கியில் "ஹைதராபாத் பக்கம்" என்றொரு பத்தி எழுதி வந்த நான் அதில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழிலும் இன்லெண்ட் லெட்டர் கதைகள், போஸ்ட் கார்டு கதைகளை வெகுஜன இதழ்கள் வெள்யிட்டன. இப்போது 20 செகண்ட் கதைகள் என்றும் வந்துவிட்டன. சிறுகதைக்கான இடம் என்ன என்பதை அவை நிர்ணயித்துவிட்டன. இச்சூழலில் " உயிர் எழுத்து " கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். சிறுகதைக்கு அது தரும் இடம் குறிப்பிடத்தக்கது.


இதில் இடம்பெரும் படைப்புகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே உள்ளன. பின்நவீனத்துவ சமூகத்தில் பெண்கள், தலித்துகள், அரவாணிகள், லும்பன்கள் என்ற நிலையிலான விளிம்பு நிலை மக்களைப் பற்றியே அவை பெரும்பாலும் பேசுகின்றன. அதை எழுதியிருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கிறவர்களாக இல்லாமல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து வந்தவர்களாகவும், அவர்களின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


விளிம்புநிலை மக்களின் படைப்புகளை பிரதானப் படுத்துகிற பின்நவீனத்துவமும், அதன் அடித்தள கோட்பாடான மார்க்சியம் குறித்த விவாதத்திற்கான களத்தையும் உயிரெழுத்து விவரித்துள்ளது. இடதுசாரி கவிஞர்களின் கலாச்சார. அரசியல் தள பங்களிப்பை பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் சூழலில் மார்க்சிய தத்துவ புணருத்தாரணத்தின் அவசியம் பற்றிய விவாதங்களையும் அவை உள்ளடக்கியுள்ளன.


உலகமயமாக்கல் பத்திரிக்கைத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் தொடங்கிவிட்டது. நிறுவனப்பட்டிருக்கிற பெரிய வணிக இதழ்களுக்கே அவை சவாலாக அமைந்துவிட்டிருக்கின்றன. இச்சூழலில் சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும். உழைப்பும் உயிர் எழுத்தாய் நிறுவப்பட்டிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது ஆரம்ப கால நடவடிக்கைகளுடன் கலாச்சார தளத்தில் நிழைந்த சுதிர் செந்தில் ஒரு தேர்ந்த வாசகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.குறிப்பிடத்தக்க கவிஞராகவும் இரு கவிதைத் தொகுதிகள் மூலம் நிறுவியவர். இந்த இதழின் மூலம் தன்னை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபித்திருக்கிறார். இன்றைய பன்னாட்டு நிறுவன பத்திரிக்கை முதலீட்டிற்கு எதிரான ஒரு சிறு கலகக்குரலாக சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும், உழைப்பும் இந்த பத்திரிக்கையில் படைப்பிலக்கிய தளத்தில் நிறுவப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.



( - சென்னையில் நடைபெற்ற "உயிர் எழுத்து" முதலாண்டு நிறைவுவிழா பேச்சு:சுப்ரபாரதிமணியன்.)


விழாவில் 8 புதிய நூல்கள்

வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இன்குலாப், முருகேசபாண்டியன்,

கரிகாலன், ஆதவன் தீட்சண்யா, மருது, சுதீர் செந்தில்,

நா முத்து குமார்,ரவிசுப்ரம­யன்,பாரதிகிருஸ்ணகுமார், சை.பீர்முகமது, பாவண்ணன்

உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

" உயிர் எழுத்து " திருச்சியில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழாகும். ஆண்டு சந்தா ரூ 240/ முகவரி: 9, முதல் தளம்,

தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1

ஓடும்நதி

வல்லரசுக் கனவுகளும் அல்லலுறும் பெண்களும்:சுப்ரபாரதிமணியனின் " " படைப்புலகம்

கீரனூர் ஜாகிர்ராஜா




தமிழ்ப் புதினங்கள் இன்றைய நிலை ஆரோக்கியமானதாகவும் நம்பிக்கையளிக்கக் கூடிய விதத்திலும் இருக்கிறது. வெவ்வேறு இலக்குகளில் சுற்றிச்சுழன்று மானுட வாழ்வின் சகல கூறுகளையும் அவதானித்து வாசகனுக்கு ஒரு பரந்த அனுபவப் பரப்பினை அவை தரிசிக்க வைக்கின்றன. சமகாலப் படைப்பாளிகள் பலரும் தொடர்ச்சியாக எழுத தமிழ்ப் புதினப் பாதையை žராக்கித் தந்துள்ளனர்.


சுப்ரபாரதிமணியன் திருப்பூரை வாழ்விடமாகக் கொண்டு தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியாக இயங்கி வருபவர். 1970-களில் சுகாதாரமான பூமியாக இருந்த திருப்பூர் நகரில் பனியன் கம்பெனிகள் துளிக்கத் தொடங்கியபோது அடித்தள மக்களின் வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஓரளவு தீர்வு கிடைத்தது. ஒன்றிரண்டாகப் பெருகிய கம்பெனிகள் ஒரு கட்டத்தில் திகைப்புக்குரிய அளவில் வளர்ச்சியுற்று நகரத்தையே வசப்படுத்திவிட்டன. விவசாயம் அழிந்தது. விளைநிலங்கள் வணிக வளாகங்களாயின. நொய்யலாறு கழிவுகளின் பிறப்பிடமாயிற்று. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் திருப்பூருக்கு புலம் பெயர்ந்தனர். இவர்களுடன் வெளிமாநிலத்தவர்களும் இணைந்தனர். இடநெருக்கடி, குடிநீர்ப் பஞ்சம், சுற்றுச்சூழல் மாசுகள் அதிகரித்தன. திருப்பூர் நகரம் திக்கித் திணறிற்று. கம்பெனிகளோ சிப்டுகளை அதிகப்படுத்தின. தாலி கிடைத்துவிடுமெனும் நம்பிக்கையில் பனியன் கம்பெனியின் கொட்டடிகளில் இளம்பெண்கள் சுமங்கலித்திட்டம் என்ற வருடாந்திர ஒப்பந்தங்களின் பெயரில் அடிமைப்பட்டனர். சமூக அக்கறையாளர்கள், தன்னார்வலர்கள், இலக்கியவாதிகள் இதன்மேல் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர். சுப்ரபாரதிமணியன் இவர்களுக்கிடையில் தன் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்து கொண்டிருப்பவர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இவரின் " தேநீர் இடைவேளை " என்னும் நாவல் திருப்பூர் நகரத்தின் பிரச்சனகளையும், கோவை மாவட்டத்தின் தொழிற்சங்க வரலாறையும் வாசகர்களுக்கு நெருக்கமாக அறிமுகம் செய்த படைப்பு. அந்நாவல் முழுவதும் கடிதங்களே இடம் பெற்றிருந்தன. " ஓடும்நதி" என்னும் இந்நாவலிலும் கடித உத்தியை பயன்படுத்தி நாவலின் ஒரு பகுதியை நகர்த்துகிறார் சுப்ரபாரதிமணியன்.


செல்வன்- செல்லம்மிணி இருவரின் நட்பு கடிதங்களின் வழியே விரிகிறது. செல்லம்மிணி தன் தந்தையுடன் கொங்குமண்டலத்தின் உள்ளொடுங்கிய கவுண்டர் இனத்தின் ஆதிக்கப் போக்குமிக்கதொரு கிராமத்தில் வசிக்கிறாள். தண்­ர் பிரச்சனை, காமுகர்களின் வெறியாட்டம் இவர்களை கம்பெனிக்கு கொண்டுவந்து சேர்க்கிறது. பவர்லூம் கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறாள் செல்லம்மிணி. தலைக்கு குளித்த ஜந்தாம் நாள் அயர்ந்துறங்கும் வேளையில் பழைய பாத்திரக்காரனால் பலாத்காரத்துக்குள்ளாகிறாள். மீண்டும் கம்பெனி வேலைக்கு செல்கையில் செல்வனை சந்திக்கிறாள். கம்பெனியில் சொக்கன் என்பவனுடன் நெருங்கிப் பழகி செகந்திராபாதுக்கு அவனுடன் சென்று மூன்று மாதகாலம் சேர்ந்து வாழ்கிறாள். சொக்கன் பிரிகிறான். அப்பாவின் முகத்தில் விழிக்க சங்கடப்பட்டு சித்தப்பாவிடம் அடைக்கலமாகிறாள். சித்தப்பா சிறிது காலம் அவளுக்கு ஆதரவளித்து மீண்டும் அவளை அவளின் தந்தையிடம் ஒப்படைக்கிறார். கால் சூம்பிய ரங்கண்ணனிடம் செல்லம்மிணியை சேர்ப்பித்துவிட்டு அவரும் மரணிக்கிறார். தன்னை சிதைத்த பாத்திரக்காரனை அவள் மீண்டும் சந்திக்க நேர்கிறது. அவன் அவளை மீண்டும் žண்டுகிறான். குழப்பத்தினூடாக உள்ளூர் வக்கீல் ஒருவரிடம் வேலைக்குச் செல்கிறாள். கல்வியறிவில்லாத பலருக்கு கடிதம் எழுதிக்கொடுத்து மனநிறைவடைகிறாள். இதற்கிடையில் நாகாலாந்திலிருந்து திரும்பும் செல்வன் மல்லிகா என்பவளைத் திருமணம் செய்துகொண்டு உள்ளூரில் தமிழ்வழிக்கல்விப் பாடசாலை தொடங்கி நடத்துகிறான்.


இந்த நெடுங்கதையினூடாக மேரி என்னும் பாவப்பட்டவளின் கிளைக்கதையும், செகந்திராபாத் ஜுலியின் கதையும் நாவலில் இடம்பெறுகின்றது. செல்லம்மிணி என்னும் குணசித்திரத்தின் வாயிலாக அல்லலுறும் பெண்ணின் ஆன்மாவை வாசகர்களுக்கு தரிசிக்கத் தருகிறார் சுப்ரபாரதிமணியன். நம் தேசத்து புறக்கணிக்கப்பட்ட பெண்களின் ஒட்டுமொத்தப் பிம்பம்தான் செல்லம்மிணி. வல்லரசு ஆகப்போகும் தருணத்திலும் ஊருக்கு ஊர் கிராமத்துக்கு கிராமம் செல்லம்மிணிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதும் வன்முறைக்குள்ளாகின்றனர் என்பதும் கசப்பான நிஜமாகி நம்மை கலவரப்படுத்துகின்றது.


சுப்ரபாரதிமணியனின் முந்தைய படைப்புகளிலிருந்தும் " ஓடும்நதி "மாறுபட்டு வேறுவேறு திசைகளில் பரவிப் பாய்ந்து செல்கிறது. பல நேரங்களில் ஒரு தேசாந்திரியின் பயணக்குறிப்புகளைப் போலவும் சில நேரங்களில் ஒரு துயர நாடகத்தைப் போன்றும் பிறிதொரு சமயத்தில் ஒரு பேரிலக்கியத்தின் நுண்ணிய கூறுகளுடனும் "ஓடும்நதி"கண்ணாமூச்சி காட்டுகிறது. கதைச் சம்பவங்கள் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர் என ஸ்தலங்கள் மாறி நிகழ்ந்து ஓய்கின்றன. நாகாலாந்த், கவுஹாத்தி, அசாம் மலைப்பகுதி நிலக்காட்சிகள், அம்மக்களின் வாழ்வியல் அம்சங்கள் மிகுந்த சிரத்தையுடன் ஆசிரியரால் அவதானிப்புக்குள்ளாகியுள்ளன.


காட்டெருமையை வேட்டையாடி அதன் தலையைக் கொய்து வருபவரை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுதல், புராதன கட்டிடமொன்றில் இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கி விரும்புகிறவர்களுடன் தங்கு தடையற்ற பாலுறவு கொள்ளுதல், மரணைத்தவரின் உடலைப் புடைக்காமல் எரியும் அடுப்புக்கு மேலே கட்டித் தொங்கவிட்டு அது வெந்து வடியும் நிணத்தை உடம்பில் பூசிக்கொள்வது என்று மலைவாழ் மக்களின் வினோத சடங்குகள் நம்பிக்கைகள் நாவலாசிரியரால் நுட்பமாக விவரிக்கப்படும் பொழுது அதிர்வும் பீதியுமான வாசக அனுபவத்துக்குள்ளாக முடிகிறது. " ஓடும்நதி " சுப்ரபாரதிமணியனின் பெரும் பயணத்துக்கான வெள்ளோட்டம்.



ஒடும் நதி (நாவல்)

சுப்ரபாரதிமணியன்

விலை-150/- வெளியீடு: அம்ருதா

பக்கம் - 336. எண்.5. 5வது தெரு,

எஸ்.எஸ்.அவென்யூ, சக்தி நகர்,போரூர்,

சென்னை-11

======================================================================

இலக்கியப் போட்டி 2008

அறிவிப்பு
---------


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும்

இணைந்து நடத்திய இலக்கியப் போட்டி 2008

=======================================================

வென்றோர்கள்

===========

சென்ற ஆண்டில் வெளிவந்த நூல்களுக்குப் பரிசுகள்:


நவீனம்

சுப்ரபாரதிமணியன் (ஓடும் நதி)
******************************

சிறுகதை

மதுரா (போதி மரக்காடு)


கவிதை நூல்

நட. சிவ குமார் (வெட்டி முறிப்புக்களம்)

மயூரா ரத்தினசாமி (நெடுஞ்சாலையைக் கடக்கும் நத்தைகள்)


நாடக நூல்

பி.சி. சண்முகம் (உங்களால் உலகம்)

கே. எஸ். ரமணா (காற்றிலே கலந்து வந்த நாடகங்கள்)


கட்டுரை நூல்

சேதுபதி (சொற்பொழிவாளர் பாரதி)

தி.மா. சரவணன் (சிறுவர் இதழ்கள்)


சிறப்புப் பரிசுகள்:

--------------------

கலாநிதி பேராசிரியர் நா. வானமாமலை நினைவுப் பரிசு (ஆய்வு நூலுக்கு)

முனைவர் இரா. காமராசு (பேரா. நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்)

முனைவர் ஆ. செல்லபெருமாள் (நவீனப் பண்பாட்டு மானிடவியல்)


தொ.மு.சி. ரகுநாதன் நினைவுப்பரிசு (மொழிபெயர்ப்பு நூலுக்கு)

எஸ்.பி. இராமகிருஷ்ணன்(மலையாளக்கதைகள்)


அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசு (சிறுகதை நூல்)

வாய்மை நாதன் (நாலி)


எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவுப்பரிசு (சிறுகதை நூல்)

இலா. வின்சென்ட் (மீண்டெழுதல் கதைகள்)



இரவீந்திரபாரதி பொன்னீலன் ஆர்.இராதாகிருஷ்ணமூர்த்தி

பொதுச்செயலாளர் தலைவர் நிர்வாக மேலாளர் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம்

======================================================================

செய்தி; செந்தீ நடராசன் மாநில இலக்கிய குழு செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், 36/122 கல்படித்தெரு, நாகர்கோவில் 629001

9442138856

======================================================================

=issundarakannan7@gmail.com